என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.
- வேலை நிறுத்த போராட்டத்தால் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர்:
திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவனம். இங்கு நேரடியாக பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பெல் வட்ட கூட்டுறவு சொசைட்டி மூலம் தொழிற்சாலையின் பல்வேறு பணிகளுக்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 700 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுக்கு மாதம் சுமார் ரூ 24 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் தங்களது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியாமல் இத்தகைய தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இவர்கள் தங்களை நிரந்தர தொழிலாளராக நிர்வாகம் பணியமர்த்த தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் பெல் நிர்வாகத்தை கண்டித்து டிசம்பர் மாதம் 13-ந் தேதி சொசைட்டி தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் இதுவரை பெல் நிர்வாகம் அழைத்து பேசவில்லை. இந்நிலையில் அனைத்து சொசைட்டி தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் செய்யப் போவதாக தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று அறிவித்தனர்.
அதன் பிறகும் பெல் நிறுவன நிர்வாகம் அழைத்து பேசாததால் இன்று முதல் பெல் நிறுவன மெயின் கேட் முன்பு போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்தில் பாதுகாவல் பணி, மருத்துவ பணியில் சில தொழிலார்களை தவிர மீதி அனைத்து தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் பெல் நிறுவனத்தில் பல பிரிவுகளில் வேலை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம்.
- ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.
கோத்தகிரி:
தமிழக அரசியலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலிமைமிக்க தலைவராக வலம் வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவரது நிழலாக பின் தொடர்ந்தவர் சசிகலா.
இவர்களுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இருவரும் ஓய்வெடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவுக்கு செல்வதற்கு வழக்கம்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், ஜெயலலிதாவும், சசிகலாவும் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுத்தனர்.
அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா ஜெயிலுக்கு சென்றார். இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தது. இதில் இன்னும் மர்மம் விலகவில்லை.
இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியில் வந்த சசிகலா, கொடநாடு எஸ்டேட் செல்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சசிகலா கொடநாடு எஸ்டேட்டுக்கு வருகை தந்தார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலமாக கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றார். அவரை அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து சசிகலா நேற்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுத்தார்.
தொடர்ந்து இன்று காலை கொடநாடு எஸ்டேட் வளாகத்தில் மறைந்த ஜெயலலிதாவின் நினைவாக நினைவு மண்டபம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த பூஜையில் சசிகலா கலந்து கொண்டு மண்டபம் அமைப்பதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்த பூஜையில் எஸ்டேட்டில் பணியாற்றும் அதிகாரிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மணிமண்டபத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை அமைக்கப்பட உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கொடநாடு மிகவும் பிடித்த இடமாக இருந்தது. இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களும், நாங்களும் ஒரு குடும்பமாகவே இருந்து வந்தோம்.
கொடநாடு எஸ்டேட்டுக்கு நானும், ஜெயலலிதாவும் ஒன்றாகவே இதுவரை வந்துள்ளோம். அவரது மறைவுக்கு பிறகு என்னால் இங்கு தனியாக வர முடியவில்லை. தற்போது தொழிலாளர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வந்துள்ளேன்.
இந்த நல்ல நாளில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்துள்ளேன். சுற்றுலாதலமான கொடநாடு காட்சி முனை அருகே இந்த இடம் இருப்பதால் நினைவு மண்டபத்தை பொதுமக்களும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆகஸ்டு மாதத்துக்குள் பணியை முடித்து திறப்பு விழா நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து, சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளையும் கேட்டறிந்தார்.
3 நாள் பயணத்தை முடித்து கொண்டு நாளை கொடநாடு எஸ்டேட்டில் இருந்து காரில் புறப்பட்டு, சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார்.
- தென்மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு... நிதி உடனடியாக கொடுங்கள் என்றேன்.
- ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வைத்து பழிவாங்கிட்டு இருக்காங்க.
சென்னை :
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-
கே: அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் விமர்சிக்கக்கூடிய இடத்தில் அமைச்சர் உதயநிதி இருக்கிறார்...
ப : அவங்க விமர்சனம் பண்றாங்கண்ணா நம்ம சரியான பாதையில் தான் செல்கிறோம்-ங்கறது என்னுடைய எண்ணம். பாராட்டுன்னா தான் ஜாக்கிரதையா இருக்கணும்.
கே: கடும் விமர்சனம், தேசிய அளவில் உதயநிதி பேசும் பொருளாக இருக்கிறார். இன்னொரு பக்கம் குறுகிய காலத்தில் 2 முறை பிரதமருடன் சந்திப்பு...
ப: பிப்ரவரியில் பிரதமரை சந்தித்த போது நீட் தேர்வு குறித்து பேசினேன். அவரும் சில விஷயங்களை சொன்னார். இந்த முறை கேலோ இந்தியா விளையாட்டின் முதலமைச்சர் அழைப்பிதழை கொடுக்க சென்றேன். தென்மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கு... நிதி உடனடியாக கொடுங்கள் என்றேன். அதற்கு முடிவெடுத்து சொல்றோம்ன்னு சொன்னாங்க.

கே : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை சந்தித்து சிறையில் இருக்கிறார். பொன்முடிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு வந்து இருக்கு... இது எல்லாம் தி.மு.க.வுக்கு பாராளுமன்ற தேர்தலில் ஒரு நெருக்கடியா மாறாதா?
ப: மக்களுக்கு தெரியும். இதெல்லாம் ஒன்றிய அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை வைத்து பழிவாங்கிட்டு இருக்காங்க. அதுக்கு பயந்துதான் அதிமுக அவங்களோட கூட்டணி வைத்து இருந்தார்கள். மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். சட்டபடி சந்தித்து வெளியே வருவோம்.
- தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது.
- எந்த நிதியும் ஒதுக்காமல் பா.ஜ.க. அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2014 மக்களவை தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி எல்லாவற்றையும் மூடி மறைப்பதற்கு ஜனவரி 22-ந் தேதி அயோத்தியில் கும்பாபிஷேகத்தை தன்னை மையப்படுத்தி நிகழ்த்துவதற்கான முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் 2024 மக்களவை தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முனைப்பு காட்டுகிறார்.
சென்னை மாநகரில் கேலோ இளைஞர் விளையாட்டு போட்டியை தொடக்கி வைக்க பிரதமர் மோடி இன்று வருகை புரிகிறார். ஆனால், அதேநேரத்தில் ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் உள்ளிட்ட கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு அரசியல் ஆதாயத்தோடு மோடி செயல்பட்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது.
தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியினுடைய ஆன்மீக சுற்றுப் பயணத்தின் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள். தமிழகம் என்றைக்குமே பா.ஜ.க. எதிர்ப்பு பூமியாகவே இருந்து வருகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சமீபத்தில் சந்தித்த மக்களவை உறுப்பினர்கள் ரூபாய் 37,907 கோடி வெள்ள நிவாரண நிதி கோரியிருந்தார்கள். ஆனால், இதுவரை எந்த நிதியும் ஒதுக்காமல் பா.ஜ.க. அரசு தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட வெள்ள பகுதிகளை பார்வையிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தின் பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, நிதியும் தர முடியாது என்று ஆணவத்தோடு பேசியதை அனைவரும் அறிவார்கள்.
எனவே, தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக தமிழக மக்கள் மிகுந்த கொந்தளிப்பான நிலையில் இருந்து வருகிறார். இதை மூடி மறைக்கிற வகையில் பிரதமர் மோடியின் ஆன்மீக பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவை திரட்டுகிற முயற்சியில் படுதோல்வி அடைவது உறுதி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆட்சியை குறை சொல்ல எதுவும் இல்லை.
- அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக நிற்போம்.
சென்னை :
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-
கே : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்பது வதந்தியா? செய்தியா?
ப : வதந்தி... வதந்தி தான்... ஆட்சியை குறை சொல்ல எதுவும் இல்லை. பேசும் பொருள் எதுவும் இல்லாத போது ஏதாவது ஒன்றை கிளம்பி விடுறது. அப்படி ஒரு எண்ணமும் கிடையாது. யோசிக்கிறது கிடையாது. அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக நிற்போம்.
கே : விரைவில் அமைச்சரவையில் மாற்றங்கள் வருமா? புதியவர்களுக்கான வாய்ப்புகள் இருக்குமா?
ப : கண்டிப்பா இளைஞர்கள் வரணும். சமீபத்தில் தான் தொழில்துறை அமைச்சராக டிஆர்பி ராஜா பொறுப்பேற்றார். இது முதலமைச்சரோட முழு அதிகாரம். அவர்தான் முடிவு செய்வார்.
- சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
- ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர்.
கடலூர்:
பொங்கல் திருவிழா கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் ஆற்று திருவிழா இன்று நடந்தது.
இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கடலூர் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், பச்சாங்குப்பம், பாதிரிக்குப்பம், மஞ்சக்குப்பம், செம்மண்டலம், சாவடி, புதுப்பாளையம், வன்னியர்பாளையம், தேவனாம்பட்டினம், ஆனைக்குப்பம், குண்டு உப்பலவாடி, தாழங்குடா, உச்சிமேடு, நானமேடு உள்ளிட்ட ஏராளமான கிராம பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்டு பெண்ணையாற்றிற்கு கொண்டு வரப்பட்டன. சாமிகள் பெண்ணையாற்றில் புனித தீர்த்தவாரி செய்து ஆற்றங்கரைகளில் வரிசையாக நிறுத்தப்பட்டன.
கடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் ஆற்றுத் திருவிழாவில் கலந்துகொண்டு வழிபட்டனர். இதில் ஒரு சிலர் ஆற்றில் புனித நீராடினர். ஆற்று கரையோரம் கடைகள் வைக்கப்பட்டு இருந்தன. இங்கு பொருட்கள், குழந்தைகளுக்காண விளையாட்டு பொருட்கள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்பட்டன. ஏராளமானோர் சுருளிகிழங்கு வாங்குவதற்காகவே ஆற்றுத் திருவிழாவிற்கு வருகின்றனர். இந்த கிழங்கினை ஏராளமானோர் வாங்கிச்சென்றனர். . ஆற்று திருவிழாவில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் ஆண்டுதோறும் தை மாதம் 5-ம் நாள் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு ஆற்று திருவிழா இன்று நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுவை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தீர்த்தவாரி நடந்தது.
- தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
- பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் வீட்டில், வீட்டு வேலை செய்த சிறுமியை கொடுமைபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிறுமியை கொடுமைப்படுத்திய எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ. கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் வீட்டில் பணிபுரிந்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ள நீலாங்கரை மகளிர் போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு கூட்டணி கட்சி தலைவர்களை பார்ப்பதற்கு முன்னாடி விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
- கலைஞருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மனிதர். அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்.
சென்னை :
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது:-
கே : விஜயகாந்தின் மரணம்...
ப : மிகப்பெரிய இழப்பு. நல்ல மனிதர். நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பிறகு கூட்டணி கட்சி தலைவர்களை பார்ப்பதற்கு முன்னாடி விஜயகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. கலைஞருக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மனிதர். அப்பாவுக்கு நெருங்கிய நண்பர்.
கே : அரசியல் ரீதியா தே.மு.தி.க போராட்டங்களையும் அறிவித்துள்ளது...
ப : அது அவங்களுடைய விருப்பம். நாம் செய்ய வேண்டிய பணியை செய்து உள்ளோம். அரசியல் ரீதியா சந்திப்போம்.
- வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை:
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 23-ந்தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் சட்டசபை கூட்டம் கூட உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23-ந்தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
- ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
- அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்களின் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கி இருந்தனர்.
இது தொடர்பான சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து கடந்த 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் பொதுமக்கள் நலன் கருதி நிபந்தனையுடன் ஜனவரி 19-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக கோர்ட்டில் தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு வரும்படி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்துக் கழகங்களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்து இருந்தது.
அதன்படி இந்த பேச்சுவார்த்தை அம்பத்தூர் மங்களாபுரத்தில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பிற்பகல் தொடங்கியது.
இந்தப் பேச்சுவார்த்தையில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், போக்குவரத்து கழகங்களின் இயக்குனர்கள், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
- மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
- விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கியபோது, சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- காலை 6.30 மணிக்கு குருசுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தென்தாமரைகுளம்:
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று (வெள்ளிக் கிழமை) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு பள்ளியறை திறத்தல், காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, தொடர்ந்து கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
காலை 6.30 மணிக்கு குரு.சுவாமி தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். நண்பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்ன தர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதியை சுற்றி பவனி வருதல் நடக்கிறது.
2-ம் நாளான நாளை (20-ந்தேதி) இரவு அய்யா பரங்கி நாற்காலியில் பவனி வருதல், 3-ம் நாள் அன்ன வாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம்வருதல், 4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் வலம் வருதல், 5-ம் நாள் பச்சை சாத்தி அன்ன வாகனத்தில் பவனி வருதல், 6-ம் நாள் கற்பக வாகன பவனி, 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருட வாகனத்தில் பவனி வருதல் நடக்கிறது.
வருகிற 26-ந்தேதி 8-ம் திருவிழாவில் அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றின் கரையில் கலிவேட்டையாடு தல் வைபவம் நடக்கிறது. தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு வடக்கு வாசலில் அய்யா தவக்கோலத்தில் காட்சி தரும் நிகழ்வும் நடக்க உள்ளது. தொடர்ந்து அன்ன தர்மம் நடக்கிறது.
9-ம் நாள் இரவு அனுமன் வாகன பவனி, 10-ம் திருவிழாவான (ஞாயிற்றுக் கிழமை) இரவு 11 மணிக்கு இந்திர விமான வாகன பவனி, 11-ம் திருவிழாவான 29-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு அய்யா காளை வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பணி விடைகள், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, வாகன பவனி மற்றும் அய்யா வைகுண்டர் கலையரங்கத்தில் தினமும் அய்யாவழி சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழா ஏற்பாடுகளை குருமார்கள் சுவாமி, தங்க பாண்டியன், ராஜசேகரன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் செய்து வருகின்றனர்.






