என் மலர்
இந்தியா

தகுதி நீக்க மசோதாவை ஊழல் அரசியல்வாதிகள் தான் எதிர்க்கின்றனர் - பீகாரில் பிரதமர் மோடி பேச்சு
- பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன்.
- முதல்வர், அமைச்சர் அல்லது ஒரு பிரதமர் கூட சிறையில் இருந்தும் அரசாங்கத்தை இயக்க முடியும்.
பிரதமர் மோடி இன்று பீகார் மாநிலம் கயாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு துறைகளின் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
கயா-டெல்லி இடையேயான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், வைஷாலி-கோடெர்மா இடையேயான ரெயில் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
பீகார் எல்லா நேரங்களிலும் நாட்டின் முதுகெலும்பாக நின்றுள்ளது. இந்த புனித பூமியில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் நாட்டின் பலமாகும். அது வீண் போகாது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்தபோது பயங்கரவாதிகளை இந்த மண்ணில் இருந்து தூள் தூளாக்குவேன் என்று சபதம் செய்தேன். அந்த உறுதி நிறைவேற்றுப்பட்டுள்ளது.
பீகார் மக்களை ராஷ்டிரிய ஜனதா தளம் தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே கருதுகிறது. அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக எதுவும் அவர்கள் செய்யவில்லை.
ராஷ்டிரிய ஜனதா தளம் ஆட்சி காலத்தில் கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கி இருந்தன. கல்வி, வேலைவாய்ப்பு தரப்படவில்லை. பல தலைமுறைகள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆட்சியின் போது பீகாரில் எந்த பெரிய திட்டமும் முடிக்கப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் மக்களின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. தங்கள் பைகளை நிரப்புவதில் மட்டுமே மும்முரமாக இருந்தனர்.
பீகார் மக்களை தனது மாநிலத்திற்குள் நுழைய விடமாட்டேன் என்று காங்கிரஸ் முதல்வர் ஒருவர் கூறியிருந்தார். பீகார் மக்கள் மீது காங்கிரஸ் கொண்ட வெறுப்பை யாராலும் மறக்க முடியாது. இதை ராஷ்டிரிய ஜனதா தளம் கண்டு கொள்ளவில்லை.
பீகார் இளைஞர்கள் தங்கள் மாநிலத்தில் வேலை பெறவும், அவர்களுக்கு மரியாதை கிடைக்கவும், அவர்கள் பெற்றோருடன் தங்கவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கடுமையாக உழைத்து வருகிறது.
பீகாரில் இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள், மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான திட்டங்கள் ஆகும். சுகாதார உள்கட்டமைப்பு மேலும் மேம்படுத்தப்படும்.
ஒரு அரசு ஊழியர் 50 மணி நேரம் சிறையில் அடைக்கப்பட்டால், அவர் தானாகவே தனது வேலையை இழப்பார். ஆனால் ஒரு முதல்வர், அமைச்சர் அல்லது ஒரு பிரதமர் கூட சிறையில் இருந்தும் அரசாங்கத்தை இயக்க முடியும்.
சில நாட்களுக்கு முன்பு, சிறையில் இருந்து கோப்புகளில் கையெழுத்திட்டது, அரசாங்க உத்தரவுகள் வழங்கப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடந்தன.
தலைவர்களுக்கு அத்தகைய அணுகுமுறை இருந்தால் ஊழலை எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும். எனவே ஊழலுக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வரம்பிற்குள் பிரதமரும் வருகிறார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பதவியில் இருந்து நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டில் 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-அமைச்சர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய முடியும்.
இதன்மூலம் யாராலும் சிறையில் இருந்து கொண்டே ஆட்சி செய்ய முடியாது. யாரும் சிறையில் இருந்த படி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது. ஊழல் வழக்கில் சிறைக்கு செல்லும் அரசியல்வாதிகள் தங்களது பதவிகளை இழக்க வேண்டும்.
எனவே இந்த மசோதாவுக்கு ஊழல் அரசியல்வாதிகள்தான் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிடுகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் இந்த மசோதாவை காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் , இடதுசாரிகள் எதிர்க்கின்றனர்.






