என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • மனம் விசித்திரமான குணம் கொண்டது.
    • கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மனம் கஷ்டப்படும்படியான சம்பவம் ஏதாவது நடந்துவிட்டால் அதை பற்றியே சிந்தித்து புலம்பிக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறர் சாதாரணமாக கருதும் விஷயத்தை கூட இவர்கள் மனதில் போட்டு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

    அதுவரை நடந்த சம்பவத்தை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். `நாம் இப்படி செய்திருக்கலாமோ? அப்படி செய்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காதோ? அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ?' என்று சிந்தித்து மனதை ரணமாக்கிவிடுவார்கள்.

    மனம் விசித்திரமான குணம் கொண்டது. மனதை உலுக்கும் ஏதாவதொரு சம்பவம் நடந்துவிட்டால் உடனே சிந்திக்க ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு கூடுமானவரை மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ காரணமாக அமைந்துவிடும். மூளையின் செயல்பாடுகளையும் முடங்க செய்து விடும். அதனால்தான் மன நலன் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    அதிகம் சிந்திப்பது மன நலனுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். மன அழுத்தமும், பதற்றமும் உடல் செயல்பாடுகளில் தாக்கத்தை உண்டாக்கும். மனம் கட்டுக்குள் இல்லாமல் போனால் சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மனம் கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும் சமயங்களில் சிந் தனைகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியே விட வேண்டும். அது மனதை சாந்தப்படுத்த உதவும். தியானம் செய்யலாம். அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமர்ந்து ஓய்வும் எடுக்கலாம்.

    அந்த சமயத்தில் கூட தேவையற்ற சிந்தனை எழுந்தால் வேறு ஏதாவதொரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம். மற்றவர்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயத்தை செய்து கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தால் அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும். விசித்திரமான ஆற்றலையும் தரும். எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் உணருவீர்கள்.

    சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயத்திற்கெல்லாம் சிலர் சட்டென்று பதற்றமடைந்து விடுவார்கள். நடந்ததையே மிகையாக சிந்திப்பதுதான் அதற்கு காரணம். சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். மனதை ஆழ்ந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

    ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மனம் வேதனைக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தலாம். சைக்கிள் ஓட்டலாம். நடக்கலாம். மனதை திசைதிருப்பக்கூடிய ஏதாவதொரு செயலில் ஈடுபடலாம். அது மூளை தசைகளை தளர்த்த உதவும்.

    மனதில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும் போது சந்தோஷமான தருணங்களை பற்றி நினைத்து பார்ப்பது சாத்தியமில்லாததுதான். ஆனால் குறைந்தபட்சம் முயற்சி செய்தாவது பார்க்கலாம். மன அழுத்தத்திலோ, கவலையிலோ இருக்கும்போது பலவீனங்களை அடையாளம் கண்டு அதனை சரி செய்வதற்கான முயற்சியில் கவனம் செலுத்த முடியும்.

    கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைவில் வைத்திருந்தால், ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. அது தொடர்ந்து துயரத்தில் மூழ்க வைத்துவிடும். மன நலனையும் பாதிக்கும்.

    பழைய விஷயங்களை மனதை விட்டு விரட்டி, எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பழக வேண்டும். அந்த சிந்தனையும் கூட அதிக நேரம் நீடிக்க கூடாது. எப்போதும் இயல்பாக இருப்பதுதான் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    • பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்.
    • தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

    விலைவாசி உயர்வு, குடும்பச் சூழல் மற்றும் எதிர்காலத்தை குறித்த பயம் போன்ற பல காரணங்கள் மக்களை நேரம் காலம் பார்க்காமலும், இரவு பகல் என்று நினைக்காமலும் வேலை செய்ய வைக்கிறது. ஆனால், இரவு நேரத்தில் வேலை செய்பவர்களுக்கு உடல் நலக்கோளாறுகள் மற்றும் மன ரீதியான கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகமாகவே ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ந்து இரவு நேரத்தில் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை இப்போது காண்போம்.

    பகல் நேரத்தில் வேலைசெய்யும் பெண்களை விட இரவு நேரத்தில் வேலை செய்யும் பெண்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருக்கிறது. அதனால் இரவுநேர வேலையை குறைத்துக்கொள்வது நல்லது. எப்படி குறைக்கலாம் என்று தானே கேட்கிறீர்கள். மாதம் முழுவதும் இரவுநேர வேலை பார்ப்பதைவிட மாதம் ஒருமுறை மட்டும் இரவுநேர வேலை பார்க்கலாம்.

     2012-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இரவுநேர வேலை பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தூக்கம் இல்லாததால் ரத்த அழுத்தம் அதிகமாகி மாரடைப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    இரவுநேரத்தில் வேலை பார்ப்பதால் மனதில் எதிர்மறையான ஆற்றல்கள் வெளிப்படுகிறது. அதனால் உடலும், மனதும் சோர்வடையும்.

    இரவுநேரத்தில் நீங்கள் எவ்வளவு கவனமாக வேலைபார்த்தாலும் சில தடுமாற்றம் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உடல் ஓய்வெடுக்கச் சொல்லும். அந்த நேரத்தில் உங்கள் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இரவுநேரத்தில் வேலை செய்து பகலில் தூங்குவதால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சினை ஏற்படும். வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் குடல் பிரச்சினை, இரைப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்தும்.

     நீங்கள் இரவில் வேலை செய்துவிட்டு பகலில் நேரத்தில் தூங்கினாலும் உங்களால் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்ல முடியாது. இதனால் நாளடைவில் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

    இரவுநேரத்தில் வேலை செய்பவர்கள் காய்கறிகள், பழங்கள் என்று ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

     இரவுநேரத்தில் வேலைபார்ப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

    • இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.
    • இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும்.

    உடலில் ஓய்வு எடுக்காமல் வேலை செய்வது இதயம். அது இடைவிடாமல் துடித்துக்கொண்டிருப்பதால் நம் ஓட்டம் தடைபடாமல் இருக்கிறது. தாயின் கருவறையில் கருவானது 5 வார வளர்ச்சி பெற்றவுடன் இதயமாக உருவாகப்போகும் திசுக்கள் துடிக்கத்தொடங்கும்.

    கடைசி வரை இந்தத்துடிப்பு நிற்காது. இந்த திசுக்கள் குழாய் வடிவம் அடைந்து மடிக்கப்பட்ட நிலையில் இதயமானது உருவம் பெறுகிறது. கருவுக்கு உணவும் பிராண வாயுவும் அளித்து கழிவுப் பொருட்களை நீக்குவது தொப்புள்கொடியில் உள்ள ரத்தக் குழாய்களும் நஞ்சும்தான்.

    பிறந்த பிறகுதான் நாம் நுரையீரல் மூலம் சுவாசிக்கிறோம், பிராண வாயுவைப் பெறுகிறோம். அதுவரை ரத்தம் இதயத்தில் இருந்து கருவின் நுரையீரலுக்கு செல்லாமல் மாற்றுப் பாதையான டக்டஸ் ஆர்டீரியோஸிஸ் என்பதன் மூலம் சென்று தொப்புள்கொடி வழியாகச் சுத்திகரிக்கப்படுகிறது.

     ஆனால் குழந்தை பிறந்து முதல் மூச்சு எடுக்கும போதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்கிறது. நுரையீரல் முதன் முறையாக விரியும்போது அந்த சின்ன இதயம் லேசாக திரும்புகிறது. அப்போது அந்த மாற்றுவழிப் பாதையான டக்டஸ் முறுக்கிக் கொண்டு மூடிவிடுகிறது. எத்தனை அழகான திறமையான வடிவமைப்பு இயற்கையால் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    இதயம் ஒரு பம்ப். நமது ஜீவ நதிகளான ரத்த நாளங்கள் மூலம் நம் உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் உயிர் வாழத் தேவையானவற்றை அளிக்கிறது. இந்த பம்ப்பின் விசை இதயத் துடிப்புதான். இதை அளிப்பவை வேகஸ், சிம்பதடிக் என்கிற இரண்டு வகை நரம்புகள்தான். வேகஸ் துடிப்பைக் குறைக்கும், சிம்பதெடிக் அதிகரிக்கும். துடிப்பைத் தீர்மானிப்பவை மூன்று நோட்ஸ்.

    வீடுகளில் மின்தடை ஏற்படும்போது அவசரத் தேவைக்காக ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வைத்திருக்கிறோம் அல்லவா? அதேபோல் ஒரு நோட் தடைபட்டால், அடுத்தது செயல்படத் தொடங்கும். ஆனால், அதே அளவில் இருக்காது. இவை மூன்றும் செயல் இழந்தாலும் இதயத் தசை தானாக நரம்புகளின் உதவியின்றிச் செயல்பட முடியும்.

    ஆனால், அப்போது இதயம் துடிப்பது நிமிடத்துக்கு 40 முறை மட்டுமே. தேவை அதிகரித்தாலும் துடிப்பு அதிகமாகாது. இதயம்தான் உணர்வுகளின் இருப்பிடம் என்பது தவறான தகவல்.

    மூளைதான் உணர்வுகளை ஏற்படுத்தி அவற்றின் தேவைக்குரிய மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகிறது. மன அழுத்தம், பயம், அதிர்ச்சி, ஆனந்தம் போன்ற பல உணர்வுகளுக்குத் தக்கவாறு இதயத்தை செயல்படச் செய்கிறது. இதயம், மூளையின் உதவியின்றி செயல்படமுடியும். மூளை செயலிழந்த நிலையை அடைந்தாலும் இதயத்தையும் மற்ற உறுப்புகளையும் தானம் செய்ய முடியும்.

    • சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.
    • அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.

    சாப்பிட்ட உணவு உமிழ்நீருடன் கலந்து, முதல்கட்ட செரிமானம் முடிந்ததும், அதை இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது முக்கால் அடி நீளமுள்ள உணவுக் குழாய். இதன் உள்பக்கம் சளி சவ்வு உள்ளது. இது உணவுக்குழாய்க்கு ஒரு கவசம் போல அமைந்து பாதுகாப்பு தருகிறது.

    உணவுக்குழாயின் மேல் முனையிலும் கீழ் முனையிலும் சுருக்குத் தசையால் ஆன இரண்டு கதவுகள் உள்ளன. மேல் முனையில் இருக்கும் கதவு, நாம் விழுங்கும் உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது, கீழ் முனையில் இருக்கும் கதவு இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்த கதவு, உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஓர் எல்லைக்கோடு போல் செயல்படுகிறது.

    நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் சுரக்கும் அமிலமானது, இந்த எல்லைக்கோட்டை கடந்து, உணவுக்குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம், உணவுக் குழாயின் தசைகள் காரம் நிறைந்த, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தைத் தாங்கும் சக்தி அவற்றுக்கு இல்லை.

     இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும். வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு வலது பக்கமாகப் படுத்தால், இரைப்பையைச் சுற்றியுள்ள இடது பக்கக் குடல் இரைப்பையை அழுத்தும். அப்போது இரைப்பையில் நிரம்பி இருக்கிற உணவும் அமிலமும் உணவுக் குழாய்க்குச் சமமாக வந்துவிடும்.

    இதனால், இவை இரண்டும் உணவுக் குழாய்க்குள் எளிதாகப் புகுந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். முக்கியமாக எண்ணெயில் பொரித்த, வறுத்த, மசாலா மிகுந்த உணவைச் சாப்பிட்டதும் இரவில் படுத்துவிட்டால், இந்தத் தொல்லை ஏற்படும்.

    மாறாக, இடது பக்கமாகப் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவியீர்ப்பு விசை காரணமாக இரைப்பையில் முழுவதும் இறங்கிவிடுவதாலும், உணவுக் குழாய் மேலே இருப்பதாலும், இரைப்பையை எதுவும் அழுத்துவதில்லை என்பதாலும். அமிலமும் உணவும் மேலேற வழியில்லை. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை. சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.

    குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து படுக்கச் செல்ல வேண்டும். உணவைச் சாப்பிட்ட பின்னர் குனிந்து வேலை செய்யக்கூடாது, கனமான பொருளைத் தூக்கக் கூடாது, உடற்பயிற்சி செய்யக் கூடாது, படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக் கொள்வது நல்லது என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்வது, உணவுக் குழாய்க்குள் அமிலம் தாவுவதைத் தடுக்கத்தான்.

    வலது பக்கமாகப் படுக்கும்போது உணவு நிரம்பிய இரைப்பை கல்லீரலை அழுத்தும். இடது பக்கமாகப் படுக்கும்போது கல்லீரலுக்கு அந்த அழுத்தம் இல்லை என்பதால், உணவுச் செரிமான நீர் சரியாக சுரந்து செரிமானத்தைச் சிறப்பாக ஊக்குவிக்கும். இடது பக்கமாகப் படுப்பது நிணநீர் சுழற்சியைத் தூண்டுவதால், உடல் அசுத்தங்கள் இதன் வழியாகவும் வெளியேற வாய்ப்பு கிடைக்கிறது. இதனால், ரத்தம் சீக்கிரம் சுத்தமாகிறது.

    வழக்கமான ரத்த சுற்றோட்டத்தையும் இது ஊக்குவிக்கிறது. ரத்த ஓட்டம் நன்றாக நடக்கும். இது இதயத்துக்கும் நல்லது. சிலருக்கு வலது பக்கமாகப் படுக்கும்போது நாக்கும், தொண்டைச் சதைகளும் தளர்ந்து, சுவாசக் குழாயை அழுத்தும். அப்போது குறட்டை ஏற்படும். இடது பக்கமாகப் படுப்பது, அந்த தசைகளை சமநிலையில் வைத்துக்கொள்ளும். இதனால் குறட்டை ஏற்படுவதில்லை.

    • பனி காலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும்.
    • அழற்சியின் காரணமாக காதுகளின் உள்பகுதி பாதிக்கப்படும்.

    பனிக்காலங்களில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் செழித்து வளரும். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். குளிர்காலங்களில் குழந்தைகள் மட்டுமில்லாமல். பெரியவர்களும் அடிக்கடி காதுகளில் ஏற்படும் நோய்த்தொற்றால் சிரமப்படுவார்கள். பாக்டீரியா மற்றும் வைரசால் ஏற்படும் அழற்சியின் காரணமாக காதுகளின் உள்பகுதி பாதிக்கப்படும்.

    இதுமட்டுமில்லாமல் தொண்டைப்புண், சுவாச நோய்கள் காரணமாகவும் காதுகளில் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதனால் காது வலி, காதுகளில் அடைப்பு ஏற்பட்ட உணர்வு, காதுகளில் இருந்து திரவம் அல்லது சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.

    காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகள் மூன்றும் ஒருங்கிணைந்தவையாகும். யூஸ்டாசியன் என்ற குழாய் முக்கையும், காதையும் இணைக்கிறது. வறண்ட குளிர் காற்றானது மூக்கு வழியாக உள்ளே போகும்போது. யூஸ்டாசியன் குழாய் தானாகவே மூடிக்கொள்ளும். இதன் காரணமாக காது சவ்வு இழுக்கப்பட்டு காது வலி உண்டாகும்.

     குழந்தைகளுக்கு இந்த குழாய் சிறியதாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் மென்திகக்கள் உள்ள காது பகுதிக்குள் ரத்த ஓட்டமும், அழுத்தமும் குறைவதாலும் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.

    குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் 40 வயதை கடந்த பெண்களுக்கும். சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் காற்றில் உள்ள மாசுக்களும் அலர்ஜி, சைனஸ் போன்ற தொந்தரவுகளை அதிகப்படுத்தும்.

    தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை மழை மற்றும் குளிர் காலமாகும். இந்த சமயத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    வாகனங்களில் பயணிக்கும்போதும், வெளியிடங்களுக்கு செல்லும்போதும் தலை. கழுத்து மற்றும் காதுகளை நன்றாக மூடும் வகையில் குல்லா, ஸ்கார்ப் ஆகியவற்றை அணிந்து செல்ல வேண்டும்.

    காது மாஸ்க், சுகாதாரமான பஞ்சு போன்றவற்றை பயன்படுத்தி காதுகளுக்குள் குளிர்ந்த காற்று செல்லாதவாறு தடுக்க வேண்டும்.

    இஞ்சி, பூண்டு, தூதுவளை, துளசி, எலுமிச்சை, மஞ்சள் போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.

    வெந்நீர் கொண்டு ஆவி பிடிப்பது, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளை குறைக்கும். அவ்வப்போது சூடான நீரில் உப்பு கலந்து தொண்டை நனையும் வகையில் வாய் கொப்பளிப்பது நல்லது.

    குளித்து முடித்ததும் காதுகளை மென்மையான பருத்தி துணியைக் கொண்டு ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும்.

    காதுகளுக்குள் ஊக்கு. பறவைகளின் இறகு, சாவி என கையில் கிடைத்தவற்றை கொண்டு சுத்தப்படுத்துவது ஆபத்தானது. காது வலி ஏற்படும்போது நீங்களாகவே சொட்டு மருந்து வாங்கி காதுகளில் விடுவதையும், இயர்பட்ஸ் கொண்டு காதுகளை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

    • தசை வலியில் இருந்து மீள வைக்கும்.
    • விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பிறகு ஐஸ் குளியல் எடுப்பது வழக்கம்.

    ரத்த ஓட்ட சுழற்சி

    குளிர் ஆரம்பத்தில் ரத்த நாளங்களை சுருக்கும் என்றாலும், ஒருகட்டத்திற்கு பிறகு உடல் முழுவதும் ரத்த ஓட்ட சுழற்சியை அதிகரிப்பதற்கு உதவும். ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி அதன் சுழற்சியை ஊக்குவிக்கும். தசைகள் மற்றும் திசுக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் விநியோகத்திற்கு உதவும்.

    தசை வலி

    ஐஸ் குளியலை மேற்கொள்வதற்கு முதன்மை காரணங்களில் ஒன்று, தசை வலியைக் குறைப்பதுதான். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியில் இருந்து மீள வைக்கும். குளிர்ந்த வெப்பநிலை ரத்த நாளங்களை கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. வீக்கம் மற்றும் தசை வலியை குறைக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பலரும் பயிற்சிக்கு பிறகு ஐஸ் குளியல் எடுப்பது வழக்கம்.

    மழையில் நனைவது பலருக்கும் பிடிக்கும். மழை நீரில் நடனமாடியபடி குளியல் போடுவதற்கும் விரும்புவார்கள். குளிர் தன்மை கொண்ட அந்த நீரில் குளிப்பது எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு ஜலதோஷம், சளி, இருமல் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். ஆனால் குளிர்ந்த நீரில் மேற்கொள்ளப்படும் ஐஸ் குளியல் மருத்துவ சிகிச்சைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

    கிரையோதெரபி என்று அழைக்கப்படும் இந்த ஐஸ் குளியல் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு பரீட்சயமானது. இந்த ஐஸ் குளியல் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டது. அதனை சரியான முறையில் பின்பற்றுவது பலன் அளிக்கும்.

    வளர்சிதை மாற்றம்

    ஐஸ் குளியல் தசை வலியையும், வீக்கத்தையும் குறைப்பதன் மூலம் விரைவாக உடலை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதாகவும், உடல் நலனை மேம்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

    அந்த நீரில் கலந்திருக்கும் குளிரின் தன்மை வீக்கத்தை குறைப்பதோடு தசைகளில் இருந்து வளர்சிதை மாற்றக் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கும் உதவுகிறது.

    சோர்வு

    உடற்பயிற்சியால் ஏற்படும் சோர்வை குறைப்பதில் ஐஸ் குளியலுக்கு முக்கிய பங்குண்டு. நரம்புத்தசை செயல்பாட்டை மேம்படுத்தவும் வழிவகுக்கும். அடுத் தடுத்து பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சிறப்பாக செயல்படுவதற்கு உதவும்.

    வலி நிவாரணம்

    குளிர் தன்மைக்கும், வலி நிவாரணத்துக்கும் இடையே நீண்ட கால தொடர்பு இருக்கிறது. ஐஸ் குளியல் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நரம்புகளை மரத்துப் போகச் செய்து, வலி மற்றும் அசவுகரியத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும்.

    கடுமையான காயங்கள், வீக்கம் போன்ற நாள்பட்ட நிலைமைகளை கையாளும் நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

    மனநிலை மேம்பாடு

    உடலின் இயற்கையான உணர்வுகளை வெளிப் படுத்தும் ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டிற்கும், குளிர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐஸ் குளியல் மன நிலையை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    குளிர்ந்த நீர் மூலம் கிடைக்கப்பெறும் உற்சாகமூட்டும் உணர்வு இயற்கையான மன அழுத்த நிவாரணியாக செயல்படக்கூடியது.

    ஐஸ் குளியல் தரும் தீமைகள்

    ஐஸ் குளியல் நன்மை பயக்கும் என்றாலும் அதிகமாகவோ, அடிக்கடியோ குளிர் நீரை உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான பயன்பாடு உடலின் சீரான செயல்பாட்டில் தலையிடக்கூடும்.

    குளிர்ச்சியை நீண்ட நேரம் தக்கவைப்பது உடலில் அழுத்தத்தை தூண்டும். இதய அமைப்பை பாதிக்கும். குளிர் குளியலால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்க்க அதன் கால அளவையும், வெப்பநிலையையும் கண்காணிப்பது அவசியம். அதிக நேரம் குளிப்பதோ, உடலை உறையவைக்கும் குளிர் வெப்பநிலையை அனுபவிப்பதோ கூடாது.

    ஐஸ் குளியல் அவசியமா என்றால் அதன் தேவை தனிநபர்களிடையே மாறுபடும். வயது, உடற்பயிற்சி நிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டும், மருத்துவ ஆலோசனை பெற்றும் அதனை பின்பற்றுவது நல்லது.

    • உறுப்புகளை பாதிக்க செய்து மரணத்திற்கு வித்திடுகிறது.
    • இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

    புற்றுநோய் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கொடிய நோயாக உருவெடுத்திருக்கிறது. உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கச்செய்து மரணத்திற்கு வித்திடுகிறது. உலகெங்கும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    வாழ்க்கை முறையும், உணவுப்பழக்கங் களும்தான் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. புற்றுநோய் அபாயத்தை குறைப்பது குறித்தும், தடுப்பது பற்றியும் ஆராய்வதற்கு உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியமும், அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து 2018-ம் ஆண்டில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு 94 ஆயிரத்து 778 பேரிடம் இருந்து தகவல்களை திரட்டியது. அவர்களின் உடல் எடை, உயரம், இடுப்பு சுற்றளவு, உணவுப்பழக்கம், உடல் இயக்கம் சார்ந்த விஷயங்களை மதிப்பிட்டு மதிப்பெண் வழங்கியது.

    தினமும் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு, அதனை அவர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கணக்கிட்டு அந்த மதிப்பெண்கள் மதிப்பிடப்பட்டன. முழுமையாக கடைப்பிடித்தவர்களுக்கு ஒரு புள்ளியும், பாதியளவு கடைப்பிடித்தவர்களுக்கு அரை புள்ளியும் வழங்கப்பட்டன. சரியாக கடைப்பிடிக்காதவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

    ஆய்வின் முடிவில் 7,296 பேர் அதாவது 8 சதவீதம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது கண்டறியப்பட்டது. அதில் அதிகம் பேர் மார்பகம், பரோஸ்டேட், பெருங்குடல் புற்று நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். ஆய்வுக்குழுவினர் கூறிய பரிந்துரைகளை முறையாக பின்பற்றாததுதான் இதற்கு காரணம்.

    4.5 முதல் 7 புள்ளிகள் வரை பெற்றவர்களுக்கு 3.5 புள்ளிகளை பெற்றவர்களை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவு என்பதை கண்டறிந்துள்ளனர். அதேபோல் 3.75 முதல் 4.25 புள்ளிகளுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் 8 சதவீதம் குறைவாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஒவ்வொரு புள்ளி அதிகரிப்பும் அனைத்து புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை7 சதவீதம் குறைக்கிறது. அதிலும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. சிறுநீரகம், உணவுக்குழாய், கருப்பை, கல்லீரல் மற்றும் பித்தப்பை புற்றுநோய்க்கான ஆபத்துக்களும் குறைகிறது என்ற முடிவுக்கு ஆய்வு குழுவினர் வந்துள்ளனர்.

    உடல் எடையை சீராக பராமரித்து ஆரோக்கியமான உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பின்னணியில் உடல் பருமன் புற்றுநோய்க்கு காரணமாக அமைந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புற்றுநோயை தடுக்க வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது உடல் ரீதியாக சுறு சுறுப்பாக இயங்க வேண்டும் என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு களை தவிர்ப்பது, சிவப்பு இறைச்சி வகைகளை வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் உண்ணாமல் இருப்பது, முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது, அதிக சூரிய ஒளி உடலில் படுவதை தவிர்ப்பது போன்றவற்றை அலட்சியம் செய்யாமல் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதற்கு ஆய்வுக்குழுவினர் 7 பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அவற்றை பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய் வருவதை குறைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இதுதொடர்பான விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். அவர்கள் பரிந் துரைத்த 7 விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    உடல் எடையை சீராக பராமரியுங்கள்.

    உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

    சிறந்த, சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.

    அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், பானங்களை தவிருங்கள்.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி வகைகளை குறைவாக உட்கொள்ளுங்கள்.

    சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் பருகாதீர்கள்.

    மது அருந்தாதீர்கள்.

    • தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் படிகிறது.
    • தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் கற்களாக படிகிறது.

    உடலில் தாதுக்குகள் அதிகப்படியாக சேரும்போது அந்த தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் படிகிறது. இவ்வாறு படியும் தாதுக்கள் அனைத்தும் சிறுநீரகத்தில் கற்களாக படிகிறது.

     சிறுநீரகத்தில் கல் பிரச்சினை இருந்தால் ஆக்சலேட் சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது. அதாவது திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை, இனிப்பு பண்டங்கள், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, வால்நட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய உணவுகளில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் இந்த உணவுகளை சிறுநீரக கல் உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

    மீன், ஆட்டு இறைச்சி, முட்டை, மாட்டு இறைச்சி ஆகியவற்றில் அதிகளவு புரதங்கள் இருப்பதால் சிறுநீரக கல் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதிகளவு புரதம் உள்ள உணவுகளை சாப்பிடும்போது சிறுநீரகத்தில் புதிதாக கற்கள் வளர வாய்ப்பு உள்ளது.

    சிறுநீரகத்தில் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் தக்காளியில் வைட்டமின் சி இருப்பதால் இது உடலில் ஆக்சலேட் அளவை அதிகரிக்கச்செய்து சிறுநீரக கல் பிரச்சினையை அதிகரிக்கச்செய்யும். தக்காளி மட்டுமல்லாமல் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் அவர்கள் தவிர்க்க வேண்டும்.

    சாதாரணமாக இருக்கும் நபர்கள் உப்பு அதிகம் உள்ள உணவுப்பொருளையும் மற்றும் இனிப்பு அதிகம் உள்ள உணவுப்பொருட்களையும் சாப்பிடக் கூடாத நிலையில் இருக்கும்போது சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் இந்த மாதிரி உணவுகளை சுத்தமாக தவிர்த்துவிட வேண்டும்.

    ஒருவேளை இதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொண்டால் அது சிறுநீரக கற்கள் அதிகமாக உருவாவதற்கு தூண்டும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும்போதுஅதிகம் தண்ணீர் உள்ள உணவுகளை மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் நாம் சிறுநீர்கழிக்கும் போது கல் அதன் வழியாக வெளியேற உதவியாக இருக்கும்.

    அதனால் வறட்சியான மற்றும் கடைகளில் விற்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    • மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
    • கர்பப்பை அழுக்கை வெளியேற்றும்.

    குழந்தைப்பேறு அளிக்கும் சாலியா விதை

    சாலியா விதை மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது என்று ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை லட்டை சாப்பிடுபவர்கள் கர்பப்பை அழுக்கை வெளியேற்றும். கர்பப்பையில் உள்ள நீர்க்கட்டி சரியாகும். கண்டிப்பாக கழிவுகள் வெளியாவது உறுதி. கண்டிப்பாக குழந்தை பிறக்கும்.

    ஒரு கப் சாலியா விதையை எடுத்து வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சாலியா விதையை மிக்சி ஜாரில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும். அதே கப் அளவுக்கு கருப்பட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனையும் பொடித்து சாலியா விதை பொடியுடன் சேர்த்து சிறிதளவு நெய் சேர்த்து கலந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

    இந்த உருண்டைகளை மாதவிடாய் நாளில் முதல் நாளில் இருந்தே இந்த உருண்டைகளை சாப்பிட வேண்டும். முதல் நாளில் ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு உருண்டை. அதுமட்டுமில்லாமல் ஒரு நாட்டுக்கோழி முட்டையும் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாட்களின் போது மூன்று அல்லது ஐந்து நாட்களும் உருண்டைகளும் மற்றும் நாட்டுக்கோழி முட்டையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.

    சாலியா விதையில் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் உள்ளது. இது ஆங்கிலத்தில் garden cress seeds என அழைக்கப்படுகிறது. இவ்விதையில் வைட்டமின் ஏ, இ, சி, நார்சத்துகள், புரதசத்துகள், இரும்பு சத்துகள் உள்ளது.

    ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

    சாலியா விதைகளில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவுகிறது. ரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சாலியா உதவுகிறது. ஒரு தேக்கரண்டி சாலியா விதைகளில் 12 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.

    தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும்

    சாலியா விதைகளில் புரதம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், அவை ஆற்றல்மிக்க பால்சுரப்பு பண்புகளைக் கொண்டிருப்பதால், அவை பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். பாலூட்டி சுரப்பிகளில் இருந்து தாய்ப்பால் உற்பத்தியைத் தூண்டவும், பராமரிக்கவும் மற்றும் அதிகரிக்கவும் இந்த விதை உதவுகிறது.

    மாதவிடாயை சீராக்கும்

    மாதவிடாயை சீராக்க உதவுகின்றன. கர்ப்பத்தை திட்டமிட பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் கட்டுப்பாடு மிகவும் முக்கியமானது. சாலியா விதைகளில் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. இது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் பின்பற்றுகிறது, இது ஒழுங்கற்ற மாதவிடாய்களை சீராக்க உதவுகிறது. இது ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துவதற்கும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளை இயல்பாக்குவதற்கும் ஒரு இயற்கையான வழியாகும்.

    உடல்எடையை குறைக்கும்

    சாலியா விதைகளில், நார்ச்சத்து மற்றும் புரதத்தின் வளமான ஆதாரங்களாக இருப்பதால், பசியின்மை மற்றும் அதிகப்படியான உணவைத் தவிர்க்க உதவுகின்றன. இந்த விதைகளில் உள்ள நல்ல புரதச்சத்து, உடலின் தசைகளை பராமரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    ஃபிளாவனாய்டுகள் (ஆன்டிஆக்சிடன்ட்கள்), ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ உள்ள சாலியா விதைகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. மேலும் பல்வேறு தொற்றுகள் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க உதவும், இதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காய்ச்சல், சளி மற்றும் தொண்டை புண் போன்ற பல்வேறு தொற்றுகளை தடுக்க உதவுகிறது.

    மலச்சிக்கலைப் போக்கும்

    சாலியா விதைகளில் உள்ள அதிக நார்ச்சத்து, சீரான குடல் இயக்கத்தை உருவாக்குகிறது. மலச்சிக்கல் மற்றும் வாயு மற்றும் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளை போக்க உதவுகின்றன. சாலியா விதைகள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாக இருப்பதால் அதை அதிகமாக உட்கொள்ள வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது. சாலியா விதைகளை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின ஆலோசனையை மேற்கொண்டு உடல் பிரச்சினைக்கு தகுந்தார்போல் பயன்படுத்திக் கொள்ளாலாம்.

    • மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு.
    • காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும்

    மழைக்கால மாதங்களில் மக்களை அலற வைக்கும் நோய்களில் டெங்குவுக்கு முக்கிய இடமுண்டு. பெரும்பாலானோருக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகிவிடும்.

    சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இப்படியானால் ஆபத்து அதிகம். இவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும். சுவாசிக்கச் சிரமப்படுவார்கள்.

    ரத்த அழுத்தமும் நாடித் துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள். டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதை, எலும்புமூட்டு ஆகியவற்றில் ரத்தக்கசிவை ஏற்படுத்தும். இதற்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும்.

    பொதுவாக இந்த காய்ச்சல் முதல்முறையாக வரும்போது ஆபத்து வராது; 2-ம் முறையாக வரும்போதுதான் ஆபத்து. கைக்குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது ஏற்படுமானால் ஆபத்து விரைவில் வந்துசேரும். டெங்கு நோய்க்கென்று தனியாக சிகிச்சையோ தடுப்பூசியோ இல்லை.

    டெங்கு தானாகத்தான் சரியாக வேண்டும். அதுவரை ரத்தக்கசிவு, குறை ரத்தஅழுத்தம், மூச்சிளைப்பு போன்ற ஆபத்தான விளைவுகளைக் கட்டுப்படுத்தவே சிகிச்சை தரப்படும். எனவே, டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, இந்த ஆபத்தான பின்விளைவுகள் வரவிடாமல் தவிர்க்க வேண்டியது முக்கியம்.

    • எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.
    • அதிமதுரம் ஒரு `நிதானமான’ மலமிளக்கி.

    * அதிமதுரவேரை சுவைக்க வித்தியாசமான இனிப்பு தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

    * புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும். தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

    * அதிமதுரத்துடன் இம்பூரல் கலந்து பொடித்துக் கொண்டு காலை, மாலை 1-2 கிராம் அளவு சாப்பிட சளியுடன் கலந்து வரும் ரத்தம் நிற்கும்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டும் சமஅளவு எடுத்து எட்டு பங்கு நீரிலிட்டு ஒரு பங்காகக் காய்ச்சிய குடிநீரை, சூல் கொண்ட பெண்களின் வாந்தியைப் போக்கத் தரலாம்.

    * அதிமதுர வேர் பொடியைத் தேனுடன் கலந்து மஞ்சள் காமாலைக்குத் தரலாம்.

    * அதிமதுரம், சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து குடிநீரிட்டு குடித்துவர சூல் காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு தீரும்.

    * குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை `அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்' எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

    * அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத்தொடங்கியிருக்கின்றன.

    * சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம்.

    * சைனஸ் பிரச்சினை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தை சிறிதளவு சேர்க்கலாம்.

    * அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது.

    * பொதுவாக அதிமதுரம் ஒரு `நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும்.  ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக்.

    * அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும்.

    * அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

    * வயிற்றுப்புண்களுக்கு – அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் – காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறு கோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    • இருமலும், சளியும் ஜலதோஷத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளே.
    • நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் பாதிப்படையலாம்.

    பொதுவாக அடிக்கடி ஏற்படும் தும்மலும், இருமலும், சளியும், ஒவ்வாமை மற்றும் ஜலதோஷத்தின் ஆரம்பகட்ட அறிகுறிகளே.

    அலர்ஜியை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் சில வைரஸ் கிருமிகள், உங்களுடைய மூக்கின் உள்பகுதியிலோ அல்லது தொண்டையின் உள்பகுதியிலோ வந்து உட்கார்ந்து கொண்டு கொடுக்கும் தாங்கமுடியாத குடைச்சலினால் ஏற்படுவதே தும்மல், இருமல் மற்றும் சளி ஆகும்.

     தும்மல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதற்காரணம் அலர்ஜி. ஒத்துக்கொள்ளாத, பிடிக்காத வாசனைகள், செல்லப்பிராணிகளின் வளர்ப்பினால் வரும் ஒவ்வாமை, பிடிக்காத ரசாயனப் பொருட்களின் வாசனைகள், பிடிக்காத பொருட்களின் நெடிகள், சமையலறை நெடி, புகை, வாசனைத் திரவியங்களின் நெடிகள், காற்றில் மாசு ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கண்ணுக்குத் தெரியாத தூசித்துகள்கள், தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் மாற்றம் போன்றவைகள் உடனடியாக தும்மலை ஏற்படுத்திவிடும்.

    அதிக வேகத்தில் தும்மினால் காது சவ்வு, மிகச்சிறிய ரத்தக் குழாய்கள் பாதிக்கும் ஆபத்து உள்ளது. நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள் பாதிப்படையலாம். வேகமாகத் தும்மும்போது மூக்குக்கும், வாய்க்கும் நேராக கர்சீப் அல்லது துண்டை வைத்துக் கொண்டு தும்முங்கள். ஏனெனில் தும்மல், சுமார் 27 அடி தூரம் வரை பரவக் கூடும்.

     அதிக தடவை தும்மினாலோ, தொண்டையில் பிரச்சினை இருந்தாலோ, காய்ச்சல் இருந்தாலோ, மூக்கில் நீர் தொடர்ச்சியாக வடிந்து கொண்டிருந்தாலோ, நீங்கள் உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தியுங்கள். நான்கைந்து தும்மலுக்கெல்லாம் சிகிச்சை தேவையில்லை. விட்டு விடுங்கள். தானாகவே சரியாகிவிடும்.

    அடிக்கடி கையைக் கழுவுங்கள். வீட்டில் இருப்பவர்களுடன் நெருக்கமாக சேர்ந்து இருக்காதீர்கள். அலர்ஜியை உண்டாக்கக் கூடிய பொருட்களை உபயோகப்படுத்தாதீர்கள். அதன் அருகிலும் செல்லாதீர்கள். முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். புகை, நெடி, தூசி, மாசு அதிகமுள்ள இடங்களைத் தவிருங்கள்.

    ×