என் மலர்
சென்னை
- அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், வீடுகளுக்கே விண்ணப்பங்களை வந்து கொடுக்கும் புதிய திட்டம்.
- விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.
உங்களுடன் ஸ்டாலின் என்ற புரட்சிகரத் திட்டம் நாளை தொடங்குவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்!
அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்!
10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமிகு அமுதா இ.ஆ.ப., அவர்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
- மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார்.
தமிழ்நாடு அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 1991-ம் ஆண்டு பலரை வேலையில் அமர்த்தியது. பின்னர், அவர்களை பணியில் இருந்து நீக்கம் செய்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு நிர்வாக பணியாளர் தீர்ப்பாயத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அவர்களுக்கு மாற்று பணி வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.
இதன்படி சேக் அப்துல் காதர், எல். அழகேசன், பி.சர்மிளா பேகம் உள்பட 16 பேருக்கு வணிக வரித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டது. இவர்கள் பணியை கடந்த 2004-ம் ஆண்டு முதல் வரையறை செய்து கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனால், இவர்களது பெயர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப் பட்டன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சர்மிளா பேகம் உள்ளிட்ட 16 பேர் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், ''எங்களுக்கு பணி வழங்க சுப்ரீம் கோர்ட்டு 1999-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி, எங்களது பணி 1996-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதி முதல் கணக்கிட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு அந்த உத்தரவை காலதாமதமாக நிறைவேற்றி, எங்களது பெயரை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க முடியாது'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா, ''சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, மனுதாரர்களை 1996-ம் ஆண்டு பணிவரையறை செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயர்களை சேர்க்க வேண்டும்'' என்று கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தமிழ்நாடு அரசு அமல்படுத்தவில்லை. இதையடுத்து, மனுதாரர்கள் சென்னை ஐகோர்ட்டில், பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் சி.சமயமூர்த்தி ஐ.ஏ.எஸ்., நிதித்துறை செயலாளர் டி.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., வருவாய் நிர்வாகத்துறை முதன்மை கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்., பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், வணிகவரித்துறை கமிஷனர் டி.ஜெகன்நாதன் ஐ.ஏ.எஸ்., கருவூலம் மற்றும் கணக்குத்துறை கமிஷனர் கிருஷ்ணன் உன்னி ஐ.ஏ.எஸ்., ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவம திப்பு வழக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஜி.பாலா டெய்சி ஆஜராகி வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட 6 அதிகாரிகளையும் வருகிற ஆகஸ்டு 4-ந்தேதி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நேற்று (13-07-2025) மாலை, வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (14-07-2025) காலை 05.30 மணி அளவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக, வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க பகுதிகளில் நிலவியது. இது 08.30 மணி அளவில், மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்க பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், ராணிபேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
19-ந்தேதி மற்றும் 20-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனிடையே இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 ° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 18-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- 2024 தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் ராபர்ட் புருஸ் பெற்ற வெற்றி செல்லாது என வழக்கு.
- சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
தேர்தல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
2024 தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் ராபர்ட் புருஸ் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி நயினார் வழக்கு தொடர்ந்தார்.
ராபர்ட் புருஸ் தன் மீதான வழக்கு விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
- இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, வாங்கல் பகுதியில் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தனியார் இடத்தில் மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிவாசகம் மற்றும் அவரது உறவினர்களை, மணல் மாபியா கும்பலைச் சேர்ந்த திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்கியதில், மணிவாசகம் உயிரிழந்ததாகவும், அவரின் தம்பி, தாயார், பாட்டி உள்ளிட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மணல் கொள்ளை எந்தவித தடையும் இன்றி நடப்பது நாடறிந்த உண்மை.
"காலை 11 மணிக்கி ஸ்டாலின் பதவி ஏற்பார்; 11.05-க்கு மண் அள்ளலாம்" என்று சொன்னவர் இந்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர். இந்த மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டால், கொள்ளையர்களின் பதில் மிரட்டல், கொலை!
இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை மட்டும் அல்ல; அதிகாரம் கையில் கிடைத்தால் திமுக எப்படியெல்லாம் அராஜகம் செய்யும் என்பதற்கான சான்றும் தான் இது.
இந்த வழக்கில் பல்வேறு நபர்களை சேர்த்து, இதனை நீர்த்துப் போகச் செய்ய காவல்துறை முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன.
மணல் கொள்ளை தொடர்பான கொலை வழக்கை நேர்மையாக விசாரித்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- அ.தி.மு.க. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தற்போதைய நோக்கம்.
- ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்கவில்லை.
சென்னை:
சென்னையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தற்போதைய நோக்கம். அ.தி.மு.க.வில் மீண்டும் இணைய எனக்கு எந்த நிபந்தனையும் இல்லை. உடன் இருப்பவர்களுக்கு பதவி பெற்றுத்தரப்படும். அ.தி.மு.க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதால் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்கவில்லை. கட்சி தொடங்கிய பிறகு விஜய் இன்று வரை நன்றாக தான் செயல்பட்டு வருகிறார். விஜய்க்கு எங்களது தார்மீக ஆதரவு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்.
- எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை.
சென்னை:
சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராஜராஜ சோழன் என்பவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த, நீலாங்கரை போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஜமுனா சிவலிங்கம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் கடந்த ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை காவல்துறையினர், இதுநாள் வரை செயல்படுத்தவில்லை.
இதேபோல பல வழக்குகள், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலைலேயே உள்ளது. மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட கோர்ட்டு பிறப்பிக்கும் பிடிவாரண்ட்கள் அடிப்படையில், குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பிடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், வாரண்டை செயல்படுத்தாதது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, புதிதாக வாரண்ட் பிறப்பிக்க கோர வேண்டும்.
இதை விடுத்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், வாரண்ட்களை நிலுவையில் வைத்திருக்க காவல் துறையினருக்கு அதிகாரம் இல்லை.
தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து வருகிற 23-ந்தேதி அறிக்கையை டி.ஜி.பி. மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும். அதில், தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடிவாரண்டுகள் செயல்படுத்தப்படாமல் உள்ளன என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்" என்று உத்தரவிட்டார்.
- கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, குன்னூர் ஆகிய சட்டசபை தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார்.
- கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்றும் கேட்டறிந்தார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபை தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்து ஆலோசித்து வருகிறார். தினமும் 3 சட்டசபை தொகுதிகளை சார்ந்த ஒன்றிய நகர பேரூர், பகுதி கழக செயலாளர்கள் மண்டல பொறுப்பாளர்கள் ஆகியோரை அழைத்து தனித்தனியாக தொகுதி நிலவரங்களை கேட்டறிகிறார். அந்த வகையில் ஏற்கனவே 36 தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளிடம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்துள்ளார்.
கட்சி நிர்வாகிகள் செயல்படும் விதம் குறித்தும் எம்.எல்.ஏ.வின் செயல்பாடு குறித்தும் இந்த கள ஆய்வில் கேட்டு இருக்கிறார். நிர்வாகிகள் செய்யும் தவறுகளையும் புள்ளி விவரத்துடன் சுட்டிக்காட்டுகிறார். ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தை வலுப்படுத்தவும் திமுக உறுப்பினர் சேர்க்கையை மேலும் தீவிரபடுத்தவும் கேட்டுக்கொள்கிறார்.
அந்த வகையில் இன்று கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட கோபிசெட்டிபாளையம், பெருந்துறை, குன்னூர் ஆகிய சட்டசபை தொகுதிகளை சார்ந்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசித்தார்.
இதில் தொகுதிகளின் வெற்றி நிலவரம் எந்த வகையில் உள்ளது. கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்றும் கேட்டறிந்தார். திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறதா? துண்டு பிரசுரங்கள் கொடுக்கிறீர்களா? என்றும் கேட்டறிந்தார். மேலும் தேர்தலுக்கான பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
- எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம்.
- மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக முடியும்.
கீழ்ப்பாக்கம்:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்க வேண்டாம். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஆதரவாளர்களுக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-
* அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும்.
* சட்ட போராட்டத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி.
* அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவே தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறோம்.
* எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம்.
* மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக முடியும்.
* எடுத்துள்ள சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. அது என்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியும்
* எனது தலைமையில் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந்தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும்
* எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து மதுரை மாநாட்டில் அறிவிப்பேன் என்றார்.
- ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
- ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.
2. திரு. ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
3 திரு. தீரஜ் குமார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4, திருமதி. பெ. அமுதா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
மேற்கண்ட அதிகாரிகள் எந்தெந்த துறை சம்மந்தமாக செய்திகள் வெளியிட வேண்டும் என முதல்வரின் ஆணைப்படி அவர்களுக்கு கீழ்க்காணுமாறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன:
1. டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன்
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.
* எரிசக்தித் துறை
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
* போக்குவரத்துத் துறை
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை
* வெளிநாடு வாழ் தமிழர் நலன்
* பள்ளிக் கல்வித் துறை
* உயர்கல்வித் துறை
* கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த் துறை
* மனிதவள மேலாண்மைத் துறை
2. திரு. ககன்தீப் சிங் பேடி
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
* ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை
* கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
* வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
* நீர்வளத் துறை
* சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை
* குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை
* தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை
* இயற்கை வளங்கள் துறை
3. திரு தீரஜ் குமார்.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
* உள். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
4. திருமதி. பெ. அமுதா.
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
* மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
* தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
* பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
* வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை
* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
* சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை
* சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை
அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள். அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.
அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 21-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
- கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை:
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணையவழியில் நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு கலந்தாய்வில் பங்கேற்க 3.02 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 27-ந்தேதி வெளியானது.
தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்காக கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ந்தேதி தொடங்கியது. முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரா்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவா்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்த நிலையில் அதில் 994 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதில் 125 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.
இதையடுத்து, பொதுப்பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வு ஜூலை 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 39 ஆயிரத்து 145 மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை ஜூலை 16-ந்தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும்.
இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை ஜூலை 17-ந்தேதி காலையில் வெளியிடப்படும். அதற்கு மறுநாள் (ஜூலை18) மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். மேலும் இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 21-ந்தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
இதற்கிடையே கலந்தாய்வின் போது விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை பெறுதல், அதை உறுதி செய்து இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுவது என உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவர்கள் செயல்பட வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களை https://www.tneaonline.org எனும் வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வு ஆகஸ்டு 20-ந்தேதியுடன் நிறைவுபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
- "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
- சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை :
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பழம்பெரும் திரைப்பட நடிகை, "அபிநய சரஸ்வதி" என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி அவர்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடன் சரோஜா தேவி அவர்கள் இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. "சரோஜா தேவி" எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.
மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்ற சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.






