என் மலர்
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கலைத் தெருவில் தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி செயல்பட்டு வந்தது. இதனை தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவடை கிராமத்தை சேர்ந்த ஜியாவுல்ஹக் (வயது 40), ஆண்டிமடம் அருகே உள்ள அயினேஷ்வரம் பகுதியை சேர்ந்த அல்ப்போன்ஸ் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர்.
இந்த டிராவல்ஸ் ஏஜென்சி மூலமாக வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தமிழகம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பிரபலமாக விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பிய வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் என பலர் ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வந்த டிராவல்ஸ் ஏஜென்சிக்கு சென்றுள்ளனர்.
அப்போது ஜியாவுல்ஹக், அல்போன்ஸ் ஆகியோர் வேலை கேட்டு வரும் நபர்களிடம், அவர்கள் கேட்கும் வேலை, எந்த நாட்டில் வேலை எதிர்பார்க்கின்றனர் என்பதை பொறுத்து குறைந்தது ஒரு லட்சம் முதல் பேரம் பேசி வாங்கிக்கொண்டுள்ளனர். மேலும் ஒரு மாதத்தில் வேலைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து அனுப்பப்படும் என உறுதியளித்துள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாகியும் வேலை ஏற்பாடு செய்து கொடுக்காததால் அவர்களிடம் பணம் கொடுத்தவர்கள் சென்று கேட்டுள்ளனர்.
அப்போது இருவரும் இன்றும் 10 நாட்களில் வேலை ஏற்பாடு செய்து கொடுப்பதாக உறுதியளித்ததோடு, 10 நாட்கள் கழித்து வருமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் அளித்த காலக்கெடுவுக்கு பின்னர், ஜெயங்கொண்டம் கலைத்தெருவில் செயல்பட்டு வந்த டிராவல்ஸ் ஏஜென்சிக்கு சென்றுள்னர். அப்போது அது பூட்டப்பட்டு கிடந்துள்ளது.
இது குறித்து பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்த கதிர்வேல் மனைவி செல்வி அரியலூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இருவரும் வேலை வாங்கி தருவதாக சென்னையை சேர்ந்த 8 பேர், பாண்டிச்சேரியை சேர்ந்த 18 பேர் என 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக ஒரு நபருக்கு தலா ஒரு லட்சம் வீதம் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அல்போன்சை கைது செய்தனர். இதனை அறிந்து கொண்ட ஜியாவுல்ஹக் வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விமான நிலைய விசாரணை பிரிவிற்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஜியாவுல்ஹக்கினை விமான நிலைய அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். மேலும் அரியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போலீசார் ஜியாவுல்ஹக் கினை கைது செய்து, ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
பின்னர் வழக்கினை விசாரித்த நீதிபதி மதிவாணன், ஜியாவுல் ஹக்கினை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். #tamilnews
அரியலூர் மாவட்டம் அண்ணிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாளயபாடி கிராமத்தில் திருமானூர் பாசன வாய்க்கால் கரையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளிக்கு செல்லும் சாலையானது கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலையாக அமைக்கப்பட்டு இருந்தது.
தற்போது பெய்த மழையின் காரணமாக இந்த மண் சாலை மிகவும் மோசமான நிலையில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக நேற்று நடந்து சென்ற ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர். பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் இந்த சேற்றில் தவறி விழுந்து விடுகின்றனர். மேலும் ஆங்காங்கே சாலையில் பள்ளம் ஏற்பட்டு அதில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் அருகிலுள்ள வங்குடி கிராமத்தில் சிவன் கோவில் அருகில் உள்ள ஏரியில் நேற்றுமுன் தினம் சிறுவர்கள், மற்றும் பெண்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது அருகில் முதலை படுத்திருப்பதை சிறுவர்கள் பார்த்தனர். உடனடியாக அனைவரும் பயந்து அந்த இடத்தை விட்டு ஓடி விட்டனர்.
இதனால் வங்குடி கிராமத்திலுள்ள அனைத்து பொது மக்களும் அந்த ஏரியில் குளிக்கச் செல்வதற்கும், துணி துவைப்பதற்கும், கால் நடைகளை குளிப்பாட்டவும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
முதலை கடித்து விடும் என்ற அச்சத்தில் பொது மக்கள் ஏரியில் இறங்காமல் பீதியில் உள்ளனர். இது குறித்து அதிகாரிகளுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறியுள்ளனர்.
பொது மக்கள் முதலை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து முதலைப்பண்ணைஅல்லது முதலைகள் வசிக்கும்அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் கொண்டு போய்விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வனத்துறை அதிகாரிகள் வருவாய்துறையினர் தலையிட்டு உடனடியாக இதை செயல் படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
செந்துறை அண்ணா நகரில் தனியார் கட்டிடத்தில் தலைமை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்தில் இன்று காலை 9 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தபால் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டரை ஊழியர்கள் இயக்கினர்.
அப்போது திடீரென ஜெனரேட்டர் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து ஊழியர்கள் செந்துறை தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே நிலைய அதிகாரி செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. ஜெனரேட்டர் ஏன் தீ பிடித்தது என விசாரித்து வருகிறார்கள். #tamilnews
அரியலூரை சேர்ந்த ஜெயக்குமார்-சுபாலதா தம்பதியரின் மகன் நிறை நெஞ்சன் (வயது 14), மகள் சாதனா (9). தாமரைக்குளத்தில் உள்ள ஒரு பள்ளியில் நிறைநெஞ்சன் 9-ம் வகுப்பும், சாதனா 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
மாணவர்களான இவர்களுக்கு பெற்றோர் தினந்தோறும் வழங்கும் பாக்கெட் மணியை உண்டியலில் சேமித்து வைத்து வந்தனர்.
தற்போது கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்ட தகவலை அறிந்த இருவரும் உதவ முடிவு செய்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தினை எண்ணியுள்ளனர். மொத்தம் ரூ.7 ஆயிரத்து 200 இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு பெற்றோருடன் அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றனர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் பணத்தினை ஒப்படைத்ததோடு, அதனை வைத்து தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கூறியுள்ளனர்.
அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாணவர்களான நிறை நெஞ்சன், சாதனா ஆகியோரை பாராட்டினார். #GajaCyclone
அரியலூர் மாவட்டத்தில் விபத்து தடுப்பு குறித்த செயல் விளக்க கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் மண்டல போக்குவரத்து அதிகாரி, தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட ஊரக சாலை உயர் அதிகாரிகளுடன் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பது குறித்து கலந்துரையாடினார்.
கூட்டத்தில் வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி பொருத்துதல், சாலையில் வேக கட்டுப்பாடு பற்றிய எச்சரிக்கை பலகை அதிகமாக வைத்தல், ஒளிரும் தகட்டினை சாலையோர மரங்கள் மற்றும் கல்வெட்டு பாலங்களில் பொருத்துதல், சாலைகளில் பாதசாரிகளுக்கு சாலையை கடக்க வர்ணம் பூசுதல், அதிகப்படியான வேகதடைகளை கிராமபுற சாலைகளில் அமைத்தல், முக்கிய சந்திப்புகளில் உயர் கோபுர மின்கம்ப விளக்குகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, போலீஸ் தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘கஜா’ புயல் தமிழகத்தில் கரையை கடக்கும் போது பலத்த காற்று மற்றும் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் பாதிப்பில் இருந்து தப்பிக்க தமிழக அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நிலையில் ‘கஜா‘ புயலால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் சூறைக்காற்று வீசியது. இரவு 11 மணியில் இருந்து கனமழை பெய்யத்தொடங்கியது. மேலும் இரவு 1 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சூறைக்காற்றினால் நகரின் பல பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள், மரங்கள் முறிந்து விழுந்தன. அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல் லூரிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.
இதேபோல் ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலின் தாக்கத்தினால் பல இடங்களில் நள்ளிரவில் வீசிய சூறைக்காற்றில் பலவிதமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகிலும், ஜெயங்கொண்டம் சீனிவாசநகரில் வீடு ஒன்றிலும், உட்கோட்டை, கொக்கரணை கிராமத்திலும் சாலையில் மரங்கள் விழுந்துள்ளன. இதேபோல் உத்திரக்குடி வயல்வெளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மரங்களும் விழுந்துள்ளது. இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கென்னடி தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப் படுத்தினர்.
திருச்சி- சிதம்பரம் சாலையில் நேற்று அதிகாலையில் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆங்காங்கே விழுந்து கிடந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. நேற்று காலை வரை லேசான மழை பெய்து வந்த நிலையில் காலை 10 மணிக்கு பின்னர் ஜெயங்கொண்டத்தில் மழை நின்று இயல்பு நிலை திரும்பியது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை மின்சாரம் நிறுத்தப்பட்டது.
கஜா புயலினால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், திருமானூர், ஆண்டிமடம், செந்துறை ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் சில சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தன. மின்கம்பங்களும் சேதமடைந்தன. சாலையோரங்களில் சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தும் பணியையும், மின்கம்பங்கள் சரிசெய்யும் பணியையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது சேதமடைந்த மின்கம்பங்கள், மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகளை துரிதமாக முடிக்கவும், குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரினை வெளியேற்றவும் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மின்சாரத்துறை அலுவலர்களுக்கு மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்ட இடங்களை உடனடியாக ஆய்வு செய்து உடனுக்குடன் சரிசெய்திட கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். #GajaCyclone
கஜா புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் விடிய, விடிய அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சற்று முன் கஜா புயல் கரையைக் கடந்து வரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm






