என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலை 6.30 மணிக்கு குருசுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தென்தாமரைகுளம்:
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 6.30 மணிக்கு குரு.சுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.
2-ம் நாளான நாளை (20-ந்தேதி) இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், 3-ம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5-ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வருதல், 6-ம் நாள் கற்பக வாகன பவனி, 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.
வருகிற 26-ந்தேதி 8-ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடு தல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும் நடக்க உள்ளது. தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.
9-ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான (ஞாயிற்றுக் கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11-ம் திருவிழாவான 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணி விடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை குருமார்கள் சுவாமி, தங்க பாண்டியன், ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் செய்து வருகின்றனர்.
- பிரமாண்ட மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.
- டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிதாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்ட மைதானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். அன்றைய தினம் மேற்படி கீழக்கரை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கத்தில், அரசால் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள் madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று 19-ந் தேதி மதியம் 12 மணி முதல் நாளை 20-ந்தி மதியம் 12.00 மணி முடிய பதிவு செய்திடல் வேண்டும்.

இணையதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள் உடற்தகுதி சான்றுடனும், காளை உரிமையாளர்கள் காளைகளுக்கு மருத்துவச் சான்றுடனும் பதிவு செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தகுதியான நபர்களுக்கு மட்டுமே டோக்கன் பதிவிறக்கம் செய்ய இயலும். அவ்வாறு டோக்கன் பதிவிறக்கம் செய்த நபர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதிலும் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள், காளையர்கள் பங்கேற்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் அதற்கேற்றவாறு கீழக்கரை மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
- ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.
- ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை:
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கு விசாரணை இன்று சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி, அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தனர்.
அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை ஏற்று வழக்கை ரத்து செய்ய கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
- உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விராலிமலை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 650 காளைகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மற்றும் திரளான பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
இங்கு காலை 8 மணிக்கு போட்டி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும் தொடக்க விழாவுக்கு தி.முக மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் தனித்தனியாக திரண்டு இருந்தனர்.
அப்போது வி.ஐ.பி. களில் முதல் ஆளாக தொகுதி எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான டாக்டர் விஜயபாஸ்கர் வருகை தந்தார். உடனே போட்டிகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
அப்போது தி.மு.க. தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அமைச்சர் வந்த பின்னர் தான் போட்டி தொடங்க வேண்டும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் தொகுதி எம்எல்ஏ விஜயபாஸ்கர் தான் ஆகவே அவர் போட்டியை தொடங்கி வைக்கலாம் என்றனர்.
இதனால் விழா மேடையில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
பின்னர் அதைத் தொடர்ந்து உதவி கலெக்டர் தெய்வநாயகி போட்டியை தொடங்கி வைத்தார்.
1¼ மணி நேரம் தாமதமாக போட்டி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சத்தியசீலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த அ.தி.மு.க. இப்போ இல்லைன்னு நான் நினைக்கிறேன்.
- மாநாட்டின் பெயரே மாநில உரிமைகள் மீட்பு மாநாடு...
சென்னை :
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-
கே: 2024 பாராளுமன்ற தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க. எதை பார்க்கிறது... அ.தி.மு.க.வா? பா.ஜ.க.வா?
ப: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது இருந்த அ.தி.மு.க. இப்போ இல்லைன்னு நான் நினைக்கிறேன். பாஜகவின் உள்ளூர் கிளை கழகமாக அதிமுகவும், மாநில கட்சியாக அதிமுகவும், அதிமுகவோடு தலைமையாக பாஜக இருக்கிற மாதிரி இருக்கு.

கே: 2026 வரை கூட்டணி இல்லைன்னு தான் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்?
ப: மக்கள் எப்படி ஏத்துப்பார்கள்ன்னு தெரியலை.... மாநாட்டின் பெயரே மாநில உரிமைகள் மீட்பு மாநாடு... நாங்க நடத்துறதுக்கு காரணமாக கடந்த 9 வருடமாக அதிமுக நமது உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசிடம் கொடுத்துட்டாங்க.... மாநாட்டில் முக்கியமாக நீட் எதிர்ப்பை வைத்துள்ளோம். அதிமுக மாநாட்டில் திமுக-வை திட்டுறதே முக்கியமாக இருந்தது. எங்களுடைய மாநாடு இயக்கத்தின் கொள்கைகள், இளைஞரணியின் வரலாறு, இரண்டரை ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகள் எல்லாத்தையும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கறது.
கே : தி.மு.க.வின் பலத்தில் ஒன்று கூட்டணி. 2019, 2021-ல் வலுவான கூட்டணி. 2024 ல் கூட்டணியை அனுசரித்து செல்வது எளிமையாக இருக்கும்னு நினைக்கிறீர்களா?
ப : திமுக கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமும், அதிமுகவின் கூட்டணியை மக்கள் ஏத்துக்காததுக்கு முக்கிய காரணமும் அந்த கூட்டணி வெறும் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் பேசுற கூட்டணி. திமுக கூட்டணி இயற்கையாகவே 2019 தேர்தலுக்கு முன்பாகவே மக்கள் நல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என ஒன்றாக செய்வார்கள். அதிமுக கூட்டணி ஸ்டார் ஓட்டலில் மட்டும் சந்தித்து பேசுவார்கள். கடைசி நிமிடம் வரை கூட்டணி குறித்து இழுப்பார்கள்.
- கண்டிப்பா அரசியல் தான் பிடிச்சிருக்கு...
- நெஞ்சுக்கு நீதி, மனிதன் போன்ற Challenge படங்கள் பண்ண பிடித்திருந்தது.
சென்னை :
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-
கே: எது எளிதாக இருக்கும்னு நினைக்கிறீர்கள்? எது பிடிச்சிருக்குன்னு நினைக்கிறீங்க? சினிமாவா, அரசியலா?
ப: கண்டிப்பா அரசியல் தான் பிடிச்சிருக்கு... சினிமாவில் Challenge ஆனா படங்கள் பண்ண பிடிக்கும். நெஞ்சுக்கு நீதி, மனிதன் போன்ற Challenge படங்கள் பண்ண பிடித்திருந்தது. மக்கள் பணி இது. எல்லா நேரத்திலும் அலர்ட்டா இருக்க வேண்டி வரும்.
இரண்டாவது மாநில மாநாடுக்காக 3 மாதங்களாக மிகப்பெரிய ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தபோது தூத்துக்குடி, நெல்லையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தலைவர் ஒருவாரம் தள்ளி வைக்க சொன்னாரு. பெரிய பாதிப்பு இருக்கு, மாநாடு நடத்த சரியாக இருக்காது. களத்தில் நிற்கணும்னு சொன்னாரு.

நெல்லை, தூத்துக்குடியில் ஒரு வாரம் தங்கி இருந்தேன். அங்கு பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, 10 அமைச்சர்கள் அனைவரும் களத்தில்தான் இருந்தனர்.
கே: அமைச்சர் உதயநிதியின் பலமாக எதை நினைக்கிறார்?
ப: தலைவரை பார்த்து உழைக்க முயற்சிக்கிறேன். அவரை பார்த்து அவரது உழைப்பில் 25 சதவீதம் 30 சதவீதம் உழைத்தால் பெரிய சாதனையாக நினைக்கிறேன். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறேன். கலைஞருக்கு நிகர் கலைஞர் தான். பொறுப்பான செல்லப்பிள்ளையா இருக்க விரும்புகிறேன் என்றார்.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசுவந்தனை சாலையில் ஒரு திருமண மண்டபம் அருகே தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று ஏ.டி.எம் மையத்திற்கு வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க சென்ற போது ஏ.டி.எம்.எந்திரத்தின் கீழ் பகுதி திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்து எச்சரிக்கை அலாரம் சத்தம் ஒலித்து கொண்டே இருதுள்ளது.
இதனையடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதேநேரத்தில் வங்கி தரப்பில் இருந்தும் எச்சரிக்கை மணி ஒலிப்பது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தினர். மேலும் ஏ.டி.எம். மையத்திலிருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அதில் மர்ம நபர் ஒருவர் அன்று அதிகாலை 4.33 மணிக்கு ஏ.டி.எம். எந்திரத்தின் பணம் இருக்கும் அடிப்பகுதியை கழற்ற முயற்சி செய்து கொண்டிருக்கும் காட்சிகளும், எச்சரிக்கை அலாரம் சத்தம் ஒலித்ததை தொடர்ந்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடியதும் அதில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள், அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வரவ ழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் அடிப்படையில் மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த மர்ம நபர் கோவில்பட்டி பசுவந்தனை ரோடு, ராமலட்சுமி நகரை சேர்ந்த சங்கர் (வயது 45) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.
- தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது.
வேலூர்:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த மாதம் பெய்த புயல் மழையால் தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆறுமுகநேரி மற்றும் உப்பளங்களில் வெள்ளம் புகுந்தது.
அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.
இதனால் தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது. வரத்து குறைவாக உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து விற்பனைக்கு வரும் உப்பு விலை உயர்ந்துள்ளது.
50 சிறிய பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை கடந்த மாதம் வரை ரூ.230-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 290 வரை விலை உயர்ந்துள்ளது.
சில்லரை விலையில் கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் உப்பு விற்பனைக்கு வருகிறது. மழை வெள்ளத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தயார் செய்யப்பட்டிருந்த உப்பு வெள்ளத்தால் நாசமாகிவிட்டது. இதன் காரணமாக உப்பு விலை உயர்ந்துள்ளது.
ஓட்டல்கள் மற்றும் தோசை, இட்லி மாவு தயாரிப்பவர்கள் உணவு தின்பண்டங்கள் தயாரிப்பவர்கள் மொத்தமாக கல் உப்பு வாங்கி செல்கிறார்கள்.
மூட்டை மூட்டையாக உப்பு வாங்கிச் செல்லும் அவர்களுக்கு இந்த விலை உயர்வு கடினமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தின்பண்டங்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளது.
தூத்துக்குடி பகுதியில் தற்போது உப்பளங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் மாவட்டத்தில் மற்ற இடங்களில் வெள்ள பாதிப்பால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு உப்பு விலை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.
- விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மணி என்பவரை கைது செய்தனர்.
- பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள்- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பாச்சங்காட்டுபாளையத்தை சேர்ந்தவர் ராமர். இவருடைய மகன் சாய் சரண் (வயது 6). இவன் பல்லடம் அருகே பெத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யு.கே.ஜி. படித்து வந்தான். தினமும் பள்ளிக்கு சொந்தமான வேனில் மாணவன் பள்ளிக்கு சென்று வந்தான்.
வழக்கம் போல் நேற்று காலை பள்ளி வேனில் மாணவன் சாய் சரண் பள்ளிக்கு சென்றான். பின்னர் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் பள்ளி வேனில் வீட்டிற்கு சென்றான். வேன் மாணவன் வீட்டிற்கு அருகே வந்ததும் நிறுத்தப்பட்டது. அப்போது வேனில் இருந்து சாய் சரண் இறக்கிவிடப்பட்டான். மற்ற குழந்தைகளும் அங்கு இறக்கி விடப்பட்டனர்.
பின்னர் பள்ளி வேன் திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது வேனின் பின் சக்கரத்தில் சாய்சரண் சிக்கிக் கொண்டதாக தெரிகிறது. இந்த விபத்தில் மாணவன் சாய் சரண் படுகாயம் அடைந்தான். உடனே சாய்சரணின் பெற்றோர் மற்றும் அருகில் உள்ளவர்கள் மாணவனை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சாய் சரணை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற பல்லடம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டபனர். பள்ளிக்கு சென்ற மாணவன் பள்ளி வேனிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மணி என்பவரை கைது செய்தனர். இதனிடையே இந்த விபத்து சம்பவத்தில் அஜாக்கிரதையாக செயல்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்லடம் அருகே உள்ள கள்ளிமேடு பகுதியில் திருப்பூர் -பொங்கலூர் ரோட்டில் இன்று காலை பொதுமக்கள்- உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் சென்ற போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும்.
வேதாரண்யம்:
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று (19-ந்தேதி) தமிழகம் வருகிறார். இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 'கேலோ இந்தியா' விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையோர பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாதவர்கள் யாரும் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஆற்காட்டுதுறை, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பகுதிகளில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் படகு மூலம் கடலுக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடற்கரை பகுதியில் உள்ள மீனவர்களிடம் அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தால் உடனடியாக தகவல் அளிக்கும்படி மீனவர்களிடம் அறிவுறுத்தினர்.
இந்த ரோந்து பணியானது கடலிலும், கடற்கரையோர பகுதிகளிலும் 2 நாட்கள் நடைபெறும் என கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் ஜோதி முத்துராமலிங்கம் தெரிவித்தார்.
- கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.
- பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
விரைவு பஸ்கள் பெரும்பாலும் 'அல்ட்ரா டீலக்ஸ்' வகையை சார்ந்தது. 2 இருக்கைகள் கொண்டதாக இவை உள்ளன. இதனால் கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகிறது.
தற்போது கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தான் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் இயங்குகின்றன.
இதனால் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட பஸ்களின் கட்டணத்தை விட சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட வேண்டும். மாறாக கூடுதலாக வசூலிப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.5 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை-சேலம் இடையே ரூ.300-ல் இருந்து ரூ.310 ஆகவும், சேலம்-நெல்லை இடையே ரூ.425-ல் இருந்து ரூ.430, நெல்லை-ஓசூர் கட்டணம் ரூ.590-ல் இருந்து ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டம் ரூ.580, ரூ.590 ஆக இருந்த இடங்களுக்கு ரூ.600 ஆகவும் தூரத்தை பொறுத்து ரூ.30 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. சில்லறை பிரச்சினையை காரணம் காட்டி கட்டணத்தை உயர்த்தி உள்ளனர்.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், "ஏற்கனவே உள்ள பஸ் கட்டணத்தில் ஒரு சில இடங்களுக்கு சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதனை சரி செய்யும் வகையில் அந்த வழித்தடத்தில் மட்டும் சிறிய அளவில் கட்டண மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அரசு பஸ்களுக்கு கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே உள்ளபடி தான் வசூலிக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் இருந்து பஸ்கள் செயல்பட தொடங்கிய நிலையில் பஸ் கட்டண அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் சில இடங்களில் தவறு நடந்துள்ளது" என்றார்.
- குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
- கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கு இன்னும் 2 மாதங்களில் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் தொடக்கத்தில் தேர்தல் அட்டவணை வெளியாகும்.
இதையடுத்து தேர்தலை சந்திக்க ஆளும் பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியும் தயாராகி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி அடுத்த வாரம் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்று டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியா கூட்டணியிலும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் பொங்கலுக்கு பிறகு குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க.வில் 3 குழுக்கள் அமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒரு குழுவும், தேர்தல் அறிக்கை தயாரிக்க ஒரு குழுவும், தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்கு ஒரு குழுவும் என்று மொத்தம் 3 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த ஆண்டு (2024) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் பின்வரும் குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு தொகுதி பங்கீடு குறித்து பேசும் குழுவுக்கு தலைவராக இருப்பார். 6 பேர் அதில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். அவர்கள் வருமாறு:-
அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் எம்.பி.க்கள் ஆ.ராசா, திருச்சி சிவா.
இவ்வாறு தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தலைமை-கனிமொழி கருணாநிதி எம்.பி. (தி.மு.க. துணை பொதுச் செயலாளர்), டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமை கழக செய்தி தொடர்பு தலைவர்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (தி.மு.க. சொத்துப் பாதுகாப்பு குழு செயலாளர்), அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா (தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்), கோவி.செழியன் (தி.மு.க. வர்த்தக அணி துணைத்தலைவர்), கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மாணவர் அணிச் செயலாளர்), எம்.எம்.அப்துல்லா எம்.பி. (தி.மு.க. அயலக அணிச் செயலாளர்), டாக்டர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. (தி.மு.க. மருத்துவ அணி செயலாளர்), மேயர் பிரியா.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் அதில் கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க 35 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்படுகிறது.
இந்த குழுக்களுடன் காங்கிரஸ் மேலிட பார்வையாளர் அஜய்குமார் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்துகிறார். அப்போது தி.மு.க.வுடன் எத்தனை தொகுதிகள் கேட்டு பெறுவது பற்றி முடிவு செய்யப்படும்.
அதன் பிறகு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் குழுக்கள் சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தும். அடுத்த வாரம் இந்த குழுக்கள் சந்திப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப் போது தி.மு.க.-காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெளிவாக தெரிய வரும்.






