search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நாளை சென்னை வருகை
    X

    மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நாளை சென்னை வருகை

    • மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.
    • மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம் நாளை வெளியிடப்படுகிறது.

    சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிடுகிறார்.

    இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நாளை பிற்பகல் சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாலை 3 மணிக்கு நேப்பியர் பாலம் அருகில் உள்ள கடலோர பாதுகாப்பு படை தளத்தில் இறங்குகிறார்.

    அங்கு கடலோர காவல் படைக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பான நவீன கட்டுப்பாட்டு அறையையும் திறந்து வைக்கிறார்.

    கடலில் செல்லும் மீனவர்கள் படகுகளில் ஒரு டிரான்ஸ் மீட்டர் பொருத்தப்பட்டிருக்கும். அந்த டிரான்ஸ் மீட்டரில் இருக்கும் சிவப்பு பொத்தானை ஆபத்து காலத்தில் அழுத்தினால் கட்டுப்பாட்டு அறைக்கு சமிக்ஞை கிடைக்கும். உடனே உதவிக்கு கடலோர காவல் படையினர் செல்வார்கள்.


    இந்த அதிநவீன வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை நாளை முதல் செயல் பாட்டுக்கு வருகிறது. மேலும் புதுச்சேரி கடலோர காவல் படை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்புகளையும் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

    அதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கடலில் தத்தளிப்பவர்களை மீட்பது எப்படி என்று ஒத்திகை நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதையும் ராஜ் நாத்சிங் பார்வையிடுகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் செல்கிறார்.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜ்நாத் சிங்கை வரவேற்கிறார். பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு கண்காட்சியையும் பார்க்கிறார்.

    பின்னர் 6.30 மணிக்கு கலைவாணர் அரங்கம் செல்லும் ராஜ்நாத்சிங் நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாணயத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

    Next Story
    ×