search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்
    X

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு: சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம்

    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப்பேரவை வலியுறுத்துகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் பல ஆண்டுகால இடைவெளிகளில் இப்போது தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் செலவு அதிகமாவதுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும்போது வளர்ச்சித் திட்டங்களும் பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வந்தார்.

    இந்த முடிவுக்கு பல்வேறு மாநில முதல்-மந்திரிகளும், கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் ஒரு வரைவு அறிக்கையையும் தாக்கல் செய்தது. அதில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை அமல்படுத்தலாம் என பரிந்துரை செய்திருந்தது.

    இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த 2-ந் தேதி சிறப்புக் குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

    இந்த குழுவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால், கா்ஙகிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இடம் பெற்று உள்ளனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்றும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கூடாது என்றும் தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    இந்த இரு தீர்மானங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்த தீர்மானங்கள் வருமாறு:-

    2026-ம் ஆண்டுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் தவிர்க்க இயலாத காரணங்களால் மக்கள்தொகையின் அடிப்படையில் சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.

    மக்கள் நலன் கருதி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களையும் மக்கள் நல்வாழ்வு திட்டங்களையும் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்றும் இந்தப் பேரவை வலியுறுத்துகிறது.

    'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதாலும், நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று என்பதாலும், அது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று என்பதாலும் இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட பரந்து விரிந்த நாட்டில் உள்ளாட்சி அமைப்புகள், மாநிலச் சட்டமன்றங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கான தேர்தல்கள் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தே நடத்தப்படுவதாலும், அதிகாரப் பரவலாக்கல் என்ற கருத்தியலுக்கு அது எதிரானது என்பதாலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஒன்றிய அரசை இந்தப்பேரவை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார்.

    தற்போது இந்த தீர்மானங்களின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதம் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளன.

    Next Story
    ×