என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பை புதிய மேயர் யார்?- 2½ ஆண்டுகால பதவியை கேட்கும் ஏக்நாத் ஷிண்டே
    X

    மும்பை புதிய மேயர் யார்?- 2½ ஆண்டுகால பதவியை கேட்கும் ஏக்நாத் ஷிண்டே

    • மும்பையில் மேயர் பதவி தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயும், நானும் சந்தித்து பேசி ஒருமித்த முடிவை எடுப்போம்.
    • எவ்வளவு காலத்திற்கு மேயர் பதவி என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட 25 மாநகராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியது. காங்கிரசுக்கு 4 மாநகராட்சி கிடைக்கிறது.

    30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பா.ஜ.க. அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன.

    உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், எம்.என்.எஸ்-6 இடங்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு-24 இடங்களும் கிடைத்தன. அகில இந்திய மஜ்லிஸ்-8, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-3, சமாஜ்வாடி-2, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ்-1 இடங்களை கைப்பற்றின.

    பெரும்பான்மைக்கு 114 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க. கூட்டணிக்கு 118 கவுன்சிலர்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மை இல்லாவிட்டால் அதிக இடங்களை வென்ற பா.ஜ.க. மேயர் பதவியை பெறும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே மும்பை மேயர் பதவி தொடர்பாக பா.ஜ.க. துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. மேயர் பதவி கனவுக்கு ஷிண்டே முட்டுக்கட்டை போடுகிறார்.

    அதிகாரத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தானே மாநகராட்சியில் 75 இடங்களை வென்று பலத்தை நிரூபித்துள்ள ஷிண்டே மும்பையில் சுழற்சி முறையில் 2½ ஆண்டுகள் மேயர் பதவி வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளார்.

    இது தொடர்பாக ஷிண்டே ஆதரவாளர்கள் கூறும்போது, பா.ஜ.க.விடம் மேயரை நியமிக்க போதுமான இடங்கள் இல்லை. இதனால் அந்த பதவியை பகிர்ந்து அளிக்க வேண்டும். நிலைக்குழு தலைவர் பதவி உள்ளிட்ட முக்கிய குழு பதவிகளையும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஷிண்டே கட்சியின் கவுன்சிலர்கள் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தங்கள் கட்சியின் கவுன்சிலர்கள் வேறு பக்கம் சாயாமல் இருக்கவும், தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் ஏக்நாத் ஷிண்டே அவர்களை ஓட்டலில் தங்க வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கவுன்சிலர்களை இழுப்பது குறித்த தகவல்களை பா.ஜ.க. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மும்பையில் மேயர் பதவி தொடர்பாக ஏக்நாத் ஷிண்டேயும், நானும் சந்தித்து பேசி ஒருமித்த முடிவை எடுப்போம். எவ்வளவு காலத்திற்கு மேயர் பதவி என்பது குறித்து முடிவு செய்யப்படும். எந்த கருத்து வேறுபாடும் இருக்காது. எல்லாம் சுமூகமாக நடக்கும். நாம் அனைவரும் இணைந்து மும்பையை திறமையாக நிர்வகிப்போம்.

    இவ்வாறு பட்னாவிஸ் கூறினார்.

    இதற்கிடையே ஆளும் கூட்டணிக்கு சவால் விடுவதற்கு தேவையான பலம் எதிர்கட்சிகளிடம் உள்ளது என்றும், ஆனால் தாங்கள் ஜனநாயகத்தை மதிப்போம் என்றும் உத்தவ் தாக்கரே சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×