என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது- 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
- ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும்.
சென்னை:
இந்தியாவில் ஜூன் 1-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவ மழையாகவும், அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவ மழையாகவும் பதிவு செய்யப்படுகிறது.
இந்தியாவே தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் அதிகமாக பெய்யும்.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை நாளை (வியாழக்கிழமை) முதல் பெய்யத்தொடங்கும் என சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் இன்று மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம். மேலும் தென்மேற்கு பருவ மழை இன்று முதல் நாடு முழுவதும் விலகி, வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் அன்றைய தினம் கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களிலும் மற்றும் காரைக்காலிலும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் வருகிற 18-ந் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் 55 கி.மீ. வரை வீசும். எனவே மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தலைவர் அமுதா, நிருபரிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தென் கர்நாடகா, தென் கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை நாளை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அன்றைய தினமே மழை கொட்டி தீர்க்கும் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் எங்களை பொறுத்தவரை 50 இடங்களில் மழை பதிவானால் கூட, அது வடகிழக்கு பருவ மழையின் தொடக்கம்தான்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சராசரியாக 44 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்த முறை இது 50 செ.மீ.க்கும் அதிகமாக மழை பதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 14-ந் தேதி (அதாவது நேற்று) வரை 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இது சராசரியை விட 2 செ.மீ. அதிகம் ஆகும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் சராசரி மழையளவு 33 செ.மீ. பதிவாகி உள்ளது. அதாவது இந்த பருவமழை கூடுதலாகவும், குறைவாகவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






