என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
- மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்படுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு நேப்பியர் பாலம் அருகில் உள்ள கடலோர பாதுகாப்பு படை தளத்தில் இறங்குகிறார்.
அங்கு கடலோர காவல் படைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார்.
கடலில் செல்லும் மீனவர்கள் படகுகளில் ஒரு டிரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அந்த டிரான்ஸ் மீட்டரில் இருக்கும் சிவப்பு பொத்தானை ஆபத்து காலத்தில் அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்ஞை கிடைக்கும். உடனே உதவிக்கு கடலோர காவல் படையினர் செல்வார்கள்.

இந்த அதிநவீன வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை நாளை முதல் செயல் பாட்டுக்கு வருகிறது. மேலும் புதுச்சேரி கடலோர காவல் படை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது எப்படி என்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதையும் ராஜ் நாத்சிங் பார்வையிடுகிறார்.
பின்னர் அங்கிருந்து காரில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் செல்கிறார்.
அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜ்நாத் சிங்கை வரவேற்கிறார். பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு கண்காட்சியையும் பார்க்கிறார்.
பின்னர் 6.30 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் ராஜ்நாத்சிங் நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.
- கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது.
- கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.
கொடைக்கானல்:
தமிழகத்தின் புகழ்பெற்ற கோடை வாசஸ்தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கவும், கடந்த மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள், இ-பாஸ் பெறுவதற்கான இணைய முகவரியும் வெளியிடப்பட்டது. கொடைக்கானலில் வாரந்தோறும் சராசரியாக சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும் வார இறுதி நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
இவர்களுக்கு இ-பாஸ் பெறுவதில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாத வகையில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் செல்போன் மூலமே இ-பாஸ் பதிவிறக்கம் செய்து அனுமதிக்கப்பட்டனர்.
ஆரம்பத்தில் இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருவதாக உள்ளூர் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதனிடையே இ-பாஸ் நடைமுறையை செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்ட மே 7ந் தேதி முதல் அக்டோபர் 15 வரை 2 லட்சத்து 55 ஆயிரத்து 62 வாகனங்களில் 14 லட்சத்து 98 ஆயிரத்து 206 பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. மே 7ந் தேதி முதல் ஆகஸ்ட் 15ந் தேதி வரை 100 நாட்களில் 1 லட்சத்து 1523 வாகனங்களில் 6 லட்சத்து 59 ஆயிரத்து 818 பயணிகள் வந்துள்ளனர். கொடைக்கானலில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் விடுதிகளிலேயே முடங்கும் நிலை உள்ளது.
நேற்று மட்டும் 6096 வாகனங்களில் 31,689 பயணிகள் கொடைக்கானல் செல்ல அனுமதி பெற்றிருந்த நிலையில் 98 வாகனங்களில் 705 பேர் மட்டுமே வருகை தந்தனர். வழக்கமாக சுதந்திரதினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகரித்து காணப்படும் நிலையில் தற்போது குறைந்த அளவே உள்ளனர்.
- கழுத்தில் காயம் ஏற்பட்ட பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது.
கரூர்:
22 ஏக்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையான முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நிபந்தனை அடிப்படையில் கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தினமும் இரண்டு முறை கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் பிரவீன் கரூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பிரவீனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
இந்த தாக்குதலில் கழுத்தில் காயம் ஏற்பட்ட பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிமுக பிரமுகரும், முன்னாள் அரசு வக்கீலுமான கரிகாலன் கூறுகையில், பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது. கரூர்-கோவை சாலையில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பிரவீனை தாக்கி விட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசாரிடம் வழங்கியுள்ளோம். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
- த.வெ.க கட்சியின் முதல் மாநாடு செப்டம்பர் மாதம் நடத்த திட்டம்.
- பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்.
தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முன்கூட்டியே விஜய் கட்சியின் கொடியை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கட்சியின் கொடி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கட்சியின் அடிப்படை கொள்கைக்கு ஏற்ப மக்களை ஒன்றுபடுத்தும் வகையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது கடைசி படத்தில் நடித்து முடித்த பிறகு, முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளங்கலை, முதுகலை பயிற்சி டாக்டர்கள் இன்று 2-வது நாளாக டாக்டர்கள் , பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணிக்கு வந்தனர்.
பேராசிரியர்கள், துறை தலைவர்கள் மற்றும் டாக்டர்கள் புற நோயாளிகள் பிரிவு கட்டிடம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி சுமார் 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயிற்சி டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் பந்தல் அமைத்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புறநோயாளிகள் பிரிவு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதோடு, கையில் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அவசர சிகிச்சை பிரிவுகள் மற்றும் வழக்கம்போல் செயல்பட்டது.
புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் , அனைத்து அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில இணை செயலாளர் டாக்டர். கீர்த்தி தலைமையில் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பணியில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் மருத்துவம் பார்த்தனர். மற்ற உள் பிரிவு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவில்லை. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
- வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
- நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கெதல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் நேற்று முதலே நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.
அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி) காலை 6 மணி முதல் நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் புடுபட்டு வருகின்றனர்.
இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது எனவும் இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, சென்னை ராஜீவ் காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வளாகத்தில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனையில், ஏராளமான மருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒருநாள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மிக அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், உள்நோயாளிகளுக்கு வழக்கம் போல் சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஈரோட்டில் 400 மருத்துவமனைகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்டமருத்துவர்கள் வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு கருப்பு பேட்ச் அணிந்து, பதாகைகளை ஏந்தி வந்து மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
- பயணிகளும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக பதறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.
- டிரைவர் பிரதாப் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தூனேரி அவ்வூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 44). அரசு பஸ் டிரைவராக கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி சிந்து மேனகா (34). இவர்களுக்கு அபிஷேக் (12), ரித்திக் (9) என 2 மகன்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு பிரதாப் கோத்தகிரியில் இருந்து கூட்டாடா கிராமத்திற்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார். அங்கு பயணிகளை இறக்கி விட்டு, பஸ்சை நிறுத்தினார். பின்னர் நேற்று காலை 6.30 மணியளவில் கூட்டாடாவில் இருந்து பஸ்சை கோத்தகிரி நோக்கி இயக்கி வந்தார்.
கோவில்மட்டம் பகுதிக்கு பஸ் சென்று கொண்டிருந்தபோது, தொடர் மழையால் சாலையில் மின் கம்பி அறுந்து கிடப்பதை கண்டு பிரதாப் பஸ்சை நிறுத்தினார். அங்கு பயணிகளை உடனடியாக கீழே இறங்குமாறு கூறினார். இதைத்தொடர்ந்து பயணிகளும், கண்டக்டரும் பின்வாசல் வழியாக பதறியடித்து கொண்டு கீழே இறங்கினர்.
இதையடுத்து டிரைவர் பிரதாப்பும் பஸ்சில் இருந்து இறங்க முயன்றார். தனது இருக்கை அருகே உள்ள கதவை திறந்து கொண்டு பஸ்சில் இருந்து வெளியே வந்தார். அந்த சமயத்தில் அறுந்து கிடந்த மின் கம்பி பஸ்சின் மீது உரசியது. அப்போது அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பிரதாப் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த டிரைவர் அரசு பஸ் டிரைவர் பிரதாப்பின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உள்ளார்.
- பிறந்தநாள் கொண்டாட்டம் டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
- பேனரை கிழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்த நாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனர் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் 62-வது பிறந்த நாளையொட்டி இன்று தமிழகம் முழுவதும் அவரது கட்சி தொண்டர்களால் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு நல திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், பிறந்தநாள் கொண்டாட்டம் டிஜிட்டல் பேனர் வைக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி கூட்ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் சார்பில் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்கள் நெடுஞ்சாலையோரம் தொண்டர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த பேனர்களை நள்ளிரவில் மர்ம நபர்கள் கிழித்து விட்டுச் சென்றுள்ளனர். இன்று அதிகாலை 5 மணிக்கு பேனர் கிழிக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 20-க்கு மேற்பட்டவர்கள் சேலம்-அரூர் சாலையில் திரண்டு வந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேனர் கிழித்தவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இந்த போராட்டம் சுமார் ½ மணி நேரம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேனரை கிழித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து கட்சி தொண்டர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் பேனர் கிழிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
- அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
- சிலர் குழந்தைகளுடன் வந்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, க.விலக்கு, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி உள்ளிட்ட இடங்களில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அந்த பிரிவில் பெயர் பதிவுகூட நடைபெறவில்லை. ஆனால் அவசர சிகிச்சை மற்றும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதேபோல் திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி, பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. மற்ற சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லும் நிலையில் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து எந்த விவரமும் தெரியாததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் குழந்தைகளுடன் வந்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.
- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.52,520-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
சென்னை:
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் ரூ.52,520-க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.53,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.91-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.
- மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
சென்னை:
ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் 24,468 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில் 1916.41 கோடி ரூபாய் செலவில் நீர்வளத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று திறந்துவைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளை நல்லமுறையில் பராமரித்தல், பாசன கட்டமைப்புகளான அணைகள், அணைக்கட்டுகள், நிலத்தடி தடுப்புச்சுவர்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் போன்றவற்றை உருவாக்குதல், புனரமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பல்வேறு முக்கிய பணிகளை நீர்வளத்துறை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீவிர முயற்சிகளின் பயனாக தற்போது அத்திக்கடவு-அவிநாசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கோவை மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கைகளை ஏற்று 1972-ம் ஆண்டில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்திட முனைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் 1976-க்கு பின் இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. மீண்டும் 1996-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, இத்திட்டம் குறித்து மறுபடியும் ஆய்வு செய்து, திட்டத்தினை நிறைவேற்றிட ஒப்புதல் வழங்கினார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இத்திட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது.
பின்னர் 2019-ல் இத்திட்டத்தை தொடங்கி நிறைவேற்றும் பணிகள் தொடர்ந்தன என்றாலும் 2021-ல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைந்தபின் தான், இத்திட்டத்தை நிறைவேற்றிட உறுதிபூண்டு ரூ.1,916.417 கோடி மதிப்பீட்டில் திருத்திய நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் முடிவ டைந்துள்ளன. சோதனை ஓட்டப்பணிகள் வெற்றி கரமாக நிறைவடைந்துள்ள நிலையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்ப்புறத்தில் இருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டி.எம்.சி. உபரிநீரை வினாடிக்கு 250 கனஅடி வீதம் 70 நாட்களுக்கு நீரேற்று முறையில் 1065 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிலத்தடியில் குழாய்ப்பதிப்பின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 24,468 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் நீர்வளத்துறையின் 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்தின் 42 ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 எண்ணிக்கையிலான ஏரிகள், குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்படும்.
நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் மணிவாசன், நீர்வளத்துறையின் முதன்மை தலைமை பொறியாளர் மன்மதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பிரகாஷ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஈ.ஆர். ஈஸ்வரன், வெங்கடாசலம், சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், கலெக்டர்கள் ராஜகோபால் சுன்கரா (ஈரோடு), கிறிஸ்துராஜ் (திருப்பூர்), கிராந்திகுமார்பாடி (கோவை) மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்து கொள்கின்றனர்.
- வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன்னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர்.
உடுமலை:
மலைவாழ் மக்கள்தான் மரங்களில் வீடு போல் அமைத்து வசிப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த 22ம் நூற்றாண்டிலும், இயற்கையோடு இயற்கையாக மரங்களில் மரங்களால் விவசாயிகள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கொழுமத்திற்கு அருகில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
அப்போது இந்த பகுதியில் மரத்தில் அமைக்கப்பட்ட வீடானது கொழுமம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஆண்டிபட்டிக்கும் கொழுமத்திற்கும் இடையிலும், கொழுமத்திற்கும் இரட்டையம்பாடிக்கும் இடையிலுமாக உள்ள ராயர் குளம் பகுதியில் உள்ளது.
இங்கிருக்கும் விவசாயிகள் பூர்வகுடிகளாக இருந்து வருவதால் காட்டு விலங்குகளைக் கண்டு அச்சம் கொள்வதில்லை. மேலும், எந்தெந்த நேரங்களில் எந்தெந்த விலங்குகள் வரும் என்பதனையும் தெளிவாக அறிந்துணர்ந்து வைத்துள்ளனர்.
மலையில் இருந்து தண்ணீர் குடிக்க வரும் யானைகள் தென்னை மரங்களை மட்டுமே சாய்ப்பதையும் மற்ற மரங்களை எதுவும் செய்யாமல் செல்வதையும் குறிப்பிட்டுச் சொல்கின்றனர். மேலும், இங்கு வேப்பமரத்தில் தாங்கள் கட்டியிருக்கும் மரக்குச்சிகளால் ஆன வீடு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், மழைக்காலங்களிலும், வெயில்காலங்களிலும் தாங்கள் வசிப்பதற்கு மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
மரத்தின் மேல் உள்ள கிளைகளை ஒதுக்கி மரக்கிளைகளைக் கொண்டே இடைவெளியை ஏற்படுத்தி, மரக்குச்சிகளை ஒன்றோடு ஒன்று சேர்த்து இறுக்கிக் கட்டி விடுகின்றனர். இந்த மரங்கள் அனைத்தும் ஒரே அளவில் இருக்கும் வகையில் அமைத்து கொள்கின்றனர். குச்சிகளின் உயரமும், தடிமனும் ஒரே போன்று இருக்கிறது.
வீடுகளின் மேல் பனை ஓலைகளை மேய்ந்து அதன் மேல் பிளாஸ்டிக் காகிதங்களை போட்டுக்கொள்கின்றனர். எந்த மழை வந்தாலும் இவர்களுக்கு எதுவும் ஆவதில்லை. மரம் ஒடிந்து விழாத வரை அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்கின்றனர். மேலும் இதனை நிரந்தரமாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக மேலே ஏறி இறங்கி வருகின்றனர். இவர்கள் நிலத்தில் கல்,மண் கொண்டு கட்டுவதைக் காட்டிலும் இது மிகவும் எளிமையாகவும், சிக்கனமாகவும் இந்த மர வீடுகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
ஒரு குடும்பத்தில் உள்ள நபர்கள் குறைந்தது 3 முதல் 6 பேர் வரை இதனுள் ஒரே சமயத்தில் படுத்து தூங்கலாம். அந்த அளவிற்கு உறுதியாகவும், வசதியாகவும் இந்த மரக்குச்சி வீட்டினை அமைத்துள்ளனர்.
மேலும் இரண்டு மரக்குச்சி வீடுகள் கட்டி ஒன்று சமையலுக்காகவும் இன்னொரு அறை படுக்கை அறையாகவும் பயன்படுத்துகின்றனர். இந்த இரண்டு மரக்குச்சி வீடும் ஒரே மரத்தில் இருப்பதுதான் வியப்பு. இந்த மரக்குச்சி வீடுகளை மரக்குச்சிகளின் நீள அகலங்களை பொறுத்து 10-க்கு எட்டடியாகவும், 8-க்கு ஆறடியாகவும் அமைந்திருக்கின்றனர். இந்த வீட்டினை அமைத்த பெருமாள் என்பவரிடம் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் அருட்செல்வன். சிவகுமார் நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தி உள்ளனர்.






