என் மலர்
குஜராத்
- தந்தையுடன் விடுமுறையை கழிக்க வந்தவனுக்கு, ஏர் இந்தியா விமானம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி விட்டது.
- ஆர்யனிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அகமதாபாத்தில் கடந்த 12-ந்தேதி நடந்த விமான விபத்து உலகையே உலுக்கி உள்ளது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அது விழுந்த மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 270 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்திய வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான பதிவான இந்த விபத்து பலரையும் மனதளவில் பாதித்து இருக்கிறது. இதில் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆர்யன் அசரியின் நிலைமை சற்று வித்தியாசமானது.
11-ம் வகுப்பு முடித்து விடுமுறையில் இருந்த ஆர்யன், அகமதாபாத்தில் தங்கியிருக்கும் தனது தந்தையை பார்க்கவும், 12-ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்கள் வாங்குவதற்குமாக கடந்த 12-ந்தேதி முதல் முறையாக அகமதாபாத் வந்திருந்தான்.
முன்னாள் ராணுவ வீரரான அவனது தந்தைக்கு சமீபத்தில்தான் அகமதாபாத் மெட்ரோ ரெயில் நிலையத்தில் காவலாளியாக பணி கிடைத்தது. எனவே அகமதாபாத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார். அகமதாபாத் விமான நிலையத்துக்கும், விமானம் விழுந்த பி.ஜே. மருத்துவக்கல்லூரிக்கும் இடையே உள்ள ஒரு 2 மாடி வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
தந்தையுடன் விடுமுறையை கழிக்க வந்தவனுக்கு, ஏர் இந்தியா விமானம் மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தி விட்டது. விமானம் துயரமான முடிவை எட்டவிருப்பதை அறியாமலேயே படம் பிடித்ததுடன், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவும் முடியாமல் தவித்து வருகிறான்.
இது குறித்து செய்தியாளர்களிடம் சிறுவன் கூறியதாவது:-
நான் 11-ம் வகுப்பை கடந்த மாதம்தான் முடித்தேன். அத்துடன் 12-ம் வகுப்பிலும் சேர்ந்து விட்டேன். எனவே 12-ம் வகுப்பு புத்தகங்களை வாங்குவதற்காக தந்தையின் வாடகை வீட்டுக்கு 12-ந்தேதி நண்பகல் சுமார் 12.30 மணியளவில் வந்தேன்.
தந்தையின் வீட்டை அடைந்த சில நிமிடங்களில் விமானம் ஒன்று வீட்டுக்கு மேலே வந்து கொண்டிருப்பதை பார்த்தேன். உடனே அதை அருகில் இருந்து பார்க்கும் ஆசையில் மொட்டை மாடிக்கு வேகமாக சென்றேன். ஏனெனில் அதுவரை விமானத்தை நான் அருகில் இருந்து பார்த்தது இல்லை.
எனவே மாடியில் சென்று விமானம் தலைக்கு மேலே பறப்பதை ஆசையாக பார்த்ததுடன், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தேன். அப்போது விமானம் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. எனவே விமான நிலையத்தின் மறுபுறம் அதை தரையிறக்கக்கூடும் என நினைத்தேன்.
ஆனால் திடீரென அந்த விமானம் விழுந்து வெடித்து சிதறியது. என் கண்களுக்கு முன்பே அந்த துயரம் நடந்தது. அது பயங்கரமாக இருந்தது.
இவ்வாறு ஒருவித பயத்துடனேயே அன்றைய நிகழ்வுகளை விவரித்தான்.
தான் பதிவு செய்த வீடியோவை தனது தந்தைக்கு ஆர்யன் அனுப்பி இருந்தான். பின்னர் அது வைரலானது.
விமான விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளுக்கு இந்த வீடியோ முக்கிய ஆதாரமாக பயன்படுகிறது. அதன் அடிப்படையில் விசாரித்து வரும் அவர்கள், ஆர்யனிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அவர்களிடம் நடந்த சம்பவங்களை விவரித்த அவன், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. எனினும் தனது படிப்பை தொடர்வதற்காக சொந்த ஊர் திரும்பி உள்ளான். இவ்வாறு அகமதாபாத் விமான விபத்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பலரை பாதித்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
- விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
- கோர விமான விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண அவர்களின் உறவினர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இதில், விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. விபத்தில் மீட்கப்பட்ட விஜய் ரூபானியின் உடல் டி.என்.ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
- பல இடங்களில் கடன் வாங்கி மகளின் கனவை நிறைவேற்றி உள்ளார்.
- பயல் காதிக் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும் எனவும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் எனவும் தந்தை நினைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர விமானத்தில் பயணித்த 241 பேரும், மருத்துவக் கல்லூரி மீது விமானம் மோதியதில் 10 மாணவர்கள், பொதுமக்கள் 33 பேர் என மொத்த 274 பேர் உயிரிழந்துள்ளனர்
நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான விமான விபத்தாக பதிவாகி உள்ளது. இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களை கண்டறிவதற்காக டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் பலரையும் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்துகிறது.
முதல்முறையாக விமான பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநரின் மகள் மரணம்:
குஜராத் மாநிலம் ஹிமாத்நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான பயல் காதிக் விபத்துக்குள்ளான விமானத்தில் தான் வெளிநாட்டுக்கு முதல்முறையாக பயணம் செய்துள்ளார். உதய்பூரில் பிடெக் முடித்துள்ள காதிக், இதையடுத்து எம்டெக் படிப்பதற்காக லண்டன் செல்ல முடிவு செய்தார். இதற்காக அவரது தந்தையான ஆட்டோ ஓட்டுநர் பல இடங்களில் கடன் வாங்கி மகளின் கனவை நிறைவேற்றி உள்ளார். இவர் குடும்பத்தில் இருந்து மேற்படிப்புக்காக வெளிநாட்டிற்கு விமானத்தில் சென்ற முதல் நபர் ஆவார்.

படிப்பு நேரம் போக மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்த வருமானத்தில் குடும்பத்திற்கு பெரும் உதவியாக அவர் இருந்துள்ளார். பயல் காதிக் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும் எனவும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் எனவும் தந்தை நினைத்துள்ளார். லண்டன் செல்வதற்காக தயாரான பயல் காதிக் சம்பவத்தன்று காலை 10 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆனால் விதியோ... பயல் காதிக் விமான விபத்தில் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.
விமான நிலையத்திற்கு வெளியே குடும்பத்தினருடன் பயல் காதிக் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
- எல்லைகளையும் விசாக்களையும் பற்றி மக்கள் பேசுகிறார்கள்.
- AI-171 விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே உலகிய அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் கதைகள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உறவினர்கள் அகமதாபாத் சிவில் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்காக 20 மர சவப்பெட்டிகளுடன் ஒருவர் நேற்று மருத்துவமனை வந்தார். அவரை ஊடங்கங்கள் பேட்டி கண்டன.
47 வயதான நிமேஷ் வகேலா அவ்வூரை சேர்ந்த சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளி ஆவார். 15 ஆண்டுகளாக இத்தொழிலில் நிமேஷ் ஈடுபட்டு வருகிறார்.
சராசரியாக ஒரு நாளைக்கு 7 சவப்பெட்டிகள் தயாரிக்கும் நிமேஷ், AI-171 விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில், 100 சவப்பெட்டிகளுக்கான அவசர ஆர்டரைப் பெற்றார்.
"எல்லைகளையும் விசாக்களையும் பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் சவப்பெட்டிகளுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை. மரணத்தில் எல்லாம் ஒரே மாதிரியாகத் தெரிகிறது" என்கிறார் நிமேஷ்.
உயிரிழந்தவர்களின் உடல்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வழக்கமாக உதவுவதாகவும் கூறிய அவர், "ஆனால் இது வித்தியாசமாக உணர்வு" என்றும் கூறினார்.
அதிக தேவை இருந்தபோதிலும், விலையை உயர்த்தவோ அல்லது முன்கூட்டிய பணம் வாங்கவோ அவர் மறுத்துவிட்டார்.
"இது லாபத்திற்கான நேரம் அல்ல" என்று கூறிவிட்டு மேலும் சவப்பெட்டிகளைத் தயாரிக்க தனது பட்டறையை நோக்கி அவர் புறப்பட்டார்.
- விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
- விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல்.
அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விமான விபத்தில் சிக்கியவர்கள் ஒவ்வொரு நபரும் ஏதோ ஒரு காரணத்திற்காக பயணம் மேற்கொண்டனர். இதில், உயிரிழந்த ஒவ்வொரு உயிருக்கும் உருக்கமான கதைகளும் இருந்திருக்கிறது.
அந்த வகையில், பிரிட்டனில் உயிரிழந்த மனைவியின் அஸ்தியுடன் குஜராத் வந்த அர்ஜூன் மறுபாய் என்பவர் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது மனைவியின் ஆசைப்படி அஸ்தியை நர்மதா ஆற்றில் கரைத்துவிட்டு விமானத்தில் ஏறியவர் விபத்தில் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விடுதி அருகில் உள்ள டீக்கடை எரிந்து சாம்பலாகியுள்ளது.
- டீக்கடை நடத்தி வந்தவரின் மகன் உயிரிழந்த நிலையில், தாய் படுகாயத்துடன் உயிர் பிழைத்துள்ளார்.
அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் பி.ஜே. மருத்துவ கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், விடுதி மற்றும் விடுதி அருகில் இருந்தவர்களும் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
விடுதியில் இருந்த பயிற்சி மருத்துவர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் விடுதி அருகே டீக்கடை நடத்தி வந்த பெண் ஒருவர், படுகாயம் அடைந்த நிலையில், மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த அவரது 14 வயது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ளான். அவரை அடையாளம் காண முடியாததால் டிஎன்ஏ பரிசோதனைக்காக காத்திருக்கிறார்கள்.
சீதாபான் என்ற அந்த பெண் டீக்கடையில் இருந்துள்ளார். அவரது மகன் ஆகாஷ் படானி (வயது 14) டீக்கடை அருகில் உள்ள மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளான். விமானம் மோதி தீப்பிடித்ததில் டீக்கடையும் எரிந்துள்ளது. இதில் சீதாபென் படுகாயம் அடைந்துள்ளார்.
அப்போது விமானத்தின் உடைந்த பாகம் ஒன்று ஆகாஷ் படானியின் தலையை பலமாக தாக்கியுள்ளது. அதேவேளையில் சீதாபானுவுக்கு தீக்காயம் ஏற்பட்டதால் மகனை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகாஷ் தலையை தாக்கிய பாகம் எரியத் தொடங்கியுள்ளது. இதில் ஆகாஷ் கரிக்கட்டையாகியுள்ளார். தன் கண்முன்னே மகன் கருகிய நிலையில் காப்பாற்ற முடியவில்லையே என சிகிச்சை பெற்று வரும் சீதாபென் கதறியது பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது.
திருமணம் ஆன 2 நாளிலேயே விமானத்தில் பயணம் செய்த நபர் பலியான சோகம்
பவிக் மகேஷ்வாரி (26) என்பவர் லண்டனில பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுமுறைக்கான வதோதராவிற்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னதாக வந்துள்ளார். விடுமுறைக்கு வந்த பவிக் மகேஷ்வாரிக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
அவசரமாக பெண் பார்த்துள்ளனர். தற்போது எளிமையாக திருமணம் செய்து கொள்ளலாம். பின்னர் வரும்போது பெரிய அளவில் வரவேற்பு விழா எடுத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில்தான் திருமணம் முடிந்து 2 நாள் கழித்து லண்டனுக்கு சென்றபோது, விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். விமான நிலையத்திற்கு அவருடைய மனைவி வழி அனுப்ப வந்துள்ளார். வழி அனுப்பிவிட்டு வீடு திரும்புவதற்குள் இப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பவிக் மகேஷ்வாரி லண்டனில் படித்து அங்கேயே வேலை பார்த்து வந்துள்ளார். வருடத்தில் இரண்டு வாரம் குடும்பத்தினரை சந்திக்க வதோதரா வந்து செல்வாராம். அப்படி இந்த வருடம் வரும்போது கட்டாயம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என குடும்பத்தினர் வற்புறுத்தியதால் திருமணம் செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜூன் 10ஆம் தேதி திருமணம் முடிந்து வீடே மகிழ்ச்சியில் திகைத்தது. தற்போது துக்க வீடாக மாறியுள்ளதாக பவிக் மகேஷ்வர் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
- விமானம் மருத்துவ விடுதியில் பயங்கரமாக மோதியது.
- விடுதியில் இருந்து பலர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனை கட்டிட வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
விமானம் மோதிய கட்டிடத்தில் பி.ஜே. மருத்துவ கல்லூரியின் மருத்துவ விடுதி உள்ளது. மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் (சுமார் 60 பேர்) மெஸ்சில் உணவு அருந்தி கொண்டிருந்தனர். விமான விபத்தில் இந்த மெஸ் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விபத்து ஏற்பட்டபோது மெஸ்சில் சமையல் வேலை செய்யும் பெண்மணி, தனது இரண்டு வயது பேத்தியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களது உடலை தேடும் நிலை, அந்த பெண்மணியின் மகனுக்கு ஏற்பட்டுள்ளது.
விடுதி மெஸ்சில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் வழக்கம்போல் சப்பாத்தி, கறி சமைத்துள்ளார். ஷர்லாபென் தாகூர், தனது மகனின் 2 வயது மகளையும் (பேத்தி) அன்றைய தினம் அழைத்துச் சென்றுள்ளார்.
வழக்கமாக சமைக்கும் உணவை ஷர்லாபென் தாகூர் மகன், மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று ஸ்டாஃப்கள் மற்றும் மருத்துவர்களுக்கு வழங்குவார். அதேபோல் விபத்து நடைபெற்ற நேற்றைய தினம் உணவு வழங்க சென்றபோதுதான் விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் மோதி பலத்த சேதம் அடைந்தது, வழக்கமாக அவரது தாயார் இருக்கும் இடம். இதனால் தனது மகளுடன் தாய் இறந்திருக்கலாம் என அஞ்சுகிறார். இன்னும் கட்டிட இடிபாடுகள் முற்றிலுமாக அகற்றப்படவில்லை. முற்றிலுமாக அகற்றப்பட்டால்தான் விடுதியில் இருந்தவர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவரும்.
இதனால் தனது தாய் மற்றும் இரண்டரை வயது மகளை கவலையுடன் தேடிவருகிறார்.
- கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
- விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
AI-171 விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் மோடி அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வந்தார். விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.
இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி குடும்பத்தினரை பிரதமர் மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
- விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
- உடல் கருகிய நிலையில் உள்ளதால், அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா AI-171 (போயிங் 787 ட்ரீம்லைனர்), புறப்பட்ட சில வினாடிகளில் அருகில் உள்ள பி.ஜே. மருத்துக் கல்லூரி வளாகத்தில் மோதி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மருத்துவ வளாகத்தில் பயிற்சி மருத்துவர்கள் விடுதியும் அடங்கும். இங்கு மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. இதனால் விடுதி மெஸ்சில் இருந்த மருத்துவ மாணவர்களில் சிலரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இதுவரை 265 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 பேர் உடல் அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்ததில் உடல்கள் கருகின. இதனால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவர்கள் டி.என்.ஏ. சோதனை மூலம் உடல்களை அடையாளம் காண நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் உறவினர்கள் ரத்த மாதிரிகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட 215 பேரின் உறவினர்கள் ரத்த மாதிரிகளை வழங்கியுள்ளனர். இதனை வைத்து உடல்களை அடையாளம் காண மருத்துவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். டி.என்.ஏ. பரிசோதனை ஒத்துப்போகும்போது, அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பிரதமர் மோடி விமான விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். பின்னர் மருத்துவமனை சென்று காயம் அடைந்து சிகிச்சை பெற்றவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார். விமான விபத்தில் உயிர் பிழைத்தவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
- விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
- விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
அகமதாபாத் விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் புரியாத புதிராக இருக்கிறது. விமான நிலைய ஓடுபாதையில் இருந்து புறப்பட்டு உயரே பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் பலரது கண் எதிரில் திடீரென கீழே இறங்கிய விமானம் அரசு கல்லூரி வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது ஏன் என்பது தெரியவில்லை.
அகமதாபாத் நகரையே உலுக்கும் வகையில் எழுந்த வெடிகுண்டு போன்ற சத்தத்தால் அந்த பகுதியே அதிர்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்பும், அடர்கரும்புகையும் எழுந்தததை கண்ட மக்கள் அதிர்ச்சியில் இருந்து மீள நீண்ட நேரம் ஆனது.
விபத்துக்குள்ளான விமானம் சுமார் 800 மீட்டர் வரையே உயரே பறந்தது. அதற்கு பிறகு அந்த விமானத்தால் தொடர்ந்து உயரே பறக்க இயலவில்லை. அந்த இடத்தில்தான் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது என்ன கோளாறு என்பதைதான் நிபுணர்களால் உடனடியாக கண்டுபிடிக்க இயலாத நிலை உள்ளது.
இந்த விபத்துக்கு பொதுவாக 5 விதமான காரணங்கள் கூறப்படுகிறது. பெரும்பாலான நிபுணர்கள் விமானத்தில் உள்ள 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் செயல் இழந்து இருக்கலாம் என்பதை பிரதானமான காரணமாக சொல்கிறார்கள்.
விமான என்ஜின்கள் செயல் இழந்ததால் விமானம் மேல் எழுந்து பறப்பதற்கு தேவையான உந்து விசையை விமானத்தால் பெற இயலவில்லை என்று கருதப்படுகிறது. விமானத்தில் உள்ள 2 என்ஜின்களில் ஒரு என்ஜின் மட்டும் செயல் இழந்து இருந்தால் விமானத்தை தொடர்ந்து இயக்கி இருக்க முடியும்.
ஒரு என்ஜினியுடன் விமானத்தை 330 நிமிடங்கள் இயக்குவதற்கு போயிங் ட்ரீம் லைனர் ரக விமானத்தில் வாய்ப்புகள் இருப்பதாக அந்த விமான தயாரிப்பு நிறுவனம் கூறி உள்ளது. ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் அதற்கு சாத்தியம் இல்லாமல் போய் விட்டது.

அந்த ஒரு என்ஜின் இயங்கும்போது விமானம் அந்தரத்தில் சற்று தடுமாறும். என்றாலும் விமானத்தை திருப்பி தரை இறக்கி இருக்க முடியும். ஆனால் விபத்துக்குள்ளான விமானம் தடுமாறவில்லை. நிலையாக ஒரே சீராக தாழ்வாக பறந்து விழுந்துள்ளது. இதனால் தான் 2 என்ஜின்களும் ஒரே நேரத்தில் பழுதாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது தவிர விமானம் மேலே பறக்க தொடங்கிய சில வினாடிகளில் பறவைகள் மோதி இருக்கலாம். அதனால் விமான என்ஜின் செயல்இழந்து இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. ஆனால் விபத்துக்குள்ளான விமானம் போயிங் ட்ரீம் லைனர் என்பதால் அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
ஏனெனில் போயிங் ட்ரீம் லைனர் ரக விமானங்களில் என்ஜின்கள் மிகப்பெரியதாக இருக்கும். விமான வகைகளில் இந்த ரக விமானத்தின் என்ஜின் உலகிலேயே பெரியது. எனவே சின்ன பறவைகள் மோதுவதால் அது செயல் இழந்து இருக்காது என்ற கருத்தும் உள்ளது.
ஆனால் விமான போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், "அகமதாபாத் விமான நிலைய ஓடுதளம் அருகே மிகப்பெரிய அளவில் புற்கள் வளர்ந்துள்ளன. அந்த புற்கள் இடையே நிறைய பூச்சிகள் காணப்படுகின்றன. அந்த பூச்சிகளை சாப்பிடுவதற்கு ஏராளமான பறவைகள் வருவது உண்டு. எனவே அந்த பறவைகள் விமானத்தின் 2 என்ஜின் பகுதிக்குள் மோதி இருக்கலாம் என்ற வாய்ப்பு இருக்கிறது" என்றார்.
மூன்றாவதாக விமான சக்கரங்கள் உள்இழுக்கப்படுவதை ஒரு காரணமாக நிபுணர்கள் கருதுகிறார்கள். விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டதும் விமானத்தின் சக்கரங்கள் உள்ளே இழுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அந்த சக்கரங்கள் வெளியிலேயே இருந்துக் கொண்டு இருந்தன. லேண்டிங் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான சக்கரங்கள் பழுதாகி இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இது தொடர்ச்சியாக அடுத்தடுத்து விமானத்துக்குள் தொழில்நுட்ப கோளாறை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
நான்காவதாக விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. எடை அதிகமாக இருந்ததால் விமானத்தின் இறக்கைகள் விமானம் மேல் எழும்பி பறக்க ஒத்துழைக்கவில்லை என்ற கருத்து நிலவுகிறது.
போயிங் ட்ரீம்லைனர் விமானங்கள் சராசரியாக 227.9 டன் அளவுக்கு எடையை தூக்கும் ஆற்றல் கொண்டது. நேற்று விபத்து ஏற்பட்டபோது இதை விட கூடுதல் எடை இருந்ததா? என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது. கூடுதல் எடை ஏற்றப்பட்டு இருந்தால் அதுவும் விபத்துக்கு ஒரு காரணமாக கூறப்படலாம்.
ஆனால் பெரும்பாலான நிபுணர்கள் இதை மறுக்கிறார்கள். விமானத்தின் எடை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால் விமானம் ஓடு தளத்தில் பறக்க சாத்தியம் இருந்து இருக்காது என்று கூறியுள்ளனர். என்றாலும் இந்த காரணம் அடிப்படையிலும் ஆய்வு நடந்து வருகிறது.
ஐந்தாவதாக விமானத்தில் எரிபொருள் சப்ளையில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று போயிங் விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். எரிபொருள் தொடர்ந்து கிடைக்காத நிலையில் 2 என்ஜின்களும் செயல் இழந்து இருக்கலாம் என்ற கருத்தும் காணப்படுகிறது. இந்த 5 விதமான காரணங்களில் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க பல்வேறு கட்ட விசாரணைகள் நடந்து வருகிறது.
இந்த விசாரணைகள் நடந்து முடிய நீண்ட காலம் தேவைப்படும் என்றும் எனவே உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய சில மாதங்கள் ஆகலாம் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை அறை அருகே திரண்டனர்.
- விபத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர்.
அகமதாபாத்:
அகமதாபாத் விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் உடல்கள் தீயில் கருகிய நிலையில் கிடந்தன. அந்த உடல்களை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அகமதாபாத்தில் உள்ள பி.ஜே. மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலியானவர்களின் உடல்கள் கருகிய நிலையில் இருந்ததால் பயணிகளை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. எனவே பலியான பயணிகள் மற்றும் விமான பணியாளர்களின் உடல்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடலில் இருந்து மரபணு சேகரிக்கப்படும். அதேபோல விமான பயணிகளின் குடும்பத்தினரிடமும் மரபணு சேகரிக்கப்பட்டு, அவற்றை ஒப்பிட்டு உடல்கள் அடையாளம் காணப்படும். அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை அறை அருகே திரண்டனர். விமான விபத்தில் மணிப்பூர், ராஜஸ்தான், மகாராஷ்டிரத்தை சேர்ந்த பலர் இறந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினர் நேற்று இரவு முதலே ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகளை வழங்கினர்.
இதற்காக நேற்று இரவில் இருந்து இன்று அதிகாலை வரை விடிய விடிய ஆஸ்பத்திரியில் காத்திருந்து ரத்த மாதிரிகளை வழங்கினர். இன்று அதிகாலை 5 மணி வரை 200 பேர் தங்களது ரத்த மாதிரிகளை வழங்கியதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இங்கிலாந்து உள்ளிட்ட சில வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் டி.என்.ஏ. பரிசோதனைக்காக நாளை வருவார்கள் என மருத்துவ கல்லூரியின் தடயவியல் துறையை சேர்ந்த குல்தீப்சிங் பரோட் கூறினார்.
- விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
- பலரும் ஒவ்வொரு காரணங்களுடன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகலில் லண்டனுக்கு ஏர் இந்தியா போயிங் 787 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விஷ்வாஸ் குமார் என்பவரை தவிர 241 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த விமானத்தில் பல கனவுகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட டாக்டர், அவரது மனைவி என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும், லண்டனில் படிக்கும் கணவனை காண புறப்பட்ட புதுப்பெண்ணும், மகளை காண லண்டனுக்கு புறப்பட்ட குஜராத் மாநில முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி என பலரும் ஒவ்வொரு காரணங்களுடன் மகிழ்ச்சியுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே விமானம் விபத்து தொடர்பான தகவல்கள் அனைவராலும் உற்று கவனிக்கப்படுகிறது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசித்திரமான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நேற்று காலை Mid- day ஆங்கில நாளிதழில் முதல் பக்கத்தில் ஏர் இந்தியா விமானம் குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. கிட்ஜானியாவின் தந்தையர் தின நிகழ்வை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தில், ஒரு கட்டிடத்தின் ஓரத்தில் ஒரு அனிமேஷன் செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம் கட்டிடத்தில் சிக்கியிருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து பிற்பகலில் நிகழ்ந்த விமான விபத்துக்குப் பிறகு விமானத்தின் முன் பகுதி ஒரு கட்டிடத்தில் சிக்கியது. இதனைக் கண்ட சமூக வலைத்தள பயனர்கள் விளம்பரத்தில் வெளியிடப்பட்ட காட்சியை உண்மையில் நிகழ்ந்திருப்பதாக கூறி வைரலாக்கி வருகின்றனர்.

விமான விபத்து குறித்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த தற்செயல் நிகழ்வு வாழ்க்கையின் கணிக்க முடியாத தன்மையை நினைவூட்டுகிறது.






