என் மலர்tooltip icon

    கர்நாடகா

    • கட்சிக்காக அதிக நேரம் ஒதுக்கும் முழு நேர தலைவர் தேவை என சதீஷ் ஜர்கிஹோலி பேசியதாக ஊடகங்கள் செய்தி வெளியீடு.
    • இது தொடர்பாக கட்சிக்குள் விவாதிப்போம். இந்த விசயங்கள் ஊடகங்களில் விவாதிக்கக் கூடாது.

    கர்நாடக மாநில துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் 2020-ல் இருந்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்து வருகிறார். கர்நாடக மாநில மந்திரி சதீஷ் ஜர்கிஹோலி, கட்சிக்காக அதிக நேரம் ஒதுக்கும் முழு நேர தலைவர் தேவை. இது தொடர்பான விவாதம் கட்சியின் கீழ்மட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இது மேல்மட்டத்தில் இருந்து வர வேண்டும் எனக் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

    சதீஷ் ஜர்கிஹோலி பேச்சு காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கர்நாடக மந்திரி ஜர்கிஹோலியின் கருத்துக்கு துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-

    ஊடகங்கள் மூலமாக யாராவது ஒருவர் பதவி பெற முடியுமா?. நீங்கள் ஊடகங்கள் அல்லது எந்த கடையிலும் பதவியை பெற முடியாது. நாம் செய்யும் வேலைக்கு பரிசாக பதவி கொடுக்கப்படுகிறது. ஊடகங்கள் உங்களுக்கு கட்சி பதவியை பரிசளிக்குமா?. அப்படி கொடுத்தால் அது புதிய டிரெண்ட் ஆக இருக்கும்.

    காங்கிரஸ் கட்சி தலைவர் தெடர்பாக எந்தவொரு விவாதமும் நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சி அனைத்து உறுப்பினர்களுக்குமான கட்சி. காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ளது. அனைத்து தொண்டர்கள், எம்.எல்.ஏ.-க்கள், தலைவர்கள் உள்பட அனைவரும் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் கட்சி மேலிடம் என்னிடம் கேட்டுக்கொள்ளடுள்ளது. இது தொடர்பாக கட்சிக்குள் விவாதிப்போம். இந்த விசயங்கள் ஊடகங்களில் விவாதிக்கக் கூடாது.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    தனது கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதும், ஊடகங்கள் தனது கருத்தை திரித்து கூறியதாக ஜர்கிஹோலி தெரிவித்துள்ளார்.

    • ஊழியர்கள் பணம் நிரப்புவதற்காக வேனில் இருந்து பணப்பெட்டியை இறக்கினர்.
    • பைக்கில் வந்த கொள்ளையவர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.

    கர்நாடக மாநிலம் பிதர் நகரில் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.-ல் பணம் நிரப்ப ஊழியர்கள் வேனில் வந்தனர். அவர்கள் பணம் நிரப்புவதற்காக வேனில் இருந்து பணப்பெட்டியை இறக்கினர்.

    அப்போது அந்த இடத்திற்கு பைக்கில் வந்த கொள்ளையவர்கள் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர். இதில் வங்கி ஊழியர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

    இதையடுத்து கொள்ளையர்கள் பணப்பெட்டியை கொள்ளையடித்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கொள்ளையர்கள் பணப்பெட்டியை பைக்கில் வைத்து தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • டாடா நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது.
    • டாடாவின் நர்சபுரா ஆலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது.

    இந்தியாவில் பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது.

    இந்நிலையில், கர்நாடகாவின் நர்சபுராவில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.1000 கோடி) கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது.

    நர்சபுரா ஆலையின் ஆண்டு உற்பத்தி கடந்தாண்டு மட்டும் ரூ. 40,000 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய 2023 ஆம் ஆண்டை விட 180 சதவீதம் அதிகமாகும்.

    இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஐபோன் ஏற்றுமதி 125 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது 2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்றுமதி ரூ.31,000 கோடியாக அதிகரித்துள்ளது.

    2023 ஆண்டு இந்நிறுவனத்தில் 19,000 ஊழியர்கள் பணியாற்றிய நிலையில் கடந்தாண்டு 31,000 ஊழியர்கள் வேலை செய்துள்ளனர். இது கிட்டத்தட்ட 63% அதிகமாகும்.

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஐபோன்களில் இந்த நிறுவனம் மட்டுமே 26% ஐபோன்களை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

    இதனையடுத்து அந்த ஆலையில் ஐபோன் உதிரிப்பாகங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதன் பிறகும் டாடா நிறுவனம் ஐபோன் உற்பத்தியை அதிகரித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியபோது விபத்து.
    • நாய் குறுக்கே வந்ததால் மோதமால் இருக்க டிரைவர் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டு இழந்து மரத்தில் கார் மோதல்.

    கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மந்திரி சபையில் இடம் பிடித்துள்ள பெண் மந்திரி லட்சுமி ஹெப்பால்கர். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரியாக இருந்து வருகிறார்.

    இவர் தனது சகோதரர் சன்னராஜ் ஹட்டிஹோலியுடன் இன்று காலை 5 மணியளவில் பெலாகவி மாவட்டம் கிட்டூர் நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் ஒன்று சாலையில் குறுக்கே ஓடியது. நாய் மீது கார் மோதாமல் இருக்க டிரைவர் காரை திருப்பினார்.

    அப்போது டிரைவின் கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை அருகே உள்ள மரம் மீது வேகமாக மோதியது. இதில் காரின் முன்பக்கம் கடுமையாக சேதம் அடைந்தது.

    இதில் லட்சுமி ஹெப்பால்கருக்கு காயம் ஏற்பட்டது. ஆனால், உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. விபத்தின்போது காரில் உள்ள அனைத்து (6) ஏர்பேக்குகளும் ஓபன் ஆனதால் காரில் இருந்தவர்கள் உயிர் பிழைத்தனர்.

    பெங்களூருவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் லட்சுமி ஹெப்பால்கர் கலந்து கொண்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மந்திரிக்கு முகம் மற்றும் இடுப்பில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    • விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர்கள் இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா அதற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். முன்னதாக சொத்து குவிப்பு புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் பொருட்களை ஏலம் விடுவதற்காக மாநில சிறப்பு வக்கீல் கிரண் ஜவலியை அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதன் மூலம், ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், ஜெயலலிதா சொத்து வழக்கு தொடர்பாக கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார். தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை ஏற்றுக் கொண்டு ஏற்கனவே பல்வேறு சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும், இந்த கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களையும் என்னிடம் தரவேண்டும் எனவும் வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நகலை மனுவோடு இணைத்து தீபா தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏதேனும் மேல்முறையீடு செய்யவேண்டும் என விரும்பினால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என தீபாவுக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

    • ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட உள்ளது.
    • பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் எப்போதும் மதுபானங்களின் மீதான கலால் வரி கர்நாடக பட்ஜெட்டில் உயர்த்தப்படும். இதன் மூலம் மதுபானங்கள், பீர் வகைகளின் விலை உயரும். ஆனால் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கர்நாடக அரசு, கலால் வரியை உயர்த்தி பீர் விலையை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.

    வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்படி ரூ.10 முதல் ரூ.40 வரை பீர் விலை அதிகரிக்கப்பட உள்ளது. குறிப்பாக சில குறிப்பிட்ட பீர்களின் விலை மட்டுமே உயர்த்தப்பட இருப்பதாக தெரிகிறது.

    இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களில் கலால் துறை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயரும் பீர்களின் பழைய மற்றும் புதிய விலை விவரம் பின்வருமாறு:-

    இந்த விலை உயர்வின் படி லெஜண்ட் ரூ.145 (பழைய விலை-ரூ.100), பவர் கூல் ரூ.155 (ரூ.130), பிளாக் போர்ட் ரூ.160 (ரூ.145), ஹண்டர் ரூ.190 (ரூ.180), உட்பகர் கிரஸ்ட் ரூ.250 (ரூ.240), உட்பகர் கிளைட் ரூ.240 (ரூ.230) ஆக உயர்த்தப்பட உள்ளது.

    ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வை தொடர்ந்து தற்போது கர்நாடகத்தில் பீர் விலையை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பீர் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
    • தொழில்நுட்பக் கோளாறால் இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்தது.

    பெங்களூரு:

    இரு செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த 30-ம் தேதி தலா 220 கிலோ எடை கொண்ட சேஸர், டார்கெட் ஆகிய விண்கலன்களை உள்ளடக்கிய ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள், பி.எஸ்.எல்.வி. சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அத்துடன் 24 ஆய்வுக்கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.

    இந்த இரு விண்கலன்களும் பூமியில் இருந்து 475 கி.மீ. சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. அவற்றின் தொலைவு படிப்படியாக 20 கி.மீ. குறைக்கப்பட்டு அவை ஒன்றோடு ஒன்று ஒருங்கிணைக்கப்படவுள்ளன.

    இதையடுத்து, இரு விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வுப்பணி ஜனவரி 9-ம் தேதி காலை 8 மணி முதல் நடைபெறும் என இஸ்ரோ திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், விண்கலன்களை விண்வெளியில் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சில தொழில்நுட்ப இடையூறுகள் காரணமாக திட்டமிட்டபடி விண்கலன்கள் இணையும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை
    • குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது.

    கர்நாடக பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் தனது இறப்பு சான்றிதழுடன் துணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பெலகாவி துணை ஆணையர் முகமது ரோஷனின் அலுவலகத்திற்கு தனது இறப்புச் சான்றிதழுடன் சென்ற கணபதி ககட்கர் என்ற அந்த நபர் சென்றுள்ளார்.

    டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் செய்த சிறு பிழையால் கணபதி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கணபதி அவர் ஆதார் அட்டை, வங்கி கணக்கு மற்றும் பல்வேறு அரசாங்க சலுகைகளை இழந்தார்.

    கணபதியும் அவரது சகோதரர்களும் 1976 ஆம் ஆண்டு காலமான தங்கள் தாத்தா விட்டுச் சென்ற நிலத்திற்கு வாரிசுச் சான்றிதழுக்காக விண்ணப்பித்தபோது இந்த பிரச்சினை தொடங்கியுள்ளது.

     

    அவரது மரணத்திற்குப் பிறகு நிலம் ஒருபோதும் மாற்றப்படவில்லை, மேலும் அவரது மூன்று மகன்களும் இறுதியில் கணபதி உட்பட அவரது எட்டு பேரன்களுக்கு சொத்தை விட்டுச் சென்றனர்.

    நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றும் முயற்சியில், பேரன்கள் தங்கள் தாத்தாவின் இறப்பு சான்றிதழ் காணாமல் போனதால் தாமதத்தை எதிர்கொண்டனர். அதன்பின் நீதிமன்றத்தை அணுகினர். புதிய இறப்பு சான்றிதழ் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இருப்பினும், ஹிண்டல்காவில் உள்ள வருவாய் அலுவலகத்தில் கணினி ஆபரேட்டர் ஒருவர் மறைந்த தாத்தாவின் ஆதார் எண்ணுக்குப் பதிலாக கணபதியின் ஆதார் எண்ணை தவறுதலாக பதிவுசெய்துள்ளார்.

    இதனால், குடும்ப ரேஷன் கார்டில் இருந்து கணபதியின் பெயர் நீக்கப்பட்டு, ஆதார் லாக் செய்யப்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றும் பலமுறை முயற்சி செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    கடத்த 2023 இல் கணபதி அந்த எழுத்தர் செய்த பிழையை கண்டுபிடித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திங்களன்று, அவரது குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞருடன் கணபதி, துணை கமிஷனர் ரோஷனை அணுகினார். அவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தார். 

    • அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அடிக்கடி லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்றும் 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி பெங்களூருவில் போக்குவரத்து துறை இணை இயக்குனர் ஷோபா, சிக்கமகளூரு மாவட்டம் கடூர் நிர்வாக மருத்துவ அலுவலர் டாக்டர் உமேஷ், பிதார் மாவட்ட நீர்பாசன துறை பொறியாளர் ரவீந்திரன், பெலகாவி மாவட்டம் கானாபூர் தாசில்தார் பிரகாஷ் ஸ்ரீதர், தும்கூரில் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. ராஜூ, பெல்லாரி தாலுகா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி லோகேஷ், உள்பட 8 அதிகாரிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

    • வனத்துறையினரின் உதவியுடன் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.
    • தப்பி ஓடமுயன்ற சிறுத்தையின் வாலை ஆனந்த என்ற நபர் பிடித்தார்.

    கர்நாடகா மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சுற்றித் திரிந்த சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது ஆனந்த என்ற நபர் துணிச்சலுடன் செயல்பட்டு தப்பி ஓட முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து தடுத்து நிறுத்தினார்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    சில நாட்களாக அந்த கிராமத்தில் சிறுத்தை உலா வந்து கொண்டிருந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உறைந்தனர். கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் சிறுத்தையை பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து வனத்துறையினரின் உதவியுடன் சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர்.

    அப்போது தப்பி ஓடமுயன்ற சிறுத்தையின் வாலை ஆனந்த என்ற நபர் பிடித்தார். உடனடியாக வலை வீசி வனத்துறையினர் சிறுத்தையை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட சிறுத்தையை காட்டிற்குள் வனத்துறையினர் விட்டனர்.

    கர்நாடகாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுத்தை தாக்கி 52 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆழ்துளை கிணறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதில் ரூ.968 கோடி முறைகேடு நடந்ததாக புகார்.
    • மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பிரகலாத் ராவ் மற்றும் உதவி என்ஜினீயர்களின் அலுவலகத்திலும் அவர்கள் சோதனை நடத்தினர்.

    பெங்களூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2016-2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் ஒப்பந்தம் அடிப்படையில் அமைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த சித்தராமையா காலக்கட்டத்தில் பெங்களூரு நகரில் 9,558 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.

    இந்த நிலையில் 2016-2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஆழ்துளை கிணறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைப்பதில் ரூ.968 கோடி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதாவது ஒரே நபருக்கு ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து 2019-ம் ஆண்டு பா.ஜனதா பிரமுகர் என்.ஆர்.ரமேஷ் என்பவர் ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்தார். அதில் அப்போதைய மேயர், 5 என்ஜினீயர்கள், 5 உதவி என்ஜினீயர்கள் உள்பட 40 பேரின் பெயரை குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

    பின்னர், இந்த வழக்கு லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரித்து வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு அமலாக்கத்துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

    கடந்த 2023-ம் ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் மாநகராட்சி ஒப்பந்ததாரர் கூட்டமைப்பின் துணை தலைவராக இருந்த அம்பிகாவதி என்பவரின் வீடுகளிலும் சோதனை நடத்தினர். அப்போது 40 கோடி ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் முறைகேடு தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியது.

    இதுகுறித்து விசாரித்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று பெங்களூரு ஹட்சன் சர்க்கிள் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தலைமை என்ஜினீயர் அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் மாநகராட்சி தலைமை என்ஜினீயர் பிரகலாத் ராவ் மற்றும் உதவி என்ஜினீயர்களின் அலுவலகத்திலும் அவர்கள் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனை இரவு 10 மணி வரை 11 மணி நேரம் நடந்தது. இதில் ஆழ்துளை கிணறுகள், கான்கிரீட் சாலை அமைப்பது தொடர்பாக நடந்த முறைகேடு குறித்த முக்கிய ஆவணங்கள் சிக்கின. அந்த ஆவணங்களை தலைமை என்ஜினீயர், உதவி என்ஜினீயர்களிடம் காட்டி, தீவிர விசாரணை நடத்தினர். அதற்கு என்ஜினீயர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள், அதை விசாரணைக்காக எடுத்து சென்றனர். மேலும் இது குறித்த விசாரணைக்கு என்ஜினீயர்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

    • ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய 'வரிசை வளாகத்தை' ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
    • சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை

    விஐபி தரிசனம் என்ற எண்ணமே தெய்வீகத்திற்கு எதிரானது என்பதால், விஐபி தரிசன கலாச்சாரத்தை கோயில்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.

    கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதா கோவிலில் நாட்டின் மிகப்பெரிய 'வரிசை வளாகத்தை' குடியரசு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த வசதி 'ஸ்ரீ சாநித்யா' என்று அழைக்கப்படுகிறது.

    இதனையடுத்து உரையாற்றிய ஜக்தீப் தன்கர், "ஒருவருக்கு முன்னுரிமை அளித்து விவிஐபி அல்லது விஐபி என்று முத்திரை குத்துவது சமத்துவம் எனும் கருத்தை இழிவுபடுத்துகிறது. சமத்துவத்தின் பார்வையில் விஐபி கலாச்சாரத்திற்கு இந்த சமூகத்தில் இடமில்லை. கோவில்களில் விஐபி கலாச்சாரத்தை அகற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி மலையில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×