என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்தது.
    • இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் மீனவ கிராமங்களில் சுனாமி நினைவு தினம் 20-ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார் 610 பேர் பேரலையில் சிக்கி உயிரிழந்தனர்.

    இதனையொட்டி இன்று மீனவ கிராம மக்கள், உறவினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இந்த சுனாமி தினத்தை அனுசரித்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமி பேரலையில் இறந்த நபரின் குடும்பத்தினர்கள், உறவினர்கள் கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனங்குப்பம் பகுதிக்கு வந்தனர். பின்னர் கடற்கரையில் உயிரிழந்தவர்களை நினைத்து கண்ணீர் விட்டு அழுதபடி கடல் அலைகளை பார்த்து வணங்கினர்.

    பின்னர் கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் தாங்கள் கொண்டு வந்த பால் மற்றும் கூடை நிரம்ப கொண்டு வந்த பூக்களையும் கடல் அலையில் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் கண்ணீர் வடித்தபடி நினைவு அஞ்சலி செலுத்தினர்.

    கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. அந்த நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தாங்கள் கொண்டு வந்த மலர் வளையம், மலர்கள் மற்றும் மெழுகுவத்தி ஆகியவற்றை கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து பெண்கள் இறந்த குடும்பத்தினரையும் மற்றும் உறவினர்களை நினைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதனை பார்த்த அனைவரும் கண் கலங்கியபடியே கடந்து சென்றதை காண முடிந்தது.

    கடந்த 20 ஆண்டுக்கு முன்பு சுனாமி பேரலை தாக்கி அன்று எப்படி இருந்ததோ அதேபோல் இன்றும் கடற்கரை பகுதிகள் அமைதியான இட த்தில் அழுகை மற்றும் அலறல் குரல் இன்றும் நிலைத்திருந்தது. இந்த நிலையில் இன்று மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    நினைவு தினத்தையொட்டி கடலூர் முதுநகர் சிங்காரத்தோப்பு கடலில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.

    • பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழும்.
    • குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரியில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி 2 மாதங்கள் நீர்ப்பனி விழும். நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் இறுதி வரையில் உறைபனி விழும்.

    ஆனால் இந்த முறை கடந்த ஜூன் மாதம் முதல் கடந்த வாரம் வரை மிதமான மழை காணப்ப ட்டது. இதனால் பனியின் தாக்கம் மிகவும் குறைந்தது டன், நீர்பனி விழுவதும் தாமதமாகி வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நீலகிரியில் நீர்பனி கொட்டி தொடங்கியது. ஒருவார காலமாக நீர்பனி கொட்டி வருகிறது.

    நீர்பனி கொட்டி வரக்கூடிய அதே வேளையில் கடந்த 2 தினங்களாக ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உறைபனி கொட்டியது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரேஸ்கோர்ஸ், தலைகுந்தா, பைக்காரா, கிளன் மார்கன், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி கொட்டியது. அங்குள்ள புல் மைதானங்கள் அனைத்தும் வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தது.

    செடி, கொடிகள், இரு சக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வாகனங்களிலும் உறைபனி படர்ந்து காணப்பட்டது. வாகனத்தின் உரிமையாளர்கள் வண்டியின் மீது படர்ந்திருந்த உறைபனியை அகற்றி தங்களது வாகனத்தை இயக்கினர்.

    உறைபனி கொட்டும் அதே வேளையில் கடும் குளிரும் நிலவியது. குளி ரில் இருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகள் முன்பும், வாகன ஓட்டுநர்கள் ஆங்காங்கே நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர்.

    அத்தியவாசிய தேவைகளுக்காகவும், தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர்களும் சுவட்டர் அணிந்தபடி சென்றனர். கடும் குளிரால் முதியவர்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.

    கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இன்றும் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனி காணப்பட்டது.

    பகல் நேரங்களில் வெயில் வாட்டினாலும் நிழல் தரும் இடங்களுக்கு சென்றால் குளிர் அதிகமாக இருக்கிறது.

    பைக்காரா, கிளன்மார்கன், தொட்ட பெட்டா போன்ற பகுதிக ளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. பனிப்பொழிவு அதிகரித்து ள்ள நிலையில் அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டி வதைக்கிறது.

    ஊட்டியில் நேற்று நகர பகுதியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. புறநகர் பகுதிகளில் 1 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்வு.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் சவரனுக்கு ரூ.56,800-க்கும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.80 குறைந்து சவரன் ரூ.56,720-க்கும் நேற்று சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்துக்கும் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,125-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 100 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    25-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    24-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,720

    23-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    22-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    21-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    25-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    24-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    23-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    22-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    21-12-2024- ஒரு கிராம் ரூ. 99

    • சுனாமி தாக்கி 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
    • மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    தூத்துக்குடி:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி ஏற்பட்ட சுனாமியால் பெரும் உயிர்ச் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டது. சுனாமி தாக்கிய 20-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் அப்பகுதியை சேர்ந்த அண்ணா சங்குகுளி மீனவர் சங்கம் சார்பில் அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது, இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என்று வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் திரளான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    சுனாமியால் உயிரிழந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

    இதில், அண்ணா சங்கு குளி சங்க துணைத்தலைவர் மாரி லிங்கம், பொருளாளர் விமல்சன் ஆலோசகர் பாத்திமா பாபு, செயலாளர் முருகையா, பரதவர் முன்னேற்ற பேரவை தூத்துக்குடி மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலன் உள்ளிட்ட அப்பகுதி மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • பழவேற்காடு கடற்கரையிலும் மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

    எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வடு மாறாது. வான் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் வாரிச்சுருட்டிச் சென்ற உயிர்கள், சொத்துகளின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. பலர் தங்களது உறவுகளை இழந்து மாறாத சோகத்துடன் இன்றும் கண்ணீருடன் வாழ்கிறார்கள்.

    இந்நிலையில் 20-வது ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கடலூர் சிங்காரத்தோப்பு கடற்கரையில் சுனாமியில் உயிர் நீத்தவர்களை எண்ணி ஏராளமான மக்கள் கடலில் பாலை ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    பழவேற்காடு கடற்கரையிலும் மக்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    • சிகிச்சைக்கு பின் ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தந்தையின் எண்ணை எடுத்து வீடியோவை அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது ஞானசேகரனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சிறையில் அடைக்க ஞானசேகரனை அழைத்து சென்றபோது தப்பிக்க முயன்றால் கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் F.I.R. (முதல் தகவல் அறிக்கை) வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், கடந்த திங்கட்கிழமை மாணவருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து டி.சி.யை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும் மேலும் செல்போனில் இருந்த தந்தையின் எண்ணை எடுத்து வீடியோவை அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து மாணவியும், மாணவனும் ஞானசேகரனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். இதை அடுத்து மாணவனை செல்லுமாறு கூறியுள்ளார். மாணவன் சென்றதும் மாணவி எவ்வளவு கெஞ்சியும் விடாமல் வலுக்கட்டாயமாக ஞானசேகரன் துன்புறுத்தியதாகவும் F.I.R-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.
    • கடலோர ஆந்திர பிரதேசத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர - வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது. சென்னையில் நேற்று அதிகாலை முதலே லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

    இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தென்மேற்கு, அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.

    * ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.

    * தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * கடலோர ஆந்திர பிரதேசத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.
    • சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது கூடுதலாக 2 குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    அகழாய்வு பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார். அப்போது அவர் அகழாய்வு குழிகளை சுற்றி பார்வையிட்டார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகளைப் பார்வையிட்டேன்.

     

    அகழாய்வில், இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், 2000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது சுடுமண்ணாலான சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்ட சிகை அலங்காரத்துடன் கூடிய மனிதனின் தலை கிடைத்துள்ளது.

    "கொடுமணம் பட்ட ...... நன்கலம்" (பதிற்றுப்பத்து 67) சங்கப் புலவர் கபிலரின் வரிகளிலிருந்து, சங்கத் தமிழர்கள் அரிய கற்களால் ஆன அணிகலன்களை உற்பத்தி செய்து அணிந்தது தெரிகின்றது.

    அந்த வகையில், சூதுபவள மணிகள், மாவு கற்களால் செய்யப்பட்ட உருண்டை - நீள்வட்ட வடிவ மணிகள், அரிய வகை செவ்வந்திக் கல் மணிகள் கிடைத்துள்ளன. மேலும், சுடுமண்ணாலான பல வடிவமுடைய ஆட்டக் காய்கள், திமில் உள்ள காளையின் தலை முதல் முன்கால் பகுதி வரை கிடைத்துள்ளது அவர்களின் அணிகலன் வடிவமைப்பு கலை, விளையாட்டு மீதான ஆர்வத்தை பறைசாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன.
    • அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான தூக்குப்பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. புதிய ரெயில் பால பணிகள் முடிவடைந்துவிட்டன. இந்நிலையில் ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்தபோது, சிலவற்றை சரிசெய்ய தனது அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதற்கான பணிகளும் நடைபெற்று முடிவடைந்தன.

    இந்தநிலையில், நேற்று மதுரை ரெயில்வே கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா, பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தில் இருந்து டிராலி மூலம் வந்த அவர், பாம்பன் புதிய ரெயில் பாலத்தை ஆய்வு செய்தபடி மையப்பகுதியில் உள்ள தூக்குப்பாலத்திற்கு வந்தார். தொடர்ந்து தூக்குப்பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள லிப்ட் மூலமாக மேலே சென்று தூக்கு பாலத்தின் தொழில்நுட்ப சாதனங்களை பார்வையிட்டார். பின்னர் ஆய்வுக்காக தூக்குப்பாலம் ரோடு பாலம் உயரத்திற்கு திறக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தூக்குப்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மீண்டும் தூக்குப்பாலம் இறக்கப்பட்ட பின்னர் தூக்குப்பாலம் கீழே ஒன்றுசேரும் இடத்தையும் ரெயில்வே கோட்ட மேலாளர் பார்வையிட்டார்.

    ஆய்வுக்கு பிறகு கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீ வத்சவா கூறியதாவது:-

    ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் தெரிவித்த அனைத்தும் பாலத்தில் செய்யப்பட்டுவிட்டன. தற்போது புதிய ரெயில் பாலம் போக்குவரத்துக்கு தயார் நிலையில் உள்ளது. மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், புதிய ரெயில் பாலத்தை விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அதன் பிறகு ரெயில் பாலம் திறப்பு விழா தேதி குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அடுத்த மாதம் இறுதிக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    • இந்திய பெருங்கடலில், அந்தமான் தீவு- இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவு இடையே, ஆழ்கடலில் 26-12-2004 காலை 7 மணியளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • ரிக்டர் அளவுகோலில் 9.19.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், சர்வதேச அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று.

    சுனாமி...

    பேர கேட்டவுடனே சும்மா அதிருதில்ல. கடந்த 2004-ம் ஆண்டுக்கு முன்னர் நம்மில் பலருக்கு இப்படி ஒரு பெயர் இருப்பதே தெரியாது. 2004-ம் ஆண்டுக்கு பின்னர் இந்த பெயரை தெரியாதவரே இல்லை.

    அந்த அளவுக்கு மிகப்பெரிய கொடூரத்தை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றழித்தது.

    26-12-2004 இந்த நாளை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. அன்றுதான் ஆழிப்பேரலை என்னும் சுனாமி இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது.

    வான் உயரத்துக்கு எழுந்த ராட்சத அலைகள் வாரிச்சுருட்டிச் சென்ற உயிர்கள், சொத்துகளின் எண்ணிக்கையை சொல்லி மாளாது. பலர் தங்களது உறவுகளை இழந்து மாறாத சோகத்துடன் இன்றும் கண்ணீருடன் வாழ்கிறார்கள்.

    தமிழகத்தில் சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. எத்தனை ஆண்டுகளானாலும் சுனாமி தந்த வடு மாறாது.

    அன்று நடந்தது என்ன என்பதை பார்ப்போம்.

    இந்திய பெருங்கடலில், அந்தமான் தீவு- இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவு இடையே, ஆழ்கடலில் 26-12-2004 காலை 7 மணியளவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.19.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கம், சர்வதேச அளவில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று.

    புவியியல் ரீதியில் கூற வேண்டுமென்றால் இந்த நிலநடுக்கம், இந்திய தட்டு மற்றும் பர்மா தட்டு இடையே நடந்தது. இந்த கொடூர நிலநடுக்கத்தால், இந்திய தட்டு பர்மா தட்டின் கீழ் சரிந்து, கடலடியில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. அப்போது 10 மீட்டர் உயர்ந்த பாறைகளால் கடலின் அடிப்பகுதி திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதனால் கடலடிப் பகுதி திடீரென உயர்ந்தும், தாழ்ந்தும் கடல் நீரை அசைத்தது. இந்த மாற்றம், கடல் நீரை வேகமாக நகர்த்தி ராட்சத அலைகளை உருவாக்கியது. இதுவே சுனாமி என அழைக்கப்படும் ஆழிப்பேரலை எழ காரணமாகும்.



    கடலில் உருவான சுனாமி பேரலை.

     

    இந்த சுனாமி, கடலின் ஆழத்தில் மணிக்கு 700 கி.மீ வேகத்தில் பயணித்தது. கடற்கரை அருகே வந்தபோது, கடலில் ஆழம் குறைந்து இருந்ததால் அலைகளின் உயரம் அதிகரித்தது. இந்த உயரமான அலைகள் கரையில் மோதி பெரும் அழிவுகளை ஏற்படுத்தியது.

    இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மாலத்தீவு, தாய்லாந்து, மியான்மர், சோமாலியா, தான்சானியா, கென்யா, மலேசியா, வங்காளதேசம் ஆகிய 11 நாடுகளில் இந்த சுனாமி பாதிப்பை ஏற்படுத்தியது.

    குறிப்பாக இந்தோனேசியா, இந்தியா, மற்றும் இலங்கையில் தான் பேரழிவு மிக அதிகமாக இருந்தது. இந்த நாடுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். அதில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டும் 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் மரணம் அடைந்தனர். இலங்கையில் 35 ஆயிரம் பேரும், இந்தியாவில் 12 ஆயிரம் பேரும் உயிரிழந்தனர்.

    இந்தியாவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு தான். தமிழத்தின் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி கடலூர், காரைக்கால் சென்னை ஆகிய கடற்கரைகளில் சுனாமி பேரலைகள் சரியாக 9 மணிக்கு தாக்க தொடங்கின. அதிகபட்சமாக 6 அடி உயர கடல் அலைகளை கண்ட இந்த கடற்கரைகள், முதன் முதலில் 40 அடிக்கு மேலான அலைகளை கண்டது. அப்போது கடலில் மகிழ்ச்சியாக குளித்து கொண்டும், கடற்கரையில் நடந்து சென்று கொண்டும் இருந்த மக்களை, அந்த சுனாமி பேரலை வாரிச் சுருட்டிக் கடலுக்குள் இழுத்து சென்றது.

    அதுமட்டுமல்ல பேரலைகள், கடற்கரையைத் தாண்டி சுமார் 2 கி.மீ. தூரம் ஊருக்குள் புகுந்து, அங்கு இருந்த கட்டிடங்கள், வீடுகள், மரங்கள் அனைத்தையும் அழித்தன. குறிப்பாக கடற்கரை ஒரங்களில் இருந்த மீனவ குடியிருப்புகளை சுனாமி பேரலை, வாரிச் சுருட்டி கடலுக்குள் இழுத்துச் சென்றது. அதனால் அங்கு வசித்த மீனவ குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

    சுனாமி பேரலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்குள், அது தனது கோராதாண்டவத்தை ஆடி முடித்து விட்டது. பகல் 12 மணி வரை சுனாமி அலைகள் தமிழகத்தின் கடற்கரை பகுதிகளை சூறையாடி விட்டன. அதன்பின் கடல் வழக்கம் போல் அமைதியானது. ஆனால் கடற்கரைகள் எல்லாம் மயான பூமி ஆகி விட்டன.



    நாகையில் சுனாமி தாக்கியதால் உருக்குலைந்த மீன்பிடி படகுகள்.

     

    தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சுனாமிக்கு பலியானார்கள். காவிரி டெல்டாவின் கடைகோடி மாவட்டமான நாகையில் மட்டுமே 6 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். கடலூரில் 610 பேரும், சென்னையில் 206 பேரும் இறந்தனர்.

    பல இடங்களில் குப்பைகள் போல் உடல்கள் குவிந்து கிடந்தன. அவற்றை எல்லாம் சேகரித்து ஒன்றாக ஒரே இடத்தில் குழிதோண்டி புதைக்கப்பட்டதை அழுவதற்கு கூட தெம்பு இன்றி பார்த்த உறவுகளின் சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.

    கடலூரில் சுனாமிக்கு பலியானவர்களின் உடல்கள் ஒன்றாக புதைக்கப்பட்ட சில்வர் கடற்கரை இன்றும் தன் சோக கீதத்தை, காற்றோடு காற்றாக வீசி வருகிறது.

    மீனவர்களை வாழ வைக்கும் கடல், அன்று ஒரே நாளில் அவர்களது உயிரையும் குடித்தது. சுனாமி பேரலையில் உயிர் தப்பிய பலரும் தங்களது குடும்பத்தை இழந்து நிர்கதியாகி நின்றனர்.

    இயற்கையின் பெருங்கருணையாக வழிபடப்படும் கடல் அன்னை அன்று ஒருநாள் சற்று இரக்க முகம் காட்டி இருக்கலாம்! வழக்கம்போல குழந்தைகளின் கால் நகங்களுக்கு கிச்சுமுச்சு காட்டி இருக்கலாம்!

    என்ன செய்வது. எல்லாம் இயற்கையின் விளையாட்டு.

    காலங்கள் போனாலும், மாற்றங்கள் வந்தாலும் மறக்க முடியுமா? சுனாமி ஏற்படுத்திய இழப்பை.

    • அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
    • பெண்களுக்கு எதிரான குற்றங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தொடர்ந்து தடுக்க தவறி வருகிறது.

    சென்னை:

    தென்சென்னை (தெற்கு மேற்கு) அ.தி.மு.க. வக்கீல் அணி மாவட்டச் செயலாளர் செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தொடர்ந்து தடுக்க தவறி வருகிறது. இதனை கண்டித்து, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு இணங்க தென் சென்னை (தெற்கு மேற்கு) அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் விருகை என்.ரவி தலைமையில் அண்ணா பல்கலைக்கழக வாயில் முன்பு 26-ந் தேதி (இன்று) காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×