என் மலர்
இந்தியா

திருப்பதியில் சிறுவனை கவ்வி சென்ற 1½ வயது குட்டியின் தாய் சிறுத்தையை பிடிக்க கூண்டு
- சிறுவனை கவ்வி சென்று வனப்பகுதியில் விட்ட சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
- நடைபாதையில் பக்தர்கள் தனியாக செல்லாமல் 200 பேர் கூட்டமாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி மலைப்பாதையில் பாதயாத்திரையாக நடந்து சென்ற 3 வயது சிறுவன் கவுசிக்கை கடந்த 22-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று கவ்வி சென்றது.
பொதுமக்கள், போலீசார் சத்தம் போட்டதனால் சிறுவனை வனப்பகுதியில் சிறுத்தை விட்டு சென்றது. இதனைத் தொடர்ந்து அந்த சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறுவனை கவ்வி சென்று வனப்பகுதியில் விட்ட சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
பிடிபட்ட சிறுத்தை மீண்டும் பாகரா பேட்டையில் உள்ள சியாமளா வனச்சரகத்தில் கொண்டு சென்று விடப்பட்டது.
இந்நிலையில் பிடிபட்ட சிறுத்தை ஒன்றரை வயது அடங்கிய குட்டி என்பதால் இது தாய் சிறுத்தையுடனே சுற்றி திரிந்திருக்கும்.
எனவே குட்டி சிறுத்தையை பிடித்த நிலையில் தாய் சிறுத்தை அந்த பகுதியிலேயே சுற்றி வரும் என்பதால் அந்த சிறுத்தை பிடிப்பதற்காக "ஆபரேஷன் சிறுத்தை" திட்டத்தை தொடர்ந்து தேவஸ்தான வனத்துறையையும்,மாநில வனத்துறை அதிகாரிகளும் இணைந்து செயல்படுத்தி வருகின்றனர்.
மேலும் திருப்பதி நடைபாதையில் உள்ள காளி கோபுரம் முதல் நரசிம்ம சுவாமி சன்னதி வரை இருபுறத்திலும் 150 கேமராக்களை கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
சில இடங்களில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. நடைபாதையில் பக்தர்கள் தனியாக செல்லாமல் 200 பேர் கூட்டமாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து அனுப்பப்பட்டு வருகின்றனர்.






