என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள்.
    • ஆசிரியர்கள் தேஜஸ்வினியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பதனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் லிங்கராஜு. இவரது மனைவி ஸ்ருதி. இந்த தம்பதியின் ஒரே மகள் தேஜஸ்வினி (வயது 6). இவள் சாம்ராஜ்நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    இந்த நிலையில் நேற்று காலை சிறுமி தேஜஸ்வினி வழக்கம் போல பள்ளிக்கு சென்றாள். 2 வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டு பாட நோட்டை ஆசிரியரிடம் காண்பிக்க தேஜஸ்வினி வெளியே வந்துள்ளாள். அப்போது திடீரென்று அவள் மயக்கம் போட்டு கீழே விழுந்தாள். இதனால் சக மாணவர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆசிரியர்கள் தேஜஸ்வினியை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது தேஜஸ்வினி மாரடைப்பால் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் அனூப்குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
    • கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.எம்.வி. 2-வது ஸ்டேஜ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அனூப்குமார் (வயது 38). இவரது மனைவி ராக்கி (35). இந்த தம்பதிக்கு 5 வயதில் பிரியங்கா என்ற மகளும், 2 வயதில் பிரியங்க் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. அனூப்குமாரின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    அனூப்குமார் கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். அனூப்குமாரின் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை பெற்று வந்தார்கள். மேலும் 2 குழந்தைகளை பார்த்துக்கொள்ள, 2 பெண்களை அனூப்குமார் வேலைக்கு வைத்திருந்தார்.

    நேற்று முன்தினம் இரவு வேலைக்கார பெண்களிடம், புதுச்சேரிக்கு குடும்பத்துடன் செல்ல இருப்பதாகவும், அதனால் காலையிலேயே வந்து விடும்படி அனூப்குமார் கூறியிருந்தார். அதன்படி, 2 பேரில் ஒருவர் காலையிலேயே வேலைக்கு வந்தார். அவர் வீட்டு கதவை தட்டியும், யாரும் கதவை திறக்கவில்லை.

    இதையடுத்து, கதவை அந்த பெண் தள்ளியபோது கதவும் திறந்துள்ளது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது அனூப்குமார், அவரது மனைவி ராக்கி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்கள். சிறுமி பிரியங்கா, குழந்தை பிரியங்க் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு வேலைக்கார பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர்கள் சதாசிவ நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அனூப்குமார் உள்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.

    அப்போது அனூப்குமார் தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் தனது மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் தற்கொலை கடிதம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

    அதே நேரத்தில் தன்னுடைய தம்பிக்கு நேற்று முன்தினம் இரவே தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக அனூப்குமார் இ-மெயில் அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. அனூப்குமார், அவரது மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அதேநேரத்தில் கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.
    • பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

    எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கர்நாடகாவில் கூட்டமான இடங்களுக்கு செல்லும் மக்கள் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

    • வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
    • சுவாச நோய்களை கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது

    சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது.

    எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. சீனாவின் வடக்கு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதில் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. வைரஸ் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.பலருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. இது குளிர்காலத்தில் சகஜம் தான் என அரசு கூறினாலும் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.

    சீனாவில் வைரஸ் பரவலால் மற்ற நாடுகளும் அலர்ட்டாக உள்ளன. இந்தியாவில் உள்ள கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு தீவிர கண்காணிப்புடன் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் முதல் மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் தொற்று பாதிப்பு கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது. 

    பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை எங்கும் அழைத்துச் செல்லப்படாதபோதிலும் வைரஸ் பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    எச்.எம்.பி.வி வைரஸ் பாதிப்பை உறுதி செய்த தனியார் மருத்துவமனை அறிக்கையை கர்நாடக மாநில சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது. மேலும் கர்நாடகாவிலேயே மற்றொரு 3 மாத குழந்தைக்கும் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் கண்காணிப்பில் உள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக சுவாச நோய்களை, கண்காணிப்பு வழிமுறைகளுடன் கையாள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது, இந்த தொற்று பாதிப்புகளில், அசாதாரண பரவல் என்பது இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. கடந்த சனிக்கிழமை கூட்டு கண்காணிப்புக் குழு கூட்டமும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் பேட் செய்த தமிழகம் 50 ஓவரில் 301 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • தமிழகம் சார்பில் இந்திரஜித் 75 ரன்னும், விஜய் சங்கர் 71 ரன்னும் எடுத்தனர்.

    விஜயநகரம்:

    விஜய் ஹசாரே டிராபி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், சத்தீஸ்கர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சத்தீஸ்கர் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 50 ஓவரில் 301 ரன்கள் குவித்தது. இந்திரஜித் 75 ரன்னும், விஜய் சங்கர் 71 ரன்னும் எடுத்தனர்.

    சத்தீஸ்கர் சார்பில் ஹர்ஷ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 302 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஸ்கர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் பொறுமையுடன் ஆடினர்.

    முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது அசுதோஷ் சிங் 71 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த சன்சஞ்சீத் தேசாய் 2 ரன்னும், அமந்தீப் கரே 4 ரன்னும், பிரதீக் யாதவ் ரன் எடுக்காமலும் அவுட்டாகினர். நிதானமாக ஆடிய பூபன் லால்வானி அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில், சத்தீஸ்கர் அணி 46 ஓவரில் 228 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் தமிழகம் 73 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தமிழகம் சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட், சாய் கிஷோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் தமிழகம் 6 லீக் ஆட்டங்களில் (4 வெற்றி, 1 தோல்வி, 1 முடிவில்லை) 18 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2வது அணியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

    • கழிவறைக்கு அருகில் அழைத்துச் சென்ற ராமச்சந்திரப்பா தகாத முறையில் நடந்துள்ளார்.
    • உள்துறை அமைச்சர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது

    கர்நாடகாவில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் துணை காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) தவறாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பாவகடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

    துமகுரு மாவட்டம் மதுகிரி பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) ராமச்சந்திரப்பா இந்த வெட்கக்கேடான செயலில் ஈடுபட்டுள்ளார்.

    புகார் அளிக்க வந்த அந்த பெண்ணை அலுவலக கழிவறைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற ராமச்சந்திரப்பா தகாத முறையில் வற்புறுத்தி நடந்துள்ளார். இந்த சம்பவம் முழுவதையும் அங்கிருந்த நபர் ஒருவர் கேமராவில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட வைரலாக பரவி வருகிறது.

    கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரின் சொந்த மாவட்டமான துமகுருவில் நடந்த இந்த சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோன்ற கொடுமைகளை புரிவதை பலர் கண்டித்துள்ளனர்.

    வீடியோ வைரலானதைத் தொடர்ந்து டிஎஸ்பி ராமச்சந்திரப்பா தலைமறைவானர். இந்த சம்பவத்தில் ராமச்சந்திரப்பா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் மதுகிரி போலீசார் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • மிசோரம் அணி 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
    • தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    விஜயநகரம்:

    விஜய் ஹசாரே தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த தொடரில் விஜயநகரத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழகம், மிசோரம் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த மிசோரம் வீரர்கள் தமிழகத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    இதனால் மிசோரம் 21.2 ஓவரில் 71 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    தமிழகம் சார்பில் அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். விஜய் சங்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 72 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் துஷார் ரஹாஜே ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

    இறுதியில், தமிழகம் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜெகதீசன் 46 ரன்னும், துஷார் ரஹாஜே 27 ரன்னும் எடுத்தனர்.

    தமிழகம் தனது அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 5ம் தேதி சத்தீஸ்கர் அணியுடன் மோதுகிறது.

    • ஏன் வேறு ரூட்டில் செல்கிறீர்கள் என பலமுறை கேள்வி கேட்டும், டிரைவர் பதிலளிக்கவில்லை
    • வாகனம் நாகவாராவை அடைந்தபோது, ​​​​ஓட்டுனர் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மேம்பாலம் நோக்கி திரும்பினார்.

    பெங்களூரில் டிரைவர் தப்பான வழியில் சென்றதால் ஓடும் ஆட்டோவில் இருந்து 30 வயது பெண் ஒருவர் குதித்துள்ளார்.

    நேற்று [வியாழக்கிழமை] இரவு ஹோரமாவில் இருந்து தனிசந்திராவில் உள்ள தனது வீட்டிற்குச் செல்வதற்காக நம்ம யாத்ரி செயலி மூலம் ஆட்டோவை முன்பதிவு செய்திருந்தார்.

    இருப்பினும், ஓட்டுநர் வழக்கமான வழியைப் பின்பற்றாமல், ஹெப்பல் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார். ஏன் வேறு ரூட்டில் செல்கிறீர்கள் என பலமுறை கேள்வி கேட்டும், டிரைவர் பதிலளிக்கவில்லை. டிரைவரின் சிவந்த கண்களையும் அவர் போதையில் இருந்ததையும் அந்தப் பெண் கவனித்தார். வாகனம் நாகவாராவை அடைந்தபோது, ஓட்டுனர் திடீரென எதிர்பாராத விதமாக ஒரு மேம்பாலம் நோக்கி திரும்பினார்.

     

    வண்டியை நிறுத்துமாறு பெண் கெஞ்சியும் ஓட்டுநர் கேட்கவில்லை. எனவே அச்சமைடைந்த அந்த பெண் உயிரையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான முடிவை எடுத்தார்.

    தாழ்வான பாதையில் ஆட்டோ மெதுவாகச் சென்றபோது, அப்பெண் ஓடும் வாகனத்திலிருந்து குதித்தார். அதிஷ்டவசமாக பெரிய காயங்கள் எதுவுமின்றி அவர் உயிர்பிழைத்துள்ளார். பெண் வெளியே குதித்த பிறகு, டிரைவர் அவளை அணுகி ஆட்டோவுக்கு திரும்பும்படி சமாதானப்படுத்த முயன்றார்.

    ஆனால் அதை புறக்கணித்த பெண் வேறு ஆட்டோவில் ஏறி பயணித்துள்ளார். இந்த அச்சமூட்டும் அனுபவத்தை பெண்ணின் கணவன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

    இரவு 9 மணிக்கு என் மனைவிக்கு இது நடந்துள்ளது, இன்னும் எத்தனை பெண்கள் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று பெங்களூரு போலீசை டேக் செய்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உதவிக்கு எங்களை DM செய்யுங்கள் என்று நம்ம யாத்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

    • பணி நிமித்தமாகவும், சொந்த பணிகளுக்காகவும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.
    • நகரில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.

    ஆசியாவில் போக்குவரத்தில் மோசமான நகரம் என்ற பெயரை கர்நாடக மாநிலத்தின் தலைவரம் பெங்களூரு பெற்றுள்ளது. இங்கு 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சராசரியாக 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இதனால், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து பணிபுரிகின்றனர். பணி நிமித்தமாகவும், சொந்த பணிகளுக்காகவும் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். இதனால், இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணம்.

    இந்நிலையில், TomTom Traffic Index என்ற நிறுவனம் 55 நாடுகளில் 387 நகரங்களில் போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு நடத்தியது. பயண நேரம், எரிபொருள் செலவு, கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வு நடைபெற்றது.



    இதில், ஆசியாவில் போக்குவரத்து நெரிசலில் மோசமான நகராக பெங்களூரு தேர்வாகி உள்ளது. இந்நகரில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆவது தெரியவந்துள்ளது.

    2வது இடத்தில் மகாஷ்டிராவின் புனே- 27 நிமிடங்கள், 50 நொடிகள், 3வது இடத்தில் பிலிப்பைன்ஸின் மணிலா- 27 நிமிடங்கள், 20 நொடிகள், 4வது இடத்தில் தைவானின் தைசங்- 26 நிமிடங்கள், 50 நொடிகள், 5வது இடத்தில் ஜப்பானின் சபோரா - 26 நிமிடங்கள், 50 நொடிகள் ஆவது ஆய்வில் தெரியவந்துள்ளது. 

    • ஜனவரி 5ம் தேதி முதல் அரசு பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் அறிவிப்பு.
    • எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கர்நாடகாவில் அரசு பேருந்துகளின் கட்டணம் 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    வரும் ஜனவரி 5ம் தேதி முதல் அரசு பேருந்து கட்டண உயர்வு அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதித்தனர்.
    • முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்தி கண்காணித்தனர்.

    பெங்களூரு:

    நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

    இந்த நிலையில் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மேம்பாலங்களில் போக்குவரத்துக்கு தடை விதித்தனர். மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகளவில் பொருத்தி கண்காணித்தனர்.

    மேலும் மது குடித்து விட்டு யாராவது வாகனங்கள் ஓட்டுகிறார்களா என்று 28 ஆயிரத்து 127 வாகனங்களில் தீவிரமாக சோதனை நடத்தினர். இதில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது குடித்து விட்டு கார், இருசக்கர வாகனங்கள் ஓட்டி வந்த சுமார் 513 பேரை மடக்கிபிடித்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    • இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
    • இருதரப்பினர் கொடுத்த தனித்தனி புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் உள்ளது, பொம்மனஹால் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, ஆந்திர மாநிலம் மெட்டஹால் கிராமம். இந்தநிலையில் பொம்மனஹால் கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் 5 வயது நிரம்பிய எருமையை கிராம தேவதைக்கு பலி கொடுக்க வளர்த்து வந்தார். அந்த எருமை கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனது. அதனை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    விவசாயி அந்த எருமை மாட்டை தேடி வந்தார். இந்த நிலையில் மெட்டஹால் கிராமத்தில் அந்த மாட்டை விவசாயி கண்டுபிடித்தார். அந்த எருமை மாட்டை அவர் அழைத்து வர முயன்றார். ஆனால் இதற்கு மெட்டஹால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறுகையில், இந்த எருமை மாடு எங்களுக்கு சொந்தமானது. நாங்கள் அந்த எருமை மாட்டை எங்கள் கிராம தெய்வமான சக்கம்மா தேவி கோவிலுக்கு பலி கொடுக்க வளர்த்து வருவதாகவும், இது அம்மனுக்கு சொந்தமானது என்றும், இதன் தாய் மாடு எங்களிடம் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

    ஆனால் அந்த விவசாயி, அந்த மாடு எனக்கு சொந்தமானது. நான் வளர்த்து வந்த மாடு திருடப்பட்டுள்ளது. அது தான் இது. இந்த மாட்டை எங்கள் கிராம காவல் தெய்வத்துக்கு பலியிட நேர்த்திக்கடனாக விட்டுள்ளேன் எனவும் கூறியுள்ளார். இருப்பினும் மெட்டஹால் கிராம மக்கள் அந்த மாட்டை கொடுக்க மறுத்தனர்.

    இதனால் அந்த விவசாயி, தனது கிராம மக்கள் சிலரை அழைத்துக்கொண்டு மெட்டஹால் சென்றுள்ளார். அந்த எருமை மாடு தனக்கு சொந்தமானது என வாதிட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. மேலும் கைகலப்பும் ஏற்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் ஆந்திரா மோகா போலீஸ் நிலைய கதவை தட்டியது.

    தற்போது இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் கொடுத்த தனித்தனி புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே மாட்டுக்கு இரு கிராமத்தினரும் சொந்தம் கொண்டாடி வருவதால் போலீசாரே இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.

    இதற்கிடையே இரு கிராம மக்களும், அந்த எருமை மாடு யாருக்கு சொந்தமானது என்பதை கண்டறிய அதன் தாய் மூலம் மரபணு (டி.என்.ஏ.) பரிசோதனை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பொம்மனஹால், மெட்டஹால் கிராமங்களில் ஜனவரி இறுதியில் கிராம தேவதைக்கு திருவிழா நடக்க இருப்பதும், அதில் அந்த எருமை மாட்டை பலியிட முடிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    ×