என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • லெதர்பேக் ஆமைகளுக்கு எலும்புக்கூடு இல்லை.
    • விசாகப்பட்டினம் கடற்கரையில் லெதர்பேக் ஆமை கடைசியாக 2016-ம் ஆண்டு வெளியே வந்தது.

    திருப்பதி:

    உலகின் மிகப்பெரிய ஆமை இனமான லெதர்பேக் கடல் ஆமை 7 ஆண்டுகளுக்குப் பிறகு விசாகப்பட்டினம் கடற்கரையில் அரிதாகத் தோன்றியது.

    தண்டதி கடற்கரையில் மீனவர்கள் குழு ஒன்று கயிற்றில் சிக்கியிருந்த ஆமையைக் கண்டுபிடித்தனர். அதை மீட்டு கடலில் விட்டனர். வனவிலங்கு பாதுகாவலர் ஒருவர் ஆமையை பிடித்து கடலில் விடும் வீடியோ காட்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

    இதனால் லெதர்பேக் ஆமை பலரது கவனத்தைப் பெற்றது.

    "எங்கள் பகுதியில் லெதர்பேக் ஆமைகள் இருப்பது அசாதாரணமானது அல்ல என்றாலும், கடற்கரையோரங்களில் அவற்றைக் காண்பது அரிது.

    ஆலிவ் ரிட்லி போன்ற மற்ற உயிரினங்களை போல் இல்லாமல், லெதர்பேக் ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு பொதுவாக வருவதில்லை.

    லெதர்பேக் ஆமைகளுக்கு எலும்புக்கூடு இல்லை. மாறாக, அவற்றின் கார்பேஸ் எண்ணெய் சதை மற்றும் நெகிழ்வான, தோல் போன்ற தோலால் மூடப்பட்டிருக்கும்.

    இந்தியாவில், அவை அந்தமான் தீவிலும், நிக்கோபார் தீவு மற்றும் கிரேட் நிக்கோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன.

    "பொதுவாக நமது மீனவர்கள் தங்களுக்குப் பயன்படாத மீன்களைப் பிடிப்பதில்லை. பல்வேறு மீனவர்கள் ஆமைகளை விடுவித்து, அவற்றை மீட்டு பாதுகாப்பாக நீரில் விடுகிறார்கள்.

    விசாகப்பட்டினம் கடற்கரையில் லெதர்பேக் ஆமை கடைசியாக 2016-ம் ஆண்டு வெளியே வந்தது. லெதர்பேக் ஆமைகள் அழியும் நிலையில் உள்ளன.

    கடல் மாசுபாடு மற்றும் குப்பைகள், சில சமயங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன என கடல் உயிரியலாளர் ஸ்ரீசக்ரபிரணவ் தெரிவித்தார்.

    • சந்திரயான் 3 விண்ணில் செலுத்துவதற்கு தயாராக உள்ளது.
    • அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சந்திரயான்-3 ஐ விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக்கட்ட பணியை இஸ்ரோ முடித்துள்ளது. சந்திரயான்-2 பயணத்தின் தொடர்ச்சியாக இந்த சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விண்கலம் ஆனது தரை இறங்குதல் (லேண்டர்) மற்றும் உலாவுதல் (ரோவர்) கட்டமைப்புகளை கொண்டுள்ளது.

    இதற்கிடையே, விண்கல பரிசோதனை பணிகள் நடைபெற்று வந்தன. சந்திரயானை ஏந்திச் செல்லும் மார்க்-3 ராக்கெட்டின் பரிசோதனையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும்.

    இந்நிலையில், இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறுகையில், நிலவுக்குச் செலுத்துவதற்கு சந்திரயான்-3 விண்கலம் தயாராக உள்ளது. ஜூலை மாதம் 13-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் என தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் அதிக கனம் வாய்ந்த மார்க்-3 என்ற ராக்கெட் உதவியுடன் விண்கலம் செலுத்தப்படும்.

    • காட்டு யானைகள் அடிக்கடி பலமனேர் மற்றும் பங்காரு பாளையம் பகுதியில் நடமாடி வருகின்றன.
    • சரணாலயத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் தமிழக எல்லையை ஒட்டியுள்ள கவுண்டன்யா வனவிலங்கு சரணாலயத்தில் 200 காட்டு யானைகள் உள்ளன.

    இந்த காட்டு யானைகள் அடிக்கடி பலமனேர் மற்றும் பங்காரு பாளையம் பகுதியில் நடமாடி வருகின்றன.

    கடந்த வாரம் பலமனேரிலிருந்து சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடந்த 3 காட்டு யானைகள் லாரி மோதி பரிதாபமாக இறந்தன.

    இதனைத் தொடர்ந்து யானைகள் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.

    இதற்கு இடையே இந்த வழியாக சென்னை பெங்களூர் அதிவிரைவு சாலை பணிகள் நடந்து வருகிறது.

    அதிவிரைவு சாலையின் குறுக்கே யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர்.

    சென்னை-பெங்களூர் விரைவுச் சாலையில் யானைகள் அதிகளவு கடக்கும் பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்.

    அதிவிரைவுச் சாலையில் எந்த இடத்திலும் யானைகள் வராமல் இருக்க பழைய தண்டவாளங்களை வாங்கி அதனை தடுப்புகளாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் சரணாலயத்தை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளுக்கும் யானைகள் வருவதை தடுக்க முடியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருமலையில் இந்து மதத்தை தவிர வேற்றுமத பிரச்சாரம் செய்யும் வகையில் சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையில் இந்து மதத்தை தவிர வேற்று மத பிரச்சாரம் செய்யும் விதமாக அதன் சின்னங்கள், கொண்டு வரவும் பயன்படுத்தவும், வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பதி மலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் வழங்கப்பட்ட டீ கப்பில் சிலுவையின் அடையாளமாக டீ என்ற எழுத்து அச்சிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, ஒரு கடையில் சிலுவை வடிவிலான டீ என அச்சிடப்பட்ட டீ கப்புகள் இருந்தன அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர்.

    திருப்பதி மலையில் வேற்றுமத அடையாளங்கள் எக்காரணத்தை கொண்டும் இருக்க கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • நஜீம் தரப்பினர் ரூ 1 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சூட்கேசில் வைத்துக் கொடுத்தனர்.
    • 90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக வேலை செய்து வருபவர் அணில் குமார்.

    மேற்கு கோதாவரி மாவட்டம் பீமா வரத்தை சேர்ந்த நஜிம், சக்கரபாணி இருவரும் வங்கி மேலாளர் அணில் குமாரை சந்தித்தனர். தாங்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ. 1 கோடி தருகிறோம் பதிலுக்கு 500 ரூபாய் நோட்டுகள் ரூ.90 லட்சம் கொடுத்தால் போதும் என ஆசை வார்த்தை கூறினர்.

    இதையடுத்து அணில் குமார் தனது நண்பர் அணில் என்பவருடன் சேர்ந்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை ஒரு பெட்டியில் வைத்து எடுத்துக்கொண்டு பார்வதிபுரம் வந்தனர்.

    அப்போது அங்கு வந்த நஜீம், சக்கரபாணியிடம் ரூ.90 லட்சத்தை கொடுத்தனர். பதிலுக்கு நஜீம் தரப்பினர் ரூ 1 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை சூட்கேசில் வைத்துக் கொடுத்தனர்.

    பின்னர் வீட்டிற்கு வந்து சூட்கேஸை திறந்து பார்த்தபோது ரூபாய் நோட்டின் மேல் பகுதியில் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகளும் அடியில் கள்ள நோட்டுகளும் வைத்து ஏமாற்றியது தெரிய வந்தது.

    இதுகுறித்து அணில் குமார் பார்வதிபுரம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து நஜீம் சக்கரபாணி ஆகியோரை கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து 90 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
    • ஊழலில் ஈடுபட்ட தேவஸ்தான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சியின் பிராமணர் சமிதி மாநில தலைவர் ராம் பிரசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவில் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    இந்த நிதியில் ரூ.100 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. ஊழல் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மடாதிபதிகள் கேள்வி எழுப்பிய பிறகு தேவஸ்தானம் சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை குறித்து விசாரிக்க திருப்பதி தேவஸ்தான தன்னாட்சி அமைப்புக்கு அதிகாரம் இல்லை. மேலும் பயனாளிகளின் பெயரை வெள்ளை அறிக்கையில் வெளியிடாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

    ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஊழலில் ஈடுபட்ட தேவஸ்தான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாக்குளம் அந்தர் வேதி அன்னவரம் கனகதுர்க்கம்மா கோவில்களில் இருந்த வெள்ளி கவசங்கள் திருடு போய் உள்ளது.

    கோவில்களுக்கு வரும் வருமானம் எங்கே செல்கிறது என தெரியவில்லை.

    இதனால் அர்ச்சகர்களுக்கு சம்பளம் வழங்காமல் மாநில அரசு மோசடி செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுவனை கவ்வி சென்று வனப்பகுதியில் விட்ட சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
    • நடைபாதையில் பக்தர்கள் தனியாக செல்லாமல் 200 பேர் கூட்டமாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து சென்ற 3 வயது சிறுவன் கவுசிக்கை கடந்த 22-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது.

    பொதுமக்கள், போலீசார் சத்தம் போட்டதனால் சிறுவனை வனப்பகுதியில் சிறுத்தை விட்டு சென்றது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் சிறுவனை கவ்வி சென்று வனப்பகுதியில் விட்ட சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.

    பிடிபட்ட சிறுத்தை மீண்டும் பாகரா பேட்டையில் உள்ள சியாமளா வனச்சரகத்தில் கொண்டு சென்று விடப்பட்டது.

    இந்நிலையில் பிடிபட்ட சிறுத்தை ஒன்றரை வயது அடங்கிய குட்டி என்பதால் இது தாய் சிறுத்தையுடனே சுற்றி திரிந்திருக்கும்.

    எனவே குட்டி சிறுத்தையை பிடித்த நிலையில் தாய் சிறுத்தை அந்த பகுதியிலேயே சுற்றி வரும் என்பதால் அந்த சிறுத்தை பிடிப்பதற்காக "ஆபரேஷன் சிறுத்தை" திட்டத்தை தொடர்ந்து தேவஸ்தான வனத்துறையையும்,மாநில வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

    மேலும் திருப்பதி நடைபாதையில் உள்ள காளி கோபுரம் முதல் நரசிம்ம சுவாமி சன்னதி வரை இருபுறத்திலும் 150 கேமராக்களை கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    சில இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் பக்தர்கள் தனியாக செல்லாமல் 200 பேர் கூட்டமாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    • திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.
    • வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தூப தீப நெய்வேத்திய சமர்ப்பணங்களுக்கு நாட்டு பசுக்கள் மூலம் பெறப்பட்ட பால் தயிர் வெண்ணெய் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

    இதற்கு 500 நாட்டுப் பசுக்கள் தேவையாக உள்ளது. தற்போது திருப்பதி கோசாலையில் உயர் ரகத்தை சேர்ந்த 200 நாட்டு பசு உள்ளன.

    மேலும் 300 உயர் ரக நாட்டுப் பசுக்களை நன்கொடையாக வழங்க பக்தர்கள் தயாராக உள்ளனர்.

    இந்நிலையில் பால் உற்பத்திக்காக தேவஸ்தான கோசாலையில் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

    அதிக பால் உற்பத்தி கொடுக்கும் உயர்ரக நாட்டு பசுக்களை வாடகைத்தாய் போன்ற முறையில் கலப்பினங்களாக உற்பத்தி செய்ய தேவஸ்தானம் முடிவு செய்தது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.

    வட மாநிலங்களில் உள்ள உயர்ரக நாட்டு பசுக்களின் கருமுட்டைகளை சேகரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு வேறு வகையான உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் அவை கருத்தரிக்க செய்யப்பட்டன.

    அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயரக நாட்டு பசுக்களின் கர்ப்பப்பையில் செலுத்தி கோசாலையில் வளர்த்து வருகின்றனர் .

    நாட்டிலேயே முதல்முறையாக திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் பசு வாடகைத்தாய் முறையில் சாகிவால் நாட்டு இனத்தைச் சேர்ந்த கன்றை ஈன்றுள்ளது.

    இந்த கன்று குட்டிக்கு பத்மாவதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    அடுத்த 5 ஆண்டுகளில் 324 உயர் ரக சாகிவால் கன்றுகளை கோசாலையில் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கடை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், லிங்கங்குண்டலா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா (வயது 13).

    குண்டூர் கலெக்டர் அலுவலகம் அருகே டீ கடை ஒன்று உள்ளது.

    நேற்று இரவு டீக்கடை உரிமையாளர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றார்.

    மணிகண்டா நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். டீக்கடையில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது வெளிச்சம் இல்லாததால் டீக்கடையில் இருந்த மின் விளக்கின் சுவிட்ச் போட்டு உள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று காலை டீக்கடை உரிமையாளர் கடையை திறக்க வந்தார். கடை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது மணிகண்டா மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி ஜோதி தான் பீரோவில் இருந்த பணத்தை திருடி இருப்பார் என எண்ணி அவரிடம் சண்டை போட்டு வந்தார்.
    • கணவர் கொடுத்த சிக்கனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஜோதி வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், கோட்டே முக்காலை சேர்ந்தவர் அனுமந்தராவ். இவரது மனைவி ஜோதி.

    அனுமந்த ராவுக்கும், ஜோதிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.

    அனுமந்தராவின் தாய் சித்தேம்மா, சகோதரர் கோடீஸ்வர ராவ் ஆகியோர் ஜோதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.

    இந்த நிலையில் அனுமந்த ராவ் பீரோவில் வைத்திருந்த பணம் திடீரென காணாமல் போனது. மனைவி ஜோதி தான் பீரோவில் இருந்த பணத்தை திருடி இருப்பார் என எண்ணி அவரிடம் சண்டை போட்டு வந்தார். ஜோதி பணத்தை எடுக்கவில்லை என கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அனுமந்த ராவ் ஓட்டலில் இருந்து சிக்கன் வறுவலை வாங்கினார். அதில் விஷத்தை கலந்து சாப்பிடுமாறு கொடுத்தார்.

    கணவர் கொடுத்த சிக்கனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ஜோதி வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.

    இதையடுத்து ஜோதியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஜோதியிடம் விசாரணை நடத்தினர். கணவர் கொடுத்த சிக்கன் வறுவலை சாப்பிட்டதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ஜோதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    போலீசார் ஜோதியின் கணவர் அனுமந்த ராவ், அவரது தாய் சித்தேம்மா, சகோதரர் கோடீஸ்வர ராவ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
    • சிறுத்தை நடமாடுவதை கண்ட பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி மலைப்பாதையில் நேற்று முன்தினம் திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை கவுஷிக் என்ற சிறுவனை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றது.

    இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். அங்கிருந்த பக்தர்கள் மற்றும் போலீசார் கத்தி கூச்சலிட்டு கற்களை வீசி தாக்கியதால் சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது.

    சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

    சிறுத்தை தப்பிச் சென்ற பகுதியில் கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கவனித்தனர். அப்போது சிறுத்தை அப்பகுதியில் நடமாடுவது கேமராவில் பதிவானத.

    இதையடுத்து சிறுத்தை நடமாடுவதை கண்ட பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. இன்று அதிகாலை சிறுவனை தாக்கிய சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.

    கூண்டில் சிக்கிய சிறுத்தையை வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைப்பதா அல்லது கடந்த வனப்பகுதியில் விடுவதாக என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் தாய் சிறுத்தை சுற்றி வருவதால் பக்தர்கள் தனித்தனியாக செல்லாமல் கூட்டமாக செல்ல வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில்மாலை 6 மணி வரையும், அலிப்பிரி நடைபாதையில் இரவு 10 மணி வரையும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் இரவு 7 மணிக்கு மேல் 200 பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்கள் செல்லும் அலிப்பிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைக்கு வனவிலங்குகள் வராதபடி நடைபாதை முழுவதும் முழுவதும் இரும்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி மலை பாதையில் சிறுவனை கவ்வியபடி சிறுத்தைகாட்டுக்குள் ஓடியது அதனை தொடர்ந்து காவலர்கள் விரட்டிச் சென்றனர் .

    சுமார் 120 அடி தூரம் வரை சிறுவனை வாயில் கவ்வியபடி சிறுத்தை ஓடியது .

    சிறுவனின் பெற்றோர்கள் அலறிக் கூச்சலிட்டனர், மலைப்பாதையில் இருந்த பக்தர்கள் பலர் கோவிந்தா கோஷம் எழுப்பினர். அப்போது சிறுத்தை சிறுவனை அங்கே போட்டு விட்டு சென்றது.

    ஏழுமலையான் தான் சிறுத்தை பிடியில் இருந்து குழந்தையை காப்பாற்றினார்.

    இப்போது அதே சிறுத்தை ஒரே நாளில் சிக்கி உள்ளது. எல்லாம் ஏழுமலையான் கருணை என்றனர்.

    • சுகாசினிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை அளித்தும் உடல்நிலை சீராகவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பெருப்பள்ளி மண்டலம் புதிய காரே கூடேமை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணா ராவ் (வயது 40). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி சுகாசினி (35). மகன் கார்த்திக், மகள் அமிர்தா (16). கார்த்திக் பி.டெக் முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    சுகாசினிக்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை அளித்தும் உடல்நிலை சீராகவில்லை.

    இதனால் தனது மனைவி விரைவில் இறந்து விடுவாரோ என எண்ணி வெங்கடகிருஷ்ணராவ் மனவேதனை அடைந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வெங்கடகிருஷ்ண ராவ் தனது மனைவி மகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    கிருஷ்ணா மாவட்டம், திருவூருக்கு சென்று சாப்பிடுவதற்கு தேவையான உணவுப் பொருட்கள், குளிர்பானம் மற்றும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள கயிறு ஆகியவற்றை வாங்கினார்.

    பின்னர் ஊருக்கு திரும்பிய 3 பேரும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மாந்தோப்பிற்கு சென்றனர். அங்குள்ள மரத்தில் தனித்தனியாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    வெளியூர் சென்ற வெங்கடகிருஷ்ண ராவ் குடும்பத்தினர் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவர்களை பல இடங்களில் தேடிப் பார்த்தனர்.

    இரவு நீண்ட நேரமாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலை மீண்டும் தேடிப் பார்த்தபோது மாந்தோப்பில் 3 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரின் பிணத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ×