என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மருத்துவசேவை கட்டாயம் தேவை.
- சி.சி.டி.வி. உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.
சென்னை:
நடிகர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மருத்துவசேவை கட்டாயம் தேவை. வருமானம் என்பதைத் தாண்டி இரவு பகல் பாராது மக்களுக்காக சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் உரிய வசதிகள் சரிவர செய்து தரப்படவேண்டும்.
சி.சி.டி.வி. உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட வேண்டும். இது போன்ற உள்கட்டமைப்புகள் அவசியம் என்பதை உணர்ந்து ஆளும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' என்பது தான் இந்த புத்தகம்.
- இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈஷா லைஃப் சார்பாக சத்குருவின் புதிய தமிழ் புத்தகமான 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' கோவையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
புத்தகத்தின் அறிமுகப் பிரதியை ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி. ஶ்ரீனிவாசன் வெளியிட அதனை சப்னா புக் ஹவுஸின் தலைமை நிர்வாகி வி. கார்த்திகேயன் பெற்றுக் கொண்டார்.
கோவை பீளமேட்டில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அசெம்பிளி ஹாலில் நேற்று நடைபெற்ற விழாவில் பண்ணாரிஅம்மன் குழுமத்தின் தலைவர் எஸ்.வி. பாலசுப்ரமணியம் தலைமை உரை ஆற்றினார்.
அவரை தொடர்ந்து ஶ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டி. ஶ்ரீனிவாசன் பேசுகையில் "சத்குரு எத்தனை நாடுகள் சென்றாலும் அவர் கோவையில் இருப்பது கோவை மக்களுக்கான பெரும் ஆசி" என கூறினார்.
புத்தகம் குறித்து மரபின் மைந்தன் பேசுகையில் " இருண்டிருக்கும் அறையில் நுழைகிற போது கைவிளக்கு வேண்டும். அதுப் போலத்தான் நமக்கு தெரியாத இடத்தில் பயன்தரும் விதமாய் சத்குரு இந்த புத்தகத்தில் மிக துல்லியமான விளக்கங்களை கொடுத்துள்ளார்.
மேலும் நமக்கு நேரும் சூழலை விடவும், அதை நாம் எதிர்கொள்ளும் விதம் தான் துன்பத்திற்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி எப்போது நமக்கும், நமக்கு மிகப் பிடித்த விஷயத்திற்கும் இடையே ஒரு சமநிலையை, விலகுதலை ஏற்படுத்துகிறோமோ அதுவே கர்ம வினையை கட்டுப்படுத்தும் என சத்குரு சொல்கிறார்" என புத்தகத்தின் பல முக்கிய கருத்துக்களை விளக்கி பேசினார்.
அவரை தொடர்ந்து புத்தகம் குறித்து வழக்கறிஞர் சுமதி பேசுகையில், "மிகவும் தீவிரமான புத்தகம் இது. இதை ஒரு நாள் முழு அமர்வாக பேச வேண்டிய அளவு தீவிரம் வாய்ந்த புத்தகம். நம் வாழ்கையின் மூல வரைப்படத்தை நாமே உருவாக்கியிருக்கிறோம், என்பது தான் இந்த புத்தகத்தின் ஒன்லைனர்.
இதை இன்னும் எளிமையாக சொன்னால் 'என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு' என்பது தான் இந்த புத்தகம்.
மேலும் நாம் ஒரு செயலை செய்கிறோம் அது வெற்றியா, தோல்வியா, பிறருக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பது போன்ற எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி நம் முழு திறனை வெளிப்படுத்துவது ஒன்றே நோக்கமாய் செயல்பட வேண்டும். இது போன்ற நற்கருத்துக்களை இந்த புத்தகம் வலியுறுத்துகிறது" என சுவைப்படப் பேசினார்.
சத்குரு இந்த புத்தகத்தின் மூலம் கர்மா என்றால் என்ன?, நம் வாழ்வை மேம்படுத்த கர்மா சார்ந்த கருத்துக்களை, நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை குறித்து விவரித்து உள்ளார்.
மேலும் இந்த சவாலான உலகில் பயணிப்பதற்கு தேவையான படிப்படியான வழிக்காட்டுதலை சூத்திரங்களாகவும் வழங்கி இருக்கிறார்.
"கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' புத்தகம் முதலில் 2021-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் புத்தகம் வெளியானது முதல் தற்போது வரை பல லட்சக்கணக்கான பிரதிகளுக்கு மேல் விற்று சாதனை படைத்து வருகிறது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் புத்தக வாசிப்பாளர்களால் ஆங்கில புத்தகத்திற்கு சர்வதேச அளவில் 4.7 ரேட்டிங்கும் (மதிப்பீடு), 15,000-க்கும் அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டு உள்ளது.
இப்புத்தகம் 'NewYork Best Seller" லிஸ்ட்டில் இடம்பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 25-க்கும் அதிகமான உலக மொழிகளில் இந்த புத்தகத்தின் மொழிபெயர்ப்பு உரிமம் கையெழுத்தாகி உள்ளது.
உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இப்புத்தகம் தற்போது தமிழில் அறிமுகம் செய்யப்படுவது வாசகர்கள், தமிழ் ஈஷா தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பலத்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.
- அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
- கடந்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே 2 முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.
சென்னை:
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின்போது புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றத்தை தொடர்ந்து அமைச்சரவை மாற்றமும் இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.
அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
வரும் 23-ந்தேதி தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம் என்றும் ஏற்கனவே அமைச்சராக இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் ஏற்கனவே 2 முறை அமைச்சரவை மாற்றம் நடைபெற்றுள்ளது.
முதலமைச்சரின் அமெரிக்க பயணத்திற்கு முன்னதாக அமைச்சரவை மாற்றம் இருக்க வாய்ப்பு உள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அவரை துணை முதலமைச்சர் ஆக்கவும் வாய்ப்பு உள்ளது.
- 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி மனு அளிக்க வந்தார்.
- அக்கடவல்லி ஊராட்சியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர் ஊராட்சி மன்ற 1-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
இன்று காலை இவர் ஏற்கனவே அளித்த 350 மனுக்களின் நகல்களை மூட்டையாக கட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அளிக்க வந்தார்.
அந்த மனுவில், அக்கடவல்லி ஊராட்சியில் கடந்த 1.5.2011 முதல் 28.4.2021 வரை ரூ.9 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலகம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை என பல்வேறு துறை அதிகாரியிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் கடந்த 2021-ம் ஆண்டு கடலூர் வந்த முதல்-அமைச்சரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், எங்கள் பகுதிக்கு விசாரணை நடத்த வந்த அதிகாரிகளும் ஊராட்சியில் முறைகேடுகள் அதிக அளவில் நடைபெற்றுள்ளது. அதனால் இதனை எங்களால் விசாரிக்க முடியாது என்று கூறிவிட்டு சென்று விட்டனர்.
அதன் பிறகு தற்போது வரை விசாரணை நடைபெறவில்லை. அதனால் முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- பழங்கால பழக்க வழக்கங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது
- தென்மாவட்டங்களில் இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த தம்பதி சபரிபாண்டி-சர்மிளா. இவர்களது மகன் சித்தேஷ். இவரது காதணி விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
காதணி விழாவிற்கு தாய்மாமன்கள் பண மாலை, டிரம்ஸ், சரவெடிகள், சாரட் வண்டி மற்றும் பண்டையகால வழக்கப்படி விவசாயிகளுக்கு உற்றத் துணைவனாக உள்ள டிராக்டர் வண்டியில் அரிசி மூட்டைகள், பழ வகைகள், வாழைத்தார்கள், சாக்லேட் வகைகள், புதிய ஆடைகள், விளையாட்டு சாமான்கள் 10-க்கும் மேற்பட்ட தாய்மாமனின் சீதனமான ஆட்டு கிடா என 1008 சீர் வரிசைகளைக் கொண்டு வானவேடிக்கைகளுடன் திருமண மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
அதேசமயம் தாய்மாமன் சீருக்கு அத்தை மகன்கள் சளைத்தவர்கள் அல்ல என அவர்களும் தப்பாட்டம், ஆட்டுக்கிடா, சீர்வரிசைகள், வானவேடிக்கைகள் என மற்றொருபுறம் சீர் கொண்டு வந்தனர்.
இதனால் தாடிக்கொம்பு கிராமமே சீர்வரிசை வண்டிகளின் அணிவகுப்பாக காட்சியளித்தது. இதனை அப்பகுதி மக்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் கண்டு மெய்சிலிர்த்தனர்.
மேலும் விழாவின் நாயகன் சித்தேஷ் தாய் மாமன்களின் பணமாலை மற்றும் சாக்லேட் மாலை, ரோஸ் மாலை, ரோஸ் இதழ் மாலை, தாழம்பூ மாலை, தாமரைப்பூ மாலை உள்ளிட்ட பல்வேறு மாலைகளால் குளிர்விக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போதைய நாகரீக காலங்களில் வீட்டு விசேஷங்கள் என்பது குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து சடங்கு சம்பிரதாயமாக மாறிவிட்டது. ஆனால் பாரம்பரியத்தை மறக்காமல் ஒருசிலர் மட்டுமே அதனை கடைபிடித்து வருகின்றனர்.
குறிப்பாக தென்மாவட்டங்களில் இதற்கு இன்றும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உறவுகள் கூடுவதோடு, நமது பழங்கால பழக்க வழக்கங்கள் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்படுகிறது என்றனர்.
- 300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.
சென்னை:
சென்னையில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
சொந்த ஊரில் பணி, கேங்மேன்களை கள உதவியாளராக மாற்ற வேண்டும், நிலுவையில் உள்ள 5,493 கேங்மேன்களுக்கு உடனடியாக பணி ஆணை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
300-க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் கேங்மேன்கள் நடத்தும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அவர்களுக்கு ஆதரவாக உரையாற்றினார். அவர் கூறியதாவது:
* போராட்டம் தான் ஒருவனின் இருத்தலை உறுதி செய்யும்.
* ஒருவனின் பிரச்சனையை அவனே போராடி தீர்க்க வேண்டும் என்பது ஆபத்தானது.
* எல்லோருமே போராடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
* போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண் குடிமக்கள் என அனைத்து தரப்பிலும் போராட்டம்.
* கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை அமைச்சர்கள் வரிசையாக போய் பார்த்தார்கள். ஆனால் மீனவர் ஒருவர் உயிரிழப்பது குறித்து எந்த அமைச்சரும் பேசக்கூட இல்லை.
* குறையை தவிர எதையும் செய்ய முடியாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
* முதலில் கரண்டை கொடுங்கள், அதன் பின்னர் இலவச மின்சாரத்தை அளிக்கலாம் என்று கூறினார்.
- குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
- குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் சிறுத்தை, வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை வேட்டையாடி செல்வது அதிகரித்துள்ளது.
சிறுத்தை அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
ஊட்டி அருகே கல்லக்கொரை என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்குள் சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது.
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, வீட்டின் வளாகத்தில் சிறிது நேரம் சுற்றி வந்தது.
பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு தாவிய சிறுத்தை, அங்கு கட்டப்பட்டிருந்த வளர்ப்பு நாயை தனது வாயில் கவ்வி கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி வெளியே சென்று விட்டது.
இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவியதால் மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையே இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்திலும் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியாகினர். தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை நுழைவது வாடிக்கையாகி விட்டது. இதனால் நாங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வருவதற்கு அச்சமாக உள்ளது.
எனவே வனத்துறையினர் இந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு.
- மாணவிகளிடம் கலந்துரையாடி, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
ஊட்டி:
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து நேற்று ஊட்டி மாவட்ட அரசு மகப்பேறு மருத்து வமனையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்கள் வந்து செல்லும் வழி, அறைகள், உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, எவ்வளவு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மருத்துவம னையில் எவ்வளவு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன? அவற்றில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது? மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் மருத்துவ கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடி, அவர்களிடமும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.
இதேபோல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவர்களின் அறைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், குன்னூர் டி.எஸ்.பி.பாஸ்கர், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்பதி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆஸ்பத்திரியில் எவ்வளவு மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர்.
ஊட்டி மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-
மகப்பேறு மருத்துவமனையை பொறுத்த வரை வளாகத்துக்குள் பாதுகாப்புக்காக ஊழியர்கள் உள்ளனர்.
27 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளது. சில காமிராக்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தினமும் மருத்துவ மனைகளில் காவல்துறை மூலம் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை காவல்துறை தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மருத்து வர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மூலமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மருத்துவ படிப்பில் சேருவதற்கு 43,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- 2-வது மற்றும் 3-வது இடங்களை சென்னை மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர்.
சென்னை:
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் மாணவ-மாணவிகள் சேருவதற்கான பொது கலந்தாய்வு வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
சென்னை கிண்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தரவரிசை பட்டியலை வெளியிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
மருத்துவ படிப்பில் சேருவதற்கு 43,063 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டை காட்டிலும் 272 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களின் உள் ஒதுக்கீட்டிற்கு 3733 பேரும் விளையாட்டு பிரிவுக்கு 343 பேரும், முன்னாள் படை வீரர் பிரிவுக்கு 455 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு 133 பேரும் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தர வரிசை பட்டியல் தயார் செய்யப்பட்டதில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு முதல் 10 இடங்களை பெற்ற தகுதியான மாணவ-மாணவிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 720 மதிப்பெண் பெற்று மாணவர் ரஜனிஷ் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் நாமக்கல் கிரீன்பார்க் இண்டர் நேஷனல் பள்ளி மாணவர் ஆவார். இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் வழுதூர் ரெட்டி கிராமம் ஆகும்.
2-வது மற்றும் 3-வது இடங்களை சென்னை மாணவ-மாணவிகள் பெற்றுள்ளனர். அயனப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் சையத் ஆரிப்பின் 715 மதிப்பெண் பெற்று 2-வது இடத்தையும் மாணவி ஜைலஜா 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பொன்னேரி பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி மாணவர் ஸ்ரீராம் 715 மதிப்பெண் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
தரவரிசை பட்டியலில் 5, 6, 7-வது இடங்களுக்கு நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
8-வது இடத்திற்கு சென்னை மாணவி ரோஷினியும், 9-வது இடத்திற்கு கிரீன்பார்க் மாணவர் விக்னேசும் , 10-வது இடத்துக்கு கோவையை சேர்ந்த விஜய் கிர்த்திக் சசிகுமார் ஆகியோரும் இடம் பெற்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 669 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கொங்க வேம்பு கிராமத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் சைதாப்பேட்டை அரசு பயிற்சி மையத்தில் படித்தவர்.
அதே மையத்தில் படித்த காயத்திரி தேவி 668 மார்க் எடுத்து 2-வது இடம் வகித்தார். இவர் சேலம் தார மங்கலத்தை சேர்ந்தவர். 3-வது இடத்தை திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பேட்டை மாணவி அனுசியா பிடித்தார். இவர் பெற்ற மதிப்பெண் 665.
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மொத்த இடங்கள் 6630 ஆகும். கடந்த ஆண்டை விட கூடுதலாக 150 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் 1683 இடங்கள் உள்ளன.
7.5 சதவீத ஒதுக்கீட்டிற்கான அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 496 இடங்கள் உள்ளன. பி.டி.எஸ். இடங்கள் 126 உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- கமல்ஹாசன் சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் கால் பதித்து வருகிறார்.
- கமல்ஹாசன் தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சினிமா, அரசியல் ஆகிய இரண்டிலும் கால் பதித்து வருகிறார்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுக்கும் மாற்றாக இருப்போம் என்று தேர்தல் களத்தில் பேசி வந்த கமல்ஹாசன் தற்போது தி.மு.க.வுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறார்.
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு இடம் கிடைக்காத நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கமல்ஹாசன் விரைவில் மேல்சபை எம்.பி.யாக டெல்லி செல்ல உள்ளார்.
தனித்து போட்டியிடுவது என்கிற முடிவில் இருந்து பின்வாங்கி இருக்கும் கமல்ஹாசன் இனி வரும் காலங்களிலும் தி.மு.க. கூட்டணியிலேயே இணைந்து செயல்பட திட்ட மிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களையும் தி.மு.க. கூட்டணியில் இருந்தே எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பான வேலைகளை அந்த கட்சியின் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருவதால் தி.மு.க. கூட்டணியில் கணிசமான இடங்களை பெற்று போட்டியிடுவது என மக்கள் நீதி மய்யம் கட்சி முடிவு செய்திருக்கிறது.
மாநகராட்சி நகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் தங்களுக்கு செல்வாக்குள்ள பகுதிகளில் குறிப்பிடத்தக்க இடங்களை கேட்டு பெற்று அதில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார்.
சினிமா படப்பிடிப்புகளில் தற்போது பங்கேற்று வரும் கமல்ஹாசன் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் சென்னை வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இதன்படி டிசம்பர் மாதத்திற்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அவர் விரிவான ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அதே போன்று2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் குறிப்பிடத்தக்க இடங்களை தி.மு.க. கூட்டணியில் கேட்டு பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் கணக்காக உள்ளது.
இதன் மூலம் நிச்சயம் சட்ட மன்றத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி காலடி எடுத்து வைக்கும் என்று அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- அஞ்சுகிராமம் பகுதியில் பணம் பறிப்பு சம்பவத்தில் செல்வம் ஈடுபட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது.
- போலீசாரை கண்டதும் செல்வம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான்.
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக ஏ1 என்பது உள்பட 4 வகைகளில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
அதன்படி குமரி மாவட்டம் தென் தாமரை குளம் அருகே உள்ள கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி செல்வம் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர். அவன் மீது 6 கொலை உள்ளிட்ட 27 வழக்குகள் உள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலிலும் அவன் உள்ளான். இதனால் அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று அஞ்சுகிராமம் பகுதியில் பணம் பறிப்பு சம்பவத்தில் செல்வம் ஈடுபட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர் ஆனால் அதற்குள் செல்வம் தப்பிச் சென்று விட்டார்.
தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்த நிலையில் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியில் செல்வம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.
போலீசாரை கண்டதும் செல்வம் அங்கிருந்து தப்பி ஓட முயன்றான். அதற்கு பலன் கிடைக்காததால் அவன் கத்தியால் போலீசாரை தாக்க முயன்றான். இந்த சம்பவத்தில் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜூக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் ஆதம்அலி பாதுகாப்பு நடவடிக்கையாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ரவுடி செல்வத்துக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவனை பிடித்த போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கத்திக்குத்தில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜூம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 16 தையல்கள் போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி செல்வம், குமரி மாவட்டத்தை சேர்ந்தவன் என்றாலும் தற்போது நெல்லை மாவட்டம் கூட்டப்புளியில் வசித்து வந்துள்ளான்.
இவன் தூத்துக்குடியில் தான் பெரும்பாலும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். இதனால் அவனை தூத்துக்குடி செல்வம் என்றே அழைத்து வந்துள்ளனர்.
- உதயநிதியும், எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக அனுபவம் பெற்றுள்ளார்.
- தி.மு.க.வை பொறுத்தவரையில் தனி நபர் முடிவெடுப்பதில்லை.
சென்னை:
அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை தி.மு.க.வில் வலுப்பெற்று வருகிறது.
இதனால் உதயநிதிக்கு எப்போது வேண்டுமானாலும் துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கப் படலாம் என்கிற எதிர் பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதில் அளித்த அவர் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. இன்னும் பழுக்க வில்லை என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆவதற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்குவதன் மூலம் தி.மு.க. ஒரு குடும்ப கட்சி என்கிற பாரதீய ஜனதாவின் குற்றச்சாட்டு சரிதான் என்றாகி விடாதா? என்கிற கேள்விக்கு கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள பதில் வருமாறு:-
முதலமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலினை தனது மகன் என்பதற்காக கருணாநிதி தேர்வு செய்து விடவில்லை. அவர் 50 ஆண்டு காலம் கட்சி பணியாற்றியவர் ஆவார். தி.மு.க.வில் இளைஞர் அணியை தொடங்கி பொருளாளராகவும், செயல் தலைவராகவும் மு.க.ஸ்டாலின் பணியாற்றியுள்ளார். இப்படி பல்வேறு பதவிகளை வகித்த அவருக்கு நிர்வாகத்திலும் நல்ல அனுபவம் இருந்தது. அதனால்தான் அவர் தேர்வு செய்யப் பட்டார்.
அதே போன்று உதயநிதியும், எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக அனுபவம் பெற்றுள்ளார். அப்படிப்பட்டவரை துணை முதல்-அமைச்சராக கட்சி தேர்வு செய்வதில் என்ன தவறு உள்ளது.
தி.மு.க.வை பொறுத்தவரையில் தனி நபர் முடிவெடுப்பதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகி களின் ஆலோசனைக்கு பிறகே முடிவுகள் எடுக்கப் பட்டு அறிவிக்கப்படு கின்றன.
அந்த வகையில்தான் உதயநிதியை துணை முதல்-அமைச்சராக்க மூத்த தலைவர்கள் விரும்பி இருக்கலாம். இதனை குடும்ப அரசியல் என்று எப்படி சொல்ல முடியும். எந்த கட்சியாக இருந்தாலும் குடும்பத்தின் சாயல் இருப்பது இயல்புதான்.
தலைவர் பதவியில் மட்டுமல்ல மாவட்ட செயலாளர், மாநில செயலாளர் பதவி களிலும் 2 தலைமுறைகளை சேர்ந்தவர்கள் இருந்து கொண்டுதானே உள்ளனர்.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.






