என் மலர்
சென்னை
- மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
- 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை நீடிக்கும்.
சென்னை:
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வந்தது. இதன் தாக்கத்தால், தெற்கு அந்தமான் கடலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
மேலும், இது வரும் புதன்கிழமை மேலும் தீவிரம் அடையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, தென்காசி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும்.
- வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை மறுநாள் (25.11.2025) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
எழும்பூர்: எழும்பூர் நெடுஞ்சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோவில் தெரு, எம்.எஸ்.நகர், சேத்பேட், பாந்தியோன் சாலை, மாண்டியத் சாலை, மார்ஷல் சாலை, எத்திராஜ் சாலை, மோதிலால் லேன், பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்புகள்.
- சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படும்.
- இந்த சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
சென்னை:
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் டிசம்பர் 2-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 'காசி தமிழ் சங்கமம் 4.0' நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும்.
பனாரசில் இருந்து 7-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 9-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
இதேபோல, சென்டிரலில் இருந்து டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் ரெயில் 7-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 11-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 13-ம் தேதி இரவு 11.15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கமாக பனாரசில் இருந்து டிசம்பர் 17-ம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 19-ம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்டிரல் வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.
- 30 வருடம் போர் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்களை போராளிகள் அழிக்கவில்லை.
- சிங்களர்களின் மத உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மதித்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கையில் ஈழத்தமிழர்கள் பெரும்பகுதியாக வாழும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் கடந்த 16-ஆம் தேதி அங்குள்ள கடற்கரையோரம் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகளும், பௌத்த பக்தர்களும் புத்தர் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டி, புத்தர் சிலையொன்றை நிறுவியுள்ளனர். அதற்கு தமிழ் மக்களும், தமிழ்த் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல் துறையினர் அங்கிருந்து சிலையை அப்புறப்படுத்தினர்.
ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள, பௌத்தவாதிகள் புத்தர் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்று கூறியதையடுத்து அடுத்த நாளே காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் காவலர்களின் கைகளாலேயே கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை மீண்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் திரிகோணமலை மட்டுமல்லாமல் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் வழக்கம் போல தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை. இலங்கை அரசாங்கத்தின் இந்த அத்துமீறல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
திருகோணமலை ராவணனால் வழிபட்ட புகழ்பெற்ற தலமாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. மேலும், கி.மு. 150 ஆம் ஆண்டில் வாழ்ந்த தமிழ் மன்னன் எல்லாளனால் வழிபடப்பட்ட இடமாகவும் கருதப்படுகிறது.
இங்குள்ள தொன்மையான சிவன் கோயிலான திருக்கோணேஸ்வரம், இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள இந்துக்கள் மற்றும் தமிழர்களிடையே பரவலாக அறியப்பட்டதாக உள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற இந்த தலம் இந்து மதத்தை பின்பற்றும் ஈழத் தமிழ் மக்களுக்கு புனிதமான நகரமாகவும் கருதப்படுகிறது.
1987ல் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்காலிகமாக இணைத்து நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தலைநகரமாகத் திருக்கோணமலையே விளங்கியது. இது தமிழர்களால் கோரப்பட்ட தனிநாடான தமிழீழத்தின் தலைநகராகவும் பிரகடனப் படுத்தப்பட்டிருந்தது. தமிழர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் வாழ்ந்த இந்நகரில் பௌத்த விகாரை நிறுவுவது என்பது தமிழர்களின் மத நம்பிக்கையையும், கடவுள் வழிபாட்டு உரிமைமையும் சீர்குலைக்கின்ற செய்கையாகும்.
திருகோணமலை துறைமுகம் ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய துறைமுகமாகவும், முக்கிய வணிக மையமாக திகழ்ந்தது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் சிங்களர்களின் ஆதிக்கத்தை முழுமையாக நிறுவுவதற்கும், தமிழர்களை முழுமையாக அப்புறப்படுத்துவதற்குமான நடவடிக்கையாகவே இதை கருத முடிகிறது.
தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில் ஏற்கனவே மெல்ல மெல்ல சிங்களர்களை குடியமர்த்தி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் தற்போது அவற்றை உறுதி செய்யும் விதமாக தமிழர் பகுதிகளில் பௌத்த விகாரைகள், சிலைகளை நிர்மாணித்து வருவதாகவும் தமிழர்கள் கூறுகின்றனர்.
30 வருடம் போர் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கு பகுதிகளில் பௌத்த சின்னங்களை போராளிகள் அழிக்கவில்லை. சிங்களர்களின் மத உரிமையையும், வழிபாட்டு உரிமையையும் மதித்தனர். ஆனால் அமைதியையும், அன்பையும், ஆசையை துறக்கும் தத்துவத்தையும் போதித்த புத்தரின் பெயரால் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கலாச்சார படையெடுப்பை நடத்தி, தமிழர்களை அப்புறப்படுத்த நினைக்கும் பேராசையுடன் சிங்கள பௌத்த இனவாதிகள் செயல்படுகின்றனர்.
மத திணிப்பின் மூலம் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை அழிக்க நினைக்கும் இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கமும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வன்மையாக கண்டிப்பதுடன், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.
தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை இனப்படுகொலை மூலம் அழித்த நிலையிலும் கூட, அம்மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத அளவுக்கு சிங்கள அரசாங்கம் தொடர்ந்து செயல்படுகிறது. எனவே இந்திய அரசும், சர்வதேச நாடுகளும் தலையிட்டு ஈழத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு கூட்டாட்சி முறையிலான தன்னுரிமை கொண்ட பிரதேசமாக மலர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
- பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன்.
- எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.
ஈரோடு தமிழன்பன் ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு தமிழன்பன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மரபுக்கவிதை, புதுக்கவிதை என இரண்டிலும் சிறந்து, தமிழுக்கு வளம் சேர்த்த அறிஞர் ஈரோடு தமிழன்பன் என்கிற செந்தீசன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் ஈரோடு தமிழன்பன். சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், பேராசிரியர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர், அரிமா நோக்கு இதழின் ஆசிரியர் எனப் பல்வேறு பொறுப்புகளில் அவர் ஆற்றிய பணிகளும் எழுதிய நுங்களும் ஏராளம்.
தமது இடையறாத தமிழ்ப் பணிகளுக்கு அங்கீகாரமாகக் கலைமாமணி சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது, சிறந்த நூலுக்கான தமிழ்நாடு அரசின் விருது, குறள்பீட விருது, முரசொலி அறக்கட்டளையின் கலைஞர் விருது, கவிக்கோ விருது என எண்ணற்ற விருதுகளைப் பெற்று அவற்றுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள்.
நமது திராவிட மாடல் ஆட்சிக்கு வந்ததும் 2022-ம் ஆண்டு முத்தமிழறிஞரின் பிறந்ததாளில் கனவு இல்லம் திட்டம் திட்டத்தின்கீழ், அவருக்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வழங்கியிருந்தோம்.
மேலும், அவர் இயற்றிய கீழடியில் கேட்ட தாலாட்டுகள், நெருக்கடி நேரத்தில் கலைஞரோடு (கவிதைகளும் கட்டுரைகளும்) ஆகிய நூல்களையும், வட அமெரிக்க ஈரோடு தமிழன்பன் வாசகர் பேரவை தயாரித்துள்ள, ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த "மகாகவி" என்ற ஆவணப் படத்தையும் முதலமைச்சராக வெளியிடும் பேற்றினைப் பெற்றிருந்ததை இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
இறுதிக்காலம் வரையிலும் பல வகைமைகளிலும் தமிழுக்குத் தொண்டாற்றிய நீண்ட நெடிய பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான கவிஞர் ஈரோடு தமிழன்பனை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும். தமிழன்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தினந்தோறும் தன்னை பற்றி செய்தி வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
- நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்திருக்கிறது.
நெல் கொள்முதலில் எதிர்க்கட்சிகள் தற்போது அரசியல் செய்கின்றனர் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திமுக அரசை தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றனர். தினந்தோறும் தன்னை பற்றி செய்தி வர வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுத்திருக்கிறது. நெல் ஈரப்பத அளவை உயர்த்த மறுத்துவிட்டு வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார்.
ஆக்கப்பூர்வமான வேலையை செய்யாமல் தூற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நேற்று தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும்.
தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25-ந்தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26 முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
22-11-2025 முதல் 24-11-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-11-2025 மற்றும் 26-11-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
22-11-2025 மற்றும் 23-11-2025: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
24-11-2025: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25-11-2025: தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், அந்தமான் கடல் பகுதிகள், தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கடந்த ஜூன் மாதம் முதல் அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.
- இன்றுடன் உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 சட்டசபை தொகுதிகள் நிறைவு பெற்றுள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக கள ஆய்வு மேற் கொண்டு வருகிறார்.
"உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக ஒன்றிய கழக, பகுதி கழக, பேரூர் கழக செயலாளர்கள், வட்டச் செயலாளர்களை அழைத்துக் கட்சி நிலவரங்களை கேட்டறிகிறார்.
கடந்த ஜூன் மாதம் முதல் அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளை பாராட்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்கள் செய்துள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டுகிறார்.
தேர்தல் வருவதால் ஒற்றுமையாக அனைவரும் பணியாற்ற வேண்டும் என்றும் கோஷ்டி பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு கழகம் நிறுத்தும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்.
அந்த வகையில் இன்று கடலூர், புவனகிரி, மயிலம் தொகுதி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு தொகுதி நிர்வாகிகளையும் சராசரியாக 1.30 மணி நேரம் வரை விசாரித்து கட்சி நிலவரங்களை தெரிந்து கொண்டார்.
அந்தவகையில் இன்றுடன் உடன் பிறப்பே வா ஒன்-டூ-ஒன் சந்திப்பில் 100 சட்டசபை தொகுதிகள் நிறைவு பெற்றுள்ளது. நிர்வாகிகள் முன் வைக்கும் கோரிக்கைகள், அரசு சார்ந்த கோரிக்கைகள், கட்சி சார்ந்த கோரிக்கைகள் என பிரிக்கப்பட்டு இதில் தீர்வு காணப்படுகிறது.
- திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
- உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
விழுப்புரம் அருகே திமுக ஒன்றியச் செயலாளர், பெண் ஒருவரை 6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
"காவல்துறையால் என்னை ஒன்றும் செய்ய முடியாது; நான் முக்கிய புள்ளி" எனக் கூறி, தனது திமுக பதவியை வைத்து கொண்டு இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சியில், திமுக-வினரிடம் இருந்தே பெண்களைக் காக்க வேண்டிய அவல நிலைக்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
அமைச்சருக்கு நெருக்கமான அனுதாபி முதல், பதவியை வைத்து கொண்டு கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள ஒன்றியச் செயலாளர் வரை, இந்த திமுக பாலியல் SIR-களைக் கூட கட்டுப்படுத்த கையாலாகாத தலைவராக தான் இந்த பொம்மை முதல்வர் இருக்கிறார்.
தன் கட்சி காமுகர்களை ஒடுக்க முடியாத இந்த பொம்மை முதல்வர், நம் தமிழகத்தை எப்படி பாதுகாக்கப் போகிறார்?
உடனடியாக திமுக ஒன்றியச் செயலாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார்.
- அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.
பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சியில் ஜனவரி 2-ந்தேதி ம.தி.மு.க.வின் சமத்துவ நடைபயணம் தொடங்குகிறது. மதுரையில் இந்த பயணம் 12-ந்தேதி நிறைவடைகிறது.
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடக்கிறது. திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த பயணத்தில் சுமார் 1000 வீரர்கள் என்னோடு கலந்து கொள்கிறார்கள். இது எனது 11-வது நடை பயணமாகும். தமிழக அரசு போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி மத மோதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.
தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட முடிவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். திராவிட இயக்கத்துக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் எதிர்த்து வருகின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.
2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார். அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். விஜய் கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரிக்காமல் அவர்களை அழைத்து துக்கம் விசாரித்தது முறையல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் படை தலைவர் பாஸ்கர சேதுபதி, வக்கீல் நன்மாறன், கழக குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
- காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும்.
- வடகடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேலும் வலுப்பெறக்கூடும்.
இதன்பின்பே, இது புயலாக வலுப்பெறுமா? புயலாக வலுப்பெறும் பட்சத்தில் எந்த இடத்தில் கரையைக் கடக்கக்கூடும் என்பதை அதன் நகர்வுகளை பொறுத்து அமையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில், வட தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடிய 24-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
- ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
வருகிற 25-ந்தேதி கோவையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேலும் அன்றைய தினமே கோவையில் செம்மொழி பூங்காவையும் திறந்து வைக்கிறார்.
இதனை தொடர்ந்து 26-ந்தேதி ஈரோடு- மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் மாவீரன் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தீரன் சின்னமலையின் மணிமண்டபத்திற்கு சென்று மலர் தூவி மரியதை செலுத்துகிறார். மேலும் ஈரோட்டில் ரூ.605 கோடியில் முடிவுற்றப் பணிகளை தொடங்கி வைத்து 1,84,491 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.






