என் மலர்
இந்தியா

திருப்பதி மலைப்பாதையில் சிறுவனை கவ்விய சிறுத்தை கூண்டில் சிக்கியது
- சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
- சிறுத்தை நடமாடுவதை கண்ட பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன.
திருப்பதி:
திருப்பதி மலைப்பாதையில் நேற்று முன்தினம் திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை கவுஷிக் என்ற சிறுவனை கவ்விக்கொண்டு வனப்பகுதிக்கு இழுத்துச் சென்றது.
இதில் சிறுவன் படுகாயம் அடைந்தான். அங்கிருந்த பக்தர்கள் மற்றும் போலீசார் கத்தி கூச்சலிட்டு கற்களை வீசி தாக்கியதால் சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதிக்குள் தப்பி சென்றது.
சிறுவனை தாக்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
சிறுத்தை தப்பிச் சென்ற பகுதியில் கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கவனித்தனர். அப்போது சிறுத்தை அப்பகுதியில் நடமாடுவது கேமராவில் பதிவானத.
இதையடுத்து சிறுத்தை நடமாடுவதை கண்ட பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்பட்டன. இன்று அதிகாலை சிறுவனை தாக்கிய சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.
கூண்டில் சிக்கிய சிறுத்தையை வெங்கடேஸ்வரா வன உயிரியல் பூங்காவில் அடைப்பதா அல்லது கடந்த வனப்பகுதியில் விடுவதாக என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் தாய் சிறுத்தை சுற்றி வருவதால் பக்தர்கள் தனித்தனியாக செல்லாமல் கூட்டமாக செல்ல வேண்டுமென அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையில்மாலை 6 மணி வரையும், அலிப்பிரி நடைபாதையில் இரவு 10 மணி வரையும் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் இரவு 7 மணிக்கு மேல் 200 பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்கள் செல்லும் அலிப்பிரி, ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைக்கு வனவிலங்குகள் வராதபடி நடைபாதை முழுவதும் முழுவதும் இரும்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மலை பாதையில் சிறுவனை கவ்வியபடி சிறுத்தைகாட்டுக்குள் ஓடியது அதனை தொடர்ந்து காவலர்கள் விரட்டிச் சென்றனர் .
சுமார் 120 அடி தூரம் வரை சிறுவனை வாயில் கவ்வியபடி சிறுத்தை ஓடியது .
சிறுவனின் பெற்றோர்கள் அலறிக் கூச்சலிட்டனர், மலைப்பாதையில் இருந்த பக்தர்கள் பலர் கோவிந்தா கோஷம் எழுப்பினர். அப்போது சிறுத்தை சிறுவனை அங்கே போட்டு விட்டு சென்றது.
ஏழுமலையான் தான் சிறுத்தை பிடியில் இருந்து குழந்தையை காப்பாற்றினார்.
இப்போது அதே சிறுத்தை ஒரே நாளில் சிக்கி உள்ளது. எல்லாம் ஏழுமலையான் கருணை என்றனர்.






