என் மலர்tooltip icon

    பீகார்

    • மகள் ஜாதி மாறி திருமணம் செய்து கொண்டதால் தந்தை கோபம்.
    • விடுதிக்கு சென்று துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

    பீகார் மாநிலத்தில் ஜாதி மாறி மகள் திருமணம் செய்து கொண்டதால் கோபம் அடைந்த தந்தை, அவரது கண் முன்னே கணவரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தர்பங்கா மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனையில் பிஎஸ்சி (நர்ஸ்சிங்) 2ஆம் ஆண்டு படித்து வந்தவர் ராகுல் குமார். இங்கு முதலாம் ஆண்டு படித்து வருபவர் தானு பிரியா. இவரும் நர்ஸிங் படித்து வருகிறார். இருவரும் காதலித்து சமீபத்தில்தான் திருமணம் செய்து கொண்டனர்.

    மகளின் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், தந்தைக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. மகளின் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

    தானுவின் தந்தை பிரேம்ஷங்கர் மருத்துவமனை விடுதிக்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு அவரது மகள் தானுவும், அவரது கணவரும் இருந்துள்ளனர். மேலும், ராகுல் குமாருடன் படிக்கும் மாணவர்களும் இருந்துள்ளனர்.

    பிரேம்ஷங்கர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுல் குமாரை சுட்டுள்ளார். இதில் ராகுல் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராகுல் குமார் உடன் படிக்கும் சக மாணவர்கள் பிரேம்ஷங்கரை பலமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிலையில் அவரை மீட்டு போலீசார் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    ராகுலும், தானுவும் கடந்த 4 மாதத்திற்கு முன்புதான் திருமணம் செய்துள்ளனர். ஒரே விடுதியில் தனித்தனி மாடியில் தங்கி படித்து வந்துள்ளனர். தானுவின் தந்தை மாறுவேடத்தில் வந்து ராகுலை நேற்று மாலை அணுகியுள்ளார். பின்னர்தான் தானுவின் தந்தை எனத் தெரியவந்துள்ளது.

    "எனது தந்தை துப்பாக்கி வைத்திருந்தார். எனது கணவர் மார்பில் என் கண்முன்னே துப்பாக்கியால் சுட்டார். ராகுல் என் மடியில் சாய்ந்தார்" என கண்ணீர் மல்க தானு தெரிவித்தார்.

    மேலும், எனக்கு அல்லது எனது கணவருக்கு என்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தை நாடியிருந்தோம் எனத் தெரிவித்தார்.

    • முன்பு பாராளுமன்றத்தில் பூகம்பம் ஏற்படும் என்று மிரட்டினார்.
    • அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தம் படிந்துள்ளது.

    தேர்தல் ஆணையம் பாஜவுக்காக வாக்கு திருட்டில் ஈடுபடுவதாகவும், இதுதொடர்பாக தன்னிடம் அணுகுண்டு போன்ற ஆதாரம் உள்ளதாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். இந்நிலையில் இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

    பீகார் தலைநகர் பாட்னாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், "என்டிஏ கூட்டணி தலைமையிலான பாதை பீகாரின் முன்னேற்றத்துக்கானது. மற்றொரு பாதையான இந்தியா கூட்டணி, பீகாரை பழைய ஜாதி மோதல்களின் சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும்.

    ராகுல் தன்னிடம் அணுகுண்டு இருப்பதாக கூறுகிறார். அவ்வாறான அணுகுண்டு இருந்தால் அதை அவர் உடனடியாக வெடிக்கச்செய்ய வேண்டும். ஆபத்திலிருந்து தன்னைத்தானே அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ராகுலின் பேச்சு வரவிருக்கும் தேர்தலுக்கான ஒரு குறுக்கு வழி ஆகும்.

    இப்படித்தான் முன்பு பாராளுமன்றத்தில் பூகம்பம் ஏற்படும் என்று மிரட்டினார். ஆனால் அங்கு பேசியபோது அது ஒரு ஈரமான பொய்யாக மாறியது.

    மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

    ஒரு அரசியலமைப்பு அமைப்பைப் பற்றி அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு உகந்தது அல்ல.

    அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தம் படிந்துள்ளது. 1975ல் அவசரநிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தைக் கொல்ல முயன்றது என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.  

    • 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்
    • தேஜஸ்வி யாதவ் ஒரு விளையாட்டுத்தனமான கூற்றை கூறியிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொண்டது.

    பணிகள் முடிந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை தேர்தலில் பாஜகவை வெற்றி பெறச் செய்ய தேர்தல் ஆணையத்தின் சதி என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    இதற்கிடையே ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் பரபரப்பு குற்றச்ச்சாட்டை முன்வைத்தார்.

    வலைத்தளத்தில் EPIC நம்பர் உள்ளீடு செய்து பார்த்தபோது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் காட்டவில்லை என அவர் தெரிவித்தார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு உடனடியான பதிலளித்த தேர்தல் ஆணையம், "வரைவு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் ஒரு விளையாட்டுத்தனமான கூற்றை கூறியிருப்பது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் வரிசை எண் 416 இல் பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை என்று கூறும் எந்தவொரு கூற்றும் தவறானது மற்றும் உண்மைக்கு மாறானது" என்று தெரிவித்துள்ளது. 

    • படிக்கட்டில் பயணித்த ரெயில் பயணிகளை இளைஞர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    பீகார் மாநிலம் நாக்ரி ஹால்ட் என்ற பகுதியருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது, படிக்கட்டில் பயணித்த ரெயில் பயணிகளை இளைஞர்கள் சிலர் குச்சியால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

    ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக ரெயில் பயணிகளை தாக்கியதாக போலீசாரின் விசாரணையில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். 

    • பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.
    • பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் சிறப்பு திருத்தத்திற்குப் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 65 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பீகாரில் 7.24 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் சிறப்பு திருத்தத்திற்கு முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இப்போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலான வாக்காளர்களில் இறந்துவிட்டனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மேலும் இரண்டு இடங்களில் பதிவு செய்தவர்கள், பீகாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறியவர்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் தலைநகர் பாட்னாவில் அதிகபட்சமாக 3.95 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கிழக்கு சம்பாரண், மதுபனி மற்றும் கோபால்கஞ்ச் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். மேலும் பத்து மாவட்டங்களில் தலா 2 லட்சம் வாக்காளர்கள் மற்றும் 13 மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    • அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
    • தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    பீகார் மாநிலம் பாட்டனாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருபவர் ஷோபா தேவி.

    ஜானிபூரில் தனது கணவன் லாலன் குமார் குப்தா, அஞ்சலி, அன்ஷ் ஆகிய இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று மாலை ஷோபா தேவியின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அந்நேரம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய அஞ்சலி, அன்ஷ் ஆகிய இருவரையும் தீவைத்து எரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த கொடூரமான சம்பவத்தில் இரண்டு குழந்தைகளும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

    தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது.
    • "மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

    பீகார் மாநிலம் பாட்னாவில் பாபு என்ற ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கும் சமயத்தில் நடந்த இச்சம்பவம், அதிகாரப்பூர்வ சரிபார்ப்பு செயல்முறைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

    சான்றிதழ் எண் BRCCO/2025/15933581, வார்டு எண் 15, மசாவர்ஹி நகராட்சி கவுன்சில் என்றும் இந்த பகுதியில் பாபு வசித்து வருகிறார் என்றும் அந்த சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அந்த சான்றிதழின் வலதுபுற ஓரத்தில் நாய் ஒன்றின் புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. பாபுவின் தந்தை குட்டா பாபு என்றும் தாய் குடியா தேவி என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    விவகாரம் வைரலான நிலையில் இந்த இருப்பிட சான்றிதழ் இன்று ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், சான்றிதழ் பெற விண்ணப்பித்த கணினி ஊழியர் மற்றும் அவருக்கு சான்றிதழ் அளித்த அதிகாரி ஆகியோருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது என பாட்னா மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

    ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், "லஞ்சம் இல்லாமல் பீகாரில் எதுவும் நடக்காது. சன்னி லியோன் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் பெயரிலும் ஆதார் அட்டைகள் தயாரிக்கப்பட்டன. நாயும் லஞ்சம் கொடுத்திருக்க வேண்டும்" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

    வாக்காளர் சரிபார்ப்புக்கு ஆதார், EPIC கார்டுகள் நிராகரிக்கப்படும் நிலையில், ஒரு நாய்க்கு  இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்டது, இந்தத் திருத்தப் பணியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

    "மக்களின் வாக்குகள் நாய்களுக்கு வழங்கப்படும் போலிருக்கிறது" என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. 

    • கடத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.
    • சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பீகாரில் உள்ள NDA அரசாங்கத்தில் உள்ளது.

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். நிதிஷ் குமாரை ஆதரிப்பதில் தான் வருத்தப்படுவதாக அவர் கூறினார்.

    பீகாரில் சமீபத்தில் நடந்த வீட்டுக் காவல் பணிக்கான ஆட்சேர்ப்புத் தேர்வு எழுத வந்த மாணவி மயக்கமடைந்து ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய சிராக் பாஸ்வான், பீகார் நிர்வாகம் குற்றவாளிகளுக்கு அடிபணிந்துவிட்டதாகவும், கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்தார்.

    குற்றங்களைக் கட்டுப்படுத்த மாநில அரசு முற்றிலும் தவறிவிட்டதாகவும், பீகாரில் மக்கள் பாதுகாப்பாக இல்லை என்றும் அவர் கூறினார். மக்களைப் பாதுகாக்க முடியாத ஒரு அரசாங்கத்தை ஆதரிப்பதில் தான் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

    அரசாங்கம் விழித்தெழுந்து குற்றங்களைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரினார்.

    தற்போது, சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பீகாரில் உள்ள NDA அரசாங்கத்தில் உள்ளது.

    இருப்பினும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் தனது கட்சி அனைத்து இடங்களிலும் தனியாகப் போட்டியிடும் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

    • ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
    • ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

    பீகார் மாநிலம் புத்தகயா மாவட்டத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. ஊர்க்காவல் படை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொண்ட 26 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

    ஜூலை 24 ஆம் தேதி, உடல் தகுதி தேர்வின் போது அந்த இளம் பெண் மயங்கி விழுந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, ஊழியர்கள் ஓடும் ஆம்புலன்சில் வைத்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

    பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, உடல் பரிசோதனையின் போது தான் சுயநினைவை இழந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது என்ன நடந்தது என்பது ஓரளவு மட்டுமே அறிந்திருந்ததாகவும் அந்தப் பெண் கூறினார்.

    ஆம்புலன்சில் இருந்த மூன்று அல்லது நான்கு பேர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் கூறினார். பின்னர் இது குறித்து காவல்துறை மற்றும் மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

    பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பெறப்பட்டு, புத்தகயா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவும், தடயவியல் குழுவும் அமைக்கப்பட்டன.

    முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குள், ஆம்புலன்சில் இருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வினய் குமார் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் அஜித் குமார் ஆகிய இருவரை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது. இருவரும் தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாக்காளர்கள் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி முடிவடைந்துள்ளது.
    • 35 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

    பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

    இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி 35 லட்சம் வாக்காளர்கள் வெளிமாநிலத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர் அல்லது தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம்.

    பீகார் மாநிலத்தில் சுமார் 7.90 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 22 லட்சம் வாக்காளர்கள் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 7 லட்சம் வாக்காளர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1.2 லட்சம் வாக்காளர்களிடம் இருந்து இன்னும் ஃபார்ம் திரும்பப்பெறவில்லை. 7.23 கோடி வாக்காளரிடம் இருந்து ஃபார்ம் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.

    7.23 கோடி வாக்காளர்கள் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள். அனைத்து பணிகளும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • என்னை தேற்கடிக்க முடியாவிட்டால் எங்களை நீக்க முயற்சி செய்கிறீர்கள்.
    • அனைத்து ஜனநாயக ஆயுதங்களையும் பயன்படுத்தி எதிர்த்துப் போராடுவோம்.

    பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பீகாரில் நடத்தப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (S.I.R) உடனடியாக கைவிட வேண்டும். தங்களுக்கு எதிராக வாக்களிக்கக் கூடிய மக்களை வாக்களிக்கவே விடாமல் தடுத்து, பாஜகவுக்கு சாதகமாக களத்தை மாற்றப் பார்க்கிறார்கள். எங்களை வீழ்த்த முடியவில்லை என்பதால், நீக்க முயற்சிக்கிறீர்கள்.

    இது ஒற்றை மாநிலத்தை பற்றியது மட்டுமல்ல இந்திய குடியரசின் அடித்தளத்தைப் பற்றியது. நெருப்புடன் விளையாடாதீர்கள். முழு வீச்சில் இதற்கு எதிராக தமிழ்நாடு போராடும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

    பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை நிறைவுப் பெற்றுள்ளது.

    பீகாரில் 7.23 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பெறப்பட்டு டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவு பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளை 99.8 சதவீதம் நிறைவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

    பீகாரில் ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ×