என் மலர்tooltip icon

    ஜம்மு காஷ்மீர்

    • கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது.
    • உங்களுக்கு விருப்பம் இருந்திருந்தால் அந்தப் பகுதியை மீண்டும் கொண்டு வந்து இருப்பீர்கள். ஆனால் உங்களை தடுத்தது எது?.

    ஜம்மு- காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:-

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறுவோம் என சொல்கிறார். அவரை யார் தடுத்தது? அவ்வாறு திரும்பப் பெற வேண்டாம் என யாராவது சொன்னார்களா?

    கார்கில் போரின்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்க நமக்கு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் அப்போது பாகிஸ்தான் நம் மீது தாக்குதல் நடத்தியது. உங்களுக்கு விருப்பம் இருந்திருந்தால் அந்தப் பகுதியை மீண்டும் கொண்டு வந்து இருப்பீர்கள். ஆனால் உங்களை தடுத்தது எது?.

    நீங்கள் ஜம்மு-காஷ்மீர் வரைபடத்தை பார்க்கும் போது, அதன் ஒரு பகுதி ஏற்கனவே சீனாவுடன் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதைப்பற்றி பேசுவது கிடையாது?.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறும்போது, அவர்கள் தற்போது சீனா பகுதியில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதியையும் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்தால் நாங்கள் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

    இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.

    • இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.
    • ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று யாத்திரை நிறைவடையும் என தெரிவித்தார்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ளது அமர்நாத் குகைக் கோவில். இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான இக்கோவில் பாகல்காமில் இருந்து 48 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

    அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க வருடத்தின் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே (ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில்) பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்தப் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக சென்று வருகின்றனர்.

    கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 வரை நடைபெற்ற புனித யாத்திரையில் 5.10 லட்சம் யாத்ரீகர்கள் பனியால் உருவான சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியானது.

    ஆளுநர் மாளிகையில் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது என அரசு செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த ஆண்டின் அமர்நாத் யாத்திரையானது ஜூலை 3-ம் தேதி அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாகல்காம் பாதை மற்றும் கண்டர்பால் மாவட்டத்தில் உள்ள பல்டால் ஆகிய இரு வழித்தடங்களில் இருந்தும் ஒரே நேரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி ரக்ஷா பந்தன் அன்று முடிவடையும்.

    அமர்நாத் யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் சேவைகளை மேலும் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பல்டால், பாகல்காம், நுன்வான் மற்றும் பந்த சவுக் ஸ்ரீநகரிலும் இந்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிவித்தார்.

    • ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.
    • கடந்த 2 ஆண்டில் 4.40 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு உறுப்பினர் முபாரக் குலின் சுற்றுலா பயணிகள் வருகை குறித்து கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு முதல் மந்திரி உமர் அப்துல்லா பேசியதாவது:

    கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.20 லட்சம் வெளிநாட்டினர் உட்பட 4.40 கோடி சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளனர்.

    2023-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு 2,11,24,674 சுற்றுலாப் பயணிகளும், 2024-ம் ஆண்டில் 2,35,24,629 பேரும் வருகை தந்துள்ளனர்.

    இவர்களில் 2023ல் 55,337 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், 2024ல் 65,452 பேரும் வருகை தந்துள்ளனர்.

    கடந்த இரண்டு நிதியாண்டுகளில் சுற்றுலாத் துறையில் விளம்பரம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்காக ரூ.35.08 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    2023-24-ம் நிதியாண்டில் ரூ.12.54 கோடியும், 2024-25-ம் நிதியாண்டில் ரூ.22.54 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களுக்கு சுற்றுலாத் துறை விரிவான வேலைவாய்ப்புகளை கொண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாத் துறையின் 59 சொத்துக்கள் அவுட்சோர்சிங் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    முதல் மந்திரி அப்துல்லா சுற்றுலாத் துறையின் பொறுப்பாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தி நமது தேசிய மொழி. ஏனென்றால் இந்திய அதிக அளவு பேசும் மக்களை கொண்டுள்ளோம்.
    • தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் போதுமான மக்கள் இந்தி பேசவில்லை.

    மத்திய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழக கல்வித்துறைக்கு நிதி விடுவிக்கப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழகம் எப்போதும் இரு மொழிக் கொள்கையைத்தான் பின்பற்றும். ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்கள்.

    அதேவேளையில் இந்தியை திணிக்கவில்லை. இந்தி அல்லது வேறு ஏதாவது ஒரு மொழியை 3-வது மொழியாக கற்றுக்கொள்ளதான் சொல்கிறோம் என பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது:-

    இந்தி நமது தேசிய மொழி. ஏனென்றால் இந்திய அதிக அளவு பேசும் மக்களை கொண்டுள்ளோம். தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டும்தான் போதுமான மக்கள் இந்தி பேசவில்லை. போதுமான மக்கள் ஆங்கிலம் பேசாததுதான் தமிழ்நாட்டின் பிரச்சனை.

    நீங்கள் இந்திய பேச விரும்பவில்லை என்றால், இந்திய பேச வேண்டாம். ஆனால் இந்தி மொழியை கடுமையாக எதிர்க்க வேண்டாம் என தமிழக மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்.

    இவ்வாறு ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
    • இந்த சம்பவம் இந்தாண்டின் இது முதல் போர்நிறுத்த மீறல் ஆகும்.

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி.) பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தரப்பில் பலர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

    அதே சமயம் இந்த தாக்குதலில் இந்திய ராணுவத்தினர் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று தகவல் தெரியவவில்லை. இந்த சம்பவம் இந்தாண்டின் இது முதல் போர்நிறுத்த மீறல் ஆகும்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் 2021 பிப்ரவரியில் தங்களது போர்நிறுத்த ஒப்பந்தத்தை புதுப்பித்தன. இதன் பின்னர் போர்நிறுத்த மீறல் நடைபெறுவது வெகுவாக குறைந்தது

    சில நாட்களுக்கு முன்பு ஜம்முவின் அக்னூர் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே வெடிகுண்டு வெடித்ததில் ஒரு கேப்டன் உட்பட இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராணுவ வீரர்கள் ரோந்து சென்றபோது எதிர்பாராத விதமாக குண்டு வெடித்தது.
    • இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    காஷ்மீரில் உள்ள அக்னூர் செக்டார் என்ற பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு குண்டு வெடித்தது.

    இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த கேப்டன் உள்ளிட்ட 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர் என்ற தகவலை இந்திய ராணுவத்தின் ஒயிட் நைட் கார்ப்ஸ் படைப்பிரிவினர் உறுதிசெய்தனர். எல்லைப் பகுதியில் கடந்த 4 நாளில் நடைபெற்ற 3-வது தாக்குதல் சம்பவம் ஆகும்.

    குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்தப் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.
    • காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றிப் பெற்றுள்ளது. இதன் முலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் பா.ஜனதா ஆட்சி அமைக்கிறது.

    இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் தனித்தனியே களம் கண்ட நிலையில் இரு கட்சிகளும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளன. இதுதொடர்பாக காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை கேலி செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பிரபலமான வீடியோ 'மீம்ஸ்' ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், "உங்கள் விருப்பப்படி சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் தோற்கடித்து மகிழுங்கள்" என கூறப்பட்டுள்ளது.

    • எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் ஊடுருவ முயற்சி.
    • துப்பாக்கிச்சண்டையில் ஏழு பேர் சுட்டு வீ்ழ்த்தப்பட்டனர்.

    இந்தியா-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இந்திய ராணுவ வீரர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு வழியாக பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்படி கடந்த 4-5-ந்தேதிகளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் கிருஷ்ணா காதி செக்டார் பகுதியில், எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவத்தின் சிறப்புக்குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எல்லை வழியாக ஊடுருவ முயற்சிப்பதை கண்டறிந்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.

    அப்போது இந்திய ராணுவத்தினருக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. இதில் ஏழு ஊடுருவலர்காரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

    இதனால் பெரிய அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டது. சுட்டு வீழ்த்தப்பட்ட ஏழு பேர்களில் 2 முதல் 3 பேர் பாகிஸ்தான் எல்லை ஆக்சன் குழுவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

    • மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
    • என் கடவுள் எனக்குள் இருக்கிறார் என்று பரூக் அப்துல்லா தெரிவித்தார்.

    உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.

    ஜனவரி 12-ம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை கோடிக்கணக்கான பக்தர்கள் இங்கு புனித நீராடியுள்ளனர்.

    இந்நிலையில், மகா கும்பமேளாவில் நீராட பிரயாக்ராஜுக்கு வருவீர்களா என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அதற்கு பதில் அளித்த அவர், "நான் தினமும் என் வீட்டில் குளிப்பேன்" என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.

    மேலும் பேசிய அவர், எனது வீடு மசூதியிலோ, கோவிலிலோ, குருத்வாராவிலோ இல்லை. என் கடவுள் எனக்குள் இருக்கிறார். டெல்லி தேர்தலில் என்ன நடக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல ஒரு ஜோதிடராக மாற வேண்டும். யார் வருவார்கள், யார் போவார்கள் என்று எனக்கு எப்படித் தெரியும்?" என்று தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக கும்பமேளா குறித்து பேசிய பரூக் அப்துல்லா, "கும்பமேளா நல்ல விசயம்தான். இது கடந்த 100 ஆண்டுகளாக பக்தர்கள் புனித நீராட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. புனித நதியான கங்கையில் புனித நீராடும் பக்கர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

    • காஷ்மீர் பள்ளத்தாக்கின் குளிர்ந்த காலநிலையைத் தாங்கும் வகையில் இந்த ரெயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு அதிக பயண வசதியை வழங்க அமைக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர்:

    ஜம்மு காஷ்மீரின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ரெயில் நிலையத்திலிருந்து ஸ்ரீநகருக்கு முதல் வந்தே பாரத் ரெயிலின் சோதனை ஓட்டத்தை இந்திய ரெயில்வே தொடங்கியது.

    காஷ்மீர் பள்ளத்தாக்கின் குளிர்ந்த காலநிலையைத் தாங்கும் வகையில் இந்த ரெயில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த ரெயில் இந்தியாவின் முதல் கேபிள் தங்கு ரெயில் பாலமான அஞ்சி காட் பாலம் மற்றும் உலகின் மிக உயரமான ரெயில் பாலமான செனாப் பாலம் வழியாகவும் செல்லும்.

    இதன் முதல் பயணத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

    இந்த புதிய ரெயில் சேவையானது ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான தொடர்பை மேம்படுத்தவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு அதிக பயண வசதியை வழங்கவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • படோட் பஞ்சாயத்தில் உள்ள ராணுவ முகாமுக்கு அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம்.
    • அதன்பின் அருகிலுள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றனர்.

    ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் இன்று [சனிக்கிழமை] அதிகாலையில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

    படோட் பஞ்சாயத்தில் உள்ள தற்காலிக ராணுவ முகாமுக்கு அருகே இன்று அதிகாலை 1:20 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

    பதிலுக்கு பயங்கரவாதிகள் முகாம் மீது திருப்பிச் சுட்டதாகவும், இருதரப்புக்கும் இடையே சுமார் அரை மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் இரு தரப்பிலும் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. பயங்கரவாதிகள், மூன்று பேர் இருக்கலாம் என்றும் அவர்கள் அதன்பின் அருகிலுள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
    • பதால் கிராமத்தை 3 மண்டலங்களாக பிரித்து இந்த தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    ஜம்மு:

    காஷ்மீரின் எல்லையோர மாவட்டமான ரஜோரியின் பதால் கிராமம் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த கிராமத்தை சேர்ந்த 3 குடும்பங்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறப்பு நிகழ்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் 7-ந்தேதி முதல் கடந்த 19-ந்தேதி வரை ஒருவர் பின் ஒருவராக 17 பேர் உயிரிழந்து விட்டனர்.

    அவர்களின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களின் உடல்களில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் நாட்டின் மிகப்பெரிய மருத்துவ ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பி பரிசோதிக்கப்பட்டன.

    போலீஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய சிறப்புப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. எனினும் 17 பேரின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது.

    அங்கு சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். முதல்-மந்திரி உமர் அப்துல்லாவும் நேற்று முன்தினம் இந்த கிராமத்தை பார்வையிட்டார்.

    இந்த நிலையில் பதால் கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கூடுதல் கலெக்டர் ராஜீவ் குமார் கஜாரியா அறிவித்து உள்ளார்.

    அதன்படி பதால் கிராமத்தை 3 மண்டலங்களாக பிரித்து இந்த தடை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிகழ்வுகள் நடத்தவோ, மக்கள் கூடுவதற்கோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொற்று பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இதில் முக்கியமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வசித்து வந்த பகுதியில் அந்த குடும்ப உறுப்பினர்கள் உள்பட அனைத்து தனிநபர்களும் நுழைய தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த தடை செய்யப்பட்ட மண்டலங்களில் வசிக்கும் மக்கள் உண்ணும் உணவை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் அதிகாரிகள் வழங்கும் உணவுப்பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும்.

    இதற்காக அந்த வீடுகளில் உள்ள உணவு, சமையல் பொருட்கள் மற்றும் குடிநீர் உள்ளிட்டவற்றை உடனடியாக மாற்ற அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கிடையே பதால் கிராமத்தை சேர்ந்த அய்ஜாஸ் அகமது (வயது 24) என்ற வாலிபர் திடீர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    17 பேர் மரணத்துக்கு விடை தெரியாததால் பதால் கிராமம் மட்டுமின்றி ஒட்டுமொத்த காஷ்மீரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

    ×