என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 16 ஆயிரம் கனஅடியாக வந்தது.
இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்துள்ளது. இதனால் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
- வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.
நெல்லை:
செங்கோட்டை -தாம்பரம் இடையே வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681, 20682) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 ஏ.சி. மூன்றடுக்கு பெட்டி, 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி மற்றும் ஒரு பொது பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.
தாம்பரத்தில் இருந்து வருகிற 1-ந் தேதி (சனிக்கிழமை) முதல், செங்கோட்டையில் இருந்து 2-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். வருகிற ஏப்ரல் மாதம் இறுதி வரையில் இது அமலில் இருக்கும்.
வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இந்த பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருக்கும்.
இதே போல் நெல்லை வழியாக இயக்கப்படும் தாம்பரம் -நாகர்கோவில் (வண்டி எண் 22657, 22658) ரெயிலில் ஒரு ஏ.சி. இரண்டடுக்கு பெட்டி, 2 மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், ஒரு பொது பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.
தாம்பரத்தில் இருந்து வருகிற நவம்பர் 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல், நாகர்கோவிலில் இருந்து 3-ந் தேதி முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும். இவை ஏப்ரல் மாதம் இறுதி வரை அமலில் இருக்கும்.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ் செல்வன் தெரிவித்து உள்ளார்.
- வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும்.
- வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில்தான் அதன் ஆட்டத்தை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே 2 நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகிவிட்டன. அதில் ஒன்று புயலாகவும் வலுப்பெற்று சூறாவளி புயலாக மழையை ஆந்திராவில் கொட்டியுள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்ததும், பருவமழை காலங்களில் ஒரு இடைவெளி ஏற்படும்.
அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதே சமயம் மேற்கு திசை காற்றின் போக்கு காரணமாக, வெப்பம் அதிகரித்து, வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓய்வுக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை அதன் சூறாவளி ஆட்டத்தை வருகிற 10-ந் தேதிக்கு பிறகு தொடங்க இருப்பதாகவும், அதன் பின்னர் வங்கக்கடலில் அடுத்தடுத்து நிகழ்வுகள் உருவாகி, பருவமழையை தீவிரப்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- வங்கக்கடலில் உருவான ‘மோன்தா’ புயலாலும் மழை பெய்தது.
சென்னை:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் உருவான 'மோன்தா' புயலாலும் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டின.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- உணவு தயாரிக்கும் கூடம் சமைக்கவே முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரியில் வழங்கப்பட்ட உணவை அருந்திய நிலையில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து கல்லூரிக்கு சென்று உணவுப் பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் உணவு தயாரிக்கும் கூடம் சமைக்கவே முடியாத அளவிற்கு அசுத்தமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் தொட்டி முழுவதும் அசுத்தமாகவும், புழுக்களுடன் இருந்ததாகவும் புகார் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனியார் கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்லூரியில் உணவு சமைக்க, குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சம்பா நெல் பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை சாகுபடியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமரிடம் தான் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, தமிழ்நாட்டிற்கு, 2025 குறுவை (காரீஃப்) பருவத்திற்குப் போதுமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்ததற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும், அந்த வகையில் 2025 குறுவை (காரீஃப்) பருவத்திற்கு முறையே 4.41 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.75 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 0.95 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 4.58 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு 4.37 லட்சம் மெட்ரிக் டன் (99%) யூரியா, 1.59 இலட்சம் மெட்ரிக் டன் (91%) டி.ஏ.பி., 0.70 இலட்சம் மெட்ரிக் டன் (74%) எம்.ஓ.பி. மற்றும் 3.70 இலட்சம் மெட்ரிக் டன் (81%) என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களை பெற்றுள்ளது.
நெல் விவசாயிகளுக்கு ரூ.215 கோடி செலவில் "குறுவை (காரீஃப்) சிறப்புத் தொகுப்பு" அறிவித்து செயல்படுத்தியது மற்றும் நீர்ப்பாசனத்திற்காக அணைகளை உரிய நேரத்தில் திறந்தது போன்ற மாநில அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளால், தமிழ்நாடு நெல் உற்பத்தியை சாதனை அளவிற்கு அதிகரிக்க முடிந்தது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-ந்தேதி தொடங்கியுள்ளதாலும், அனைத்து முக்கிய நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இருப்பதாலும், சம்பா பருவத்தில் அதிகபட்ச நெல் சாகுபடி பரப்பளவில் உற்பத்தி செய்திட விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நவம்பர் மாதத்தில் உரங்கள், குறிப்பாக யூரியாவின் தேவை அதிகரிக்கும். இந்த நிலையில், சம்பா நெல் பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக மக்காச்சோளம், உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை மற்றும் கரும்பு போன்ற பிற பயிர்களின் சாகுபடியும் மாநிலம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்திய அரசின் உரத்துறை, மாநிலத்தால் முன்மொழியப்பட்ட 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.93 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.88 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.15 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களில், 6.50 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.50 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.80 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.14 இலட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களை ஒதுக்கியுள்ளது.
நடப்பு சம்பா (ரபி) பருவத்தில் பயிர் சாகுபடி பல்வேறு சாதகமான காரணிகளால் முழு வீச்சில் நடைபெற்றுவரும் நிலையில், நேரடி உரங்களுக்கான தேவை குறிப்பாக, யூரியாவுக்கான தேவை வரும் நாட்களில் பெருமளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலத்தால் முன்மொழியப்பட்ட 6.94 லட்சம் மெட்ரிக் டன் யூரியா, 1.93 லட்சம் மெட்ரிக் டன் டி.ஏ.பி., 1.88 லட்சம் மெட்ரிக் டன் எம்.ஓ.பி. மற்றும் 5.15 லட்சம் மெட்ரிக் டன் என்.பி.கே. காம்ப்ளக்ஸ் உரங்களின் தேவையை, சம்பந்தப்பட்ட உர நிறுவனங்கள் உரிய நேரத்தில் பரிசீலித்து, வரும் மாதங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- தென்காசி, கோவில்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் மதுரை சென்றார்.
- விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழா மற்றும் குருபூஜை விழா நடக்கிறது.
இதற்கிடையே, தென்காசி, கோவில்பட்டி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் அங்கிருந்து கோவில்பட்டிக்கு புறப்பட்டார்.
கோவில்பட்டியில் இளையரசனேந்தல் சாலையில் நகர திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. கட்டடத்தின் முன் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகர தி.மு.க. அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அங்கு நூலகத்தையும் திறந்துவைத்தார்.
இதில் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக, அம்மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
- 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு.
- நவம்பர் 30ஆம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் நவம்பர் 10ஆமி தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 30ஆம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 16 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள்.
- சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
கார்த்திகை மாதம் 1ஆம் தேதி அடுத்த மாதம் 17ஆம் தேதி தொடங்குகிறது. கார்த்திகை 1ஆம் தேதி சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு இருமுடி கட்டிச் செல்வார்கள். மண்டல பூஜை, மகர விளக்கை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள்.
அவர்கள் வசதிக்காக சென்னை, திருச்சி, மதுரை, கடலூரில் இருந்து பம்பைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நவம்பர் 16ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி இரண்டு மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. டிசம்பர் 27 முதல் 30 வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுவதால் அன்றைய தினங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கட்சியின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக் குழு.
- புஸ்சி, ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்பட 28 பேர் இடம் பிடித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும், செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க அக்கட்சியின் தவைர் விஜய் புதியதாக நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்.
இதில் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட 28 பேர் இடம் பிடித்துள்ளனர்.
நிர்வாகக் குழுவில் இடம் பிடித்துள்ளவர்கள் விவரம்:-
1. N. ஆனந்த் பொதுச்செயலாளர்
2. ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
3. Dr. K.G. அருண்ராஜ் Ex IRS. கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர்
4. CTR. நிர்மல் குமார் இணைப் பொதுச்செயலாளர்
5. A. ராஜ்மோகன் துணைப் பொதுச்செயலாளர் பெரம்பலூர் மாவட்டம்
6. C.விஜயலட்சுமி துணைப் பொதுச்செயலாளர் நாமக்கல் மாவட்டம்
7. A.ராஜசேகர் தலைமை நிலையச் செயலாளர் கடலூர் மாவட்டம்
8. M.அருள் பிரகாசம் துணைப் பொதுச்செயலாளர் சென்னை மாவட்டம்
9. M.சிவக்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் அரியலூர் மாவட்டம்
10. A.பார்த்திபன் மாவட்டக் கழகச் செயலாளர் சேலம் மத்திய மாவட்டம்
11. R.விஜய் சரவணன் மாவட்டக் கழகச் செயலாளர் தஞ்சாவூர் மத்திய மாவட்டம்
12. M.சிவன் மாவட்டக் கழகச் செயலாளர் தருமபுரி மேற்கு மாவட்டம்
13. M.பாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு மாநகர் மாவட்டம்
14. V.சம்பத்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை மாநகர் மாவட்டம்
15. M.சுகுமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாகப்பட்டிணம் மாவட்டம்
16. S.R.தங்கப்பாண்டி மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் தெற்கு மாவட்டம்
17. K.அப்புனு (எ) வேல்முருகன் மாவட்டக் கழகச் செயலாளர் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டம்
18. B. ராஜ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் கடலூர் கிழக்கு மாவட்டம்
19. J.பர்வேஸ் மாவட்டக் கழகச் செயலாளர் புதுக்கோட்டை மத்திய மாவட்டம்
20. A.விஜய் அன்பன் கல்லானை மாவட்டக் கழகச் செயலாளர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டம்
21. R. பரணிபாலாஜி மாவட்டக் கழகச் செயலாளர் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டம்
22. V.P.மதியழகன் மாவட்டக் கழகச் செயலாளர் கரூர் மேற்கு மாவட்டம்
23. N.சதிஷ்குமார் மாவட்டக் கழகச் செயலாளர் நாமக்கல் மேற்கு மாவட்டம்
24. K. விக்னேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் கோவை தெற்கு மாவட்டம்
25. M.வெங்கடேஷ் மாவட்டக் கழகச் செயலாளர் ஈரோடு கிழக்கு மாவட்டம்
26. S.ராஜகோபால் மாவட்டக் கழகச் செயலாளர் திருநெல்வேலி தெற்கு மாவட்டம்
27. S. பாலசுப்பிரமணியன் கழக உறுப்பினர் தூத்துக்குடி
28. டாக்டர். N.மரிய வில்சன் கழக உறுப்பினர் சென்னை மாவட்டம்
எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவிற்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
- அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பார்கள்.
- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஓராண்டிற்கு 1,200 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரைதான் உள்ளது.
அதிமுக அமைப்புச் செயலாளர் கே.பி. அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
15.10.2025 தேதி நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, தமிழ் நாடு தனியார் பல்கலைக்கழகம் (திருத்த) சட்ட முன்வடிவினை சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டபோதே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு, அதிமுக-வின் எதிர்ப்பினை பதிவு செய்தேன்.
தொடர்ந்து 17.10.2025 அன்று இந்தச் சட்ட முன்வடிவு பேரவையில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டபோது, இந்தச் சட்ட முன்வடிவினை திரும்பப்பெற வேண்டும் என்றும், சட்டமாக இயற்றினால்
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீடு கடைபிடிக்க முடியாமல் சமூக நீதி பாதிக்கப்படும் நிலைமை என்று உயர் கல்வியில் ஏற்படவுள்ள பல்வேறு குளறுபடிகளை விரிவாக எடுத்துக் கூறினேன்.
தமிழ்நாட்டில் 3 பொறியியல் கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரிகளாகவும், 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு உதவிபெறும் கல்லூரிகளாகவும் இருக்கின்றன. அதற்குமேல் 32 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் (பாலிடெக்னிக்) பல அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களாக உள்ளன.
2008-ஆம் ஆண்டு மே மாதம், கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில், இரண்டு அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றும் சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டபோது, அதிமுக சார்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அன்றைய திமுக அரசு அந்தச் சட்ட முன்வடிவை திரும்பப் பெற்றுக்கொண்டது.
மக்களுடைய வரிப் பணத்தில் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்பு, கட்டிடங்கள், ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டால், அரசு உதவி பெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பார்கள். இதனால் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். பொறியியல் கல்லூரிகளில் படிக்கக்கூடிய 90 சதவீத மாணவர்களுக்கு அரசு நிர்ணயிக்கக்கூடிய குறைந்த கல்விக் கட்டணம் பறிபோய்விடும். பொறியியல் கல்லூரிகளில் 5 லட்சம் ரூபாய் முதல் 7 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ஓராண்டிற்கு 1,200 ரூபாய் முதல் 9,000 ரூபாய் வரைதான் உள்ளது. ஆனால், சுயநிதி கல்லூரிகளில் பருவக் கட்டணமே 25,000/- ரூபாய் முதல்
1,00,000/- ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
எனவே, மக்களின் வரிப் பணத்தில் உருவான அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் இன்றைக்கு, இந்த அரசு கொண்டுவர முயலும் சட்டத் திருத்தத்தினால் கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் நிறுவனங்களாக மாறும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி பல்கலைக்கழகங்களாக மாறுவதால் மாணவர்கள் மட்டுமல்ல, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது, அனைத்து அரசு உதவிபெறும் கல்லூரிகளும் இரண்டு ஷிப்ட்-ஆக கல்லூரிகளை நடத்துகின்றனர். முதல் ஷிப்ட் அரசு உதவி பெறும் கல்லூரியாகவும், இரண்டாம் ஷிப்ட் சுயநிதி கல்லூரியாகவும் செயல்படுகின்றன.
முதல் ஷிப்ட்-ல் படிக்கும் மாணவர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்த கட்டணங்களை வசூலிக்கிறார்கள். இரண்டாம் ஷிப்ட்-ல் படிக்கும் மாணவர்களிடம் இவர்கள் நிர்ணயிக்கும் அதிகப்படியான கட்டணங்களை வசூலிக்கிறார்கள். எனவே, இந்தச் சட்ட முன்வடிவை திருப்பப்பெற வேண்டும் என்று 17.10.2025 அன்று சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு பல்கலைக்கழகங்கள்தான் பட்டங்கள் வழங்குகின்றன. அவைகளுக்கு ஒரு மதிப்பு உண்டு. சுயநிதி பல்கலைக்கழகங்களாக இந்தக் கல்லூரிகள் மாற்றப்படும்போது, மாணவர்களின் தரம் குறைவதோடு, அரசு பல்கலைக்கழகங்களின் முக்கியத்துவமும் குறைகிறது.
தற்போது அரசு கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்கள் மண்டல அளவில் ஒரே விண்ணப்பம் மூலம் அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகளில் சேர முடியும். மேலும், விண்ணப்பப் படிவக் கட்டணம் மிகவும் குறைவு. ஆனால், இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், சுயநிதி பல்கலைக்கழகங்களில் சேர விரும்புபவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமும் மிகமிக அதிகம். இரண்டு அல்லது மூன்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தாலே ரூ. 4 ஆயிரத்திற்கும் அதிகமாக செலவிட வேண்டி வரும். மேலும், சுயநிதி பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு என்பது ஒரு கேள்விக்குறியே ஆகும்.
தற்போது, பொது வெளியில் அதிமுக-வின் எதிர்ப்பு மற்றும் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் எதிர்ப்புகளைக் கண்டு விடியா திமுக-வின் உயர்கல்வித் துறை அமைச்சர், திடீரென்று ஞானோதயம் வந்ததுபோல் இந்த சட்ட முன்வடிவை மறு ஆய்வுக்கு உட்படுத்தி திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.
அம்மா அரசின் ஆட்சிக் காலத்தில், 2019-20 கல்வி ஆண்டிலேயே உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.4 சதவீதமாக உயர்ந்து, இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தது. தற்போது இந்த அரசின் குளறுபடிகளால் உயர் கல்வியில் மாணாக்கர்கள் சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக சரிந்துள்ளது வெட்கக்கேடானது.
விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த நான்கரை ஆண்டுகளாக இதுபோல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பதும், அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததும் பின்வாங்கி, பின்னங்கால் பிடறியில் இடிபட புறமுதுகிட்டு ஓடுவதும் வாடிக்கையாக உள்ளது.
உதாரணமாக, தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றி அறிவித்தபோது, எதிர்ப்பு வந்ததும் பின்வாங்கியதையும், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானக் கூடங்கள் நடத்த அனுமதி வழங்க முற்பட்டபோது, எதிர்ப்பு வந்ததும் அதை கைவிட்டதையும் தமிழக மக்கள் மறக்கவில்லை.
இப்படி, எந்த ஒரு திட்டத்திலும், சொல் புத்தியோ, சுய புத்தியோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக செயல்படும் திமுக ஆட்சியாளர்களைப் பார்த்து மக்கள் கைகொட்டி சிரிக்கிறார்கள். மக்களின் எள்ளி நகையாடுதலுக்கு உட்பட்டுள்ள இந்த ஆட்சி, முடிவுக்கு வரக்கூடிய காலம் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.






