என் மலர்
உள்ளூர் செய்திகள்
- புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- பாட்னா பைரேட்ஸ் அணி தமிழ் தலைவாஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
சென்னை:
12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே தமிழ் தலைவாஸ் வீரர்கள் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.
இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 56-37 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தமிழ் தலைவாஸ் அணியின் அர்ஜூன் தேஷ்வால் அதிகபட்சமாக 26 புள்ளிகள் எடுத்தார். இதன்மூலம் தமிழ் தலைவாஸ் 6வது வெற்றியை பதிவு செய்தது.
- தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது.
- தமிழக முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் அறிவித்திருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் வெறும் 2,708 இடங்களை மட்டும் நிரப்புவது கண்டிக்கத்தக்கது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. நான்கரை ஆண்டுகளில் 35 புதிய கல்லூரிகள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை திமுக அரசு ஏற்படுத்தியதாக விளம்பரம் தேடிக்கொண்டாலும், அந்தக் கல்லூரிகளுக்கும், புதிய மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்கவில்லை.
அதனால் அரசு கலைக்கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்திருக்கிறது. அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், அவற்றில் சேர மாணவர்கள் தயாராக இல்லை என்பதும், அதனால் 25% இடங்கள் இன்னும் காலியாகக் கிடக்கின்றன என்பதும்தான் அரசு கல்லூரிகளின் அவலநிலைக்கு சான்று ஆகும்.
உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதை மீண்டும், மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதன் விளைவாகத்தான் இப்போது 2708 இடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டது. அதன் பின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் ஆகியவற்றையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கக் கூடும்.
2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகள் தாமதப்படுத்திய பிறகு கடந்த ஆண்டில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி அந்த நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அதை விடக் குறைவாக 2708 பேர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என திமுக அரசு அறிவித்திருப்பதன் மூலம் உயர்கல்விக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது. உயர்கல்வித்துறையின் நலனில் தமிழக முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அதில் பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி கொண்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
- அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
- பிரேமலதா தாயார் மறைவுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
சென்னை:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.
வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, சமீப காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அம்சவேணி இன்று காலை காலமானார். அவருடைய உடல் சாலிகிராமத்தில் உள்ள சுதீஷின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பிரேமலதா தாயார் மறைவுக்கு முதல் மந்திரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேமுதிக பொதுச்செயலாளர் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் தாயாரான திருமதி. அம்சவேணி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த் , சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த திருமதி. அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அம்சவேணி உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

- கடந்த 28ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.
- பொதுத்தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவுக்கான உத்தேச விடைகள் வெளியாகியுள்ளன.
குரூப் 2, 2A முதல்நிலை தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. கடந்த மாதம் 28ஆம் தேதி நடந்த பொதுத்தமிழ், பொது ஆங்கிலம், பொது அறிவுக்கான உத்தேச விடைகள் வெளியாகின. உத்தேச விடைகள் வெளியிடப்பட்ட 7 நாட்களுக்குள் முறையீடு செய்ய அனுமதிக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப் பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளில் 50 காலிப்பணியிடங்களும்,
முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், மேற்பார்வையாளர், உதவியாளர் நிலை-3, உதவியாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், செயல் அலுவலர் நிலை-3, கீழ்நிலை செயலிட எழுத்தர் ஆகிய குரூப்-2ஏ பதவிகளில் 595 இடங்களும் என மொத்தம் 645 இடங்கள் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறித்து அதற்கான தேர்வு நடைபெற்றது.
- 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- வெற்றி பெறும் வீரர்களுக்க 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு.
2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது "முதலமைச்சர் கோப்பையில் வெற்றி பெறும் வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்" என அறிவித்தார்.
- நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர்.
- சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
நோயாளிகள் இனிமேல் மருத்துவ பயனாளிகள் அல்லது பயனாளர்கள் என அழைக்கப்படுவர் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
- டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து இன்று காலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டாக்டர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தனது காரில் வீடு திரும்பினார். இதனிடையே அவரிடம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, எனக்கு ஓய்வே கிடையாது என்று அவர் பதில் அளித்தார்.
- இன்ஸ்டாகிராம் மூலும் கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
- பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியன் வன்கொடுமை.
திண்டுக்கல், மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார்பட்டி ஆரோக்கிய நகரைச் சேர்ந்தவர் ஜோஸ் மரிய ராகுல் (வயது 28). இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவியுடன் பழகி வந்தார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த அந்த கல்லூரி மாணவி பெற்றோரை இழந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
அந்த மாணவியிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்துக்கு உங்கள் வீட்டில் சம்மதிப்பார்களா? என கல்லூரி மாணவி கேட்டுள்ளார். அதற்கு அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 20-ந்தேதி வைகை அணைக்கு மாணவியை வரவழைத்துள்ளார். அங்குள்ள பூங்காவை சுற்றிப்பார்த்த பின்பு கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.
அதன் பிறகு மாணவியை நிர்வாணமாக வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை காட்டியே மாணவியை மிரட்டி அடிக்கடி உல்லாசம் அனுபவித்தார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி அவரிடம் கேட்டபோது, தட்டிக் கழித்தார்.
இதனால் தன்னை ஏமாற்ற நினைக்கிறாரோ என சந்தேகமடைந்த கல்லூரி மாணவி அவரது வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டார். அப்போது அவரது பெற்றோர்களும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, சமூகத்தை காரணம் கூறி உன்னை எங்கள் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். எனது மகனுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க உள்ளோம் என தெரிவித்தனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை பலாத்காரம் செய்து திருமணத்துக்கு மறுத்த ஜோஸ் மரியராகுல் மற்றும் அவரது பெற்றோரை தேடிவருகின்றனர்.
- அகரம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சனாதனம் குறித்து கமல் பேசியதற்கு எதிர்ப்பு.
- யூடியூப் சேனில் பேட்டியளிக்கும்போது கழுத்தை அறுத்துவிடுவேன் என பேசியதால் புகார்.
சென்னையில் நடைபெற்ற அகரம் அறக்கட்டளையின் 15ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் மாநிலங்களவை எம்.பி.யான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது சனாதனம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூடிப் வலைத்தளத்தில் கமல்ஹாசன் கழுத்தை அறுத்துவிடுவேன் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிச்ந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சார்பில் சென்ன மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கபப்ட்டது.
இதனைத்தொடர்ந்து முன் ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், எந்தவித உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை, தற்செயலாக அவ்வாறு பேசியதாக கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் ரவிச்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
- மோட்டார் சைக்கிளில் ஏன் வேகமாக செல்கிறாய் எனக் கேட்டதால் தகராறு.
- உறவினருக்கு ஆதரவாக மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது கத்திக்குத்து.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரியை சேர்ந்தவர் சிவனேச செல்வன் (வயது 41). ஏரல் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக ஆழ்வார்திருநகரி பஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது அங்கு ஆழ்வார்திருநகரி யாதவர் தெருவை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துள்ளார்.
அவரிடம் ஏன் இப்படி வேகமாக செல்கிறாய் என்று சிவனேச செல்வன் கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது செந்தில் ஆறுமுகத்தின் சித்தி மகனான பிளஸ்-1 படிக்கும் அர்ஜூன் (16) என்பவர் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தை பார்த்ததும் அர்ஜூன் போலீஸ் ஏட்டுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவனேச செல்வன் தனது மோட்டார் சைக்கிளின் சாவியில் இருந்த பாக்கெட் கத்தியால் சிறுவன் அர்ஜூனை குத்தியுள்ளார். இதில் அர்ஜூன் படுகாயம் அடைந்தார்.
அர்ஜூனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சி கிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சிவனேச செல்வன் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சிவனேச செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
- தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பெயரிலா் பிரசாரம் மேற்கொள்கிறார்.
- முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத்தை 12ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறார்.
கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க.வின் பரப்புரை பயணத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் மற்றும் பிரசார பயணங்களில் பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
கரூர் சம்பவத்துக்கு பிறகு மதுரையில் வருகிற 12-ந்தேதி பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்துக்கு மதுரை போலீசார் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகிற 12-ந்தேதி தனது பிரசார பயணத்தை மதுரையில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில் அவர் தனது முதல் கட்ட பிரசார சுற்றுப் பயணத்தை மதுரையில் தொடங்கி 5 நாட்கள் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 17-ந்தேதி நெல்லையில் முடிக்க திட்டமிட்டு உள்ளார்.
இதற்காக மதுரையில் தொடக்க விழா பொதுக்கூட்டம் நடத்த பழங்காநத்தம் ரவுண்டானா, முனிச்சாலை சந்திப்பு, புதூர் பஸ் நிலையம், அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் உள்ளிட்ட இடங்களில் ஏதாவது ஒன்றை தருமாறு போலீசிடம் பா.ஜ.க.வினர் கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதில் புதூர் பஸ் நிலையம் அல்லது பழங்காநத்தம் ரவுண்டானா பகுதி பா.ஜ.க. பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது. அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் நயினார் நாகேந்திரனின் பிரசார பயணத்தை மத்திய மந்திரி ஜே.பி.நட்டா தொடங்கி வைத்து பேசுகிறார்.
இந்த பிரசார பயணத் தொடக்க நிகழ்ச்சியில் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கூடுகிறார்கள். தொடக்க நிகழ்ச்சி முடிந்ததும் நயினார் நாகேந்திரன் சிவகங்கை மாவட்டத்திற்கு செல்கிறார்.
- ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
- அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ரெயில் தற்போது இயக்கப்படுகிறது.
தினமும் 8 சேவைகள் இருந்த நிலையில் மே மாதத்தில் 10 சேவைகளாக அதிகரிக்கப்பட்டன.
12 பெட்டிகளை கொண்ட ஏ.சி. ரெயிலில் உட்கார்ந்தும் நின்று கொண்டும் மொத்தம் 4,914 பயணிகள் பயணம் செய்ய முடியும். 8 சேவைகள் அடிப்படையில் 100 சதவீத பயன்பாட்டில் 39,312 பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். 50 சதவீத பயன்பாடாக இருந்தால் 19,656 பேர் செல்ல வேண்டும். 25 சதவீத பயன்பாட்டில் 9828 பேர் பயணிக்க வேண்டும்.
ஆனால் 2,800 பேர் மட்டுமே தினமும் பயணம் செய்துள்ளனர். இது ரெயிலின் மொத்த பயன்பாட்டில் 10 சதவீதம் கூட எட்டவில்லை.
ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லை. காலியாகவே ஓடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணமாகும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த வேளையில் ஏ.சி. ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நெரிசல் மிகுந்த கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிக பயணிகளை ஈர்க்கும் திறன் இருந்த போதிலும் மோசமான நிலையே காணப்படுகிறது. ஏ.சி. மின்சார ரெயிலில் 1-5 கி.மீ. ரூ.35-ம், 11-15 கி.மீ.க்கு ரூ.40-ம், 16-25 கி.மீ. ரூ.60-ம், 26-40 கி.மீ.க்கு ரூ.85-ம், 56-60 கி.மீ.க்கு ரூ.105-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தற்போது உள்ள குளறுபடிகளை சரி செய்தால் தான் புறநகர் பயணிகளை கவர முடியும்.
இனி மழைக்காலம் என்பதால் பொதுவாக ஏ.சி. ரெயில் பயணம் குறையும். அவற்றையெல்லாம் கருதி கட்டணத்தை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.






