என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
    • கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

    சென்னை :

    தீபாவளியை பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பொதுமக்கள் பயணம் மேற்கொள்வார்கள். ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னையில் இருந்து புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.

    அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு வருகிற17,18,21,22 ஆகிய தேதிகளில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகர காவல் அறிவித்துள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான மாற்றுப் பாதை மற்றும் புறப்பாடுப் பயண விபரங்களையும் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-






    • நேற்று 12 நிமிடங்கள் நடந்த இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.
    • வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின.

    அதைத்தொடர்ந்து இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நேற்று 12 நிமிடங்கள் நடந்த இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அண்ணாநகர்: ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.

    அம்பத்தூர்: டி.வி.எஸ்.நகர் முழுப் பகுதி, கண்டிகை தெரு, அன்னை நகர் மெயின் ரோடு, பத்மாவதி நகர், அன்பு நகர், சந்தோஷ் நகர், மோகன் கார்டன், தண்ணீர் கால்வாய் சாலை, பல்லா தெரு.

    தில்லை கங்கா நகர்: வாஞ்சிநாதன் தெரு மற்றும் விரிவாக்கம், உத்தமர் காந்தி தெரு, திருவள்ளுவர் நகர், பாரதிதாசன் தெரு, நேதாஜி தெரு, கேசரி நகர் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 7வது தெரு, சுரேந்திரா நகர் 6வது தெரு முதல் 11வது தெரு வரை, விவேகானந்தா தெரு, இன்கம் டேக்ஸ் காலனி 1வது தெரு, பாலாஜி நகர் 1வது தெரு, சாந்தி நகர், டிஆர்ஏ அஸ்கோட் மற்றும் கேஜி பினாக்கிள்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர் அரியலூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
    • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும்.

    சென்னை:

    இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.

    இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.

    இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) முதல் பெய்யத்தொடங்கும் என சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். மேலும் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் நாடு முழுவதும் விலகி, வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதனால் அன்றைய தினம் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் வருகிற 18-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55 கி.மீ. வரை வீசும். எனவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் அமுதா, நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தென் கர்நாடகா, தென் கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய தினமே மழை கொட்டி தீர்க்கும் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எங்களை பொறுத்தவரை 50 இடங்களில் மழை பதிவானால் கூட, அது வடகிழக்கு பருவ மழையின் தொடக்கம்தான்.

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த முறை இது 50 செ.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 14-ந் தேதி (அதாவது நேற்று) வரை 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட 2 செ.மீ. அதிகம் ஆகும்.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் சராசரி மழையளவு 33 செ.மீ. பதிவாகி உள்ளது. அதாவது இந்த பருவமழை கூடுதலாகவும், குறைவாகவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.
    • இந்த சந்திப்பின்போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை என பாக்ஸ்கான் விளக்கம்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் தமிழக அரசு பெருமை பேசிக் கொண்டிருந்த நிலையில், அத்தகைய எந்த முதலீட்டையும் செய்வதாக உறுதியளிக்கவில்லை என்று ஃபால்ஸ்கான் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது. தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசு எத்தகைய மோசடிகளை செய்து வருகிறது என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு ஆகும்.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15000 கோடி முதலீடு செய்ய ஒப்புக்கொண்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

    'ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்திருந்தார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் ஒருபடி சென்று, இதுதான் திராவிட மாடலின் செயல்பாடு. தமிழ்நாட்டைத் தேர்வு செய்தமைக்காகவும், எங்களுடன் இணைந்து எதிர்காலத்தை வடிவமைக்க முடிவெடுத்தமைக்காகவும் ஃபாக்ஸ்கானுக்கு நன்றி. தமிழ்நாட்டைத் தெற்காசியாவின் உற்பத்தி மற்றும் புதுமைக்கான மையமாக உயர்த்துவதற்கான நம் பயணத்தில் இது மற்றுமொரு மைல்கல்!" என்று தனக்குத்தானே பாராட்டிக் கொண்டிருந்தார்.

    ஆனால், திமுக அரசு கட்டி எழுப்பிய இந்த பொய் பிம்பங்கள் அனைத்தும் அரை மணி நேரத்தில் நொறுங்கி விட்டன. இது தொடர்பாக ஃபாக்ஸ்கான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால் இந்த சந்திப்பின் போது எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை, உறுதியளிக்கப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்று சொல்வார்கள். ஆனால், திமுக அரசின் புளுகு அரை நாளில் அமபலமாகியிருக்கிறது.

    இவ்வாறு அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    • 2023-ல் சுமார் 4 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
    • 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

    2025ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா கொண்டாட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெற்றது. 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த விழாவில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தமிழகம் விளையாட்டுத்துறையில் நம்பர் ஒன் இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக, கலைஞர் முதல்வாராக இருக்கும்போது விளையாட்டுத்துறைக்கென தனி அமைச்சகத்தை முதன்முதலாக அமைத்தார்.

    கலைஞர் லட்சியத்தை அடையும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு விளையாட்டிலும் நம்பர் ஒன் இடத்தை அடைந்து கொண்டிருக்கிறது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் 2025 முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள். விளையாட்டு புரட்சியை, மாபெரும் இயக்கமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

    2023-ல் சுமார் 4 லட்சம் வீரர்கள் கலந்து கொண்டனர். 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதிலிருந்து போட்டிக்கான வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்ளலாம். விளையாட்டு திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான் இதனுடைய ஒரே நோக்கம்.

    தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்புவதற்கான ஏவுதளம்தான் (Launching Pad) இந்த முதலமைச்சர் கோப்பை கேம்ஸ். பயிற்சியும், உறுதியும் இருந்தால் நிச்சயம் சாதித்து காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. அனைத்து உதவிகளையும் செய்ய முதலமைச்சர் தயாராக இருக்கிறார்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு உள்ளிட்ட பலவற்றை அதிக சத்தம், அதிக மருந்துகள் கொண்ட பட்டாசுகள் ஏற்படுத்தி வருகின்றன.

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் உள்ள பட்டாசுகளை மட்டும் பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 2018-ம் ஆண்டிலிருந்து தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டிகளை நடத்துவதில் தமிழகம் உயர்தரமாக உள்ளது.
    • விளையாட்டுகளை வளர்க்க, திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்க முதலமைச்சர் கோப்பை.

    2025ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நிறைவு விழா கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. 5 பிரிவுகளில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார். பின்னர் பேசும்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டு விளையாட்டுத்துறையின் பொற்காலமாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது. தேசிய போட்டியாக இருந்தாலும், சர்வதேச தொடராக இருந்தாலும் போட்டிகளை நடத்துவதில் தமிழகம் உயர்தரமாக உள்ளது.

    தமிழக வீரர்கள் வெற்றிமேல் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணமாக பயிற்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்ததுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    விளையாட்டுகளை வளர்க்க, திறமையான வீரர்களை கண்டறிந்து ஊக்குவிக்க, உரிய அங்கீகாரம் வழங்க 37 கோடி ரூபாய் பரிசுத்தொகையுடன் இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்தியிருக்கிறோம்.

    • முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
    • போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கரூரில் கடந்த கடந்த மாதம் இறுதியில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது. கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் குறித்து சில கருத்துக்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டியை சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளரான நிர்மல்குமார் (வயது 35). இவர், முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீதிபதிக்கு எதிராக சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவியது.

    இதைத்தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் கடந்த 12ஆம் தேதி (நேற்றுமுன்தினம்) வழக்குப்பதிவு செய்து, நிர்மல்குமாரை கைது செய்தனர். த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டு பல மணி நேரமாகியும் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி வருவதாக அக்கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிர்மல்குமாரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என த.வெ.க.வினர் கோஷமிட்டனர். காவல்துறையை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட த.வெ.க.வினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்களை விடுதலை செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து ஜே3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட திண்டுக்கல் தெற்கு த.வெ.க. மாவட்ட செயலாளர் நிர்மல்குமாருக்கு வரும் 24-ந்தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நிர்மல்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் நிர்மல் குமாருக்கு ஜாமீன் வழங்கியது.

    • சாதி பெயர்களில் உள்ள 'ன்' எழுத்தை நீக்கி 'ர்' சேர்க்க வேண்டும்.
    • இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சந்தித்து பேசினார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ். பாலாஜி, ஜெ. முகம்மது ஷா நவாஸ், எம். பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த சந்திப்பின்போது சாதி பெயர்களில் உள்ள 'ன்' எழுத்தை நீக்கி 'ர்' சேர்க்க வேண்டும் என முதலமைச்சரிடம் வி.சி.க. தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார்.

    அத்துடன் தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு நன்றி கூறியதுடன் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    • மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
    • மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் மாம்பழ விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்துவோர் நலன் கருதியும் மாம்பழ ஏற்றுமதி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருட்களை உற்பத்தியை மேம்படுத்தும் வகையிலும் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 10-10-2025 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், 2025ஆம் ஆண்டின் மாம்பழப் பருவத்தில் மா விவசாயிகள் மற்றும் மாம்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசின் தலையீட்டைக் கோரி 24.06.2025 அன்று தாம் எழுதியிருந்த கடிதத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதன் அடிப்படையில், பதப்படுத்தக்கூடிய மாம்பழ வகைகளை பயிரிட்ட விவசாயிகள், மாம்பழம் கொள்முதல் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியாலும், மாம்பழக்கூழ் மிகக் குறைவான அளவில் கொள்முதல் செய்யப்பட்டதாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றும் கடந்த ஆண்டு நடந்தது போலவே இந்தப் பருவத்திலும் மா விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதன் ஒரு முக்கிய பகுதியாக இக்கடிதத்தை தாம் எழுதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தபடி, இந்தியாவில் விற்கப்படும் மாம்பழ பானத்தில் உள்ள பழக்கூழின் அளவு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளைப் பின்பற்றாமல், பேக்கேஜ் செய்யப்பட்ட மாம்பழச் சாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்றும், பானங்களில் மாம்பழக்கூழ் சேர்க்கப்படுவதில் FSSAI தரநிலைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளைப் பிறப்பிக்குமாறு இந்திய அரசைக் தாம் கேட்டுக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும் இதுகுறித்த தனது கடிதத்திற்கு இன்னும் நேர்மறையான பதில் ஏதும் கிடைக்கப்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டும், நம்நாட்டில் இந்த பானத்தை அதிகளவில் பயன்படுத்தும் நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டும், மாம்பழங்களை அடிப்படையாகக் கொண்ட பான உற்பத்தித் தொழிலில் குறைந்தபட்சம் 18 முதல் 20 சதவீதம் வரை பழக்கூழ் உள்ளடக்கத்தை உறுதிசெய்ய அறிவுறுத்தப்படவேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் அதனால் அப்பானத்தின் தரமும் மேம்படும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டின் மாம்பழ ஏற்றுமதிக் கொள்கையானது மாம்பழ வகை ஏற்றுமதியை மேம்படுத்துவதிலும், மாம்பழப் பொருட்களை பல்வகைப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதாகவும், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், ஏற்றுமதி தரநிலைகளுக்கு இணங்க செயல்முறைகளை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் சாத்தியப்படும் என்றும் அத்தகைய நடவடிக்கைகள் மாம்பழங்களுக்கு அதிக மதிப்பைச் சேர்க்கும் அதே வேளையில், மாம்பழக்கூழ் தொழில்களை அதிகமாகச் சார்ந்திருப்பதையும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஆகவே, இந்த முயற்சிகளை மேலும் வலுப்படுத்திட இந்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), ஒருங்கிணைந்த பேக்கிங் செய்யும் வசதிகள், உள்நாட்டு கொள்கலன் கிடங்குகள், குளிரூட்டப்பட்ட துறைமுகங்கள், தரச்சோதனை ஆய்வகங்கள், வாங்குபவர்-விற்பனையாளர் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், வெளிநாட்டு வாங்குபவர்களை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்றுமதி தரநிலைகள் குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டிற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்தப் பிரச்சினையில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் இத்தருணத்தில் தலையிட்டு, மா விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், மேம்பட்ட ஏற்றுமதி மற்றும் மதிப்புக் கூட்டல் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ய உதவிடுமாறும் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ×