search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேரை வீட்டுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை
    X

    கைதான 2 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணைக்காக காரில் அழைத்து வந்த காட்சி.

    கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேரை வீட்டுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை

    • கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.
    • இறுதியாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது இத்ரிஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    கோவை:

    கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உக்கடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜமேஷா முபின் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பயங்கர சதி திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார், இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கில் உமர் பரூக், பெரோஸ் கான், முகமது தவ்பிக் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

    இதற்கிடையே கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த முகமது இத்ரிஸ், உக்கடம் அன்பு நகரை சேர்ந்த முகமது அசாருதீன் என்ற அசார் (36) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பையூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகமது அசாருதீனை என்.ஐ.ஏ. அதிாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் இறுதியாக கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது இத்ரிஸ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தனர். கோர்ட்டு 2 பேரையும் விசாரிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதி வழங்கியது.

    இதனையடுத்து முகமது இத்ரிஸ், முகமது அசாரூதீனிடம் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை கோவைக்கு அழைத்து வந்தனர்.

    முகமது இத்ரிசை ஜி.எம். நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதே போல முகமது அசாருதீனை அன்பு நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடம், கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட நபர்களுடன் சந்தித்த இடங்களுக்கும் 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் பல்வேறு கேள்விகளையும் கேட்டு விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    Next Story
    ×