என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது.
    • வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

    அந்த வகையில், 2024ம் ஆண்டில், உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்பட பல்வேறு குரூப்-2 பதவிகளில் 507 காலிப்பணியிடங்களும், உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு குரூப்-2ஏ பதவிகளில் ஆயிரத்து 820 காலிப்பணியிங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 327 காலிப்பணியிடங்கள் உள்ளன.

    இதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி வௌியிட்டது. குரூப்- 2 மற்றும் 2ஏ முதல் நிலை தேர்வுகள் வருகிற செப்டம்பர் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    குரூப் 2 தேர்வு அறிவிப்பில், இறுதிவிடை குறித்து, விடைத்தாள் நகல் பெறுவது குறித்த விதிகளை சட்டவிரோதம் அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கு முடியும் வரை குரூப் 2 தேர்வை நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி-ன் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    • மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    மகாவிஷ்ணுவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    இந்நிலையில், மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணுவை, 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

    இதனையடுத்து, மகாவிஷ்ணுவை, சைதாப்பேட்டை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

    • தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜாபர் சாதிக் மனு தாக்கல்.
    • அமலாக்கத் துறை தன்னை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என குற்றச்சாட்டு.

    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்கள் என்ற பெயரில் 'சூடோபெட்ரைன்' என்ற போதைப்பொருளை கடத்திய வழக்கில் தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணத்தை ஈட்டியதும், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைதொடர்ந்து, இந்த வழக்கில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பதால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்யக்கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக அமலாக்கத் துறையும், திகார் சிறை நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

    இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்ய கோரிய ஜாபர் சாதிக்கின் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

    ஆன்மிகப் பணியாற்றி வந்த பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவு காரரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு வயது 82.

    இந்நிலையில், மாமல்லபுரம் கல்பாக்கம் சாலையில் உள்ள "ஆர்ட் ஸ்டுடியோ" என்ற சிற்பக்கூடத்தில், மறைந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் மூத்த குருவான பங்காரு அடிகளாரின் கற்சிலை 450 கிலோ எடை கொண்ட கருங்கல்லில், நான்கு அடி உயரம், இரண்டரை அடி அகலத்தில் அவர் அமர்ந்து இருப்பது போன்று தத்ரூபமாக செதுக்கப்பட்டு வந்தது.

    இதை சிற்பி முருகன் என்பவர் 4பேருடன் இணைந்து 3 மாதங்களாக செதுக்கி வந்தார். சிலைக்கு இறுதி வடிவமும் கொடுத்து மேல்மருவத்தூர் அனுப்ப தயாராக வைத்திருந்தனர். 

    இந்த நிலையில் சிலையை நேரில் பார்க்க பங்காரு அடிகளாரின் மனைவியும் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவியுமான லட்சுமி அம்மாள் நேரில் வந்தார்.

    பட்டறை பணியாளர்கள் சிலையை தண்ணீர் விட்டு கழுவி கான்பித்தபோது, சிலையை பார்த்து லட்சுமி அம்மாள் கண்கலங்கினார்.

    பின்னர் சிலைக்கு பூஜைகள் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சிலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் வைத்து வழிபாடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

    • இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து.
    • விபத்தில் காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார்.

    அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.

    இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விபத்தில், நடிகர் ஜீவா உள்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மேலும், காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில், 50 மணி நேர இடைவிடாத நேரலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்த இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

    RJ விக்னேஷ்காந்த் மற்றும் 'சுட்டி' அரவிந்த் ஆகியோர் இணைந்து பிளாக் ஷீப் தமிழ் என்ற யூட்யூப் சேனலை நடத்தி வருகின்றனர்.

    இந்த யூட்யூப் சேனலில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில், 50 மணி நேர இடைவிடாத நேரலை நிகழ்ச்சியை RJ விக்னேஷ்காந்த் நடத்தினார். இந்த நிகழ்ச்சி சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது.

    ரஜினியின் 50 ஆண்டுக் கால திரை வாழ்க்கையை போற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், திரைப்படத் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் ரஜினியின் ரசிகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    செப்டம்பர் 8 ஆம் தேதி மாலை 6 மணிக்கு முடிவடைந்த இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இயக்குநரும் நடிகருமான சசிகுமார் கின்னஸ் சாதனை சான்றிதழை விக்னேஷ்காந்திடம் வழங்கினார்.

    இந்நிலையில், 50 மணி நேர இடைவிடாத போட்காஸ்ட் நேரடி ஒளிபரப்பு நடத்தியதற்காக ஆர்.ஜே.விக்னேஷ்காந்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

    விக்னேஷ்காந்த் மற்றும் அவரது குழுவினர் அதிகம் சிரமப்பட வேண்டாம் என்று வாய்ஸ் நோட் ஒன்றை ரஜினிகாந்த் அனுப்பியுள்ளார். அதில், அவர்களின் கடின உழைப்புக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.



    • கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது.
    • உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    சென்னை:

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக இருந்தது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.

    உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

    கச்சா எண்ணெய் விலை அதிகரித்தபோது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அதனால் ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில் பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.

    உலக அளவில் தேவை குறைந்திருப்பதன் மூலம் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஓரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • வணிகர் சங்கங்களின் தலைவர் வெள்ளையன் நேற்று மரணம் அடைந்தார்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் அடக்கம் நாளை(12-ந்தேதி) அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் தாலுகா, பிச்சுவிளை கிராமத்தில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கடை அடைப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், மறைந்த வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தூத்துக்குடி தெற்கு-வடக்கு மாவட்டத்தில் நாளை ஒருநாள் கடையடைப்பு நடத்தி அஞ்சலி செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்.

    • இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி பள்ளிகளில் உடற்கல்வியை மேம்படுத்தும் வகையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு குத்துச்சண்டை, கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, கேரம், அத்லடிக் போன்ற பயிற்சி அளிக்க மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

    இந்த கல்வியாண்டில் 6 மாதம் பயிற்சி அளிக்கவும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கவும் ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 6 மாநகராட்சி பள்ளிகளில் முதல் கட்டமாக இன்று கராத்தே, ஜூடோ, குத்து சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தொடங்கப்பட்டன.

    பெரம்பூர் குக்ஸ் ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த பயிற்சியை இன்று மேயர் ஆர்.பிரியா தொடங்கி வைத்தார். 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தேர்ந்து எடுத்து வாரத்தில் 2 நாட்கள் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு மண்டல, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டிகளில் இவர்களை பங்கெடுக்க செய்து, வெற்றி பெற வைப்பதுதான் இலக்காகும் என்று மேயர் பிரியா தெரிவித்தார்.

    பெரம்பூர், ராயபுரம், தண்டையார் பேட்டை, சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவொற்றியூர் தொகுதியில் தலா ஒரு பள்ளி வீதம் கராத்தே பயிற்சி கொடுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    • மகாவிஷ்ணு ஜாமீன் கேட்டும் சைதாப்பேட்டை கோர்ட் டில் மனுதாக்கல் செய்தார்.
    • மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

    சென்னை அசோக்நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளிகளில் மாணவ-மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை கோர்ட்டில் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மனு மீதான விசாரணை நேற்று நடைபெறவில்லை.

    இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று போலீஸ் காவல் கேட்கும் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதற்காக புழல் சிறையில் இருந்து மகாவிஷ்ணு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சைதாப்பேட்டை கோர்ட்டில் மதியம் 12.15 மணி அளவில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    இதையடுத்து காவலில் எடுக்கும் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் மகாவிஷ்ணுவை போலீஸ் காவலில் எடுத்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

    இதற்கிடையே மகாவிஷ்ணு ஜாமீன் கேட்டும் சைதாப்பேட்டை கோர்ட் டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையும் இன்று நடைபெற இருந்தது.

    இந்நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை மகாவிஷ்ணு திரும்ப பெற்றுள்ளார்.

    காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி ஜாமின் மனுவை மகாவிஷ்ணு வாபஸ் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

    • மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர்.
    • சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டையைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜசுதா. குடும்ப தலைவியாக உள்ளார். இவர்களுக்கு ஹரீஸ் (வயது 13), கிஷோர் (11), ஆகிய 2 மகன்கள் உள்ளனர். எம்.எம்.கோவிலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் முதல் மகன் 8ம் வகுப்பும், கிஷோர் 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிஷோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். முதலில் காய்ச்சல் மட்டும் இருந்த நிலையில் பின்னர் வலிப்பு நோய் ஏற்பட்டு மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

    இதனையடுத்து கிஷோர் மூளைச்சாவு ஏற்பட்டு பரிதாபமக உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனின் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி கிஷோரின் உடல் இன்று திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது.

    அங்கு சிறுவனின் இதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட 6 உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. சிறுவயதில் தனது மகன் இறந்த சூழ்நிலையிலும் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன் வந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

    • தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.
    • கடந்த நிதியாண்டை அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள், புறநகா் ரெயில் நிலையங்களுக்கான தரவரிசை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிடப்படும்.

    முன்னதாக 2017-18 நிதியாண்டில் வெளியிடப்பட்ட நிலையில் கடந்த நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு ரெயில்வே வாரியம் ரெயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.


    இது குறித்து ரெயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டின் ரெயில் நிலையங்கள் அனைத்தும் கடந்த நிதியாண்டை (2023-24) அடிப்படையாக கொண்டு வகைப்படுத்தப் பட்டுள்ளன. இதில் 5,945 புறநகா் அல்லாத ரெயில் நிலையங்கள், 578 புறநகா் ரெயில் நிலையங்கள், 2,286 ஹால்ட் ரெயில் நிலையங்கள் என 8,809 ரெயில் நிலையங்கள் மூலம் பயணிகள் போக்குவரத்து மேற்கொள்ளப்படுகின்றன.

    இதில் புறநகா் அல்லாத ரெயில் நிலையங்கள் 6 தரங்களிலும், புறநகா் ரெயில் நிலையங்கள் மற்றும் ஹால்ட் ரெயில் நிலையங்கள் 3 தரத்திலும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் புறநகா் அல்லாத ரெயில் நிலை யங்களில் முதல் தரத்தில் 28, 2-ம் தரத்தில் 113, 3-ம் தரத்தில் 307, 4-ம் தரத்தில் 335, 5-ம் தரத்தில் 1,063, 6-ம் தரத்தில் 4,099 ரெயில் நிலையங்கள் உள்ளன.

    இதில் புதுடெல்லி ரெயில் நிலையம் கடந்த நிதியாண்டில் 3.93 கோடி பயணிகளை கையாண்டு ரூ.3,337 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தில் உள்ளது. தொடா்ந்து ரூ.1,692 கோடி வருவாய் ஈட்டி அவுரா ரெயில் நிலையம் இரண்டாம் இடத்திலும், ரூ.1,299 கோடி வருவாய் ஈட்டி சென்னை சென்ட்ரல் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

    தொடா்ந்து முதல் பட்டியலில் தெற்கு ரெயில்வேயின் சென்னை எழும்பூா், தாம்பரம் ரெயில் நிலையங்கள் உள்ளன.

    அதுபோல் புறநகா் ரெயில் நிலையங்களுக்கான பட்டியலில் மும்பை ரெயில் நிலையங்கள் முதல் இடத்திலும், சென்னை புறநகா் ரெயில் நிலையங்கள் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

    புறநகா் அல்லாத ரெயில் நிலையங்களுக்கான பட்டியலில் முதல் 4 தரவரிசைக்குள் வரும் ரெயில் நிலையங்களுக்கு நீண்டகால தேவையை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப் படுத்தப்படும்.

    அதன்படி, எளிதாக ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் வசதி, குறைந்தபட்சம் இரு வாகனநிறுத்தும் வசதி, வாகன நிறுத்தத்தில் இருந்து ரெயில் நிலையத்தை எளிதாக அடையும் வசதி, குடிநீா் மற்றும் கழிப்பறை வசதி, தகவல் மையம், நடைமேடையை எளிதாக கடக்கும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும்.

    மேலும், முதல் தரத்தில் இருக்கும் ரெயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கான சக்கர நாற்காலி அல்லது பேட்டரி வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×