என் மலர்
ஜம்மு காஷ்மீர்
- இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
- இந்த கோவில் கட்டுவதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பல ஊர்களிலும் சீனிவாச திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக, திருப்பதிக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக மற்ற ஊர்களிலும் ஏழுமலையானுக்கு கோவில்கள் அமைக்கும் பணியை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கி உள்ளது.
அந்த வகையில் ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.30 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இக்கோவிலின் கும்பாபிஷேக விழா ஜூன் 8-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த புதிய கோவில் ஜம்முவில் உள்ள புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது.
ஆந்திராவுக்கு வெளியே திருப்பதி ஏழுமலையானுக்கு கட்டப்படும் 6-வது கோவிலாக ஜம்முவில் புதிய கோவில் உருவாகி வருகிறது. ஏற்கனவே ஐதராபாத், சென்னை, கன்னியாகுமரி, டெல்லி, புவனேசுவரம் ஆகிய நகரங்களில் திருப்பதி ஏழுமலையானுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மும்பை, ராய்ப்பூர், ஆமதாபாத் ஆகிய நகரங்களிலும் திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமாண்ட கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
ஜம்முவில் மாதா வைஷ்ணவி தேவியை தரிசிக்க வரும் பக்தர்களின் முக்கிய வழிபாட்டு தலமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் அமையும். இந்த கோவில் கட்டுவதற்காக ஜம்மு அரசு 62 ஏக்கர் நிலம் ஒதுக்கி உள்ளது. திருமலையில் நடப்பது போலவே அனைத்து சடங்குகள், பூஜைகள், விழாக்கள் உள்ளிட்டவைகள் இந்த புதிய கோவிலிலும் நடத்தப்படும்.
கோவிலுடன் சேர்த்து உப தெய்வங்களின் சன்னதிகள், மடப்பள்ளி, அன்னபிரசாத கவுண்ட்டர்களும் கட்டப்பட்டு வருகிறது. வாகன நிறுத்தும் இட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி அங்குரார்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் ஜூன் 4-ந் தேதி முதல் தொடங்கும். ஜூன் 8-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
- பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
- எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஸ்ரீநகர்:
உலகின் வளர்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது.
இதையொட்டி பல்வேறு துறை சார்ந்த ஜி20 சர்வதேச கூட்டங்கள் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஜி20 கூட்டம் இன்று தொடங்கியது. சுற்றுலா தொடர்பான ஜி20 பணிக் குழுவின் 3-வது கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கியது. 3 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சர்வதேச கூட்டமாகும். உலகின் பல்வேறு பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.
ஸ்ரீநகரில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல் தடுப்பதற்காக பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. காவல்துறை, ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்பு படை, கடற்படை, கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ஜபர்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்கதால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தால் ஏரியில் கடற்படை காமாண்டோக்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் பரவலாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆசியாவின் சுவிட்சர்லாந்து என அறியப்படும் குல்மார்க் மற்றும் இதர சுற்றுலா தலங்களுக்கு சர்வதேச பிரதிநிதிகள் வருகை புரிவதால் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜராத்தின் கட்ச் பகுதியிலும், 2-வது கூட்டம் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியிலும் நடைபெற்றது.
- பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர்.
- ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர். இவர்களை ஒடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
பயங்கரவாத செயலில் ஈடுபடும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுக்கு சிலர் நிதி உதவி அளித்து வருகின்றனர். ஆதரவு தெரிவித்த இவர்கள் மீது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, குப்வாரா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. சோதனையின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
- புல்வாமா மற்றும் சோபியான் பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
- பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்து வருகிறது.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட், யுனைடெட் லிபரேஷன் பிரண்ட் ஜம்மு காஷ்மீர், முஜாக்தீன் கஸ்வத் உல்ஹிந்த், ஜம்மு காஷ்மீர் சுதந்திர போராட்ட இயக்கம், காஷ்மீர் புலிகள், பி.ஏ.ஏ.எப். உள்ளிட்ட புதிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதற்காக ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த 11-ந் தேதி பட்கம், பார முல்லா ஆகிய மாவட்டத்தில் சோதனை நடத்தினார்கள். இந்நிலையில் இன்று தெற்கு காஷ்மீரின் புல்வாமா மற்றும் சோபியான் பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடந்து வருகிறது.
- இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வாலிபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.
- அவரிடம் இருந்து எந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க இந்திய வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று மாலை இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வாலிபரை இந்திய ராணுவத்தினர் கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் முகமது உஸ்மான் (வயது 30) என்பதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான கோட்லியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து எந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
- ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை.
- குப்வாராவில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது மற்றும் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அன்ட்வான் சாகம் பகுதியில் இன்று காலை என்கவுன்டர் நடந்தது. ஜம்மு காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், நேற்று அதிகாலையில் ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. பாகிஸ்தான் தரப்பில் குவாட்காப்டரை பறக்கவிட முயன்றபோது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் என்கவுண்டர் நடத்தி பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர்.
கடந்த மே 3ம் தேதி அன்று, இந்திய ராணுவம் குப்வாராவில் ஊடுருவல் முயற்சியை முறியடித்தது மற்றும் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
- காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் சட்டசபை தேர்தல் நடைபெறவில்லை.
- கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி, ஆட்சியை இழந்துள்ளது.
ஸ்ரீநகர் :
கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளது. அங்கு ஆளும் பா.ஜனதா படுதோல்வியை சந்தித்து உள்ளது.
இந்த வெற்றிக்காக காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடகாவில் பா.ஜனதா கட்சி, ஆட்சியை இழந்துள்ளதால் காஷ்மீரில் இனி சட்டசபை தேர்தல் நடக்குமா? என அந்த மாநில முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா சந்தேகம் வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், காஷ்மீரில் தற்போதைக்கு சட்டமன்றத் தேர்தலை நடத்த பா.ஜனதாவுக்கு தைரியம் வர வாய்ப்பில்லை' என குறிப்பிட்டு உள்ளார்.
காஷ்மீரில் கடந்த 2014-ம் ஆண்டுக்குப்பின் சட்டசபை தேர்தல் நடைபெறவில்லை. அங்கு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜனதா அல்லாத கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்குள் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் திட்டமிடுவதாக மத்திய உளவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- காஷ்மீருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
ஜம்மு:
இந்தியாவுக்குள் நாசவேலைகளில் ஈடுபட ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினர் திட்டமிடுவதாக மத்திய உளவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் உளவு துறையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய விசாரணையில் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ ஐ.எஸ்.அமைப்பினர் காத்திருக்கும் தகவல் கிடைத்தது.
சுமார் 20-க்கும் மேற்பட்ட குழுக்கள் இதற்காக தயார் நிலையில் இருப்பதும், எந்த நேரத்திலும் அவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவலாம் எனவும் தெரியவந்தது. அவர்கள் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் மறைந்து இருப்பதை கண்டுபிடித்த ராணுவத்தினர் அங்கு கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகள் கூறும்போது, பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்தவும், எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டிவரும் பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தவும் ராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.
காஷ்மீரில் ஜி 20 மாநாடு நடக்க உள்ளது. இதனை சீர்குலைக்கும் நோக்கில்தான் இந்த ஊடுருவலை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக ராணுவத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து காஷ்மீரின் ஜம்மு-பதான்கோட் நெடுஞ்சாலை முதல் பாகிஸ்தான் எல்லை பகுதி வரையிலும் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் ராணுவத்தினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காஷ்மீருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
சந்தேகப்படும் நபர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னரே ஊருக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
- மூடப்பட்ட 14 சாலைகளில், ஆறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும், நான்கு குலுவிலும் உள்ளது.
- மணாலியில் உள்ள ரோஹ்தாங் பாஸில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் 14 சாலைகள் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அடல் சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலிலிருந்து தர்ச்சா (தேசிய நெடுஞ்சாலை 3), தர்ச்சா முதல் ஷிங்குலா முதல் ஜாங்க்சார் வரை, கோக்சர் முதல் லோசார் (தேசிய நெடுஞ்சாலை 5) மற்றும் தண்டியிலிருந்து காது நுல்லா வரை சாலைகள் உள்ளன.
மூடப்பட்ட 14 சாலைகளில், ஆறு லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்திலும், நான்கு குலுவிலும், மற்றவை மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உள்ளதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மணாலியில் உள்ள ரோஹ்தாங் பாஸில் அமைந்துள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை இரவுக்குள் மீட்கப்படும் என்று தெரிவிக்கப்ட்டது.
போலீசார் மீட்பு பணியை மேற்பார்வையிட்டு வருகின்றனர். மேலும் பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு பிரேக் போட வேண்டாம் என்றும், சறுக்குவதைத் தவிர்க்க முதல் கியரில் நத்தை வேகத்தில் செல்லுமாறும் கேட்டுக் கொண்டனர்.
- அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது.
- எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றி என்னால் அவ்வளவு உறுதியாக கூற முடியவில்லை.
ஸ்ரீநகர் :
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிட செய்யும் முயற்சி நடந்து வருகிறது. குறிப்பாக இதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகள் ஒற்றுமை பற்றி என்னால் அவ்வளவு உறுதியாக கூற முடியவில்லை. ஆனால் பாராளுமன்ற மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில், மாநிலங்கள் இப்போது முக்கியம். எல்லா எதிர்க்கட்சிகளும் இதை உணர வேண்டும்.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி வலுவாக இருக்கிறார் என்றால் அங்கே அவர் நல்லபடியாக செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், ராஷ்டிரிய ஜனதாதளமும் வலிமையாக இருக்கிறபோது, அவர்களுக்கு தடைகளை உருவாக்கக்கூடாது. இதேபோன்று உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி நன்றாக இருக்கிறபோது, அவருக்கும் தடை ஏற்படுத்தக்கூடாது.
மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, உண்மையிலேயே நீங்கள் அவர்களை (பா.ஜ.க.) தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பினால், அவர்களுக்கு எதிராக ஒரே வேட்பாளர்தான் எதிர்க்கட்சிகள் சார்பில் களமிறக்கப்பட வேண்டும்
காங்கிரஸ் கட்சி எங்கே வெற்றி பெறுமோ, அங்கே மற்றொருவர் போட்டியிட வேண்டாம். எங்கே இன்னொரு கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதோ அங்கே அவர்களுக்கு விட்டுத்தரவேண்டும். இது அவர்களை (பா.ஜ.க.) தோற்கடிப்பதற்கான வழி ஆகும்.
இதை எதிர்க்கட்சி தலைவர்கள் பரிசீலிக்க வேண்டும். இதை அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகளும், வருமான வரித்துறையும் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. மற்றவர்களும் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் (பா.ஜ.க.) மற்றவர்களை விட 100 முறை அதிகமாக செய்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் அமையக்கூடிய அரசு, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்கு இதைச் செய்யாது என நம்புகிறேன்.
ஜனநாயக நாட்டில் இத்தகைய அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. இதைச் செய்திருக்கக்கூடாது. நாட்டுக்கு எதிர்க்கட்சி தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.
- விபத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.
- படுகாயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் பூஞ்ச் மாவட்டம் மன்கொட் செக்டார் பகுதியில் நேற்று சென்றுக் கொண்டிருந்த ராணுவ வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
எல்லைப்பாதுகாப்பு படை வீரர்ககளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார்.
மேலும், 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த வீரர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.
- காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அந்த பகுதியை போலீசார், ராணுவத்தினர் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொண்ட கூட்டுக் குழுவினர் சுற்றி வளைத்தனர். பின்னர் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதனால் ராணுவ வீரர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒரு அதிகாரி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் மூன்று வீரர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
துப்பாக்கி சண்டை நடைபெறும் பகுதிக்கு கூடுதல் படையினர் விரைந்தனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் இன்னும் பதுங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, தேடுதல் வேட்டை தொடர்கிறது.






