என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • பழைய மகாபலிபுரம் சாலையையொட்டிய சிலபகுதிகளில் ஏற்கனவே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
    • ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதியதாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் செம்மஞ்சேரி யில் 51 ஆயிரம் பேருக்கு 2025- டிசம்பர் மாதத்துக்குள் குழாய் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நெம்மேலி கடல் நீரை குடி நீராக்கும் ஆலையில் இருந்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குழாய் மூலம் குடிநீர் வழங்கும் வசதிகள் செய்யப்பட உள்ளது.

    துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு 2 ஆண்டுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளில் சென்னை குடிநீர் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

    ராஜீவ்காந்தி சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையையொட்டிய சிலபகுதிகளில் ஏற்கனவே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை பகுதிகளில் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் குழாய் குடிநீர் வழங்கப்பட உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பல பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கொட்டிவாக்கத்தில் ஏற்கனவே உள்ள பழைய குழாய்களை மாற்றி சீரமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளன.

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் கொட்டி வாக்கத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை தொடங்கி உள்ளது.

    குழாய் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் 2026-ல் ஒரு நாளைக்கு 5.3 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. செம்மஞ்சேரி பகுதிக்கு 2025- டிசம்பரில் ரூ.46 கோடி செலவில் விரிவான குழாய் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. சுமார் 51 ஆயிரம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 7.9 மில்லியன் லிட்டர் குடிதண்ணீர் வழங்கப்பட உள்ளது.

    இதற்காக ராட்சத பெரிய பைப்லைன்கள் பதிக்கப்பட உள்ளது. துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட ஐ.டி. சாலை பகுதிகளில் 500 மி.மீ. சுற்றளவு கொண்ட ராட்சத குடி குழாய்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையோர பகுதிகளில் தற்போது ராட்சத குடிநீர் குழாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கரைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இப்பகுதிகளில் தற்போது ஐ.டி. கம்பெனிகள் ஏராளம் பெருகி உள்ளன. இப்பகுதியின் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தோம்.

    அதன் அடிப்படையில் தற்போது நெம்மேலி கடல்நீரை குடி நீராக்கும் திட்டத்தின் கீழ் கடல் தண்ணீரை சுத்தி கரித்து குழாய் மூலம் இப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

    இந்த பணிகள் விரைவாக செயல் படுத்தப்பட்டு பொது மக்கள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் நீண்ட நாள் கனவு குழாய் குடிநீர் திட்டம் மூலம் விரைவில் இப்பகுதிக்கு குடி தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறோம்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஐ.டி. கம்பெனிகள் நிறைந்துள்ள பழைய மகாபலிபுரம் சாலை, மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வாழும் மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு திட்டங்களை செய்து வருகிறது.

    நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தண்ணீரை சுத்திகரித்து இப்பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிதண்ணீரை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இப்பகுதி மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும்.

    இந்த தண்ணீர் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இருக்கும். இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதர் நிறைந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.
    • வாலிபர்கள் 2 பேர் இளம்பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே மாநகர பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகர், வண்டலூர் உயிரியல் பூங்கா, பெருங்களத்தூர், மாமல்லபுரம், திருப்போரூர், கேளம்பாக்கம், படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகரப் பஸ்கள் அதிகாலையில் இருந்து இரவு 11 மணி வரை சென்று வருகின்றன. இதனால் தாம்பரம் ரெயில் நிலையம் அருகே உள்ள இந்த பஸ்நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் அதிகாலை, சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், பஸ் ஏறுவதற்காக இந்த பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர்.

    திடீரென அவர்கள் பட்டா கத்தியை காட்டி இளம்பெண்ணை மிரட்டினர். பின்னர் அவரை அருகில் உள்ள புதர்கள் நிறைந்த பகுதிக்கு கடத்தி சென்று கற்பழிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கூச்சலிட்டார்.

    பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்த பஸ் நிலையத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் பொதுமக்கள் புதர் நிறைந்த பகுதிக்கு சென்று பார்த்தனர்.

    அங்கு வாலிபர்கள் 2 பேர் இளம்பெண்ணிடம் தவறாக நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் பொதுமக்களிடம் பட்டாகத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர்.

    இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்ததும் ரோந்துப் பணியில் இருந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தப்பி ஓட முயன்ற 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். இளம்பெண்ணையும் மீட்டனர். விசாரணையில் கைதான வாலிபர்கள் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் வீரமணி (27), மணிகண்டன் (26) என்பதும் அவர்கள் மீது தாம்பரம், சேலையூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.

    இதில் மணிகண்டன் மீது 18 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொண்டு நிறுவனங்கள் இணைந்து ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கட்டராகவன், இன்ஜினியர் விஜயசந்திரன், ஊராட்சி செயலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    ஊரப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஐயஞ்சேரி பகுதியில் உள்ள பாதாளீஸ்வரர் கோவில் குளத்தை தூர்வாரவும், குளக்கரை மீது நடைபாதை அமைக்கவும், மின் விளக்குகள் அமைக்கவும் ஒருங்கிணைந்த பன்னாட்டு அரிமா சங்கம், மோபீஸ் இந்தியா மற்றும் எக்ஸ்னோரா ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து ரூ. 70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதையடுத்து குளத்தை தூர்வாரும் பணிக்கான பூமி பூஜை தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் பவானிகார்த்தி தலைமையில் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் சுப்பிரமணி, சீனிவாசன், பாண்டியலட்சுமி, கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் வரலட்சுமிமதுசூதனன் எம்.எல்.ஏ., காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு குளம் தூர் வாரும் பணிக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், வெங்கட்டராகவன், இன்ஜினியர் விஜயசந்திரன், ஊராட்சி செயலர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
    • பொதுச்செயலாளர் பொன் ஆதவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கத்தின் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் பங்கேற்று, தமிழ் இலக்கிய வரலாறு, செந்தமிழ் வளர்க்கும் பொங்கு தமிழ்ச்சங்கம், செல்லமே, இரட்டனைக் கலம்பகம், திருக்குறள் உரை, தொகுப்பு, ஆய்வு ஆகிய 7 நூல்களை வெளியிட்டார்.

    சங்க தலைவர் சுந்தரபழனியப்பன் முன்னிலையில் கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டது. பொதுச்செயலாளர் பொன் ஆதவன், செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பாளர் ஆலை வர்மன், மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    • பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    கூடுவாஞ்சேரி:

    நல்லம்பாக்கம் நடுநிலை பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து 5 லட்சம் செலவில் கழிப்பறை கட்டிடத்தை மாவட்ட கவுன்சிலர் திறந்து வைத்தார்.

    செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வண்டலூர் அடுத்த நல்லம்பாக்கம் ஊராட்சியில், நல்லம்பாக்கம், கண்டிகை, காந்திநகர், மல்ரோசாபுரம், அம்பேத்கார் நகர், வலம்புரி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட நல்லம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 210 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஊராட்சிகளின் 15-வது நிதி குழு மானியம் தூய்மை திட்டத்தின் கீழ் 5 லட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உட்பட ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சேர்த்து கழிப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    அதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஹேமமாலினிவாசு, ஒப்பந்ததாரர் எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் அரிகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் கஜா என்ற கஜேந்திரன் கலந்துகொண்டு 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கழிப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொடுத்தார். இதில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
    • ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது.

    மதுராந்தகம்:

    அச்சரப்பாக்கத்தில் இருந்து வெங்கடேசபுரம் வழியாக பெருங்கருணை, கயப்பாக்கம், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது.

    இந்த ரெயில்வேகேட் கிராசிங்கில் ஊழியராக ஆனந்த் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் அவ்வழியே ரெயில்கள் வரும்போது ரெயில்வேகேட்டை பூட்டி விட்டு பின்னர் ரெயில் கடந்து சென்ற பின்னர் திறப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று காலை 6.45 மணிக்கு சென்னை நோக்கி சென்ற ரெயிலுக்காக ஊழியர் ஆனந்த் ரெயில்வே கேட்டை மூடினார். பின்னர் அவர் அங்குள்ள ஓய்வு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டி தூங்கி விட்டார்.

    ரெயில் கடந்து சென்ற பின்னரும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் சாலையின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை 7 மணியை தாண்டியும் ரெயில்வே கேட் திறக்கப்படாததால் வாகன ஓட்டிகள் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள ரெயில்வே கேட் கீப்பர் அறைக்கு சென்று பார்த்த போது ஊழியர் ஆனந்த் குறட்டை விட்டு தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை தட்டி ஆனந்தை தூக்கத்தில் இருந்து எழச்செய்தனர். இதன் பின்னரே ரெயில்வே கேட்டை திறக்க மறந்து தூங்கிவிட்டது அவருக்கு தெரிந்தது. பதறியடித்தபடி அவர் ரெயில்வே கேட்டை திறந்து விட்டார்.

    எனினும் கடும்கோபத்தில் இருந்த வாகன ஓட்டிகள் ஊழியர் ஆனந்த்திடம் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் கடந்த பின்னரும் ஊழியர் ஆனந்த் சுமார் 20 நிமிடம் ரெயில்வே கேட்டை திறக்காமல் இருந்திருப்பது தெரியவந்து உள்ளது. ரெயில் வரும் நேரத்தில் அவர், ரெயில்வே கேட்டை மூடாமல் இருந்து இருந்தால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி மகிழ்ந்தனர்.
    • பங்கேற்க அவர்கள் தமிழ் நாட்டின் பிற மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இருந்தனர்.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் உள்ள அணுசக்தி மத்திய பள்ளியில் 2003-ம் ஆண்டு 11 மற்றும் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் அனைவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடி மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் படித்த வகுப்பறை, ஆய்வுக்கூடம், விளையாட்டு திடல், கேண்டீன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பழைய நினைவுகளை ஆசிரியர்களுடன் பகிர்ந்தனர். பின்னர் அனைவரும் குழு புகைப்படம் எடுத்தனர். இதில் பங்கேற்க அவர்கள் தமிழ் நாட்டின் பிற மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்து இருந்தனர்.

    • 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.
    • மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் செயல்பட்டு வரும் இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் சார்பில் 251-வது உழவாரப்பணி மற்றும் விழிப்புணர்வு பேரணி திருப்போரூர் கந்தசாமி கோவிலில் நடைபெற்றது. 100-க்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்ற பேரணி, கோவிலின் பிரதான வாயிலில் தொடங்கி நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்தது.

    அப்போது, ஆலயங்களையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துணிப்பை இலவசமாக வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் கந்தசாமி கோவில் அருகில் உள்ள குளம் மட்டுமின்றி மலைக் கோவில் கைலாசநாதர் கோவில், சிதம்பர சுவாமிகள் திருமடம், விநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாலையில் உலக நலனுக்காக திருமுறை பாராயணம் பாடுதல், அடியார்கள் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் தியாகராஜன் ஒத்துழைப்புடன், இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற தலைவர் ச.கணேசன் செய்திருந்தார்.

    • கடந்த 10-ந்தேதி அவர் பணிமுடிந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.
    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து டாட்டியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன்நகையை பறித்து தப்பினர்

    திருப்போரூர் அடுத்த மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி டாட்டியம்மாள். இவர் கன்னிவாக்கம் கூட்டுறவு கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 10-ந்தேதி அவர் பணிமுடிந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து டாட்டியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன்நகையை பறித்து தப்பினர். இந்த வழக்கில் ஏற்கனவே பரனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

    இப்போது அவனது கூட்டாளியான போலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த மணியரசன்(27) என்பவர் சிக்கி உள்ளார். இதேபோல் கேளம்பாக்கம் வீராணம் சாலையைச் சேர்ந்த ஆரம்பசுகாதார நிலைய ஊழியர் கல்பனா என்பவரிடம் நகை பறித்த எடர்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
    • வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    வடக்கு மாமல்லபுரம் கிராம பொதுக் கோவிலான, கங்கையம்மன், ஊத்துக்காட்டு அம்மன் கோயிலில் அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் சன்னிதி விமானங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    70ஆண்டு பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகத்தைகான தேவநேரி, வெண்புருஷம், பட்டிபுலம், கொக்கிலமேடு, மணமை, கடம்பாடி, பெருமாளேரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.

    கோவிலின் தர்மகர்த்தா ராமலிங்கம், செயலாளர் லோகநாதன், பொருளாளர் பழனிவேல், கிட்டு, கேசவன், அன்பு, ரங்கநாதன், ஜெயராமன், கவாஸ்கர், மகேஷ் மற்றும் வடக்கு மாமல்லபுரம் கிராம மக்கள் இணைந்து கும்பாபிஷேக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • என்ஜினீயர் சுகந்தா ஆச்சார்யா மார்பில் ஸ்குருடிரைவரால் குத்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள்.
    • வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    காரப்பாக்கத்தில் வசித்து வந்தவர் சுகந்தா ஆச்சார்யா (வயது34). கம்ப்யூட்டர் என்ஜினீயர். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மார்பு பகுதியில் ஸ்குருடிரைவர் குத்திய நிலையில் இருந்தது.

    இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    என்ஜினீயர் சுகந்தா ஆச்சார்யா மார்பில் ஸ்குருடிரைவரால் குத்தி தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. வீடு உள்பக்கமாக பூட்டி இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவரை யரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இதையடுத்து சுகந்தா ஆச்சார்யாவின் நண்பர்கள் யார்? யார்? அவரது வீட்டுக்கு கடைசியாக வந்தவர்கள் யார்? வேலை பார்த்த இடத்தில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    • மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.
    • விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள விநாயகர், முருகர், துர்க்கை நவகிரக மூர்த்திகள், முத்து மாரியம்மன் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் சிம்ம லக்கினத்தில் நடைபெறுகிறது.

    இதனையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், கணபதி ஹோமம், கோபூஜை, கரி கோலம், அஷ்டாதச கிரியை, தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேச பலி, ம்ருத்சங்கிரஹணம், ரக்ஷேக்னஹோமம், தீபாராதனை முதற்கால யாக பூஜை நடக்கிறது.

    27-ந்தேதி மஹாலஷ்மி ஹோமம், நவகிரஹ ஹோமம், யாகசாலை நிர்மாணம்,வேதபாராயணம், தீபாராதனை இரண்டாம் கால பூஜையும் மாலை 6-மணிக்கு விநாயகர் பூஜை, அங்குரார்பணம், ரசாபந்தனம், கும்பாலங்கனம், கலாகர்ஷணம் மூன்றாம் கால பூஜையும் 5000 முறை ஐந்து குண்டங்களில் ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனையும் நடைபெறுகிறது. 28-ந்தேதி காலை நான்காம் கால பூஜை, விக்னேஸ்வர பூஜை, ஹோமங்கள், தத்துவார்ச்சனை, ஸ்பர்சாநீதி 9.45 மணிக்கு விமான கும்பாபிஷேகமும் 10 மணிக்கு முத்து மாரியம்மன் மஹா கும்பாபிஷேகம், பரிவார கும்பாபிஷேகம், மஹாபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவில் ஆலய நிர்வாகிகள் வல்லம் கிராம பொதுமக்கள், உபயதாரர்கள் மற்றும் பக்த்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    ×