என் மலர்
மகாராஷ்டிரா
- குஜராத் மாநிலத்தில் தற்போது ஆச்சார்யா தேவ்ரத் ஆளுநராக உள்ளார்.
- சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கும் விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்ற அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.
ஜனாதிபதி மாளிகையில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தார். அந்த பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு, மராட்டிய மாநிலத்துக்கு பொறுப்பு ஆளுநராக குஜராத் மாநில ஆளுநரை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் தற்போது ஆச்சார்யா தேவ்ரத், கவர்னராக இருக்கிறார். இவர் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- எல்ப்ரோ மாலில் The Conjuring -Last Rites படம் திரையிடப்பட்டது.
- ஆஷிக் என்பவர் தனது மனைவியுடன் கான்ஜுரிங் படத்தை பார்க்க வந்தார்
மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்ப்ரி சின்ச்வாடில் உள்ள எல்ப்ரோ மாலில் The Conjuring -Last Rites படம் திரையிடப்பட்டது. ஆஷிக் என்பவர் தனது மனைவியுடன் கான்ஜுரிங் படத்தை பார்க்கவந்தார். அப்போது படத்தில் அடுத்தடுத்து நிகழ போவதை மனைவியிடம் ஆஷிக் கூறி கொண்டே வந்தார்.
ஆஷிக்கின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அபிஷேக் என்பவர் படத்தின் Spoiler-களை கூறாதீர்கள் என்று எச்சரித்தார். அனால் அதனை பொருட்படுத்தாமல் ஆஷிக் தனது மனைவியிடம் படத்தின் Spoiler-களை கூறி வந்தார்.
பலமுறை கூறினாலும் சத்தமாக Spoiler-களை ஆஷிக் கூறி வந்ததால் அவருக்கும் அபிஷேக்கிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கைகலப்பாகி உள்ளது. படத்திற்கு இடையே இருவரும் தாக்கி கொண்டனர். இதில் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் இருவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர்.
- 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் தஹிசர் பகுதியில் உள்ள 23 மாடி கட்டிடத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 19 பேர் காயமடைந்தனர்.
பிற்பகல் 3 மணியளவில் குடியிருபின் ஏழாவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு துறையினர் தகவலறிந்து அங்கு விரைந்தனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, மாலை 6:10 மணிக்கு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மீட்புக் குழுவினர் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 36 பேரை மீட்டனர். இவர்களில் 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 4 வயது சிறுவனின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
- 400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
- 24 மணி நேரத்திற்குள் மும்பை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.
400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நேற்று வந்த மிரட்டல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
லஷ்கர்-இ-ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் செய்தியில், 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
விநாயகர் சதுர்த்தியின் நாளில் 10-வது நாளான இன்று (செப்டம்பர் 6) சிலைகள் நீரில் கரைக்கப்பட ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்த மிரட்டல் வந்திருந்தது.
இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபரை 24 மணி நேரத்திற்குள் மும்பை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் அஸ்வனி குமார் (வயது 51) என்ற ஜோதிடர்.
பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அஸ்வினி குமார் மீது அவரது நண்பர் கடந்த 2023 இல் பாட்னா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஸ்வினி குமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அஸ்வினி குமார் தனது நண்பனை பழிவாங்க திட்டம் தீட்டினார்.
அதன்படி நண்பரை பயங்கரவாதியாக சித்தரித்து போலீசில் சிக்க வைக்க மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட அஸ்வினி குமாரிடமிருந்து ஏழு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், ஆறு மெமரி கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு என்றார்.
- பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சோலாப்பூர் மாவட்டத்தின் மாதா தாலுகாவில் உள்ள குர்து கிராமத்தில், சாலை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் மண் சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக வந்த புகார்களின் பேரில் ஐபிஎஸ் அதிகாரியும் கர்மலா டிஎஸ்பியுமான அஞ்சனா கிருஷ்ணா சம்பவ இடத்துக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த அஜித் பவார் அணி தேசியவாத காங்கிரஸ் ஊழியர் ஒருவர் தனது தொலைபேசியில் தலைவருக்கு போன் போட்டு ஐபிஎஸ் அஞ்சனாவிடம் கொடுத்துள்ளார்.
தொலைபேசியை வாங்கிஅஞ்சனா "நீங்கள் துணை முதல்வர் என்பதை நான் எப்படி அறிவது? தயவுசெய்து எனது தொலைபேசியை நேரடியாக அழைக்கவும்" என்று பதிலளித்தார்.
இந்தப் பதிலால் கடும் கோபமடைந்த அஜித் பவார், "உனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். என்னை பார்க்க வேண்டுமா? உன் மொபைல் எண்ணை கொடு, அல்லது வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்து பார்.
என் முகத்தை பார்த்தால் நான் யார் என்று தெரியும். என்ன தைரியம் உனக்கு" என்றார்.
பின்னர் வீடியோ கால் மூலம் பேசி, அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஐபிஎஸ் அஞ்சனாவிடம் அஜித் பவார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் இதுகுறித்து அஜித் பவார் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பதிவில், "சோலாப்பூர் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரியுடனான உரையாடல் தொடர்பான சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. சட்ட அமலாக்கத்தில் தலையிடுவது எனது நோக்கமல்ல. நிலைமை மோசமடையாமல் இருப்பதையும் உறுதி செய்வதே எனது நோக்கம்.
பொறுமையாகவும் உண்மையாகவும் தங்கள் கடமையைச் செய்யும் நமது காவல்துறை மற்றும் பெண் அதிகாரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் சட்டத்தின் ஆட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவன்.
மணல் கடத்தல் உட்பட அனைத்து சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு நான் உறுதிபூண்டுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- தொழிற்சாலைகளின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது.
- தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என்று அரசு கூறியுள்ளது.
மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதுதொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
இந்த சட்ட திருத்தம் மூலம், 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் நிறுவனங்களின் தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாகவும், தொழிற்சாலைகளின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தப்பட உள்ளது.
இந்த நடவடிக்கை, மாநிலத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது என்று அரசு கூறியுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா, , தெலங்கானா, உத்தரப் பிரதேசம், திரிபுரா போன்ற மாநிலங்கள் இதை அமல்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், மும்பை நடுங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- விநாயகர் சிலைகளை 10-வது நாளான நாளை (செப்டம்பர் 6) ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது.
400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மிரட்டல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லஷ்கர்-இ-ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் செய்தியில், 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், மும்பை நடுங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்பட்ட விநாயகர் சிலைகளை 10-வது நாளான நாளை (செப்டம்பர் 6) ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த சூழலில் வந்த இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை பிரதாப் சர்நாயக் வாங்கினார்.
- பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை மகாராஷ்டிரா அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கியுள்ளார்.
மகாராஷ்டிராவின் போக்குவரத்துத் துறை அமைச்சரான இவர், இன்று மும்பையில் உள்ள டெஸ்லாவின் முதல் ஷோரூமில் டெஸ்லா மாடல் Y எலக்ட்ரிக் காரை அவர் வாங்கினார்.
இந்த கார் ரூ. 75 லட்சம் மதிப்புடையது. பிரதாப் சர்நாயக் இந்த காரை முழுத் தொகை கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கியதில் மகிழ்ச்சி என்றும், பெருமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார காரை டெலிவரி செய்துள்ளது. இந்த ஆண்டுக்குள் 350 முதல் 500 கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.
- மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார்.
மும்பை:
உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தனது ஷோரூமை கடந்த ஜூலை மாதம் திறந்தது.
மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இந்த ஷோரூமை திறந்து வைத்தார். இது இந்தியாவில் திறக்கப்பட்ட முதல் டெஸ்லா ஷோ ரூம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையை பொறுத்தவரை இந்தியாவின் நிதி மற்றும் வணிகத் தலைநகராக உள்ளது. மேலும், மும்பையில், உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுடன், மேம்பட்ட இவி சார்ஜிங் கட்டமைப்பும் உள்ளது.
மின்சார வாகனங்களுக்கான முக்கிய சந்தையாக உள்ளதால், டெஸ்லா நிறுவனம் தனது முதல் கிளையை அமைக்க மும்பையை தேர்வு செய்தளது.
மின்சாரத்தில் இயங்குவது, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள், மேம்பட்ட பாதுகாப்பு போன்றவை டெஸ்லா கார்களின் சிறப்புகள் ஆகும்.
இந்நிலையில், மும்பை பாந்தரா பகுதியில் உள்ள ஷோரூமில் கார் விற்பனையை இன்று தொடங்கிய டெஸ்லா நிறுவனம், முதல் காரை வாடிக்கையாளருக்கு வழங்கியது. முதல் கார் விற்பனையை மாநில போக்குவரத்து அமைச்சர் பிரதாப் சர் நாயக் தொடங்கி வைத்தார்.
- துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக ரோஜர் பின்னி கடந்த இரு ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவருக்கு சமீபத்தில் 70 வயது நிறைவடைந்தது.
பி.சி.சி.ஐ. விதிகளின்படி 70 வயது கடந்தவர்கள் நிர்வாகப் பதவிகளில் நீடிக்க முடியாது என்பதால் ரோஜர் பின்னி தனது பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து, துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக பி.சி.சி.ஐ. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதற்கிடையே, புதிய தலைவரை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில், பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின்போது சச்சின் தெண்டுல்கருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது அதன்படி சச்சினும் இதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விரைவில் சச்சின் நியமனம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது .
- மும்பை ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
- அவருக்கு ஆதரவாக மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தினர்.
மும்பை:
மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே போராட்டம் நடத்தி வருகிறார்.
இவர் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, ஆசாத் மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் மனோஜ் ஜராங்கேவை மாநில அமைச்சர் உதய் சாமந்த நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், எங்கள் கோரிக்கையை அரசு ஏற்றுள்ளது எனக்கூறிய மனோஜ் ஜராங்கே ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக, மனோஜ் ஜராங்கே கூறுகையில், எங்களுக்கு இன்று தீபாவளி. ஏனெனில் நாங்கள் விரும்பியதைப் பெற்றுள்ளோம். இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற மராத்தா போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
- அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
- நிலைமையை உடனடியாக சரிசெய்ய ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.
மராத்தாக்களுக்கு ஓபிசி பிரிவில் 10 சதவீத இடஒதுக்கீடு கோரி சமூக ஆர்வலர் மனோஜ் ஜரங்கே நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மனோஜ் ஜாரங்கி ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் மும்பை ஆசாத் மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மராத்தா ஆதரவாளர்கள் மும்பை தெருக்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனால் மும்பை நகரின் அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலால் நிரம்பி வழிந்தன. ரெயில் நிலையங்கள் உட்பட அங்கங்கே வன்முறை மற்றும் கலவரமான சூழலும் நிலவியது.
இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றம் இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
நேற்று (திங்கள்கிழமை) நடந்த விசாரணையில், போராட்டங்கள் அமைதியாக நடத்தப்படவில்லை என்றும், அனைத்து விதிகளும் மீறப்படுகின்றன என்றும் நீதிமன்றம் குற்றம்சாட்டியது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திர குகே மற்றும் கவுதம் அன்காட் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, "
போராட்டக்காரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசாத் மைதானத்தில் அல்லாமல் ஏன் வெளியே சுற்றுகிறார்கள். ஐகோர்ட்டு கட்டிடம் கூட போராட்டக்காரர்களால் சூழப்பட்டுள்ளது.
'நீதிபதிகள், வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் மறிக்கப்பட்டது. நீதிபதிகளின் கார் மறிக்கப்பட்டு விசாரணைக்கு வருவது தடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த நகரரும் ஸ்தம்பித்துள்ளது.
நிலைமையை உடனடியாக சரிசெய்ய ஜரங்கே மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு நாங்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.
செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் அனைத்து தெருக்களும் காலி செய்யப்பட வேண்டும். அனைத்து சாலைகளும் சுத்தம் செய்யப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டது.






