என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கு 2 வாரம் ஓய்வு: 10-ந் தேதிக்கு பிறகு சூறாவளி ஆட்டம் ஆரம்பம்
- வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும்.
- வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில்தான் அதன் ஆட்டத்தை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே 2 நிகழ்வுகள் வங்கக்கடலில் உருவாகிவிட்டன. அதில் ஒன்று புயலாகவும் வலுப்பெற்று சூறாவளி புயலாக மழையை ஆந்திராவில் கொட்டியுள்ளது. பொதுவாக ஒரு புயல் கரையை கடந்ததும், பருவமழை காலங்களில் ஒரு இடைவெளி ஏற்படும்.
அந்தவகையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைவதற்கு 2 வார காலம் ஆகும் எனவும், அதுவரை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் பரவலான மழைக்கு வாய்ப்பு குறைவு எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதே சமயம் மேற்கு திசை காற்றின் போக்கு காரணமாக, வெப்பம் அதிகரித்து, வெப்பசலன மழையாக இரவு அல்லது காலை நேரத்தில் தமிழ்நாட்டில் சில இடங்களில் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஓய்வுக்கு பிறகு, வடகிழக்கு பருவமழை அதன் சூறாவளி ஆட்டத்தை வருகிற 10-ந் தேதிக்கு பிறகு தொடங்க இருப்பதாகவும், அதன் பின்னர் வங்கக்கடலில் அடுத்தடுத்து நிகழ்வுகள் உருவாகி, பருவமழையை தீவிரப்படுத்த வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






