என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    10,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்
    X

    10,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    • தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது.
    • தமிழக முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் அறிவித்திருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் வெறும் 2,708 இடங்களை மட்டும் நிரப்புவது கண்டிக்கத்தக்கது.

    திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. நான்கரை ஆண்டுகளில் 35 புதிய கல்லூரிகள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை திமுக அரசு ஏற்படுத்தியதாக விளம்பரம் தேடிக்கொண்டாலும், அந்தக் கல்லூரிகளுக்கும், புதிய மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்கவில்லை.

    அதனால் அரசு கலைக்கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்திருக்கிறது. அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்ட போதிலும், அவற்றில் சேர மாணவர்கள் தயாராக இல்லை என்பதும், அதனால் 25% இடங்கள் இன்னும் காலியாகக் கிடக்கின்றன என்பதும்தான் அரசு கல்லூரிகளின் அவலநிலைக்கு சான்று ஆகும்.

    உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதை மீண்டும், மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதன் விளைவாகத்தான் இப்போது 2708 இடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 9000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டது. அதன் பின் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் ஆகியவற்றையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கக் கூடும்.

    2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகள் தாமதப்படுத்திய பிறகு கடந்த ஆண்டில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி அந்த நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அதை விடக் குறைவாக 2708 பேர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என திமுக அரசு அறிவித்திருப்பதன் மூலம் உயர்கல்விக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளது.

    தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து திமுக அரசு தப்ப முடியாது. உயர்கல்வித்துறையின் நலனில் தமிழக முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அதில் பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி கொண்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×