என் மலர்
சென்னை
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மார் கடலோரப்பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மார் பங்களாதேஷ் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும்.
நேற்று வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணி அளவில் வலுவிழந்தது.
இதனிடையே இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
- சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம்.
பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வரும், 6.11.2025 அன்று மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
முன்னதாக, கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோக்களுக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 'அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும்' என கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 1-ந்தேதி முதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
- வருகிற 5-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும் படுக்கை வசதி பெட்டி 1 இணைத்து இயக்கப்பட உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக தாம்பரம்-செங்கோட்டை, தாம்பரம்-நாகர்கோவில், சென்டிரல்-திருவனந்தபுரம், சென்டிரல்-ஆழப்புலா, கோவை-ராமேசுவரம் ஆகிய ரெயில்களில் தற்காலிகமாக கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
* அதன்படி, தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்.20681) ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், செங்கோட்டையில் இருந்து தாம்பரம் வரும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் (20682) ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி 2, படுக்கை வசதி கொண்ட பெட்டி 3, 2-வது வகுப்பு பொதுபெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்தும், நேற்று முதல் செங்கோட்டையில் இருந்தும் கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
* தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22657), ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22658) ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டி 1, 3-வது வகுப்பு ஏ.சி. பெட்டி 2, படுக்கை வசதி கொண்ட பெட்டி 3, 2-வது வகுப்பு பொதுபெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்தும், நேற்று முதல் நாகர்கோவிலில் இருந்தும் கூடுதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
* சென்னை சென்டிரலில் இருந்து ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22639), ஏப்ரல் 27-ந்தேதி வரையிலும், ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (22640) ஏப்ரல் 28-ந்தேதி வரையிலும் 2-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 1 தற்காலிகமாக இணைக்கப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முதல் பெட்டி இணைத்து இயக்கப்பட்டு வருகிறது.
* சென்னை சென்டிரலில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12695) இன்று (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும், திருவனந்தபுரம் சென்டிரலில் இருந்து சென்னை சென்டிரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12696) நாளை (செவ்வாய்கிழமை) முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரையிலும், 2-ம் வகுப்பு ஏ.சி.பெட்டி 1 தற்காலிகமாக இணைத்து இயக்கப்பட உள்ளது.
* கோவையில் இருந்து ராமேசுவரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16618) வருகிற 4-ந்தேதி முதல் ஏப்ரல் 28-ந்தேதி வரையிலும், ராமேசுவரத்தில் இருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16617), வருகிற 5-ந்தேதி முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரையிலும் படுக்கை வசதி பெட்டி 1 இணைத்து இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது தி.மு.க.
- அ.தி.மு.க. எதையும் கண்மூடித்தனமாக வரவேற்காது.
சென்னை:
அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்டினப்பாக்கத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரசாரத்தை அரங்கேற்றி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு முறை திருத்தப் பணிகளை நடத்துவது வழக்கமான ஒன்று தான்.
2002-2004 ஆண்டுகளுக்கு பிறகு இப்பணிகள் நடைபெறவில்லை. அன்றைக்கு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ்-தி.மு.க. அப்போதெல்லாம் எதிர்க்காத தி.மு.க. தற்போது எதிர்க்கிறது. இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை மட்டுமே நம்பியிருக்கிறது தி.மு.க.
எஸ்.ஐ.ஆர். வேண்டாம் என்று தி.மு.க. நீதிமன்றம் சென்றால் நாங்கள் (அ.தி.மு.க.) எஸ்.ஐ.ஆர். வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை நாடுவோம். அனைத்துக் கட்சிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் உள்ளனர்.
இப்பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்கள் தவறு செய்தால் புகார் அளியுங்கள் அதற்கான வாய்ப்பை கொடுக்கவில்லை என்றால் சர்வாதிகாரப் போக்கு என சொல்லலாம்.
கட்சி சார்பில் விழிப்பாக இருந்து வாக்குகள் சரியாக இருக்கிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் போலி வாக்காளர்கள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் இப்பணிகளை அ.தி.மு.க. வரவேற்கிறது.
அ.தி.மு.க. எதையும் கண்மூடித்தனமாக வரவேற்காது. அதே நேரத்தில் அவசியமான ஒன்றை அ.தி.மு.க. வரவேற்கும் தமிழகத்தில் வெளிமாநில மக்கள் அமைதியாக இருப்பது ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட விதை. தி.மு.க. அதில் வேறுபடுவார்கள். ஆனால் அ.தி.மு.க. சாதி, மத ரீதியாக வேறுபாட்டை ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பிறகு நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் என்பது கிடையாது
தி.மு.க.வால் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்த கருத்தை மு.க.ஸ்டாலினிடம் தான் கேட்க வேண்டும். இது பற்றி தி.மு.க. திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆல் தோட்ட பூபதி போல எதற்கெடுத்தாலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை தி.மு.க. நடத்தி வருகிறது.
வரும் தேர்தல் நேர்மையான, நியாயமான தேர்தலாக அமைய வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். வாக்காளர்களை யாராலும் நீக்க முடியாது. இப்பணிகளுக்கும் பா.ஜ.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து கேட்கிறீர்கள், தேர்தலுக்கு இன்னும் 5 அமாவசை உள்ளது. 2 அமாவாசைக்கு முன்பு கூட மாற்றம் வரலாம். எனவே அந்த நேரத்தில்தான் கூட்டணி பற்றி எடப்பாடியார் முடிவு செய்வார்.
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மூலம் குடியுரிமை சட்டத்தை புகுத்த திட்டம் என மக்களை தி.மு.க. திசை திருப்புகிறது. தி.மு.க.வின் திசை திருப்பும் முயற்சி நிச்சயம் வெற்றி பெற போவதில்லை.
வடமாநிலத்தவராக இருந்தாலும் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவர்கள் வாக்குரிமையை பறிக்க கூடாது. பா.ஜ.க. தொடர்பாக அவ்வப்போது எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து வருகிறார். அண்ணாமலை சொன்ன கருத்து குறித்தும் எடப்பாடியார் பதில் அளிப்பார். அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது.
அமைச்சர் கே.என்.நேரு இலாகாவில் நடைபெற்ற ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். சீமான் ஆட்டை கடித்து மாட்டை கடித்து தற்போது அ.தி.மு.க.வை விமர்சித்து வருகிறார். அவர் எங்களை விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சீமான் வேலையை அவர் பார்க்கட்டும் எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம். தொடர்ந்து பேசினால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றார்.
- 50-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
- மொத்தம் 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி அன்று மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற கரூர் வேலுச்சாமிபுரம் பகுதி சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே வனத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், போலீஸ் வீடியோகிராபர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர். தற்போது சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள கடை, பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள், செல்போன் கடை வைத்திருப்பவர்கள், உயிரிழந்த 41 குடும்பத்தினர், உறவினர்கள், காயமடைந்தவர்கள் என மொத்தம் 306 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
இதனிடையே, சி.பி.ஐ. அதிகாரிகளின் ஒரு குழு சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் விஜய் பிரசார வாகனத்தை ஆய்வு செய்வதற்காக வந்துள்ளனர். விஜயின் பிரசார பேருந்தை அளவிடுவதுடன் சிசிடிவி பதிவுகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த தகவலை அறிந்து விஜய் நீலாங்கரையில் இருந்து புறப்பட்டு பனையூர் வந்தார்.
- கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
- ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும்.
சென்னை:
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.
- தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.
- விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும்,
பாதிப்புக்குள்ளான அம்மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அஇஅதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக,
எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெருநகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.
விடியா திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அஇஅதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர்.
விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி, கடும் தண்டனை வாங்கித்தர காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துகிறேன்.
- பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
- இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.
சென்னை:
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நேற்றிரவு கோவை விமான நிலையத்தின் பின்புறம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் மர்ம கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவி முழு உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நமது பொழுது விடிகிறது, எந்த ஊரில் எந்தப் பெண்ணின் வாழ்வு சூறையாடப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை நாம் புரட்ட வேண்டியிருக்கிறது, வீட்டில் இருந்தாலும் சரி வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள், "தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என வெட்டி வசனம் பேசும் தி.மு.க.வின் ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர், இந்த அவலங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களோ கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்று வினவியுள்ளார்.
- தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
- திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோவை விமானநிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கொடிய முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் மாணவிகளும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது.
பிருந்தாவன் நகரில் தனியார் கல்லூரி மாணவி தமது நண்பருடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், அவர்களிடம் தகராறு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவியும், அவரது நண்பரும் மகிழுந்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். ஆனால், அவர்களின் மகிழுந்தை தடுத்து நிறுத்திய கும்பல், மகிழுந்தின் கண்ணாடிகளை உடைத்து மாணவியையும், அவரது நண்பரையும் வெளியே இழுத்துள்ளனர். நண்பரைத் தாக்கி காயப்படுத்திய அவர்கள், மாணவியை அங்கிருந்து கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியை இன்று காலை அங்குள்ள புதரில் கண்டெடுத்த காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு திசம்பர் 23-ஆம் நாள் மனித மிருகத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அந்த அதிர்ச்சி விலகுவதற்கு முன்பே கடந்த ஜூலை 12-ஆம் நாள் திருவள்ளூரை அடுத்த ஆரம்பாக்கம் என்ற இடத்தில் 8 வயது மாணவி அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கொடியவனால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இப்போது கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தமிழ்நாட்டில் போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6975 ஆக அதிகரித்திருக்கிறது. 2023-ஆம் ஆண்டு இதே சட்டத்தின்கீழ் பதிவான 4581 வழக்குகளுடன் ஒப்பிடும் போது இது 2394 , அதாவது 52.30% அதிகம் ஆகும். இதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் விற்பனை கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியிருப்பது தான் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும், போதைப் பொருள்களின் நடமாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள்கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் போதிலும் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவையில் தனியார் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மனித மிருகங்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு தரமான மருத்துவமும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனைக்கு முடிவு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
- இன்று சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதியில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்திலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. அதனை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகலில் வெயில் கோடை காலம் போல கொளுத்தியது.
இந்த நிலையில் வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பருவமழையின் தொடர்ச்சியாக வருகிற 5-ந்தேதி முதல் வட தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இன்று சென்னையில் லேசான மழை பெய்யக்கூடும் என்றார்.
- மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
- பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
சென்னை :
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது.
இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனையானது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் உயர்ந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்தது. மேலும் காலையில் ஒரு விலை, மாலையில் ஒரு விலை என இருவேளையிலும் தங்கம் விலை உயர்வதும், குறைவதுமாக இருந்ததால் மக்கள் குழப்பத்தில் இருந்தனர். இதனிடையே, தங்கம் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் அதன் முந்தைய வாரத்தை விட சற்றே விலை குறைந்து விற்பனையானது.
இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்றும் கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 168 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
02-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480
01-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,480
31-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
30-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,400
29-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 90,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
02-11-2025- ஒரு கிராம் ரூ.166
01-11-2025- ஒரு கிராம் ரூ.166
31-10-2025- ஒரு கிராம் ரூ.165
30-10-2025- ஒரு கிராம் ரூ.165
29-10-2025- ஒரு கிராம் ரூ.166






