என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது.
    • பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது.

    திருப்புவனம்:

    மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

    இதில் ஒரு குழியை மேலும் தோண்டியபோது வட்ட வடிவில் பானையின் முகப்பு வெளிப்பட்டது. எனவே தொடர்ந்து அந்த குழியை மேலும் ஆழமாக தோண்டியபோது 5 அடி ஆழத்தில் சிவப்பு நிற சுடுமண் அழகிய பானை முழு வடிவில் வெளிவந்துள்ளது.

    பானையில் நிறைந்திருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை அறிய தொல்லியல் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என தெரியவருகிறது. அகழாய்வில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி.
    • மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு தொடர்பாக விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருமாவளவன் மது ஒழிக்க கிளம்பிவிட்டார் என சிலருக்கு அதிர்ச்சி. 2014-ல் மக்கள் நல கூட்டணியில் பயணித்த போது மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்தினோம்.

    கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்தனர். தி.மு.க.வை மிரட்ட மாநாட்டு நடத்துவதாக சிலர் கூறுகிறார்கள். அப்போதுதான் தி.மு.க.விடம் அதிக சீட்டு பேரம் பேச முடியும் என பேசுகிறார்கள். சிலர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி என பேசுகிறார்கள்.

    மாநாடு நடத்த உடனடி காரணம் கள்ளக்குறிச்சி சாராய மரணம். மாநாடு நடத்த வேண்டும் என எனக்கு சொல்லிக்கொடுத்தது மக்கள். தேர்தல் நேரத்தில் மட்டுமே அது குறித்து சிந்திப்பேன். எனக்கு இப்போது தேர்தல் கணக்கு இல்லை.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கூட்டணி, சீட்டு குறித்து சிந்திப்பேன். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் அரசியல் கட்சி. மற்ற நேரங்களில் இது அம்பேத்கர் கட்சி, பெரியார் கட்சி.

    மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடுள்ள காந்தி பிறந்தநாளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்கிறது.

    பெண்களை மாநாட்டுக்கு அதிகம் அழைத்து வர வேண்டும். லட்சக்கணக்கான பெண்கள் கலந்துக்கொள்ள வேண்டும். மது ஒழிப்பு பெண்களின் குரலாக இருக்க வேண்டும். இது கட்சியின் மாநாடு அல்ல அனைவருக்குமான பொது கோரிக்கை யாரும் பங்கேற்கலாம் என கூறினேன்.

    மதுவை ஒழிப்போம் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க., இடசாரிகள், வி.சி.க.வுக்கு முழுமையான உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய பிரச்சினை.

    காவிரி விவகாரத்தில் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என பேசுகிறோம். அது போல் மது ஒழிப்பை எல்லோரும் ஒரே குரலில் பேச வேண்டும். மது குடிக்கும் இடத்தில் எப்படி சாதி இல்லையோ, அப்படியே மது ஒழிக்கவும் சாதி வேண்டாம்.

    பா.ம.க., பா.ஜ.கவுடன் அணி சேர முடியாது. பா.ஜ.க.கட்சியில் பல நண்பர்கள் உள்ளனர். பா.ம.க. மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி இல்லை.

    வெளிப்படையாக தி.மு.க.வுக்கும் வேண்டுகோள் வைக்கிறேன். மதுவிலக்கு தொடர்பாக தேசிய கொள்கையை வரையறை செய்ய வேண்டிய சூழல் உள்ளது. மதுவிலக்கு தொடர்பாக அரசியலமைப்பு சில வழிகாட்டல்களை வழங்கியுள்ளது.

    47-வது உறுப்பில் மதுவிலக்கு கொள்கையை படிப்படியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. அதன் அடிப்படையில் கோரிக்கை வைக்கிறோம்.

    ஒரு தேசிய கொள்கையை வரையறுக்கு மத்திய அரசைதி.மு.க. வலியுறுத்த வேண்டும். இந்த கொள்கையை விடுதலை சிறுத்வதைகள் வலியுறுத்துகிறது. எல்லா ஆட்சி காலத்திலும் மதுவிலக்கு கொள்கை பேசப்பட்டது.

    தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் விதவைகளாக உள்ளனர் .அதற்கு காரணம் மது. இதுவரை அரசியல் விழிப்புணர்வு மாநாட்டை நடத்தினோம். ஆனால் இந்த மாநாடு ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கும் மாநாடு.

    தி.மு.க.கூட்டணியில் இருப்பதால் முதல்வரிடம் மனு கொடுக்கலாமே என கேட்கிறார்கள். ஆனால் இது மக்களே ஒன்று சேர்ந்து கேட்கவேண்டிய கோரிக்கை .

    அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், சகோதரிகள் நீல நிறபுடவையும் சிகப்பு நிற ஜாக்கெட்டு சீருடையுடன் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது.

    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள் உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அகழாய்வு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான மண்பாண்ட பாத்திரம் முதல் முறையாக கிடைத்துள்ளது. முன்னோர்கள் சமையல் பாத்திரமாக இதனை பயன்படுத்தி உள்ளனர்.

    சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது. அகழாய்வு பணியை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக குழிகள் தோண்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    • சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
    • போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது.

    உலக அளவில் பொருளாதாரத்தில் தமிழ்நாடு வேகமாக வளர்ந்துவரும் மாநிலமாக விளங்குவதோடு, அதிக தொழிற்சாலைகளுடன் இந்திய அளவில் முன்னணி மாநிலமாகவும் திகழ்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசுமுறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இப்பயணத்தின்போது முதலமைச்சர் முன்னிலையில், அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அதிகாரிகளை முதலமைச்சர் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். போர்டு நிறுவனம் உலகெங்கிலும் செயல்படும் 2-வது பெரிய அமெரிக்க ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும். போர்டு அதன் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் வணிக தீர்வு மையத்தை சென்னையில் கொண்டுள்ளது.

    சிகாகோவில், போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும், அவர்களது உலகளாவிய திறன் மையத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    ஐடிசர்வ் கூட்டமைப்பு அமெரிக்காவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பானது 2,400 உறுப்பினர் நிறுவனங்களுடன் 23 மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது. இது வணிக-நட்பு கொள்கைகளுக்காக சட்டரீதியாக துணை புரிகிறது. நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்க்கிறது. ஐடிசர்வ் கூட்டமைப்பு, உயர்திறமை பணியாளர்களின் குடியேற்றத்திற்கு சட்ட உதவிகளை புரிகிறது.

    சிகாகோவில், ஐடிசர்வ் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஜெகதீஸ் மொசாலி, இயக்குனர்கள் சிவ மூப்பனார், சம்ப மொவ்வா, சிகாகோ பிரிவு தலைவர் சதீஷ் யலமஞ்சிலி மற்றும் உயர் அலுவலர்களை முதலமைச்சர் சந்தித்து, திறன்மிகுந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்காக தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் சிகாகோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

    திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கேட்டர்பில்லர் நிறுவனத்தின் உற்பத்தி நிலையங்களை விரிவுப்படுத்த ஒப்பந்தமாகி உள்ளது.

    கட்டுமானம், சுரங்க கருவி, இயற்கை எரிவாயு இயந்திரம், டீசல் எலெக்ட்ரிக் என்ஜின்களை கேட்டர்பில்லர் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.

    • வருகின்ற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள்.
    • உங்களை விட உயர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதி தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சரமான துரைமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாம் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாமல் இருந்தோம். ஆனாலும் இன்றைக்கு வெற்றி பெற்றுள்ளோம். தமிழகத்தில் எவன் அண்ணா பெயரை சொல்லுகிறானோ அவன் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். ஆசாபாசங்களுக்கு இடம் இன்றி இந்த கட்சியில் உள்ளேன். என்னை பேணிப் பாதுகாத்து அவர் வீட்டு பிள்ளையாக வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.

    கட்சி பிரிந்த நேரத்தில் எல்லோரும் எதிர்பார்த்தார்கள் நான்தான் போவேன் என்று கருணாநிதியும் கொஞ்சம் பயந்தார். ஆனால் நான் போகவில்லை. அந்நாளில் எம்ஜிஆர் முதல்வரான பிறகு ஒரு நாள் என்னை அழைத்து அமைச்சர் பதவி கொடுக்கிறேன் போய் உட்காரு என்றார் நான் முடியாது, எனது கட்சி தி.மு.க. எனது தலைவர் கருணாநிதி என சொல்லிவிட்டேன்.

    இதை பார்த்து பாராட்டினார். எதிரிகள் கூட பாராட்டுகிற அளவிற்கு இந்த கட்சியிலே நான் இருந்ததால்தான் இன்றைக்கு அண்ணா உட்கார்த்த இடத்தில் நான் உட்கார்ந்திருக்கிறேன்.

    அரசியலில் சில சந்தர்ப்ப சூழல்களில் வெறுப்பு வரும், தோல்வி வரும், அவமானம் வரும், நான் படாத அவமானமா? நான் படாத தோல்வியா? நான் சந்திக்காத எதிர்ப்புகளா? இவை வருகிற போதெல்லாம் இதற்காக நான் தி.மு.க.வில் இல்லை. தி.மு.க. என்றால் இவை எல்லாம் பறந்து போய்விடும்.

    எனவேதான் சொல்லுகிறேன் இயக்கத்தில் பிடிப்பு வேண்டும். "இளைஞர்கள் வருகிறார்கள் இன்றைக்கு நான் வரவேற்கிறேன். ஏனென்றால் நாங்கள் எல்லாம் இளைஞர்களாக வந்தோம். அண்ணா சொன்னார் நாற்றங்காலில் இருக்கிற பயிரை பிடுங்கி சேற்றில் நட்டால்தான் பலன் கொடுக்கும். நாற்றங்காலாகவே விட்டுவிட்டால் பாழாகிவிடும். ஆகவே தகுந்த நேரத்தில் உங்களை கட்சியில் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னார்.

    ஆகவே சொல்கிறேன் "இளைஞர்கள் வரவேண்டும் இளைஞர்கள் இல்லாமல் ஒரு காலம் கட்சியே போய்விடும். ஆகவே இளைஞர்களுக்கு வழி விடுங்கள்"

    "ஆனால் வருகிற இளைஞர்கள் கொஞ்சம் தடம் பார்த்து வாருங்கள்" கட்சியை நினைத்து வாருங்கள் வந்த உடனேயே என்ன கிடைக்கும்னு எதிர்பார்க்காதீர்கள். உன்னை விட உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், அடிபட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், உதைப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், கட்சியினால் பொண்டாட்டி பிள்ளைகளிடம் கெட்ட பேர் வாங்கியவர்கள் இருக்கிறார்கள், அவர்களும் இந்த கட்சியிலே தியாகம் செய்திருக்கிறார்கள்.

    ஆகவே தான் இளைஞர்களுக்கு நாம் வழிவிட்டாக வேண்டும். இந்த நிலைமையை நாம் நினைத்தால் தான் ஒரு இயக்கத்தை நிலைத்து நிற்க வைக்க முடியும். நீங்கள் நினைத்துப் பார்த்ததுண்டா மிசாவில் எல்லோரும் நமது கட்சி போய்விடும் என நினைத்தார்கள். ஆனால் வெளியே வந்த பிறகு பார்த்தீர்களா. நம்முடைய தலைவர் அதைவிட அதிகமாக இன்று உழைக்கிறார்.

    எம்.ஜி.ஆ.ருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதை நீ எதிர்க்கக் கூடாது என கருணாநிதி சொன்னார். இதனை நான் எம்.ஜி.ஆரிடம் சொன்னபோது அவர் கண்ணீர் விட்டு அழுது விட்டார். இருபெரும் தலைவர்களோடு மிக நெருக்கமாகவும், அண்ணாவோடும் பழகியிருக்கிறேன்.

    நான் கேட்டுக் கொள்வதெல்லாம் அரசியல் என்பது பொழுதுபோக்கு மடம் அல்ல, அரசியல் என்பது வியாபாரம் அல்ல, அரசியல் என்பது கொள்கை பிடிப்பு, கொள்கை நியாயம். இந்தக் கட்சியில் நாம் இருக்கிறோம் என்பதே ஒரு பெருமைதான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் பேட்டி அளித்தார். அப்போது, தேசிய கல்விக் கொள்கையில் இணைவதன் மூலம் தாய் மொழி காக்கப்படும் என மத்திய மந்திரி கூறியிருந்தது குறித்து கேட்டதற்கு,

    மாற்று மொழி வந்தால் தமிழ் மொழி அழியும் என்று எங்களுக்கு சொன்னவர் அண்ணா. அண்ணா முதல்-அமைச்சரானவுடன் 3 கொள்கைகளை அறிவித்தார்.

    ஒன்று தமிழ்நாடு என பெயரிட்டார். 2-வது இரு மொழிக் கொள்கைதான் தமிழ், ஆங்கிலம். 3-வது கொள்கை சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார். 3 கொள்கைகளை சட்டமன்றத்தில் அறிவித்தார்.

    இந்த கொள்கைகளையும் மாற்றுகிற சக்தி எந்த கொம்பனுக்கும் கிடையாது என அப்போதே சொன்னார். வேற்று மொழி வந்தால் தாய்மொழி அழியும் என்பது எங்களின் சித்தாந்தம். அந்த சித்தாந்தத்திற்கு எதிர் சித்தாந்தம் உள்ளவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரெயில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது.
    • தென் மாவட்ட ரெயில்கள், மற்றும் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ளன. ஜனவரி மாதம் 14-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) பொங்கல் பண்டிகையும் 15-ந்தேதி (புதன் கிழமை) மாட்டு பொங்கல், 16-ந்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை 13-ந்தேதி (திங்கட்கிழமை) வருகிறது.

    அரசு விடுமுறை தொடர்ச்சியாக வருவதால் பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே பயணத்தை திட்டமிடுகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பாக உள்ள சனி, ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால் ஜனவரி 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் பொங்கல் பயணம் தொடங்குகிறது.

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போகி பண்டிகை அன்று ஒரு நாள் விடுமுறை போட்டால் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் முன்பதிவு செய்ய ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

    ரெயில் உறுதியான டிக்கெட் கிடைப்பது என்பது பெரிய சவாலாக இருப்பதால் 120 நாட்களுக்கு முன்பாக பயணத்தை திட்டமிட்டு இன்று முன்பதிவு செய்ய தொடங்கினர்.

    ஜனவரி 10-ந்தேதி பயணம் செய்வதற்கு இன்று காலை 8 மணிக்கு பொங்கல் பயணத்திற்கான ரெயில் முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. டிக்கெட் எடுப்பதற்கு சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அண்ணாநகர், பெரம்பூர், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் பயணிகள் காத்து நின்றனர்.

    ஒரு சிலர் அதிகாலை 5 மணிக்கே வந்து வரிசையில் நின்றனர். முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ரெயில்களின் அனைத்து இடங்களும் நிரம்பின.

    நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, முத்துநகர், பாண்டியன், தென்காசி, பொதிகை, திருச்செந்தூர், ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் அனைத்தும் நிரம்பின.

    டிக்கெட் கவுண்டர்களில் வரிசையில் நின்ற ஒரு சிலருக்கே உறுதியான டிக்கெட் கிடைத்தது. மற்றவர்கள் காத்திரிப்போர் பட்டியலுடன் டிக்கெட்டை பெற்று சென்றனர்.

    ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளம் வழியாக பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருந்தவாறு முன்பதிவு செய்தனர். இதனால் கவுண்டர்களில் காத்து நின்றவர்களும் ஏமாற்றத்துடன் சென்றனர். தென் மாவட்ட ரெயில்கள், மற்றும் சேலம், கோவை, திருப்பூர் மார்க்க ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.

    ஏ.சி., 2-ம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு பெட்டிகளில் மட்டும் இடங்கள் காலியாக இருந்தன. ரெயிலில் கட்டணம் குறைவாக இருப்பதால் மட்டுமின்றி பாதுகாப்பாக செல்ல முடியும் என்பதால் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.

    மேலும் ஜனவரி 11-ந்தேதி செல்ல விரும்புபவர்கள் நாளை (வெள்ளிக்கிழமையும், ஜனவரி 12-ந்தேதி பயணத்திற்கு வருகிற 14-ந்தேதியும் முன்பதிவு செய்ய தயாராக உள்ளனர்.

    பொங்கல் பயணத்திற்கான வந்தே பாரத் ரெயிலிலும் இடங்கள் நிரம்பி விட்டன. சென்னை-நாகர்கோவில், திருநெல்வேலி, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அனைத்து வந்தே பாரதம் ரெயில்களிலும் இடங்கள் இல்லை.

    • காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
    • தலைமறைவாக உள்ள மனோவின் 2 மகன்கள் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

    பிரபல திரைப்பட பின்னணி பாடகர் மனோ. இவர், சென்னை வளசரவாக்கம், ஸ்ரீதேவி குப்பம் மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு சாகீர் மற்றும் ரபீக் என 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் இரவு மனோவின் மகன்கள் இருவரும் தங்களது வீட்டின் முன்பு நண்பர்களுடன் குடிபோதையில் நின்று பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் கால்பந்து பயிற்சிக்கு வந்த வாலிபர்கள் சிலர், மனோவின் வீட்டின் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, மனோவின் வீட்டை வேடிக்கை பார்த்தபடி நடந்து சென்றதாக தெரிகிறது.

    இதனை பார்த்த மனோவின் மகன்கள், எதற்காக எங்களது வீட்டை நோட்டமிட்டவாறு செல்கிறீர்கள்? என்று கேட்டு, தனது நண்பர்களுடன் சேர்ந்து ரித்தீஷ்(வயது 16) மற்றும் கிருபாகரன்(20) ஆகியோரை பிடித்து தாக்கியதாக தெரிகிறது. இதனை கண்டதும் அவர்களுடன் வந்த நண்பர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    பின்னர் ரித்தீஷ், கிருபாகரன் இருவரையும் அவர்கள் முட்டிப்போட வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். அங்கிருந்து தப்பிய அவர்களது நண்பர்கள் அளித்த புகாரின்பேரில், ரோந்து பணியில் இருந்த வளசரவாக்கம் போலீசார், அங்கு வந்தனர்.

    ஆனால் போலீசார் முன்னிலையிலேயே மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து கொண்டு ரித்தீஷ், கிருபாகரன் இருவரையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. காயம் அடைந்த இருவரது செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விட்டதாக தெரிகிறது.

    காயம் அடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் கிருபாகரனுக்கு பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டது.

    இது தொடர்பாக நேற்று வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போதுதான் தங்களை தாக்கியது பாடகர் மனோவின் மகன்கள் என்பது அவர்களுக்கு தெரியவந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட இருவரும் கொடுத்த புகாரின்பேரில் வளசரவாக்கம் போலீசார் மனோவின் மகன்களான ரபீக், சாகீர் மற்றும் அவரது நண்பர்கள் என 5 பேர் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதில் விக்னேஷ் (28), தர்மா (26) ஆகிய 2 பேரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள மனோவின் 2 மகன்கள் உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் தலைமறைவாக உள்ள பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை ஈசிஆர் விரைந்துள்ளது. செல்போன் சிக்னலை வைத்து மனோவின் மகன்களை பிடிக்க போலீசார் ஈசிஆர் விரைந்துள்ளனர்.

    • 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 4 மணியளவில் விடுதியில் உள்ள குளிர்சாதன பெட்டி திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து காரணமாக கரும்புகை உருவானதால் விடுதியில் இருந்த பெண்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    தீவிபத்து குறித்து அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்து, தீயில் சிக்கியிருந்த 5 பெண்களை மீட்டனர். இதில் பரிமளா, சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றபோது விபத்து.
    • விழுப்புரம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே விழுப்புரம்- நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் லாரியும் காரும் நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு காரில் வரும்போது கடலூர் மாவட்டம் சிதம்பரம் பி.முட்லூர் கிராமம் அருகே கண்ணிமைக்கும் நேரத்திற்குள் லாரியும் காரும் மோதிக்கொண்டன. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கின. காரில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு அரசு மருத்துவனைக்கு உடல்பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தப்பியோடிய லாரி டிரைவர் தேடிவருகின்றனர்.

    உயிரிழந்தவர்கள் அபனான் (4), அராபத் நிஷா (27), யாசர் அராபத் (38), முகமது அன்வர் (55), ஷாகிதா பேகம் (60) எனத் தெரியவந்துள்ளது.

    • குரூப் 4 எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
    • குரூப் 4 தேர்வு 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன.

    தமிழக அரசின் குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநில உதவியாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனிப்பட்ட உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கான, போட்டித்தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30-ந்தேதி வெளியிட்டது.

    இந்த தேர்வுக்கு 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

    இவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

    இந்நிலையில், நடந்து முடிந்த குருப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

    இந்த புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224ல் இருந்து 6,704ஆக உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிர்வாகிகளுக்கு மாநாடு குறித்த முக்கிய அறிவிப்பு நாளை காலை வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய அறிவிப்பு அடங்கிய அறிக்கையை தவெக தலைவர் விஜய் நாளை காலை 11 மணி அளவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த அறிக்கையில் மாநாடு குறித்த முக்கிய தகதவல் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இம்மாதம் 23 ஆம் தேதி தவெக கட்சியின் மாநில மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாநாடு நடக்க உள்ள நிலையில், விஜய் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    • கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையம் செயல்பட்டு வருகிறது. இதில் மேலாளராக உள்ள அனிதா ஆனந்த் என்பவரை அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி என்பவரின் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

    இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் மேலாளர் அனிதா ஆனந்த் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில், தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தில் பணியாற்றும் செயலாட்சியர் தேவகிக்கு ஒப்பந்த முறையில் கார் ஓட்டும் கார் ஓட்டுநர் கோகுல்ராஜ் தன்னைப்பற்றி அவதூறு பரப்புவதோடு அலுவலகத்தில் இருந்தபோது தன்னை ஒருமையில் பேசி, "என்னை ஒன்றும் செய்ய முடியாது நான் நினைத்தால் உன்னை கோயம்புத்தூருக்கு பணி மாற்றம் செய்துவிடுவேன்" என மிரட்டினார்.

    மேலும், " பெண் என்றும் பாராமல் தன்னை அசிங்கமாக பேசியது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே கோகுல்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து வேப்பேரி காவல் துறையினர் விசாரணை நடத்தி கோகுல்ராஜ் மீது ஆபாசமாக பேசியது, பெண்ண அவமதிப்பு செய்வது, மிரட்டல், பெண் வன்கொடுமை என 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதனிடையே சாதாரண ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு ஊழியரை மிரட்டும் அளவிற்கு அவருக்கு தைரியம் கொடுத்தது யார் என சக அரசு ஊழியர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர். 

    இந்த நிலையில் செயலாட்சியர் தேவகியும், கைது செய்யப்பட்ட கோகுல்ராஜும் ஜூஸ் குடிக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

    இதைதொடர்ந்து, ஒப்பந்த கார் ஓட்டுநர் அரசு பணியில் மேலாளராக உள்ளவரை மிரட்டுவதற்கு அதே அலுவலகத்தில் செயலாட்சியராக உள்ள தேவகி காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    ×