என் மலர்tooltip icon

    டெல்லி

    • நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.
    • பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு லாபம் என்ற நிலை உருவாகி உள்ளது.

    புதுடெல்லி:

    தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு ஆங்காங்கே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. முன்பு, இந்த சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறை இருந்தது. இந்த ரொக்க நடைமுறையால் சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதில் வாகனங்கள் கால தாமதத்தை சந்தித்து வந்தன.

    இதனைத் தவிர்க்க 'பாஸ்டேக்' கட்டண முறை கொண்டு வரப்பட்டது. இதனால் வாகனங்கள் வெகுநேரம் காத்து நிற்காமல் வேகமாக சென்று வருகின்றன. 'பாஸ்டேக்' நடைமுறைப்படுத்தப்பட்டு சில ஆண்டுகள் ஆகி விட்டாலும் இன்னும் அது முழுமையாகவில்லை. பல வாகனங்கள் இன்னும் ரொக்கமாகவே பணத்தை செலுத்துகின்றன.

    எனவே பாஸ்டேக் நடைமுறையை முழுமையாக்கவும், ரொக்க நடைமுறையை தவிர்த்து, டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும் சாலை போக்குவரத்து அமைச்சகம் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக நெடுஞ்சாலை கட்டண விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த திருத்தத்தின் படி, பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிக்குள் நுழையும் வாகனங்கள் ரொக்கமாக பணத்தை செலுத்தினால் இருமடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும். அதே நேரத்தில் யு.பி.ஐ. மூலம் செலுத்தினால் கூடுதலாக கால்பங்கு கட்டணத்தை சேர்த்து செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, 100 ரூபாய் கட்டணம் என்றால், ரொக்கமாக செலுத்துபவர்களுக்கு அது ரூ.200 ஆகும். யு.பி.ஐ.யில் செலுத்துபவர்களுக்கு ரூ.125-ஆக கட்டணம் இருக்கும்.

    இந்த புதிய கட்டண நடைமுறை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இதன்மூலம், பாஸ்டேக் வைத்திருப்பவர்களுக்கு லாபம் என்ற நிலை உருவாகி உள்ளது. அதிலும் வருடாந்திர 'பாஸ்' வைத்திருந்தால் அதிக பணம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2027 கோவா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும்.
    • காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி::

    மாயேம் பகுதியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பை அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரசுடன் எந்த சூழ்நிலையிலும் கூட்டணி கிடையாது.

    கடந்த சில ஆண்டாக எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் மொத்தமாக பா.ஜ.க.வுக்கு விநியோகித்து வருகிறது.

    எதிர்காலத்தில் எந்தவொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் பா.ஜ.க.வுக்கு மாற மாட்டார்கள் என கோவா வாக்காளர்களுக்கு அக்கட்சியால் உறுதியளிக்க முடியுமா?

    2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 13 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு தாவினர். 2022ம் ஆண்டில் மட்டும் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

    ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், அது பா.ஜ.க.வுக்கு எம்.எல்.ஏ.க்களை வழங்குவதற்கு சமமாகி விடும்.

    கோவாவில் பா.ஜ.க. அரசு அமைவதற்கு உதவும் வகையிலான எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்.

    கோவாவில் அமைந்துள்ள காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வின் சீரழிந்த அரசியல் கட்டமைப்பை வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு, கோவா மக்களுக்கு ஒரு புதிய விருப்பத்தை வழங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.

    • வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார்.
    • பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இதுவாகும்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றார்.

    இந்நிலையில், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 2 நாள் அரசுமுறை பயணமாக அடுத்த வாரம் இந்தியா வர உள்ளார்.

    வரும் 8-ம் தேதி இந்தியா வரும் கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    கெய்ர் ஸ்டார்மரும், மோடியும் 9-ம் தேதி மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    பிரதமராக பதவியேற்றபின் கெய்ர் ஸ்டார்மர் மேற்கொள்ளும் முதல் இந்திய பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது.
    • புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    உலகெங்கிலும் கேங்ஸ்டர் கதைக்கு என்று என்றுமே தனி மவுசு உள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தின் புகழ் பெற்ற கேங்ஸ்டர் கதை பீக்கி 'பீக்கி பிளைண்டர்ஸ்' (Peaky Blinders). இணைய தொடராக வெளிவந்து வரவேற்பை பெற்ற இதன் 6வது சீசன் 2022 இல் வெளியானது.

    இந்த க்ரைம் டிராமா தொடர், 1880கள் முதல் 1920கள் வரை பர்மிங்காம் நகரில் இயங்கிய 'பீக்கி பிளைண்டர்ஸ்' என்ற நிஜமான குற்ற கும்பலை அடிப்படையாகக் கொண்டது. தொடர் முழுவதும் சிலியன் மர்ஃபி (Cillian Murphy) டாமி ஷெல்பி கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார்.

    இந்நிலையில் 'பீக்கி பிளைண்டர்ஸ்' மேலும் இரண்டு புதிய சீசன்களுடன் நெட்ஃபிக்ஸ் தளத்தில் மீண்டும் வரவுள்ளது. இந்த அறிவிப்பை அத்தொடரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    வரவிருக்கும் ஒவ்வொரு புதிய சீசனிலும் ஆறு எபிசோடுகள் இடம்பெறும். ஒவ்வொரு எபிசோடும் சுமார் 60 நிமிடங்கள் ஓடும்.

    உலகளவில் நெட்ஃபிக்ஸ் தளத்திலும், இங்கிலாந்தில் மட்டும் பிபிசி தொலைக்காட்சியிலும் இந்தத் தொடர் வெளியாகும்.

    புதிய சீசன்கள் 1953 ஆம் ஆண்டு பிரிட்டன் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

    'பீக்கி பிளைண்டர்ஸ்' ஃபிரான்சைஸின் ஒரு பகுதியாக, 'தி இம்மோர்டல் மேன்' (The Immortal Man) என்ற புதிய திரைப்படமும் 2026 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இதிலும் கில்லியன் மர்ஃபி, ரெபேக்கா பெர்குசன், டிம் ரோத், சோஃபி ரண்டில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  

    • 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங் பேசினார்.
    • மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டது.

    கடந்த ஏப்ரல் 2025-ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக,மே மாதம் 7 ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில் பாகிஸ்தான் விமானங்களை இந்தியா தரப்பும், இந்திய விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பும் கூறி வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற 93வது விமானப்படை தின விழாவில் பேசிய விமானப்படைத் தளபதி மார்ஷல் சிங்,

    ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும் என்று தெரிவித்தார்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை தனது நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்தது மட்டுமல்லாமல், மிகவும் சமநிலையான மற்றும் திட்டமிட்ட முறையில் செயல்பட்டதாகவும் கூறினார்.

    விமானப்படை தனது நோக்கங்களை அடைந்தவுடன் உடனடியாக நடவடிக்கைகளை நிறுத்தியது, இது சர்வதேச அளவில் இந்தியாவின் பொறுப்பான பிம்பத்தை மேலும் வலுப்படுத்தியது என்றார். 

    முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் போது இதற்கு நேர் மாறாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ராவணின் தங்க அரண்மனையை எரித்தது போல மோடியின் அரண்மனை அழிக்கப்படும் என்றார்.
    • உதித் ராஜ் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சி தலைவரான உதித்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    பிரதமர் மோடி நவீன ராவணனின் சின்னமாகத் திகழ்கிறார். ஒவ்வொரு தசராவின் போதும் ராவணின் உருவ பொம்மை எரிக்கப்படும்.

    ராவணின் தங்க அரண்மனையை எரித்தது போல மோடியின் அரண்மனை அழிக்கப்படும் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு உதித் ராஜ் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், உதித் ராஜ் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா வெளியிட்ட அறிக்கையில், இதுதான் காங்கிரசின் உண்மை முகம். பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பது அவர்களின் வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாகி விட்டது என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • மான்செஸ்டரில் யூத வழிபாட்டு தலத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது.
    • இந்தத் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஹீட்டன் பார்க் யூத வழிபாட்டுத் தலத்தின் மீது நேற்று பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. மக்கள் கூட்டம் மீது காரை மோதி, அதன்பின் கத்தியால் குத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    இந்நிலையில், மான்செஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

    இந்தக் கொடூரமான தாக்குதல் பயங்கரவாதத்தின் தீய சக்திகளிடமிருந்து நாம் எதிர்கொள்ளும் சவால்களை மீண்டும் கடுமையாக நினைவூட்டுகிறது.

    சர்வதேச அகிம்சை தினத்தில் இந்த தாக்குதல் நடந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி, அதைத் தோற்கடிக்க உலக சமூகம் ஒன்றுபட்டு ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

    தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மான்செஸ்டர் நகர மக்களுக்காக பிரார்த்திக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை நட்பு நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும்.
    • 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.

    புதுடெல்லி:

    காசோலை தொடர்பான பண பரிவர்த்தனை ஒரு சில மணி நேரத்தில் முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணம் விரைவில் வழங்கும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    அதற்கான சோதனை முயற்சிகளை இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் இன்று மேற்கொள்கின்றன.

    வங்கிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை டெபாசிட் செய்யப்படும் காசோலைகள் ஸ்கேன் செய்யப்பட்டு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு 1 மணி நேரத்தில் பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும்.

    காலை 11 மணி முதல், வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை ஒவ்வொரு மணி நேரமும் நடைபெறும். டெபாசிட் செய்த காசோலைகளை வங்கிகள் மாலை 7 மணிக்குள் பரிசீலிக்க வேண்டும். வங்கிகள் அதை செய்யும் தவறும் பட்சத்தில் காசோலை தானாகவே அங்கீகரிக்கப்பட்டு பயனாளிகளுக்கு பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.

    1980-ம் ஆண்டுகளில் வங்கிகளில் காசோலையை செலுத்தினால் அதை பரிசீலிக்க குறைந்தபட்சம் ஒரு வாரகாலம் ஆகும். பின்பு அது 3 நாட்களாக குறைந்தது. 2008-ம் ஆண்டு முதல் 1 நாளாக குறைந்தது.

    தற்போது அது 1 நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் வரவுவைக்கப்படும். நாட்டின் பொருளாதாரமும் வேகமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • 4 ஆண்டுகளாக இடைக்கால அரசு நடத்தி வரும் தாலிபான்கள் தங்கள் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வருகின்றனர்.
    • ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.

    2021 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் முதல் முறையாக, அதன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வமாக வருகை தருகிறார்.

    4 ஆண்டுகளாக இடைக்கால அரசு நடத்தி வரும் தாலிபான்கள் தங்கள் ஆட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில் முத்தாகி அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியா வருகின்றார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டெல்லியில் இரு நாட்டு உறவுகள், புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

    ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான் அமைச்சர் முத்தாகி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஐ.நாவின் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் தடைகள் காரணமாக, முத்தாகிக்கு சர்வதேச பயணத்திற்கு சிறப்பு அனுமதி தேவைப்பட்டது.

    சமீபத்தில் முத்தகியின் சில பயணங்களுக்கு ஒப்புதல் மறுக்கப்பட்ட நிலையில் இந்த முறை இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் சர்வதேச பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர்.
    • பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங்கை நேரில் சென்று சந்தித்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 2019 இல் லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்கள் 20 பேரை கொன்றனர். இதனால் இரு நாடுகளிடையே விரிசல் வலுப்பெற்றது.

    எல்லை பிரச்சனைகள் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட  கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

     இந்நிலையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

    சமீபத்தில் சீனாவில் நடந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி  சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இந்தச் சேவை அக்டோபர் 26 முதல் தொடங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாகக் கூறி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியாவிற்கு 50% கூடுதல் வரி விதித்த பிறகு இந்தியா-சீனா உறவு வலுப்பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. 

    • மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில், டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர். 



    • தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது.
    • தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.

    புதுடெல்லி :

    நாடு முழுவதும் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது. தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.

    எனது சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 

    ×