என் மலர்
ஆந்திர பிரதேசம்
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் காவாலி அடுத்த சிரிபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி வனிதா. சுரேஷின் நண்பர்கள் யோகுலு, வெங்கடேஸ்வர் மற்றும் 4 பேர் உட்பட 8 பேரும் நேற்று தெலுங்கானா மாநிலம், கொண்ட கட்டு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு காரில் சென்றனர்.
காரில் வீட்டுக்கு புறப்பட்டு வந்தனர். பல்நாடு மாவட்டம் பிராமண பள்ளி அடுத்த நார்கட் பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கார் வேகமாக வந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் சுரேஷ் அவரது மனைவி வனிதா, யோகலு, வெங்கடேஸ்வர் ஆகியோர் விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர் .
போலீசார் படுகாயம் அடைந்த மேலும் 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீண்ட தூரம் சென்றும் நெடுஞ்சாலை வராமல், ஒரே வனப்பகுதியாக இருப்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- 4 பேரும் காருடன் பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகா மதிகுன்சி வனப்பகுதியில் சிக்கி தவித்தது தெரியவந்தது.
'கூகுள் மேப்' பார்த்து வாகனங்களில் செல்வோர் திக்குதெரியாமல் வழிதவறி செல்லும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் 'கூகுள் மேப்' பார்த்து பயணித்த கார் புதியதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தில் இருந்து கீழே பாய்ந்தது. இதில் 3 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
அதுபோல் கர்நாடகத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பக்தர், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டரில் 'கூகுள் மேப்' பார்த்து சென்ற போது நடுக்காட்டில் சேற்றில் சிக்கி தவித்தார். அவரை போலீசார் மீட்டனர்.
அந்த வரிசையில் 'கூகுள் மேப்' பார்த்து காரில் சென்ற ஒரே குடும்பத்தில் 4 பேர் நடுக்காட்டில் சிக்கி தவித்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு கோவாவுக்கு சுற்றுலா செல்ல காரில் புறப்பட்டு பெலகாவி வழியாக வந்தனர். அதில் பெண்கள் உள்பட 4 பேர் இருந்தனர். அவர்களுக்கு கோவாவுக்கு செல்ல வழி தெரியவில்லை. இதனால் அவர்கள் கூகுள் மேப்பில் வழிபார்த்து கோவா நோக்கி காரில் சென்றனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் கூகுள் மேப் தொழில்நுட்பத்தில் கோளாறு ஏற்பட்டு அவர்களுக்கு தவறான வழியை கூறியுள்ளது. ஆனால் இதை அறியாத அவர்கள் காரை வனப்பகுதி வழியாக ஓட்டிச் சென்றுள்ளனர். நீண்ட தூரம் சென்றும் நெடுஞ்சாலை வராமல், ஒரே வனப்பகுதியாக இருப்பதை அறிந்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் வனப்பகுதிக்குள் 10 கிலோ மீட்டர் தூரம் சென்றுள்ளனர்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை தெரியாததால் அவர்களால் மீண்டும் வெளியே வர முடியவில்லை. இதன் காரணமாக திக்கு தெரியாமல் அவர்கள் நடுக்காட்டில் சிக்கி தவித்தனர்.
இதையடுத்து அவர்கள் பெலகாவி போலீஸ் உதவி மையத்துக்கு போன் செய்து சம்பவம் பற்றி கூறி, தங்களுக்கு உதவ கோரினர். அதன்பேரில் போலீசார் ஒரு காரில் அவர்களை தேடி சென்றனர். அப்போது 4 பேரும் காருடன் பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகா மதிகுன்சி வனப்பகுதியில் சிக்கி தவித்தது தெரியவந்தது.
உடனே அவர்களை தேடி அந்த வனப்பகுதிக்குள் போலீசார் தேடிச் சென்றனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவர்கள் காரை போலீசார் நேற்று காலை தான் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை மீட்டு கோவா செல்லும் சாலைக்கு அழைத்து வந்தனர். அவர்கள், போலீசாருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர். அதன் பிறகு ஆந்திரா சுற்றுலா பயணிகள் அதே காரில் கோவா நோக்கி சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
- ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படம் வெளியானது.
- முதல் காட்சி பார்க்கச்சென்ற ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூறியதாவது:
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்தினருடன் உறுதுணையாக இருப்போம்.
இந்தச் சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் படத்தின் கொண்டாட்டங்களில் தங்களால் பங்கேற்க முடியவில்லை.
ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்க உள்ளேன்.
புஷ்பா 2 படக்குழுவினரிடம் இருந்து ரேவதி குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம்.
இந்த நேரத்தில் அவர்கள் வலியை உணர்ந்துள்ளேன். விரைவில் அவர்களைச் சந்திக்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
- கூட்ட நெரிசலில் சிக்கி பலியான ரசிகை.
- ரசிகையை புஷ்பா என செல்லமாக அழைத்து வந்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகை ரேவதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார்.
அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரேவதி முன்பு வெளியான புஷ்பா முதல் பாகத்தை பார்த்தார். அன்று முதல் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகையாக மாறினார். அவரை அந்த பகுதி மக்கள் புஷ்பா என செல்லமாக அழைத்து வந்தனர்.
இது குறித்து அவருடைய கணவர் பாஸ்கர் கூறுகையில்:-
அவளது கடைசி தருணங்களும் குழந்தைகளை மகிழ்விப்பதாகவே இருந்தது. என்னுடைய குழந்தைகள் புஷ்பா-2 படம் பார்க்க செல்ல அடம்பிடித்தனர். கூட்டத்தை பொருட்படுத்தாமல் அவர்களை தியேட்டருக்கு அழைத்து வந்தேன்.
மனைவி, மகனை தியேட்டர் வளாகத்தில் விட்டு விட்டு என் மகளை அவருடைய பாட்டி வீட்டில் விட சென்று விட்டேன்.
நான் திரும்பி வருவதற்குள், என் மனைவியும் மகனும் அவர்களை விட்டுச்சென்ற இடத்தில் இல்லை. நான் அழைத்தபோது, அவர்கள் தியேட்டருக்குள் இருப்பதாக ரேவதி கூறினார். அதுதான் நான் கடைசியாக அவள் குரலைக் கேட்டேன்.
கட்டுக்கடங்காத கூட்டம் போலீஸ் தடியடியில் இருந்து தப்பிக்க, மகனைப் பாதுகாக்க முயன்றதில் ரேவதி படுகாயமடைந்தார். எனக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்ட போது அவரது ஒரு கல்லீரலை எனக்கு தானமாக வழங்கி என் உயிரை காப்பாற்றினார்.
இன்று அவர் உயிருடன் இல்லை. என் மகனும் ஆஸ்பத்திரியில் போராடிக் கொண்டிருக்கிறான் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
- கடந்த மார்ச் மாதம் ஷேக் காஜா பீரா ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
- கொள்ளை கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், தர்மாவரத்தை சேர்ந்தவர் ஷேக் காஜா பீரா. ஓவியரான இவருக்கும் 2 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர்.
ஓவியம் வரைவதில் போதிய வருமானம் கிடைக்காததால் மனைவிகள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற முடியாமல் வறுமையில் வாடினார்.
ஓவியம் வரையும் தொழிலை விட்டுவிட்டு கடந்த 2021-ம் ஆண்டு அனந்த பூரில் திருட்டு தொழிலை தொடங்கினார்.
இரவு நேரங்களில் நோட்டமிட்ட வீடுகளில் சென்று நகை பணத்தை கொள்ளை அடித்தார். திருட்டு தொழிலில் ஷேக் காஜா பீராவுக்கு அதிக அளவில் பணம் கிடைத்தது. திருட்டுத் தொழிலில் கிடைத்தால் பணத்தின் மூலம் கார் ஒன்றை வாங்கினார்.
காரை எடுத்துச் சென்று அனந்தபூர் மாவட்டத்தில் 14 வீடுகளிலும், கர்நாடக மாநிலம், பாகே பள்ளிக்கு சென்ற ஷேக் காஜா பீரா 4 வீடுகளிலும், கோலாறில் 5 வீடுகளிலும் கொள்ளை அடித்தார். மொத்தம் 27 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் போலீசார் ஷேக் காஜா பீராவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
கடந்த மார்ச் மாதம் ஷேக் காஜா பீரா ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
பின்னர் தர்மாவரத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மகேஷ், ஜமீர் ஆகியோரை தன்னுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கொள்ளை ஈடுபட்டார். பகல் நேரங்களில் மகேஷ், ஜபீர் ஆகியோர் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு வருவார்கள். இரவு நேரத்தில் ஜபீர் காரில் சென்று குறிப்பிட்ட வீட்டின் அருகில் நிறுத்துவார்.
மகேஷும் ஜபீரும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு ஆட்கள் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள். ஷேக் காஜா பீரா மட்டும் வீட்டுக்குள் சென்று கொள்ளையடித்து வந்தனர்.
போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவம் நடந்த இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கொள்ளை கும்பல் காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் அனந்தபூர் சி.சி.எஸ் சாலையில் காரில் சென்ற ஷேக் காஜா மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர்.
விசாரணை நடத்தியதில் மொத்தம் ஆந்திரா தெலுங்கானாவில் 41 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. 310 கிராம் தங்க நகைகள் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- ஆபாச பாட்டுக்கு நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தார்.
- இளம் பெண் வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
திருப்பதி:
திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனை சாவடிக்கு இளம் பெண் ஒருவர் காரில் வந்தார். கரை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய அவர் புஷ்பா படத்தில் வரும் ஆபாச பாட்டுக்கு ஏற்றபடி நடனம் ஆடி தனது செல்போனில் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்தார்.
வீடியோவை தனது இஸ்டா கிராமில் பதிவிட்டார். இளம் பெண் பதிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைக் கண்ட பக்தர்கள் இளம் பெண்ணிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது குறித்து சிலர் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர்.
ஆபாச நடனமாடிய இளம் பெண் யார் என அடையாளம் கண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அந்த இளம் பெண்ணின் தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பக்தர்களின் கடும் எதிர்ப்பை கண்ட இளம் பெண் இதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். தன்னை மன்னிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
- ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08-க்கு மணிக்கு ராக்கெட் ஏவப்பட இருந்தது.
- ராக்கெட் ஏவுதலுக்கு இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த 2 செயற்கை கோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகப்பட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது.
இது நேற்று (செவ்வாய்க்கிழமை) பகல் 3.08 மணிக்கு தொடங்கியது. இதனை முடித்துக்கொண்டு இன்று(புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ப்ரோபா 3 செய்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளை மாலை 4.12 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
கடைசி நேரத்தில் கண்டறியப்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவு பதிவானது.
- நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா, விசாகப்பட்டிணம், ஜக்கையாபேட்டை உள்ளிட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தன. ஒரு சில வீடுகளின் சுவற்றில் விரிசல் ஏற்பட்டது. இதனால் வீட்டில் இருந்த பொதுமக்கள் உயிருக்கு பயந்தபடி அலறி அடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவு பதிவானது.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் நகரின் பல பகுதிகளிலும், கம்பம், ரங்கார ரெட்டி, வாரங்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஹயாத் நகர எல்லைக்குட்பட்ட வனஸ்தலிபுரம், ஹயாத் நகர், அப்துல்லாபூர் மெட், ஹணுகொண்டா, கொத்தக்குடேம், மனுகூர், பத்ராசலம், சார்லா சிந்த கனி, நகுல வஞ்சா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தை கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் 'புரோபா-3' என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை (2 செயற்கைகோள்கள்) உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை (புதன்கிழமை) மாலை 4.08-க்கு மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த 2 செயற்கைகோள்களையும், முதலில் குறைந்தபட்சம் 600 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகப்பட்சம் 60 ஆயிரத்து 530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்ட பாதையிலும் நிலை நிறுத்தி, பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தும்.
ராக்கெட்டுக்கான எரிபொருட்கள் நிரப்பப்பட்ட நிலையில், இறுதிக்கட்டப் பணியான கவுண்ட்டவுன் 25 மணி நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இன்று (செவ்வாய்க்கிழமை) பகல் 3.08 மணிக்கு தொடங்குகிறது. இதனை முடித்துக்கொண்டு நாளை (புதன்கிழமை) மாலை 4.08 மணிக்கு ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்கிறது. ராக்கெட் மற்றும் செயற்கைகோள்களின் நிலையை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
- ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது.
- திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
திருப்பதி:
பெஞ்ஜல் புயல் காரணமாக ஆந்திரா முழுவதும் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. திருப்பதி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
திருப்பதியில் மழை மற்றும் குளிர்ந்த காற்று வீசுவதால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் தரிசனம் செய்தனர்.தொடர் மழையின் காரணமாக திருப்பதிக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்தது.
இதனால் நேற்று 6 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை முதல் பக்தர்கள் நேரடியாக இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் பக்தர்கள் 1 மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். 1 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையால் திருப்பதி மலையில் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. மலைப் பாதையில் செல்லும் இடங்களில் அருவி போல தண்ணீர் கொட்டுகிறது.
மேகக் கூட்டங்களால் திருப்பதி மலை ரம்மியமாக காட்சி அளித்தது.
திருப்பதியில் நேற்று 67,496 பேர் தரிசனம் செய்தனர். 19,064 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.33 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- தாயும் மகனும் 15 கிலோமீட்டர் தொலைவில் பெட் படல்லா சென்று படித்து வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம்,பெத்தப் பள்ளி மாவட்டம், கமன்பூர் அடுத்த குண்டாரமை சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளி.
இவரது மனைவி சொர்ணலதா (வயது 38). தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ரோஷன். இவர் ஐடிஐ முடித்துவிட்டு புரோகிராம் அசிஸ்டன்ட் படித்து வருகிறார்.
சொர்ணலதா இன்டர் மீடியேட்டர் படிக்கும்போது லட்சுமணனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொலைதூர கல்வி மூலம் சொர்ணலதா பட்டப்படிப்பு முடித்தார்.
இருப்பினும் கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்பு படிக்க விரும்பிய சொர்ணலதா தனது மகன் படிக்கும் அதே கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார். தாயும் மகனும் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெட் படல்லா சென்று படித்து வருகின்றனர்.
இதுகுறித்து சொர்ணலதா கூறுகையில் மகனுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த படிப்பில் சேர்ந்ததாக தெரிவித்தார். தாயும், மகனும் ஒரே கல்லூரி வகுப்பில் படித்து வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
- 4 போட்டோகிராபர்களை வைத்து போட்டோ வீடியோ ஷுட் நடத்தினார்.
- வம்சி நாத்ரெட்டிக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கன்னவரத்தை சேர்ந்தவர் வம்சி நாத் ரெட்டி. தொழிலதிபர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியாக உள்ளார்.
இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த வம்சி நாத் ரெட்டி கோவில் முன்பாக 4 போட்டோகிராபர்களை வைத்து போட்டோ வீடியோ ஷுட் நடத்தினார்.
போட்டோகிராபர்கள் வம்சிநாத் ரெட்டியை பல கோணங்களில் வீடியோ, படம் எடுத்தனர். தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் இதனைக் கண்டு முகம் சுழித்தனர்.
இதுகுறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் பக்தர்கள் புகார் செய்தனர்.
தேவஸ்தான அதிகாரிகள் போட்டோ ஷூட் நடத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனைக் கண்ட ஒரு சில பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
சமூக வலைதளங்களில் வம்சி நாத்ரெட்டிக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 56,952 பேர் தரிசனம் செய்தனர். 21,714 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.84 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 13 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.






