என் மலர்tooltip icon

    சென்னை

    • அரசு கலைக் கல்லூரியில் தொல்லியல் சம்பந்தமான பாடப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகும்.
    • மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் தம் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய நினைவு சின்னம் கெங்கைகொண்ட சோழபுரம்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தஞ்சாவூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பண்டைய சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட தொல்லியல் அடையாளங்கள் அதிகம் உள்ளன. இவைகளை உலகிற்கு எடுத்துச் செல்லும் ஆய்வுகளை தொடரும் அளவிற்கு இந்த பகுதியில் செயல்படுகின்ற கல்லூரிகளில் தொல்லியல் சம்பந்தமான பாடப்பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தின், புது சாவடியில் தமிழக அரசால் அமைய உள்ள அரசு கலைக் கல்லூரியில் தொல்லியல் சம்பந்தமான பாடப் பிரிவுகளை தமிழக அரசு ஏற்படுத்திட வேண்டியது அவசியமாகும்.

    தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு அடுத்தபடியாக மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் தம் கங்கை வெற்றியின் நினைவாக உருவாக்கிய நினைவு சின்னம் கெங்கைகொண்ட சோழபுரம் ஆகும். இந்த நினைவு சின்னத்தை போற்றும் வகையில் இந்த பகுதி மக்களின் விருப்பத்தை ஏற்கவும் இந்த மண்ணின் பெருமையை வெளிக்கொணரும் வகையிலும் தமிழக அரசால் நிறுவப்படுகின்ற புதிய அரசு கலைக் கல்லூரிக்கு கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவிய ராஜேந்திர சோழன் பெயரை சுட்டி, மாமன்னன் ராஜேந்திர சோழன் அரசினர் கலைக்கல்லூரி என்று பெயரை தமிழக அரசு நிறுவி ராஜேந்திர சோழன் நினைவை போற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
    • சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.

    இதனால் கடந்த 4 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாண வர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15 சதவீதம் இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10 சதவீதம் இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும்.
    • நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் ஒரு மாதத்திற்கு முன்பு நிபா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வந்துள்ளது.

    தமிழ்நாட்டை ஒட்டி பாலக்காடு மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் தொற்று தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழ்நாட்டிற்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டியது தி.மு.க. அரசின் கடமை ஆகும். எனவே, கேரள மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்குள் நுழைபவர்களை கண்காணிக்கும் வகையில், மாநில எல்லையில் கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பரவாமல் இருப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்கிருந்து 17,702 பேரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்தது என்பதை தேர்வாணையமும், தமிழக அரசும் தான் விளக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்கள் இளைஞர்கள் தான்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், கடந்த ஓராண்டில் மட்டும் 17 ஆயிரம் பேருக்கும் கூடுதலானோருக்கு புதிதாக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள நிலையில், வரலாறு காணாத வகையில் வேலைகளை வழங்கிவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய் ஆகும்.

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,''அரசு பணியை எதிர்நோக்கி இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக, டி.என்.பி.எஸ்.சி. மூலம் 17 ஆயிரத்து 595 காலிப்பணியிடங்கள் 2026 ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அதன்படி, கடந்த 2024 ஜூன் முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரையில் பல்வேறு அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப 17 ஆயிரத்து 702 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்'' என்று கூறப்பட்டிருக்கிறது. எனினும் எந்தெந்தப் பணிகளுக்கு எவ்வளவு பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவரத்தை டி.என்.பி.எஸ்.சி வெளியிடவில்லை. இது மக்களை ஏமாற்றும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மிகவும் மோசடியான அறிவிப்பு ஆகும்.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி விதி எண் 110-இன் கீழ் அறிக்கை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''வரும் ஜனவரி 2026-க்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 17,595 பேர் உள்பட மொத்தம் 46,584 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்'' என்று அறிவித்தார். அதைக்கேட்டு தமிழ்நாட்டு இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள், தங்களுக்கு அரசு வேலை கிடைக்கக்கூடும் என்று மகிழ்ச்சியடைந்திருந்தனர். புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிக்கைகள் வெளியிடப்படும்; அதில் விண்ணப்பித்து அரசு வேலையை வென்றெடுக்கலாம் என்ற எண்ணத்தில் படித்த இளைஞர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் தான், 17,702 பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்பட்டு விட்டதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது படித்த இளைஞர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் டி.என்.பி.எஸ்.சி மூலம் 17,502 பேருக்கு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்தார் என்றால், அதற்கான நடைமுறை அதன்பிறகு தான் தொடங்கும். காலியாக இருக்கும் அரசு பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, விண்ணப்பித்தவர்களுக்கு போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டு, தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது தான் முறையாகும். ஆனால், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்ட பிறகு 2024-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி, 2025-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி வரை மொத்தம் 12 ஆள்தேர்வு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் வாயிலாக நான்காம் தொகுதி பணிகளுக்கு 3935 பேர் உள்பட மொத்தம் 8618 பேர் அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அவர்களுக்கான தேர்வு நடைமுறை பல்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், எங்கிருந்து 17,702 பேரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்தது என்பதை தேர்வாணையமும், தமிழக அரசும் தான் விளக்க வேண்டும்.

    கடந்த காலங்களில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகளை மிகவும் தாமதமாக அறிவித்து, அவற்றையெல்லாம் புதிய வேலைவாய்ப்புகளாக கணக்குக் காட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையம் முயல்வதாகத் தெரிகிறது. அப்படி செய்தால் அதை விட பெரிய மோசடியும், முறைகேடும் இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக தேர்வாணையம் குறிப்பிடும் 17,702 வேலைவாய்ப்புகளில் 9491 பணிகள், அதாவது 54% நான்காம் தொகுதி வேலைவாய்ப்புகள் ஆகும். இதற்கான அறிவிக்கை 30.01.2024-ஆம் நாள் வெளியானது. முதலமைச்சரின் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை, முதலமைச்சர் அறிவித்ததால் கிடைத்த வேலைவாய்ப்புகளாக காட்ட முயல்வது மிகப்பெரிய ஏமாற்று வேலை ஆகும்.

    திமுக ஆட்சிக்கு வந்தால் மூன்றரை லட்சம் காலியிடங்களை நிரப்புவதன் வாயிலாகவும், 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் வாயிலாகவும் மொத்தம் ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட காலியிடங்களைக் கூட நிரப்ப முடியாமல் மு.க. ஸ்டாலின் அம்பலப்பட்டு நிற்கிறார். அவருக்கு முட்டுக்கொடுக்க வேண்டிய வேலையை திமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவினர் தான் செய்ய வேண்டும். அந்த வேலையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மேற்கொள்வது அதன் தகுதிக்கு உகந்தது அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதை கருத்தில் கொண்டு அதன் கண்ணியத்தைக் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்பட வேண்டும்.

    தமிழ்நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்கள் இளைஞர்கள் தான். ஆனால், அவர்களின் உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் எந்த நடவடிக்கையையும் திமுக அரசு செய்யவில்லை. அதற்கான பாடத்தை வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கற்பிப்பார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திமுகவின் துணை அமைப்பாக மாறாமல் அதன் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
    • 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,594 மில்லியன் கன அடியாக உள்ளது.

    சென்னை:

    சென்னையில் குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.

    இந்த நிலையில், தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய பின்னர், ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை பெய்யாத காரணத்தால், ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி இந்த 5 ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 6,682 மில்லியன் கன அடி. அதாவது 56.83 சதவீதமாகக் குறைந்துள்ளது.

    3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று நிலவரப்படி 2,456 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    அதேபோல், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 2,251 மில்லியன் கன அடியாகவும், 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,594 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

    மேலும், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரியில் 274 மில்லியன் கன அடியும்,சோழவரம் ஏரியில் 157 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது.

    சென்னை மாநகருக்கு ஒரு மாதத்துக்கு சராசரியாக ஒரு டி.எம்.சி. (ஆயிரம் மில்லியன் கன அடி) குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலையில், தற்போது 6 டி.எம்.சி. குடிநீர் இருப்பு உள்ளது.

    மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் மூலம், தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால், நிகழாண்டில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை.
    • சமூகநீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது திமுக அரசு.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் 2,739 விடுதிகளும் இனி சமூகநீதி விடுதிகள் என்று அழைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். சமூக நீதி என்ற பெயரை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பயன்படுத்துவதை விட பெரிய கொடுமையும், முரண்பாடும் இருக்க முடியாது.

    வாழும் காலத்தில் ஒருவரை கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டு, அவரது கல்லறையில் பெயரை பொறிப்பது எப்படியோ, அப்படித்தான் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளும் அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி என்று கூறிக் கொண்டிருக்கிறார். சீனி சக்கரை சித்தப்பா என்று எழுதிக் காட்டினால் அது இனிக்காது என்ற அடிப்படைக் கூட அவருக்கு தெரியவில்லை.

    திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் சமூகநீதியைக் காக்க இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் கர்நாடகம், பிகார், தெலுங்கானம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அரசுகளால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு விட்ட நிலையில், இன்று வரை தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி அந்த சமூகநீதிக் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

    வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு இன்றுடன் 1193 நாள்கள் ஆகிவிட்ட நிலையில் இன்று வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதேபோல் சமூகநீதி கோரும் பிற சமூகங்களுக்கும் துரோகத்தை மட்டுமே பரிசாக அளித்து வருகிறது திமுக அரசு.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களே... உங்களுக்கு ஒரு வேண்டுகோள்.......

    சமூகநீதி என்பது மிகவும் புனிதமான சொல்..... அதை நீங்களும், உங்களைப் போன்றவர்களும் உச்சரித்து கொச்சைப்படுத்தாமல் இருங்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் கிராமச் சாலைகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
    • ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கிராமச் சாலைகளை மேம்படுத்த அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

    அந்த வகையில் ஊரகப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், குக்கிராமங்களில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக அனைத்து பருவ காலங்களிலும் சென்றடைவதற்காக கிராமச் சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    2025-26-ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ரூ. 800 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளது.

    இதில் முதல் கட்டத்தில் ரூ.505.56 கோடி செலவில் 100 பாலங்கள் கட்டுவதற்கு பாலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு அரசு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கி உள்ளது.

    • நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று மாற்றமில்லை.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும்.

    கடந்த வாரத்தின் தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை பின்னர் தொடர்ந்து வந்த நாட்களில் உயர்ந்தே காணப்பட்டது. நேற்று தங்கம் விலை ஒரு கிராம் 9,060 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,480 ரூபாய்க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், வாரத்தின் தொடங்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,010 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,080 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    05-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    04-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,400

    03-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,840

    02-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,520

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    06-07-2025- ஒரு கிராம் ரூ.120

    05-07-2025- ஒரு கிராம் ரூ.120

    04-07-2025- ஒரு கிராம் ரூ.120

    03-07-2025- ஒரு கிராம் ரூ.121

    02-07-2025- ஒரு கிராம் ரூ.120

    • பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!
    • ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்!

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பேதங்களைத் தகர்த்தெறிந்து சமத்துவத்தையும் - சமூகநீதியையும் காக்க புரட்சியால் புதுமையைப் படைப்பதே திராவிட வரலாறு!

    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • என்னுடைய நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் கற்றுக்கொண்ட பாடம்தான்.
    • நானும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெவ்வேறு அல்ல.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுப்பயணம் தொடங்குகிறார்.

    இதை முன்னிட்டு எடப்பாடி பழிசாமி சுற்றுப்பயணத்தில் இணையுமாறு தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர், எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களே, இதய தெய்வம் புரட்சித் தலைவி

    அம்மா அவர்களின் உயிருக்கு உயிரான விசுவாசிகளே, எனது உணர்வுகளில் கலந்திருக்கும் அனைத்திந்திய அண்ணா

    திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தின் இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்களே,

    உங்கள் அனைவருக்கும் எனது இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பார்ந்த வணக்கம்!

    எனது ஆழ்மனதில் உங்கள் அனைவரோடும் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். நானும் நீங்களும்

    நினைப்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.

    அது என்னவென்றால் 'இன்னும் 100 ஆண்டு காலம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற

    மாபெரும் இயக்கம், மக்கள் தொண்டாற்ற நீடித்து நிலைத்து இருக்க வேண்டும். அதன்மூலம் தமிழக மக்கள்

    வாழ்வாங்கு வாழ்ந்து, செம்மாந்து திகழ்ந்து சிறப்பு எய்திட வேண்டும்' என்பதே எனது லட்சிய முழக்கமாகும்.

    இக்கடிதத்தின் வாயிலாக எனது மனதில் உள்ள இன்னும் சில முக்கியமான கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள

    விரும்புகிறேன்.

    'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை தெய்வமாக மதிக்கும் மக்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கழகம்தான் எனது மூச்சு– பேச்சு – சிந்தனை – செயல் – எண்ணம் - வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

    என்னுடைய நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் கற்றுக்கொண்ட பாடம்தான். இதுதான் என்னுடைய அரசியல் பாதையின் முகவரியாகும். நானும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெவ்வேறு அல்ல.

    இரண்டு கோடிக்கும் அதிகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரத்தத்தின் ரத்தமாகத் திகழும் நீங்கள் எல்லோரும் என்னுடைய உயிரோடும், உணர்வோடும்

    கலந்திட்ட ரத்த உறவுகள்.

    எப்போதும் நான் சிந்திப்பதெல்லாம் தமிழகத்தின் நலனைக் காக்க, நமது கழகம் தமிழ் நாட்டில் அணையா விளக்காகத் திகழ்ந்து, அறியாமை இருளை அகற்றி, மக்களுக்கு வெளிச்சத்தைத் தந்து, தமிழகத்தை ஒளிவீசச் செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய தீராத ஆசை.

    நான் கழகத்தின் பொதுச் செயலாளர்தான். எனினும், நான் தொண்டர்களாகிய உங்களோடு உங்களாக இருந்து

    தொண்டாற்றும் தலைமைச் சேவகன்தான். நீங்கள் எல்லோரும் எனக்குள்ளே, உயிரோடு கலந்துவிட்ட உறவுகளாக,

    ஒட்டுமொத்த முழு பலமாக இருப்பவர்கள்.

    'மக்களைக் காப்போம்' 'தமிழகத்தை மீட்போம்' என்கிற புரட்சிப் பயணத்தை உங்களின் முழு ஆதரவோடு எழுச்சிப் பயணமாக ஆரம்பித்திருக்கிறேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு கடைக்கோடித் தொண்டனையும், இந்தப்

    பயணத்தில் எனது இதயத்தோடும் எண்ணத்தோடும் இணைந்து பயணிக்க அழைக்கின்றேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் தமிழகத்தின் அரியணையில் ஏற்றிவைக்கத்

    துடிக்கும் உங்கள் உயிர்த் துடிப்பை நான் அறிவேன்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்காலத்தை மீண்டும் தமிழகத்தில்

    ஏற்படுத்திட நீங்கள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டிருப்பதை எனது உள்ளம் அறியும்.

    `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியே எனது வெற்றி' என செயலாற்றுகிற உங்களின் எண்ணவோட்டத்தையும் நான் அறிவேன்.

    தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும்கட்சியாக இருந்த வரலாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும்தான் உண்டு. தமிழ் நாட்டின் மக்களால் ஒரு கட்சியும், ஒரு தலைவனும் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான்.

    'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு கழகத்தின் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இரண்டாவது அத்தியாயமாகத் தொடங்கி, ஒரு சகாப்தமாக, மக்கள் செல்வாக்கோடு பீடுநடை போட்டார்கள்.

    புரட்சித் தலைவி அம்மா அவர்களைத் தொடர்ந்து ஆளுங்கட்சியாகவும், பிறகு எதிர்க்கட்சியாகவும்

    மக்கள் செல்வாக்கோடு, அரசியல் களத்தில் இருந்து அகற்ற முடியாத மாபெரும் சக்தியாக அனைத்திந்திய அண்ணா

    திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது.

    பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கழகத்தை வழி நடத்திடும் வாய்ப்பை, கடைக்கோடித் தொண்டனாக

    இருந்திட்ட எனக்கு காலம் வழங்கியிருக்கிறது. இதை எண்ணி எண்ணி, தினமும் போற்றி பாதுகாத்து மதித்து, நாளும்

    பொழுதும் பாராமல் இந்த இயக்கத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைக்கிறேன். ஆகவேதான், உங்களையும் என்னோடு இணைந்து உழைத்திட இந்த எழுச்சிப் பயணத்திற்கு அழைக்கிறேன்.

    தமிழ் நாட்டு மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து, மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடிக்கும், விளம்பர மாடல் விடியா ஆட்சி நடத்தும் கட்சியால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

    மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். விடியா மாடல் ஆட்சியில் நடக்கிற 'கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன்' ஆகியவை மக்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

    படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காத 'அப்பா' ஸ்டாலினை, கோபத்தோடு அந்த இளைஞர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

    சொன்ன வாக்குறுதிகளில் இன்னும் பெரும்பாலான வாக்குறுதிகளை ஸ்டாலின் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அதனால்தான், தமிழக மக்கள் கோபத்தில் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் சுயநல ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.

    கழகத்தின் உயிர்த் தொண்டர்களான உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான், 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்கிற எனது இந்தப் புரட்சிப் பயணத்தில் நாம் எழுச்சியோடு சொல்ல வேண்டியது, தமிழ் நாட்டு மக்களுக்கு நாம் செய்த சேவைகளைத்தான், அதன்மூலம் தமிழ் நாடு அடைந்த பலன்களைத்தான்.

    தமிழ் நாட்டு மக்களைக் காக்க உங்களில் ஒருவனாக முன்நின்று, முன்கள வீரனாக முன்னே செல்கிறேன். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக இவ்வெற்றிப் பயணத்தில் என்னோடு இணைந்து &டவ;டு இணையற்ற சிப்பாய்களாக நீங்கள்

    வர வேண்டும். தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் நாம் எழுச்சியோடு செல்ல வேண்டும்.

    நாம் செய்த சாதனைகளை உரக்கச் சொல்ல வேண்டும்; நாமே 2026-ல் உறுதியாக வெல்வோம்.

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கும்.

    அமைதியான தமிழ் நாடு !

    வளமான தமிழ் நாடு!

    நிறைவான தமிழ் நாடு!

    இவைதான் நமது லட்சியம்!

    நாம் வெல்வது நிச்சயம்!

    ரத்தத்தின் ரத்தமே வா!

    மக்களைக் காப்போம்,

    தமிழகத்தை மீட்போம்!

    தீய சக்தியை வதைத்திட,

    நல்லாட்சியை விதைத்திட,

    விலகாத இருள் விலகட்டும்!

    தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி மலரட்டும்!

    இதைத் தமிழகமே வாழ்த்தட்டும்!

    மாறாத நேசத்துடன், எடப்பாடி மு. பழனிசாமி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வீடு வீடாகச் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்து விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி நாளை முதல் தொடங்கி நடைபெறும்.
    • பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சென்னை மாநகராட்சியின் 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வரும் 15-ந்தேதி தொடங்க உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் 15.07.2025 அன்று "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நடத்தப்படும் முகாமினை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்தத் திட்டம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

    இதனைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சியில் 15.7.2025 அன்று மாதவரம் மண்டலத்தில் வார்டு - 25, தண்டையார்பேட்டை மண்டலத்தில் வார்டு - 38, திரு.வி.க நகர் மண்டலத்தில் வார்டு - 76, தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு - 109, வளசரவாக்கம் மண்டலத்தில் வார்டு - 143 அடையாறு மண்டலத்தில் வார்டு - 168 ஆகிய 6 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் தொடங்கி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி நாளை (07.07.2025) 6 வார்டுகளிலும் தன்னார்வலர்கள் வாயிலாக வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கும் பணி தொடங்குகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள 200 வார்டுகளில் நாள்தோறும் சராசரியாக 6 வார்டுகளில் முகாம்கள் நடைபெற உள்ளது. மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள் உள்ளன.

    இதில் ஒவ்வொரு வார்டிலும் தலா இரண்டு முறை முகாம்கள் என 400 முகாம்கள் 15.07.2025 அன்று முதல் 31.10.2025 வரை நடைபெறவுள்ளது. முகாம்கள் குறித்த விவரங்களையும், விண்ணப்பப்படிவம் மற்றும் தகவல்களையும் சுமார் 2000 தன்னார்வலர்கள் மக்களிடம் தெரிவித்து வழங்கும் பணியினை மேற்கொள்வார்கள்.

    முதற்கட்டமாக 15.07.2025 முதல் 14.08.2025 வரை காலை 09.00 முதல் மாலை 03.00 மணி வரை பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரைலுள்ள 200 வார்டுகளில் திட்டமிடப்பட்ட 109 வார்டுகளில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 109 வார்டுகளில் நடைபெறவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் குறித்த விவரங்களை ஒவ்வொரு முகாமும் திட்டமிட்டபடி நடைபெற உள்ள 7 தினங்களுக்கு முன்பாக தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்களிடம் தகவல் தெரிவித்து விண்ணப்பப் படிவங்கள் வழங்கும் பணி நாளை (07.07.2025) முதல் தொடங்கி நடைபெறும்.

    இதில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள் மற்றும் 13 அரசுத்துறைகள் மூலம் வழங்கப்படவுள்ள 43 சேவைகள் குறித்த முழு விவரங்கள் ஆகியவற்றை பொதுமக்களுக்கு விவரித்து பயன்களுக்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து பொதுமக்கள் பயன் பெறும் அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்படும்.

    இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று நேரடியாகச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படும்.

    இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.

    இந்தப் பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும். "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் முகாம் நடைபெறும் வார்டில் உள்ள பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது."

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
    • இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்.கல்லூரி மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

    இரு அணிகளும் சமபலத்துடன் மல்லுக்கட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற திண்டுக்கல் அணி, திருப்பூர் அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம், திருப்பூர் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    ×