என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
- மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர்.
அம்பத்தூர்:
சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வருகிறது.
அவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. ரூட்டு தல பிரச்சினையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தும், எச்சரித்தும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாணவர்களிடையேயான மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்று காலையும் மின்சார ரெயிலில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. காலை நேரம் என்பதால் அனைத்து ரெயில் பெட்டிகளிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரியில் படிக்கும் திருத்தணி, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயணம் செய்தனர்.
பட்டரைவாக்கம் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தபோது ஒரு பெட்டியில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் இடையே திடீரெ மோதல் ஏற்பட்டது. அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்குள் பட்டரைவாக்கம் ரெயில் நிலையத்தை அடைந்ததும் மின்சார ரெயில் நின்றது. உடனே ரெயிலில் இருந்து இறங்கிய பச்சயைப்பன் கல்லூரி மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கோஷ்டிகளாக மோதிக்கொண்டனர்.
மேலும் கல், சோடா பாட்டில், பீர் பாட்டில்களை ஒருவர் மீது ஒருவர் வீசி தாக்கினர். உருட்டுகட்டையாலும் தாக்கிக்கொண்டனர். இதில் சில மாணவர்களுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறியடித்து வேறு ரெயில் பெட்டியில் ஏறினர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே மாணவர்கள் மோதல் பற்றி அறிந்ததும் பெரம்பூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்தனர். உடனே மோதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களில் 3 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மோதலில் ஈடுபட்ட 10 மாணவர்களை ரெயில்வே போலீசார் அடையாளம் கண்டு உள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்தநிலையில் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வரும் மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிக்கு ரெயில்வே போலீசார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே டி.எஸ்.பி. ரமேஷ் கூறும் போது, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி மாணவர்களிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இன்று காலையும் பட்டரைவாக்கத்தில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பயணிகளுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் வகையில் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாணவர்களை நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என்று பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிக்கு கடிதம் வழங்கி உள்ளோம். மேலும் பஸ், ரெயிலில் பயணம் செய்யும் மாணவர்களின் விபரத்தையும் கேட்டு உள்ளோம் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இதேபோல் கல்லூரி மாணவர்கள் கல், பாட்டில்களை வீசி மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
- செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
- போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூரில் 3 வயது குழந்தையின் படத்தை மார்பிங் செய்து அனுப்பிய லோன் செயலி மூலம் மோசடி செய்யும் கும்பலை சேர்ந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் செல்போன் மூலம் வரும் லோன் செயலி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோன் பெற்றுள்ளார். இந்நிலையில் இந்த வாலிபர் குறிப்பிட்ட தேதிக்குள் பெற்ற பணத்தை திரும்ப கட்ட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த செயலியை சேர்ந்த நபர் வேறு நாட்டின் செல்போன் எண் கொண்ட ஒரு எண்ணில் அந்த வாலிபரை தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்ட நபர் செயலி மூலம் கடனாக பெற்ற பணத்தை பல மடங்கு கூடுதலாக வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டுமென வற்புறுத்தியுள்ளனர்.
அந்த வாலிபர் பணத்தை கட்ட தாமதமாகிவிட்டது. அதனால் கும்பலை சேர்ந்த நபர், லோன் பெற்ற வாலிபருடைய, நண்பரின் 3 வயது குழந்தையை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவின் பேரில், துணை கமிஷனர் வனிதா வழிகாட்டுதலின் படி, இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி மேற்பார்வையில் சைபர் கிரைம் எஸ்.ஐ சையது ரபீக் சிக்கந்தர் தலைமையில் போலீசார் நவீன்கிருஷ்ணன், கருணாசாகர், ஆறுமுகம், விஸ்வா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர்.
போலீசார் விசாரணையில் சமந்தப்பட்ட நபர் பீகார் மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தனிப்படை போலீசார் பீகார் விரைந்தனர். பீகார் மாநிலம், மதுபானி பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பதுங்கியிருந்தார். அங்கு சென்று அந்த வாலிபரை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த வாலிபர் அரியானாவை சேர்ந்த ராம் சேவாக் கமட் என்பவரின் மகன் ரோசன்குமார் கமட் (22) என்பதும், அவர் லோன் செயலி மூலம் கடன் கொடுத்து விட்டு பலரின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு மேல் பலர் குழுக்களாக இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து திருப்பூரை சேர்ந்த 3 வயது குழந்தையின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியதும் ஒப்புக்கொண்டார். இதே போல் திருப்பூரில் செல்போன் செயலின் மூலம் கடன் பெற்ற பெண்களின் புகைப்படங்களையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பி பணம் பறித்து மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தனிப்படை போலீசார் ரோசன்குமார் கமட்டை திருப்பூர் அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பீகார் சென்று கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு பாராட்டினார்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
- உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அங்கு உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த பல்வீர் சிங் உட்பட 14 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 15-ந்தேதி அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நெல்லை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை 3 கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில் அவற்றில் ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் ஆஜரானார். தொடர்ந்து 4-வது முறையாக இந்த வழக்கு இன்று நடுவர் நீதிமன்றம் எண் 1-ல் நீதிபதி திரிவேணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் நேரில் ஆஜரானார். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தவிர மற்ற 12 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகினர்.
அப்போது எதிர்தரப்பு வக்கீல் மகாராஜன் தாங்கள் இந்த வழக்கிற்காக ஆஜராக வேண்டும் என நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு பல்வீர் சிங் தரப்பு வக்கீல் துரைராஜ், இந்த வழக்கை அரசு வக்கீல் தான் நடத்திக் கொண்டிருக்கிறார். அப்படி அவருக்கு உதவி புரிவதற்காக வக்கீல்கள் நியமிக்கப்பட்டால் அதற்கான உத்தரவு நகலை தங்களுக்கு வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து உத்தரவு நகலை வழங்குமாறு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
- கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உரிய நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது.
- சார் பதிவாளர் அலுவலகம் இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது.
சென்னை:
சட்டசபையில் இன்று தியாகராயநகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி பேசுகையில், வடபழனி அழகிரிநகர் 5-வது தெருவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்டப்படுமா என்ற கேள்வி எழுப்பினார்.
இதற்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிலளித்து கூறுகையில், "இந்த சார் பதிவாளர் அலுவலகம் 100 அடி சாலை தனியார் கட்டிடத்தில் தரை தளத்தில் இயங்கி வருகிறது.
கோடம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட உரிய நிலத்தை தேர்வு செய்யும் பணிகள் நடக்கிறது. நிலம் தேர்வு செய்யப்பட்டதும் சொந்த கட்டிடம் கட்ட பரிசீலிக்கப்படும்" என்றார்.
ஜெ.கருணாநிதி: சார் பதிவாளர் அலுவலகம் இப்போது இடம் மாற்றப்பட்டுள்ளது. மீண்டும் அதே இடத்தில் கட்டிடம் கட்ட அரசு அனுமதிக்குமா?
அமைச்சர் மூர்த்தி: கோடம்பாக்கத்தில் 8440 சதுர அடி இடம் தேர்வு செய்து கொடுத்தால் உடனே புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெ.கருணாநிதி : தியாகராயநகர் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி, மேற்கு மாம்பலம், அசோக்நகர் உள்ளடக்கிய சார் பதிவாளர் அலுவலகம் கே.கே.நகர் பகுதியில் இருந்து இப்போது அந்த பத்திரப்பதிவு அலுவலகம் முகப்பேருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே தியாகராயநகர் தொகுதிக்கு உள்ளேயே சார் பதிவாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும்.
அமைச்சர் மூர்த்தி: இடம் இல்லாத பட்சத்தில் அங்கு இருக்கும் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு இடம் இருக்கும் பட்சத்தில் அதுபற்றி ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர்.
- ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம்:
ஆந்திர மாநிலம் திருப்பதி, கடப்பா, பாக்ரா பேட்டை உள்ளிட்ட ஷேஷாசலம் வனப்பகுதியில் விலையுயர்ந்த ஏராளமான செம்மரங்கள் உள்ளன. இந்த செம்மரங்கள் வெளிநாடுகளில் அதிக அளவு விலைபோவதால் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த செம்மர வியாபாரிகள் தமிழக பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளர்களை கொண்டு செம்மரங்களை வெட்டி எடுத்து கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் அன்னமைய்யா மாவட்டம் குண்ட்ரவாரி பள்ளி அருகே உள்ள ஆந்திர மாநில சோதனைச்சாவடியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் கடந்த 6-ந்தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்துக்கொண்டிருந்த காரை வழிமறித்து நிறுத்த முயன்றனர். அப்போது அந்த கார் நிற்காமல் வழிமறித்த போலீஸ்காரர் மீது மோதி சென்றுவிட்டது. இந்த சம்பவத்தில் ஆந்திர மாநில செம்மர கடத்தல் பிரிவு போலீஸ்காரர் கணேஷ் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக செம்மர கடத்தல் கும்பல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கீழ்நிலவூர் பகுதியை சேர்ந்த ராமன் (வயது 31) உள்ளிட்ட 8 பேர் மீது ஆந்திர மாநிலம் கே.வி.பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள 6 பேரை தனிப்படை அமைத்து ஆந்திர மாநில போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 2 தினங்களாக கல்வராயன்மலையில் முகாமிட்டு ஆந்திர மாநில போலீசார் தேடி வரும் நிலையில், முக்கிய குற்றவாளியான ராமன், விழுப்புரம் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அகிலா முன்பாக இன்று சரணடைந்தார்.
- மக்கள்தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள்.
- இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு! பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி கூட்டரசு இது!
சென்னை:
சட்டசபையில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் ஒரே நாடு-ஒரே தேர்தல் தொடர்பாக கொண்டு வரப்பட்ட அரசினர் தனித் தீர்மானங்களை முன்மொழிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-
நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் இரண்டு மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியாக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது.
* ஒன்று-'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்கிற மிக மோசமான எதேச்சதிகார எண்ணமாகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.
* இரண்டு-'மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு' என்ற பெயரால் தமிழ்நாட் டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும்.
இவை இரண்டுமே மக்களாட்சியைக் குலைக்கும் செயல்கள் என்பதால் இவை இரண்டுக்கும் எதிராக நாம் அனைவரும் ஒருசேரக் குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
முதலில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது எத்தகைய ஆபத்தானது என்பதை விளக்க விரும்புகிறேன்.
* ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கு எதிரானது.
அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள "சுதந்திரமான, நேர்மையான" தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது.
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களி லும் ஆட்சி அமைந்து ஒன்றியத்தில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார்களா?
சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து, தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் தானாக முன்வந்து பதவி விலகுவார்களா?
இதைவிட காமெடிக் கொள்கை இருக்க முடியுமா?
பாராளுமன்ற, சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா?
பாராளுமன்றத் தேர்தலையே கூட, ஒரே நாளில் இந்தியா முழுக்க நடத்து வதற்கு தயாராக இல்லாத சூழல்தான் இப்போது இருக்கிறது?
இந்த நிலையில், பாராளுமன்றத் தொகுதிகளுக்கும், 30 மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்துவது மாயா ஜாலமா?
நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. ஆகவே இவற்றுக்கும் சட்டமன்றம், பாராமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்ட விரோதமானது.
உள்ளாட்சித் தேர்தல் முழுக்க முழுக்க மாநில அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அதற்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்போவதாகச் சொல்வது மாநில உரிமைகளைப் பறிப்பதாகும்.
மாநில உரிமைகள் கூட்டாட்சித் தத்துவம்-அனைவருக்கும் சம வாய்ப்பு ஆகியவற்றை வழங்கும் அர சியல் சட்டத்தைச் சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்படவுள்ள பாராளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் சுயநலத்திற்கு யாரும் பலியாகி விடக்கூடாது.
எனவே பாராளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு "ஒரே நாடு-ஒரே தேர்தல்" என்ற நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.
இரண்டாவதாக தொகுதி மறுவரையறை குறித்த ஆபத்துகளை விளக்க விரும்புகிறேன்.
தொகுதி மறுவரையறை என்ற திட்டத்தில் தென்னிந்திய மக்களை, குறிப்பாக, தமிழ்நாட்டு மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை குறைக்க கூடிய ஆபத்து, சூழ்ச்சி இருக்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் மீது, தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறு வரையறை உள்ளது.
அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.
இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170-ம் பிரிவுகளின்படி, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும், பாராளுமன்றம், மாநிலச் சட்டமன்றங்களில் புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறு சீரமைக்கப்படுகின்றன. எல்லை நிர்ணய சட்டத்தின்படி இவை செய்யப்படுகிறது. இந்தச் சட்டத்தின்படி எல்லை நிர்ணய ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்து வருகிறது.
இதுவரை 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் எல்லை நிர்ணய ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 1976-ம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன.
இவ்வாறு மறுநிர்ணயம் செய்யும்போது, மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறைக்கப்படுகின்றன. அதாவது 'மக்கள்தொகைக் கட்டுப்பாடு' எனும் கொள்கையைத் தீவிரமாகச் செயல்படுத்தி, மக்கள்தொகையை குறைத்துக் கொள்ளும் மாநிலங்களுக்குத் தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது.
இதனால் மக்கள்தொகை குறையும். மாநிலங்களுக்கான பாராளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசைப் பெறும்; அவற்றுக்கான பிரதிநிதித்துவம் அதிகமாகும்.
இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை நாம் எதிர்த்தாக வேண்டும்.
மக்கள்தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்குக் குறையக் கூடாது என்பதால்தான் அரசியலமைப்பில் 42-வது சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
2001-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை, தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்வதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அது போலவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 84-வது திருத்தமும் செய்யப்பட்டது.
தொகுதிகளின் எண்ணிக்கையில் 2026-ம் ஆண்டு வரை மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும், 2026-ம் ஆண்டிற்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்தால், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.
1971-ம் ஆண்டு தமிழ்நாடும் பீகாரும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள்தொகையைக் கொண்டிருந்ததால் மக்களவையில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான தொகுதிகளைக் கொண்டிருந்தன.
இன்று தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் பீகாரின் மக்கள்தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒன்றிய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப்பேரவை இடங்களின் எண்ணிக்கை பல வடமாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாசாரத்தில் குறைந்து விடும்.
இதனை நினைத்துப் பார்த்தால் அச்சமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் உரிமைக்காக இவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதியை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள்.
39 எம்.பி.கள் இருக்கும் போதே ஒன்றிய அரசிடம் கெஞ்சிக்கொண்டு இருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும்?
தமிழ்நாடு, கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும். அதன் சக்தியை இழக்கும். அதனால் அதன் உரிமைகளை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின்தங்கி விடும்.
எனவேதான் தொகுதி வரையறை-மறுசீரமைப்பு என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்தச் சூழலிலும் குறைக்கக் கூடாது என்கிறோம்.
மக்கள் தொகைக் குறைந்து விட்டதைக் காரணம் காட்டி, தென் மாநிலங்களுக்குத் தொகுதிகளைக் குறைப்பது தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனம் அடையச் செய்யும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளும் வரை, தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே தொடரச் செய்வதே சரியாகும்.
இதேபோன்ற பாரபட்சம்தான் நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது. மக்கள்தொகையைக் காரணமாகக் காட்டி தென் இந்திய மாநிலங்களுக்கு வரி வருவாயில் பங்கு குறைந்து விட்டது.
இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு! பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி கூட்டரசு இது! இங்கு எந்த மாநிலமும் பிற மாநிலத்தைவிட உயர்ந்ததோ, முக்கியமானதோ அல்ல, அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும்.
மக்களுடைய எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று கணக்கிடப்பட்டு, மாநிலங்களுக்கான இடம் ஒதுக்கப்பட்டால், புவியியல், மொழி, பொருளாதார, அரசியல் பின்னணிகளைப் புறந்தள்ளும் செயலாகிவிடும். மக்களாட்சியின் ஆதாரப் பண்பையே அது நாசமாக்கி விடும். இதனால் ஏற்கனவே கனல் வீசிக்கொண்டிருக்கும் எதிர்ப்புணர்வுகளை மேலும் வளர்ப்பது போலாகிவிடும்.
இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சித் தத்துவத்தை மீறும் செயல் எதையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளக் கூடாது.
அதிக தொகுதிகள் மூலம் ஆதிக்கம் செலுத்துவது கூட்டரசின் தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகிவிடும்.
2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட விருக்கும் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும்.
தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை இந்தச் சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பொது முக்கியத்துவம் வாய்ந்த இந்த இரண்டு முக்கிய தீர்மானங்களையும் நிறைவேற்றித் தருமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் பின்வரும் தீர்மானங்களை முன்மொழிகிறேன்.
"2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட விருக்கும் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள் தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்து கிறது என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
"'ஒரு நாடு ஒரு தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும்; நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும்; அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும்; இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும்; அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் 'ஒரு நாடு ஒரு தேர்தல்' திட்டத்தினை நடை முறைப்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப் பேரவை வலியுறுத்துகிறது." என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
மேற்காணும் இரண்டு தீர்மானங்களையும் உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தீர்மானத்தின் மீது அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள்.
தொகுதிகள் எண்ணிக்கைகள் குறைக்கப்பட கூடாது என்று அ.தி.மு.க. சார்பில் தளவாய் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இதுதொடர்பாக அ.தி.மு.க. சார்பில் 10 கோரிக்கைகள் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசுகையில், "மத்திய அரசின் நடவடிக்கையை முக்கிய சீர்திருத்தமாக பார்க்க வேண்டும். எனவே இந்த தீர்மானங்கள் தேவையற்றது" என்று கூறினார்.
அதன் பிறகு அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் தீர்மானங்கள் ஏன் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளித்து பேசினார்.
இதையடுத்து தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
- பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 3 காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது.
- வன பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றில் கரையோரத்தில் அமைந்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
நடிகரும், டைரக்டருமான கே.பாக்யராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில் அவர் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை உள்ளிட்ட இடங்களுக்கு தாங்கள் படப்பிடிப்பிற்காகச் செல்வது உண்டு. அந்த பகுதியில் ஓடும் ஆற்றில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகளவில் செல்வார்கள். அப்போது ஆற்றின் சுழலில் சிக்கி சிலர் இறந்து போய் விடுவார்கள். இது சாதாரண விபத்து அல்ல, பணம் பறிக்கும் நோக்கில் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட கொலை என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த வீடியோ மேட்டுப்பாளையம் மக்களை மட்டுமல்லாது போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. நடிகர் பாக்கியராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது எனவும், அதுபோன்ற குற்றச்சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் பதிவாகவில்லை எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மேட்டுப்பாளையம் போலீஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானவை அல்ல என்றும், தண்ணீரில் மூழ்கி நீராடும் நபர்களை நீருக்குள் இருக்கும் சில மர்மநபர்கள் கொடூரமான முறையில் கொலைகள் செய்வதாகவும், அவர்களின் உடல்களை நீருக்குள் தேட உறவினர்களிடம் பணம் கேட்பதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இவ்வாறு பரவும் வதந்திகள் ஆதாரமற்றது. இதுவரை பவானி ஆற்று பகுதியில் இந்த மாதிரியான கொலை சம்பவம் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் எந்தவித வழக்குகளும் பதியப்படவில்லை.
பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 3 காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழியாக செல்கிறது. அங்குள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் பவானி ஆற்றில் கரையோரத்தில் அமைந்துள்ளது. மேலும், தினமும் சராசரியாக சுமார் 20 ஆயிரம் பக்தர்களும், அதன் வருடாந்திர குண்டம் திருவிழாவின் போது சுமார் 5 லட்சம் பக்தர்களும் வருகின்றனர். 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் ரோந்து காவலர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பவானி ஆற்றில் இன்று வரை எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை.
மேலும் தற்கொலை எண்ணத்துடன் ஆற்றில் குதித்த 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் மொத்தம் 19 ஆபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டு பவானி ஆற்றில் உயிர்ச்சேதம் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் எச்சரிக்கை பலகைகள், சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
எனவே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மையற்றவை. இவ்வாறு வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நெஞ்சு பொறுக்குதில்லையே#tamil #shortstories #kbr #bhagyaraj pic.twitter.com/6OYNUHOwoy
— K Bhagyaraj (@UngalKBhagyaraj) February 12, 2024
- ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.
- தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை:
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தின் மீது சட்டசபையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
அப்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கூறியதாவது:
* ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நிறைய கேள்விகள் எழத்தான் செய்யும்.
* ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவிடம் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம்.

* ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த தேர்தலிலேயே நிறைவேற்றப்போவதில்லை.
* சில உறுப்பினர்கள் தாங்களாகவே, தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
* தேவையற்ற பயத்தால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
* நெஞ்சுக்கு நீதியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரே நாடு, ஒரே தேர்தலை வலியுறுத்தி உள்ளார் என்று அவர் கூறினார்.
- சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் பூண்டு விளைச்சல் உள்ள நிலையில் வட மாவட்டங்களில் இருந்தும் பூண்டுகள் வரத்து காரணமாக பூண்டு விலை கட்டுக்குள் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பூண்டு விளைச்சல் குறைவு மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரக்கூடிய பூண்டு வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் பூண்டு விலை அதிகரித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு வ.உ.சி. காய்கறி சந்தைக்கு தமிழகம், கர்நாடகா, காஷ்மீர் உட்பட வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் வரக்கூடிய பூண்டு மூட்டை வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வருவதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்த பூண்டு தற்போது 400 ரூபாய் அதிகரித்து உள்ளது.
இதனால் மொத்தம் வியாபாரம் மற்றும் சில்லரை வியாபாரம் பெரும் அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். சமையலில் மிக இன்றியமையாததாக உள்ள பூண்டின் விலை ஏற்றதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் தாக்கம் ஏழை மக்கள் மட்டும் நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது. ஆண்டில் சராசரியாக தக்காளி, வெங்காயத்தின் விலை ஏற்றம் சந்தித்து வரும் நிலையில் தற்போது பூண்டு, இஞ்சி போன்ற சிறு பொருட்கள் விலை ஏற்றமும் மக்களின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் அத்தியாவசிய சமையல் பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பூண்டு வியாபாரிகள் கூறும் போது,
தற்போது பூண்டின் தேவைக்கு ஏற்ப வரத்து இல்லாததாலும், வடமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாலும் பூண்டின் விலை உச்சத்தில் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பூண்டின் விலை படிப்படியாக குறைந்து ரூ.150-க்குள் வந்துவிடும் என்றனர்.
- குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ள ஆர்.எஸ்.புரத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை:
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த 26-ம் ஆண்டு நினைவு தினம் இன்று பா.ஜ.க.வினரால் கடைபிடிக்கப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று மாலை 3 மணிக்கு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. மேலும் கண்டன பொதுக்கூட்டமும் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்காக விசுவ இந்து பரிஷத் சார்பில் திதிகொடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. குண்டு வெடிப்பில் பலியானவர்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அதன் முன்பு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
குண்டுவெடிப்பு தினத்தை முன்னிட்டு கோவையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்டன பொதுக்கூட்டம் நடக்க உள்ள ஆர்.எஸ்.புரத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
- ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப்பேரவை வலியுறுத்துகிறது.
சென்னை:
பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் பல ஆண்டுகால இடைவெளிகளில் இப்போது தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் செலவு அதிகமாவதுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும்போது வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.
இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வந்தார்.
இந்த முடிவுக்கு பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும், கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையையும் தாக்கல் செய்தது. அதில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2-ந் தேதி சிறப்புக் குழுவையும் மத்திய அரசு அமைத்தது.
இந்த குழுவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், கா்ஙகிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த இரு தீர்மானங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்த தீர்மானங்கள் வருமாறு:-
2026-ம் ஆண்டுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் தவிர்க்க இயலாத காரணங்களால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும், அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும், அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப்பேரவை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.
தற்போது இந்த தீர்மானங்களின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளன.
- காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர்.
- காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கன்னியாகுமரி:
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியான இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கோலாகலமாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று காதல் ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியிலும் இன்று காதல் ஜோடிகள் குவிந்தனர். கன்னியாகுமரி கடற்கரையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரைப் பகுதியில் உள்ள சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைப் பகுதி, கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் காதல் ஜோடியினர் இன்று காலையிலிருந்தே வந்து குவிய தொடங்கினர்.
காதல் ஜோடியினர் ஒருவரை ஒருவர் கரம் கோர்த்தபடியும், தோளில் கை போட்டபடியும் கடற்கரை பகுதியை வலம் வந்தனர். கடற்கரையில் நின்றவாறு காதல் ஜோடிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையின் பின் பகுதியை கவர் செய்து தாங்கள் கன்னியாகுமரிக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் செல்போன் மூலம் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கன்னியாகுமரி கடற்கரை பகுதி, காந்தி மண்டபம் பஜார், கடற்கரை சாலை, சன்னதி தெரு, விவேகானந்தராக் ரோடு, ஆகிய பகுதிகளில் உள்ள சங்கு கடைகளில் காதலர்கள் பலரும் கூடி நின்று தங்கள் பெயர்களை கடல் சங்கில் பதிவு செய்து வாங்கிச் சென்றனர்.
இதேபோல ஒரே அரிசியில் காதல் ஜோடியினர் இருவர் பெயரையும் பதிவு செய்தனர். அவற்றை ஒருவருக்கொருவர் பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்ந்தனர். இதனால் பரிசுப்பொருட்கள் கடைகளில் காதல் ஜோடி கூட்டம் அலைமோதியது.
கடற்கரையிலுள்ள காட்சி கோபுரம் மற்றும் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களிலும் காதலர்கள் பலர் ஜோடியாக அமர்ந்து கடலின் அழகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து இன்று ஏராளமான காதல் ஜோடிகள், மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு வந்திருந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் கடற்கரை சாலையில் ரேஸ் செய்தபடி வலம் வந்தனர்.
மறைவான இடங்களில் அமர்ந்து அத்துமீறிய சில காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஒரு சில காதல் ஜோடிகள் மறைவான இடங்களில் அமர்ந்து தங்கள் காதல் லீலைகளை அரங்கேற்றினர். கடற்கரை பகுதியில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமழை பொழிந்தனர். காதல் ஜோடியினர் ரோஜா மலர்களை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி.மகேஷ்குமார் தலைமையில் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவிலும் காதல் ஜோடிகள் அதிகமானோர் வந்திருந்தனர்.






