என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.
    • துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.

    மதுரை:

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 53-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூரில் அமைந்துள்ள ஜெயலலிதா கோவிலில் பொதுக்கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம், உசிலம்பட்டி தொகுதிகளை போல் உழைத்திருந்தால் 10 ஆண்டுகள் உறங்கிக் கொண்டு இருந்த தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்காது. இப்போது தி.மு.க.வினர் எழுந்து நிற்பதற்கு யார் காரணம்? அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்களால் தான் இந்த நிலை ஏற்பட்டது.

    இந்த துரோகத்தை தெய்வங்களாக இருக்கும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். துரோகம் செய்தவர்களைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்களை தண்டிக்கவும் தேவையில்லை. அதை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் விட்டு விட வேண்டும். அவர்கள் செய்த பாவத்திற்கு அடுத்த ஜென்மம் அல்ல இந்த ஜென்மத்திலேயே அனுபவிப்பார்கள்.

    43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் நாம் தோற்று ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் தலைமையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அரசு அமைய முடியாமல் போனதற்கு காரணமானவர்கள் இன்று கட்சி வேட்டி கூட அணிய முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    கட்சியிலிருந்து வெளியே செல்லாதீர்கள் என்று சொன்னபோது எல்லாம் என்னை அங்கே கூப்பிடுகிறார்கள், இங்கே கூப்பிடுகிறார்கள், தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள் என்று சொன்னவர்கள் இன்று கட்சியிலே சேர்த்துக் கொள்ளுங்கள், சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். இதற்கு யார் பொறுப்பு, அவர்களே தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. இளைஞர் அணி நடத்தும் ‘என் உயிரினும் மேலான’ பேச்சுப்போட்டி மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
    • மாநில அளவிலான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, தி.மு.க. இளைஞர் அணி நடத்தும் 'என் உயிரினும் மேலான' பேச்சுப்போட்டி மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

    மாநில அளவிலான இறுதிப் போட்டி நாளை (19-ந்தேதி) அன்றும், பரிசளிப்பு விழா முதலமைச்சர் தலைமையில் நாளை மறுநாள் (20-ந்தேதி) அன்றும் சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தோம்.

    தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்துள்ள சூழலில் போட்டியாளர்களின் நலன் கருதி, இரு நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்துள்ளோம். மாநில அளவிலான இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழா தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள பழைய குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று இரவு மர்ம பொருள் வெடித்து அப்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சத்தத்தின் அதிர்வால் அங்குள்ள காவலர் குடியிருப்பு பகுதி வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது.

    மர்ம பொருள் வெடித்த இடத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்படும் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டடு இருந்தது., இதனால் இதிலிருந்து பெட்ரோல் லீக்காகி தீப்பற்றி எரிந்து பேட்டரிகள் வெடித்ததா? சமூக விரோதிகள் தீவைத்து சென்றனரா? அல்லது ஏதேனும் வெடி பொருள் பதுக்கி வைக்கப்பட்டு வெடித்ததா? என செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்பிரனீத் உத்தரவின் பெயரில் பல்வேறு கோணங்களில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.


    இவர்களது தடயவியல் ஆய்வின் போது ஏதேனும் வெடிகுண்டு தொடர்புடைய பகுதிகளோ, அதற்கான ரசாயனங்களோ இருப்பதற்கான அறிகுறிகள் இருந்தால், சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து புலன் விசாரணை மேற்கொள்வார்கள் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    காவல் நிலையத்தின் அருகிலேயே இந்த மர்ம பொருள் வெடித்த சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
    • முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கும்பகோணம் கோட்டம் சார்பில் சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டியும், பொதுமக்களின் வசதிக்காக, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது.

    இதைப்போல் சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 280 கூடுதல் சிறப்பு பஸ்களும்,

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு இரண்டு நாட்களும் சேர்த்து 150 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். இரு நாட்களுக்கும் சேர்த்து மொத்தம் 430 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 20, 21 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களிலும் 150 சிறப்பு பஸ்களும், இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பேருந்து இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆரணி ஆற்றில் கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
    • பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பாளையம் செல்ல ஆரணி ஆற்றில் குறுக்கே உள்ள தரைப்பாலம் மற்றும் ஆரணி சமுதாய கூடத்தில் இருந்து மங்களம் கிராமம் செல்லும் தரைப்பாலம் ஆகிய இரண்டும் தண்ணீரில் மூழ்கியது.


    இப்பகுதியில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் இவ்வழியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    எனவே, ஆற்றின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து ஆரணி மற்றும் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மங்களம், புதுப்பாளையம், காரணி, ஆத்துமேடு, நெல்வாய், எருக்குவாய், எருக்குவாய் கண்டிகை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு மாற்று பாதையில் பெரியபாளையம் வழியாக வந்து செல்கின்றனர்.

    மேலும், பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்களும், தனியார்-அரசு துறையில் பணியாற்றும் பணியாளர்களும், விவசாயிகளும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

    எனவே, அஞ்சாத்தம்மன் கோவில்-புதுப்பாளையம் இடையே ஆரணி ஆற்றில் ரூ.22 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணியை போர்க்கால அடிப்படையில் கட்டி முடித்து போக்குவரத்து பாதிப்பை தீர்க்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது.
    • சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர்.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையின்போது ரேசன் அட்டைதாரர், அந்தியோதயா அன்னயோஜனா திட்ட பயனாளி கள், முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு அரசு சார்பில் இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

    நடப்பாண்டுக்கு 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 வேட்டிகள், 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 471 சேலை உற்பத்திக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் 6-ந் தேதி முதல் 40-ஸ் பாலியஸ்டர் காட்டன் நூல் வர தொடங்கியது. ஆனால் வேட்டி கரைக்கான நூல், பாபின் கட்டை போதிய அளவு வராததால் குறைந்த தறிகளில் மட்டும், வேட்டி உற்பத்தி பணி நடக்கிறது. இலவச வேட்டி உற்பத்தி பணி 15 முதல் 20 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது.

    சேலைக்கான நூல் வரத்தாகி 10-க்கும் மேற்பட்ட குடோன்களில் இருப்பு வைத்துள்ளனர். ஆனாலும் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு வழங்காததால் உற்பத்தி பணி தொடங்கவில்லை.

    இதுகுறித்து விசைத்தறியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    பொங்கலுக்கான வேட்டி, சேலை பணியை வருகின்ற டிசம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் முடித்து அந்தந்த மாவட்டங்களுக்கு வேட்டி, சேலையை அனுப்ப அரசு திட்டமிட்டுள்ளது.

    ஆனால் தீபாவளிக்கு இன்னும் 13 நாட்களை உள்ள நிலையில் நெசவாளர்களுக்கு புதிய ஆர்டரை வழங்கி கூலி பணத்தை விடுவித்தால் சங்கம் மூலம் போனஸ் வழங்க இயலும்.

    இது தவிர கடந்தாண்டுகளில் உற்பத்தியான இலவச வேட்டி, சேலைக்கு வழங்க வேண்டிய ரூ.123 கோடி நிலுவையை முதற்கட்டமாக வழங்கினால் கூட ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் தீபாவளி கொண்டாடும் அளவுக்கு குறைந்தபட்ச தொகை கிடைக்கும்.

    இலவச வேட்டி, சேலை உற்பத்தியை விரைவில் தொடங்க செய்வதுடன் பழைய நிலுவை தொகையையும் விடுவிக்க நெசவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இவர் அவர்கள் கூறினர்.

    • வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கிறது.

    இந்த நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,240-க்கும் சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,920-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 105-க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    17-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,280

    16-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,120

    15-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,760

    14-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    13-10-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    17-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    16-10-2024- ஒரு கிராம் ரூ. 103

    15-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    14-10-2024- ஒரு கிராம் ரூ.103

    13-10-2024- ஒரு பவுன் ரூ. 103

    • சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது.
    • வரும் 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்தது.

    இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. வரும் 22-ந்தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு, வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

    • 2 நாட்கள் மூலம் சென்னைக்கு சராசரியாக 99.49 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.
    • கடந்தாண்டு டிசம்பர் 3-ந் தேதி 13 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி இருக்கிற

    சென்னை:

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் சராசரியாக கடந்த 14-ந் தேதி 65.53 மில்லி மீட்டர் மழையும், 15-ந் தேதி 133.46 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. ஆக மொத்தம் இந்த 2 நாட்கள் மூலம் சென்னைக்கு சராசரியாக 99.49 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

    அதில் 15-ந் தேதி கத்திவாக்கத்தில் 231.9 மி.மீ, மணலியில் 205.8 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. மற்ற இடங்களில் எல்லாம் 200 மி.மீட்டருக்கு குறைவாக தான் மழை பெய்து இருக்கிறது. அதே போல் 14-ந் தேதி 100 மி.மீட்டருக்கு கீழ் தான் மழை பெய்து இருக்கிறது. சென்னையில் 14, 15-ந் தேதிகளில் பெய்த மழை மூலம் மொத்தம் 2.99 டி.எம்.சி. நீர் கிடைத்து இருக்கிறது.

    கடந்தாண்டு மிக்ஜாம் புயல் மூலம் சென்னையில் அதிகளவு மழை பெய்தது. அப்போது டிசம்பர் 3-ந் தேதி 135.9 மி.மீட்டர் மழையும், 4-ந் தேதி 117.73 மி.மீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது. ஆக மொத்தம் இந்த 2 நாட்களில் சராசரியாக 126.8 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்கிறது.

    அதில் கடந்தாண்டு டிசம்பர் 3-ந் தேதி 13 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாக பெருங்குடியில் 291.6, ஆலந்தூர் - 250, அடையார் - 235.2, மீனம்பாக்கம்-231.5, எம்.ஜி.ஆர். நகர் - 219.6 இடங்களில் மழை பதிவானது. அதே போல் டிசம்பர் 4-ந் தேதி 14 இடங்களில் 200 மில்லி மீட்டருக்கு மேல் மழை பதிவானது. அதிகபட்சமாக தண்டையார் பேட்டையில் 250.2, சென்னை கலெக்டர் அலுவலகம் - 247.3, டி.ஜி.பி. அலுவலகம் - 237 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பெய்தது. சென்னையில் 2023-ம் ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4-ந் தேதிகளில் மூலம் மொத்தம் 3.82 டி.எம்.சி. நீர் கிடைத்து இருக்கிறது.

    மழையளவுடன் ஒப்பிட்டு பார்த்தால் கடந்தாண்டு பெய்த மழை தான் பேய் மழை. இந்தாண்டு குறைந்தளவுதான் மழை பெய்து இருக்கிறது. இருப்பினும் கடந்தாண்டு ஒரே நேரத்தில் மழை கொட்டி தீர்த்தது. இந்தாண்டு மழை ஒரே அளவாக கொட்டாமல் நாள் முழுவதும் சீராக பெய்தது. சீரான மழையும், அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கையும் கைக்கொடுத்ததால் இந்தாண்டு மழை நீர் பெரியளவில் தேங்கவில்லை. ஒரு வேளை கடந்தாண்டு போல் மழை ஒரே நேரத்தில் கொட்டி இருந்தால் பாதிப்பு நிச்சயம் அதிகரித்து இருக்கும்.

    • சென்னை கோட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் 15 பேரிடம் விசாரணை நடந்து முடிந்தது.
    • ரெயில்வே மூத்த அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழு ஒன்று விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி கூட்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த 11-ந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது. மெயின் பாதையில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் லூப் பாதையில் சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருந்தது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர்.

    விபத்து நடந்த பகுதியில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். தண்டவாளம், சிக்னல், ரெயில் நிலையத்தின் எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் அமைப்பு பகுதி, கட்டுப்பாட்டு அறை உள்பட சிக்னல் மற்றும் இயக்க பிரிவுகளில் அவர் ஆய்வு செய்தார்.

    இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர், சிக்னல் நிலை மேலாளர்கள் உட்பட 13 பிரிவுகளை சோ்ந்த 30 போிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

    அதன்படி, முதல்கட்டமாக சென்னை சென்டிரலில் உள்ள தெற்கு ரெயில்வே தலைமை அலுவலகத்தின், சென்னை கோட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் 15 பேரிடம் விசாரணை நடந்து முடிந்தது.

    2-வது நாளாக எஞ்சிய 15 பேரிடம் நேற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான 3 பேர் குழு, தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ், சென்னை ரெயில் கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, கோட்ட பாதுகாப்பு அதிகாரி பாலமுரளி உட்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    2 நாட்கள் நடந்த இந்த விசாரணையில், பாகுமதி ரெயிலின் என்ஜின் டிரைவர், உதவி டிரைவர், ரெயில் மேலாளர், சரக்கு ரெயிலின் ஓட்டுநர், ரெயில் மேலாளர், கவரைப்பேட்டையில் பணியில் இருந்த நிலைய மேலாளர், இந்த மார்க்கத்தின் போக்குவரத்து ஆய்வாளர், மூத்த என்ஜினீயர், கேட்கீப்பர், விபத்துக்குள்ளான ரெயிலின் டிக்கெட் பரிசோதகர் உள்பட 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    விசாரணையில் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கையை அடுத்த 10 முதல் 15 நாட்களில் ரெயில்வே வாரியத்திடம் அளிக்க உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே ரெயில்வே மூத்த அதிகாரிகள் 7 பேர் அடங்கிய குழு ஒன்று விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி கூட்டு அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    அதில் மெயின் பாதையும், லூப் பாதையும் சந்திக்கும் இடத்தில் ரெயில் தடம் புரண்டிருக்கலாம் எனவும், அதன் மூலம் இந்த மோதல் நடந்திருக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

    அதேநேரம் விபத்தின் பின்னணியில் சதி இருப்பதாக எதையும் அந்த அறிக்கையில் அவர்கள் குறிப்பிடவில்லை. இதன் மூலம் இந்த சம்பவத்தில் சதி இருப்பதற்கான சாத்தியம் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இந்த கூட்டு அறிக்கை மூலம் விபத்துக்கான உறுதியான காரணத்தை கூற முடியாது எனக்கூறிய அவர்கள், எனினும் இந்த அறிக்கையின் அடிப்படையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் இறுதி விசாரணை அறிக்கையை தயாரிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

    • ஒரே பதிவு எண்ணில் 3 பஸ்கள் ஓடுவது சாத்தியமா? என்ற குழப்பம் நிலவியது.
    • ஒரே பஸ், மூன்று கட்டங்களில், மூன்று தோற்றத்தில், மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்துள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு சார்பில் 'த.நா. 74 என் 1813' என்ற ஒரே பதிவு எண்ணில் 3 தோற்றத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்ட அந்த 3 பஸ்களின் படங்களும் சமூக வலைத்தளங்களில் நேற்று வேகமாக பரவியது. இது 'வாட்ஸ் அப்' உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் விவாத பொருளாக உருவெடுத்தது.

    பலரும் இதுதொடர்பாக தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் தங்களது கமெண்டில் தமிழக அரசை வசை பாடி வருகிறார்கள். ஒரே பதிவு எண்ணில் 3 பஸ்கள் ஓடுவது சாத்தியமா? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இது திரிக்கப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    'த.நா. 74 என் 1813' என்ற இந்த பஸ் 8-2-2017 அன்று புதிய பஸ்சாக கூண்டு கட்டி 9-3-2017 முதல் புறநகர் பஸ்சாக நாகர்கோவில்-திருவனந்தபுரம் தடத்தில் இயக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து இந்த பஸ்சுக்கு பதில் புதிய பஸ் இயக்கப்பட்டதால், 4-1-2020 முதல் இது நகர பஸ்சாக (இருக்கை மாற்றம்) செய்யப்பட்டு இயக்கப்பட்டது.

    இந்த பஸ்சின் வயது 6-ஐ கடந்த நிலையில் அரசாணைப்படி கடந்த 7-10-2023 அன்று இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகர பஸ்சாக நாகர்கோவில்-மேல் மிடாலம் தடத்தில் (தடம் எண்: 9ஏ) இயக்கப்பட்டு வருகிறது என்று கன்னியாகுமரி போக்குவரத்து வணிக மேலாளர் தெரிவித்துள்ளார் என்று மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு கொடுத்துள்ள விளக்கத்தின் மூலம் ஒரே பதிவு எண் கொண்ட இந்த ஒரே பஸ், மூன்று கட்டங்களில், மூன்று தோற்றத்தில், மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்துள்ளது.

    ஒரே பதிவு எண்ணில், வெவ்வேறு தோற்றத்தில் தனது மூன்று முகத்தை காட்டி சமூக வலைத்தளங்களில் றெக்கை கட்டி பறந்த புதிருக்கு விடையை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு.

    • இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

    வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    இதைத் தொடர்ந்து, சென்னையின் சில பகுதிகளில் இன்று அதிகாலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓ.எம்.ஆர். சாலை, கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    காலை முதலே மழை பெய்து வருவதை அடுத்து சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வழக்கம்போல் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ×