என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது.
    • குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    குப்பைமேடுகளில் எளிதாக கிடைக்கக்கூடிய மூலிகைதான் குப்பைமேனி. பெரும்பாலானோர் இந்த செடியை கண்டிப்பாக பார்த்திருப்போம். ஆனால் இதுதான் குப்பைமேனி என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல் குப்பைமேனி செடியை களலைச்செடியாக பலர் பிடுங்கி வீசுகின்றனர்.

     பல வகையான நோய்களுக்கு தீர்வு அளிக்கும் குப்பைமேனி ஒரு காயகல்ப மூலிகை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி குப்பைமேனி செடியின் அனைத்து பாகங்களும் சிறப்பு வாய்ந்தது. அதேபோல் பல வகையான நோய்களுக்கு மருந்தாக குப்பைமேனி பயன்படுகிறது.

    குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து குடிப்பதால் சளி, இருமல், தொண்டை கட்டுதல் போன்ற நோய்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் உடல் வெப்பத்தையும் சரி செய்கிறது.

    குப்பைமேனி இலையின் சாறு பிழிந்து, ஒரு ஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அனைத்தையும் வெளியேற்றி விடும். அதேபோல் குப்பைமேனி இலை பொடியை விளக்கெண்ணையில் கலந்து சாப்பிட்டாலும் வயிற்றுப் புழுக்கள் வெளியேறிவிடும்.

    குப்பைமேனி இலை சாறு குடிப்பதால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக சைனஸ் எனப்படும் நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது.

    சொத்தை பல் உள்ளவர்களுக்கு பல்லில் வலி 2 அல்லது 3 இலைகளை நன்றாக கழுவி விரல்களால் நசுக்கி வலிக்கும் பல்லில் வைத்தால் சொத்தை பல்லில் உள்ள கிருமிகள் வெளியேறி வலி நீங்கும்.

    அதேபோல் படை, சிரங்கு, சொறி, அரிப்பு போன்ற தோல் நோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையுடன் சேர்த்து மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு அரைத்து தேய்த்து கழுவி வர அனைத்து நோய்களும் குணமாகும்.

    உடலில் ஏற்படும் வலிகளை குணப்படுத்த குப்பைமேனி இலையின் சாற்றை நல்லெண்ணையோடு சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்தால் குணமாகும். அதேபோல் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகளுக்கு குப்பைமேனி இலையை சுண்ணாம்பு கலந்து பூசுவதால் நல்ல தீர்வு கிடைக்கிறது.

    தேள், பூரான், விஷப்பூச்சி கடித்தால் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கடித்த இடத்தில் பூசினால் விஷம் முறியும்.

    • மணலி கீரை அல்லது நவமல்லி கீரை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
    • இலை தண்டு அனைத்தும் மருத்துவ நன்மைகள் கொண்டது.

    மணலிக்கீரை சமையலுக்கு ஏற்ற கீரைகளில் ஒன்று. இதனை மணலி கீரை அல்லது நவமல்லி கீரை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதன் இலை தண்டு என அனைத்தும் மருத்துவ நன்மைகளைக் கொண்டது. நம்முடைய முன்னோர்களின் மருத்துவ கீரைகளில் மணலிக்கீரையும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    வயிற்றில் பூச்சிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீனம் அடைந்து காணப்படுகின்றனர். இதற்கு வயிற்றில் உள்ள பூச்சிகள் தான் காரணம் இந்த வயிற்று பூச்சிகளை எளிதாக வெளியேற்ற மணலி கீரையை வாரத்திற்கு இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.

    பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலை போக்கும் தன்மை கொண்டது. மணலிக்கீரையை பாசிப்பருப்புடன் கலந்து இருமுறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும். மார்புச் சளியை போக்க மணலி கீரையுடன், சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் மார்பு சளி நீங்கும்.

    மேலும் மணலிக்கீரையை பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி குணமாகும்.

    மனிதர்களுக்கு ஞாபக மறதி ஏற்படுவது இயல்புதான். ஆனால் இதற்கு காரணம் பித்த அதிகரிப்பு. இந்த குறையை போக்க மணலிக்கீரையை சாப்பிடுவதால் நல்ல தீர்வு கிடைக்கிறது.

    மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு வலுபெறும். இதனால் மனதளவில் வலுவானவர்களாக இருப்பார்கள்.

    • ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று.
    • உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது.

    தற்போது சூப்பர் மார்கெட்டுகளுக்குச் சென்றால் வித்தியாசமான பழங்களைக் காண்போம். ஆனால் அவற்றை நாம் வாங்க மாட்டோம். இதற்கு அதன் சுவை எப்படி இருக்கும் என்று தெரியாததோடு, அந்த பழங்களின் வெளித்தோற்றம் விசித்திரமாக இருப்பதும் காரணம். அதுமட்டுமின்றி அவை விலை அதிகமானதும் கூட. ஆனால் அவைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவற்றை உட்கொண்டால் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவில் பலனைப் பெறலாம்.

    மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வந்தது தான் ஆலிவ். இந்த ஆலிவ் பல்வேறு நிறங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பான நன்மைகளை உள்ளடக்கியது. இருப்பினும் கருப்பு மற்றும் பச்சை நிற ஆலிவ்கள் தான் மிகவும் சிறந்தது. இவைகளை உட்கொண்டால் எலும்புகள் வலிமையடையும் மற்றும் புற்றுநோய்கள் தடுக்கப்படும்.

    ஐரோப்பா பகுதியில் ஆலிவ் பழங்கள், பிரபலமான ஒன்று. அங்கிருந்துதான், உலகம் முழுக்க சுவைக்கப்படுகிறது. இதன் சுவை தனித்துவமானது என்பதால், பீட்சா உள்பட பல இத்தாலிய உணவுகளில் மிக முக்கிய அங்கமாக சேர்க்கப்பட்டு, சுவைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட, ஆலிவ் பழங்களின் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

    * அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆலிவ்களில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் இதை தடுத்து நிறுத்துகின்றன. ஆலிவ்களில் கொழுப்பும் உள்ளது. ஆனால் இது நல்ல வகையான கொழுப்பு. ஆலிவ்களில் இருக்கும் ஒலிக் அமிலம் (மோனோசாச்சுரேட்டர் கொழுப்பு அமிலம்) வீக்கத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

    * ஆலிவ்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் வைட்டமின்-ஈ மற்றும் பாலிபினால்களுடன் சேர்ந்து வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய காயங்களுக்கு எதிராக போராடுகின்றன.

    * ஆலிவ்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் ஹைட்ராக்சிடைரோசோல் எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது. இது எலும்புகளின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலும்புச்சிதைவு நோய் அறிகுறிகளுக்கு இதுசிறந்த தீர்வாக செயல்படுகிறது.

    * இவை புரோபயாடிக் ஆற்றலை கொண்டுள்ளன. இது செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியமானது. ஆலிவ் புளிப்பு தன்மை கொண்டது. இது குடலுக்கு நன்மை செய்யும் லாக்டோபாகிலஸ் பாக்டீரியாவை உள்ளடக்கி உள்ளது.

    * இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது உடல் பருமன் அபாயத்தை குறைக்கும்.

    * ஆலிவ் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான எடை பராமரிப்புக்கு உதவுகிறது.

    * மூளை பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களால் ஆனது. ஆலிவ்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகின்றன. ஆலிவ் உட்கொள்வது மூளை உயிரணு இறப்பை தடுக்கவும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    * ஆலிவ்களில் உள்ள கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் உதவுகின்றன. சருமத்தை புற ஊதாக்கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கிறது. சுருக்கங்களை தடுக்க உதவுகிறது.

    ஆலிவை எப்படி சேர்ப்பது?

    கருப்பு பழுத்த ஆலிவ், பச்சை ஆலிவ், இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட ஆலிவ் என பல்வேறு வகையான ஆலிவ் பழங்கள் உள்ளன. ஆலிவ் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாம். இதை சிற்றுண்டிகளிலும் சேர்க்கலாம்.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணிகள் ஆலிவ் பழத்திற்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். நாள் ஒன்றுக்கு 5 முதல் 6 ஆலிவ் பழங்கள் வரை சாப்பிடுவது நல்லது.

    • இயர் பட்ஸ் பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம்.
    • அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது.

    நகத்தை எப்படி வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்து நகத்தை வெட்டுகிறோம். அதேபோல தான் காதுகளையும் அடிக்கடி சுத்தம் செய்வோம். அதனை சுத்தம் செய்வதற்கு சில நபர்கள் ஊக்கு, சில நபர்கள் கோழி இறகு, இன்னும் சில நபர்கள் இயர் பட்ஸ் பயன்படுத்துவார்கள். இயர் பட்ஸ் பயன்படுத்துவதினால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

    காது அடைப்பு

    காதுகளில் இருக்கும் அழுக்குகளை நீக்குவதற்கு இயர் பட்ஸ் பயன்படுத்தி அழுக்குகளை எடுக்கிறோம். ஆனால் இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது நடுப்பகுதியில் இருக்கும் அழுக்குகள் உள்பகுதியில் செல்கிறது. இதனால் அழுக்குகள் சேர்ந்து காது அடைப்பை ஏற்படுத்தும்.

    காதில் இருக்கும் மெழுகுகள் காதுகளின் ஆரோக்கியத்தை பாதுக்காக்கிறது. அதேநேரம் அந்த மெழுகினை அடிக்கடி எடுத்தால் காதில் எரிச்சலையும், வறட்சியையும் ஏற்படுத்தும்.

    காயம்:

    காதுகளில் அடிக்கடி இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் அல்லது சீழ் வடிதல் பிரச்சினையை உண்டாக்கும். மேலும் காதின் செவி தன்மையை பாதித்து காது கேட்காமல் பிரச்சனையை ஏற்படுத்தும்.

    நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை அறிவதற்கு காதுகளின் நடுப்பகுதியில் ஒரு நரம்பு செல்கிறது. இதில் நீங்கள் இயர் பட்ஸ் பயன்படுத்தும் போது இந்த நரம்பினை பாதித்தால் உணவின் சுவையை அறிய முடியாது.

    அதனால் அடிக்கடி இனி இயர் பட்ஸ் பயன்படுத்தாதீர்கள். மேலும் ஊக்கு, குச்சி, கேர்பின் போன்றவை பயன்படுத்தி காதுகளில் உள்ள அழுக்குகளை எடுக்க பயன்படுத்தாதீர்கள் அது உங்களுக்கே பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது.

    • பக்கவாதம் உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும்.
    • மூளையின் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவதால் பக்கவாதம் ஏற்படுகிறது.

    'பக்கவாதம்' என்பது மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு மூளை இயங்குவதற்கு தேவையான ஆக்சிஜன் இல்லாமல் மூளை திசுக்கள் சேதமடைந்து, உடலின் இயல்பான செயல்பாடுகளை பாதிக்கும் நோயாகும். இது, 'இஸ்கீ மிக் ஸ்ட்ரோக்', 'ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்' என்று வகைப்படுத்தப்படுகிறது.

    இஸ்கீமிக் ஸ்ட்ரோக்:

    மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் ஏற்படும் சுருக்கம், கொழுப்பு படிவதால் வரும் அடைப்புகளால், மூளையின் ரத்த ஓட்டம் திடீரென தடைபடுவ தால் வருவது ஆகும்.

    ஹெமெரோஜிக் ஸ்ட்ரோக்:

    மூளையின் ரத்தக் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், ரத்தக் குழாய்கள் கிழிந்து அதிலிருந்து வெளியேறும் ரத்தம் இவைகளால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் கட்டுப்பாடற்ற ரத்த அழுத்தம், ரத்தக் குழாய்கள் வீங்கி (அனியுரிசம்) உடைந்து ரத்தம் வெளியேறுதல், தலையில் ஏற்படும் காயங்கள், விபத்துக்கள் இவைகளால் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    உடல் சமநிலை இழத்தல், முகம் ஒரு புறமாக இழுத்தல், ஒரு பக்க கை, கால் களின் செயல்பாடு இழத்தல், கண் பார்வை மங்குதல் போன்றவை.

    காரணங்கள்:

    பரம்பரையில் பக்கவாதம் இருப்பது, உயர் ரத்தஅழுத்தம், இதய நோய், ரத்தத்தில் அதிகரித்த கொழுப்புகள், புகைப்பிடித்தல், தொடர் மதுப்பழக்கம், கட்டுப்பாடில்லா நீரிழிவு நோயின் பாதிப்புகள், உடல் பருமன், சிறிதளவு கூட உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, உறக்கத்தில் குறட்டை பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் திடீர் மூச்சு திணறல் (சிலிப் அப்னியா), தலை, மூளைக்காயங்கள் இவைகளை தொடர்ந்து பக்கவாதம் வருகிறது.

    சிகிச்சைகள்:

    பக்கவாதம், வந்தவுடன் அல்லது அதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் நேரத்தை வீணடிக்காமல் உடனே நவீன மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். காலம் பொன்னானது. ஆகவே மூளை, நரம்பியல் மருத்துவர்களை பார்க்க வேண்டும். பக்கவாதத்தினால் ஏற்படும் பிந்தைய பாதிப்புகளை குணப்படுத்த ஏராளமான சித்த மருத்துவ தீர்வுகள் உள்ளன.

    பேச்சு குழறலுக்கு:

    அண்ட தைலம் 1-2 சொட்டு நாக்கின் அடியில் தொட்டு வைக்க வேண்டும். இது நாட்பட நல்ல பலனைத் தரும்.

    கை, கால் செயலிழப்பு முகம் ஒரு பக்கமாக இழுத்தல்:

    திரிகடுகு சூரணம் 1 கிராம், சண்ட மாருதச் செந்தூரம் 100 மி.கி., முத்துச்சிப்பி பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை சாப்பிட வேண்டும். திரிபலா சூரணம் 1 கிராம், நவ உப்பு மெழுகு 100 மி.கி. இவற்றை இரு வேளை சாப்பிட வேண்டும்.

    முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வதற்கு உளுந்து தைலம் அல்லது விடமுட்டி தைலம் பயன்படுத்த வேண்டும். கை கால்களை தேய்த்து மசாஜ் செய்வதற்கு, சிவப்பு குக்கில் தைலம், வாத கேசரி தைலம், கற்பூராதி தைலம், சித்திர மூலத் தைலம் இவைகளை பயன்படுத்தலாம்.

    ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு நீரிழிவு இவைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவேண்டும். மது, புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும். குளிப்பதற்கு வெந்நீர் பயன்படுத்துவது சிறந்தது. சித்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும்.

    • உடலில் நீர்ச்சத்து குறைந்து வறண்டு போக வாய்ப்புண்டு.
    • தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.

    உங்களது வாயிலுள்ள மூன்று ஜோடி முக்கிய பெரிய எச்சில் சுரப்பிகள் போதிய அளவு எச்சிலை சுரக்காததால் தான் உங்களது நாக்கும், உதடுகளும் வறண்டு வாய் மொத்தமும் காய்ந்து போகிறது. போதிய அளவு எச்சில் சுரக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. அவை:

    உடலில் நீர்ச்சத்து குறைந்து போதல், கதிர்வீச்சு, மருந்து ஆகியவற்றின் மூலம் முகம், கழுத்திலுள்ள புற்று நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி2 சத்து குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாதவர்கள், மனநோய் பாதிப்பு உள்ளவர்கள், அடிக்கடி பதற்றத்துடனும், படபடப்புடனும் இருப்பவர்கள், அதிக வியர்வை. அதிக வாந்தி, அதிக வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் ஆகியோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து வாய் வறண்டு போக வாய்ப்புண்டு.

    இதற்கான தீர்வுகள்:

    ஒரு நாள் முழுக்க தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும். புளிப்பு மிட்டாய் போன்றவற்றை வாயில் போட்டு சப்பிக்கொண்டே இருக்க வேண்டும். மது, சிகரெட், புகையிலை பழக்கம் இருந்தால் அதை நிறுத்த வேண்டும். அதிக இனிப்புள்ள பானங்கள், காபி, டீ குடிப்பதை குறைக்க வேண்டும்.

    நடு இரவில் நா வறட்சி, கண்டிப்பாக கவனிக்க வேண்டிய ஒன்று. படுக்கைக்கு அருகில் எப்பொழுதும் தண்ணீர் இருக்க வேண்டும். சரியான அளவில் உடலில் நீர்ச்சத்து இருந்தால்தான். உடலிலுள்ள மூட்டுக்களை சுலபமாக நீட்டி, மடக்க முடியும். குருத்தெலும்பு நன்றாக இயங்கும்.

    உடலில் தினந்தோறும் சேரும் கழிவுப்பொருட்கள், சிறுநீர், வியர்வை, மலம் வழியாக வெளியேறும். மொத்தத்தில், உடல் சீராக இயங்க, ஆரோக்கியமாக இருக்க, நீர்ச்சத்து உடலில் எப்பொழுதும் போதிய அளவு இருக்க வேண்டும். நீரின்றி அமையாது உலகம் என்பது போல், நீரின்றி அமையாது உடலும்.

    • தினமும் 6 முதல் 8 மணிநேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும்.
    • ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

    மனிதர்களுக்கு தூக்கம் என்பது இன்றியமையாதது. தினமும் 6 முதல் 8 மணிநேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். ஆனால் இந்த காலத்தில் அப்படி யாரும் தூங்குவதில்லை. ஏனென்றால் அனைவரும் அதிகமாக ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர்.

    நீங்கள் இரவு 10 மணிக்கு மேல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் போனில் இருந்து வரும் வெளிச்சத்தினால் மூளையில் மெலாட்டோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்காமல் தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும்.

    நீங்கள் சரியாக தூங்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்கள் அல்லது ஸ்மார்ட் போனில் வேலைபார்க்கிறீர்கள் என்றால் அது மாரடைப்பு வருவதற்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமில்லாமல் நெஞ்செரிச்சல் பிரச்சினையும் ஏற்படும்.

    இரவுநேரத்தில் நீங்கள் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்திவிட்டு காலையில் அதிகநேரம் தூங்கினால் அதை சரியான தூக்கமாக உங்களது உடல் ஏற்றுக்கொள்ளாது. இதுமாதிரி தொடர்ந்து நீங்கள் செய்தால் ஒரு கட்டத்திற்கு மேல் புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    தொடர்ச்சியாக இரவில் நீங்கள் மொபைல் போன் பயன்படுத்திவிட்டு பகல் நேரங்களில் தூங்குவீர்கள் என்றால் உங்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உங்களுடைய ஆயுட்காலம் குறையவும் வாய்ப்பு உள்ளது.

    ஒருவேளை நீங்கள் மொபைல் போன் பயன்படுத்தினால் தூங்க செல்வதற்கு முன்பு 10 நிமிடம் மட்டும் பயன்படுத்துங்கள் மற்றும் நீங்கள் படுத்து இருக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் இடைவெளிவிட்டு மொபைல் போனை வைக்க வேண்டும்.

    • இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    மூல நோய் வரும் வழியை பற்றி, தேரையர்' என்ற சித்தர், 'அனில பித்த தொந்தமலாது மூலம் வராது' என்று கூறியுள்ளார். வாயுவைப்பெருக்கக் கூடிய உணவுகள், காரமான உணவுகள், கிழங்கு வகைகள், உடல் சூடு, உட்கார்ந்த நிலையில் நெடுநேரம் இருப்பது, பசியை அடக்குதல், மலத்தை அடக்குதல் போன்ற காரணங்களால் மூல நோய் வருகிறது. இதற்கான சித்த மருத்துவம் வருமாறு:-

    1) திரிபலா சூரணம் 1 கிராம். நாக பற்பம் 200 மிகி. நத்தை பற்பம் 200 மி.கி. இவைகளை மூன்று வேளை நெய் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

    2) தேற்றான் கொட்டை லேகியம் 5 கிராம் வீதம், காலை. இரவு சாப்பிடலாம்.

    3) கருணைக்கிழங்கு லேகியம் 5 கிராம் வீதம் காலை, இரவு சாப்பிட வேண்டும்.

    4) மூலக்குடார நெய் 5-10 மிலி வீதம் இரவு உணவுக்கு பின் எடுக்க வேண்டும்.

    5) மலச்சிக்கல் இருந்தால், நிலவாகைச் சூரணம் அல்லது. சிவதைச்சூரணம் 1 கிராம் வெந்நீரில் இரவு வேளை மட்டும்.

    மேற்கண்ட மருந்துகளில் உங்களுக்கு எது தேவை என்பதை சித்த மருத்துவர் முடிவு செய்து கொடுப்பார். எனவே சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுப்பது அவசியம்.

    6) துத்திக்கீரை சிறிதளவு, ஐந்து சின்ன வெங்காயம் இவைகளை விளக்கெண்ணெய் சிறிது விட்டு வதக்கி அரைத்து நெல்லிக்காய் அளவு இரவு வேளை சாப்பிட்டு வர மூலவலி மற்றும் முளை குறைந்து கொண்டு வரும்.

    உணவுப் பழக்கவழக்கங்கள்:

    நார்ச்சத்து அதிகம் நிறைந்த அவரைப் பிஞ்சு, பீன்ஸ் பிஞ்சு, கோவைக்காய். பூசணிக்காய், முள்ளங்கி, புடலங்காய், முட்டைக் கோஸ், கிழங்கு வகையில் கருணைக்கிழங்கு. கீரைகளில் துத்திக்கீரை, அறுகீரை. தண்டுக் கீரை, புளியாரைக் கீரை, பசலைக்கீரை சாப்பிடலாம்.

    பிரண்டைத் தண்டுடன், புளி, உப்பு. மிளகு, சீரகம், பெருங்காயம் இவை சேர்த்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் மூலமுளை நோய் உள்ளவர்களுக்கு நல்லது. பழங்களில் முலாம் பழம், அத்திப்பழம், மாதுளம் பழம், வாழைப்பழம், ஆப்பிள் நல்லது.

    நிழலில் உலர்த்திய கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல், சுண்டை வற்றல், பெருங்காயம், இந்துப்பு, ஓமம், சீரகம், கொத்தமல்லி இவைகளை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து வைத்து, சாதத்தில் நெய் விட்டு சாப்பிட குணம் கிடைக்கும். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்வது மிகச் சிறந்தது.

    டீ. காபி அடிக்கடி குடிப்பதையும், இரவு அதிக நேரம் கண்விழிப்பதை தவிர்க்க வேண்டும். காரமான உணவுகள், மாவுப்பண்டங்கள், எண்ணெய் பலகாரங்கள். கோழிக்கறி போன்றவற்றை அளவுடன் எடுப்பது நல்லது. தினசரி 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    • ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2½ லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும்.
    • அதிகமாக உணவருந்திவிட்டதாக உணர்ந்தால் சுடுநீரை அருந்துங்கள்.

    தண்ணீர் உயிருக்கு ஆதாரம். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு மனிதர் 2½ லிட்டர் தண்ணீராவது அருந்த வேண்டும் என்று கூறப்படுகிறது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சீரான செரிமானம், உடல் எடை குறைத்தல் மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துவதற்கு மிதமான சுடுநீரை பருகுமாறு, ஒரு முறையேனும் பரிந்துரைக்கப்பட்டிருப்போம். ஏன் அவ்வாறு பரிந்துரைக்கிறார்கள்? என்பதைப் பார்ப்போம்.

    மூக்கடைப்பு நீங்க

    மூக்கடைப்பு நீங்க வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தினால் சிறந்த பலன் கிடைக்கும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரை அருந்தினால் அதிலுள்ள ஆவி மூக்கில் உள்ள மியூகஸ் மெம்ப்ரேனில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கும். எளிதாக சுவாசிக்க முடியும். தலைவலி நீங்கும். ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் மூக்கொழுகுதலை நிறுத்தும். இருமல், தொண்டை வலிக்கு இதம் தரும்.

    செரிமானம்

    நீங்கள் என்றைக்காவது அதிகமாக உணவருந்திவிட்டதாக உணர்ந்தால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள். வெதுவெதுப்பான நீர் என்பது நீங்கள் உண்ட உணவு சீக்கிரமாக செரிமானமாக உதவும். 2016-ல் தேசிய மருத்துவ நூலகத்தில் ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வெதுவெதுப்பான நீர் குடல் சீராக இயங்க உதவுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வயிற்றில் தேங்கும் காற்றை அப்புறப்படுத்தவும்உதவுகிறது.

    சிலருக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படலாம். மலச்சிக்கல் ஏற்படக் காரணம் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாமையே. அதனால் மலச்சிக்கல் நீங்க போதிய அளவு வெதுவெதுப்பான நீர் அருந்த வேண்டும். இது குடல் இயக்கத்தை சீராக்கும்.

    மன அழுத்தம்

    மன அழுத்தம் குறைய வெதுவெதுப்பான நீர் அருந்தலாம். ஏனெனில் அது மத்திய நரம்பு மண்டலத்தை சீராக்கும். இதனால் உங்களால் மன அழுத்தமின்றி ரிலாக்ஸாக உணர முடியும். போதிய நீர்ச்சத்து இருந்தால் அது மனதை இலகுவாக்கும்.

    உடல் நடுக்கம்

    குளிர் காலத்தில் நம் உடல் நடுங்கக் கூடும். அதுமாதிரியான வேளையில் சுடு தண்ணீர் அருந்தினால் அது நடுக்கத்திலிருந்து விடுதலை தரும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது. வெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக செல்லும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும்.

    • செரிமானத்துக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
    • வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தலாம்.

     

    தக்காளி

    ஆரஞ்சு பழங்களின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பலரும் அதனை விரும்பி ருசிக்கிறார்கள். அதில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இவை வளர்சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தவை. ஆனால் சில உணவுப்பொருட்களுடன் ஆரஞ்சு பழத்தை சேர்த்து சாப்பிடுவது அஜீரணம், ஒவ்வாமை, அசவுகரியம், நெஞ்செரிச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆரஞ்சு பழத்துடன் ஒருபோதும் சேர்த்து உட்கொள்ளக்கூடாத உணவுகள் குறித்து பார்ப்போம்.

    தக்காளி, ஆரஞ்சு ஆகியவற்றில் வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியிருந்தாலும் கூட இவை இரண்டுமே அசிடிக் உணவுப்பொருட்களாக கருதப்படுகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொள்வது அசிடிட்டி பிரச்சினையை உண்டாக்கும். செரிமானத்துக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

     தயிர்

    பாலை போலவே, ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை தயிருடன் கலந்தால் சிலருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

     வாழைப்பழம்

    வாழைப்பழத்தை ஆரஞ்சுப்பழத்துடன் சாப்பிடுவது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். குறிப்பாக வயிறு சார்ந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி இருப்பவர்களுக்கு பிரச்சினைகளை அதிகப்படுத்தும்.

     காரமான உணவுகள்

    ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மையுடன் காரமான உணவுகள் சேர்வது செரிமான கோளாறுக்கு வழிவகுத்துவிடும். வயிற்றுப் புண் போன்ற வலி பாதிப்புகளையும் உண்டாக்கிவிடும்.

    கொழுப்பு உணவுகள்

    அதிக கொழுப்புள்ள உணவுகளுடன் ஆரஞ்சு பழத்தை உட்கொள்ளும்போது அதன் அமிலத்தன்மை கொழுப்புடன் வினைபுரிந்து அசவுகரியத்திற்கு வழிவகுக்கும்.

    பாலாடைக்கட்டி

    பாலாடைக்கட்டியுடன் ஆரஞ்சு பழத்தை ருசிப்பது செரிமான செயல்முறையை மெதுவாக்கும். அஜீரணத்தை தூண்டும்.

     காபி

    ஆரஞ்சு பழத்துடன் காபி அல்லது பிளாக் டீ உட்கொள்வது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தலாம். வயிற்றுப் புண் இருப்பவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் நெஞ்செரிச்சலை உண்டாக்கிவிடும்.

     பானங்கள்

    ஆரஞ்சுப் பழத்துடன் கார்பனேற்றப்பட்ட பானங்களை நுகர்வது வயிறு உப்புசம், அசவுகரியம் உள்பட பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்க வைத்துவிடும்.

     மது

    ஆரஞ்சு பழத்துடன் மது பானங்கள் கலப்பது வயிற்று பகுதியில் எரிச்சலை ஏற் படுத்தலாம். ஒவ்வாமைக்கும் வழிவகுக்கலாம்.

     பால்

    சிட்ரஸ் பழங்கள், அவற்றின் பழச்சாறுகளுடன் பால் சார்ந்த பொருட்களைச் சேர்ப்பது அஜீரணம் அல்லது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் ஆரஞ்சு பழத்தின் அமிலத்தன்மை பாலில் உள்ள புரதங்களுடன் வினை புரிந்து வயிற்று கோளாறு அல்லது வயிறு உப்புசத்திற்கு வழிவகுத்துவிடும். செரிமானத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    • டிசம்பர் 15-ந் தேதி சர்வதேச தேயிலை தினம்.
    • சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும்.

    புதுணர்வு தரும் பானமான தேநீர், உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் தேநீர் பருகாவிட்டால், பலருக்கும் அன்றைய நாள் முழுமை பெறாது. கலாசாரம் மற்றும் பொருளாதாரத்தில் தேயிலையின் முக்கியத்துவம் கருதி டிசம்பர் 15-ந் தேதி சர்வதேச தேயிலை தினமாக கொண்டாடப்படுகிறது.

    தேநீரின் சுவைக்கும், நறுமணத்திற்கும் காரணமான தேயிலையுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மற்ற மூலிகைகளையும் கலந்து பருகலாம். அதைப் பற்றிய குறிப்புகள் இங்கே...

    தேயிலை மற்றும் துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி டீ தயார். இது குளிர்காலத்தில் உண்டாகும் சளி, இருமல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும். காம்பு நீக்கிய ஆவாரம் பூக்களை தேயிலையுடன் சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதில் எலுமிச்சை சாறு மற்றும் வெல்லம் கலந்து பருகவும்.

    இந்த தேநீர் உடல் வெப்பத்தை தணிக்கும். சர்க்கரை நோயாளிகள் இதை இனிப்பு சேர்க்காமல் பருகலாம். தேயிலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும், அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து லெமன் டீயாக பருகலாம். உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது அதிக பலன் தரும்.

     தேயிலை மற்றும் கொய்யா இலையை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து வடிகட்டவும். பின்பு அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து கொய்யா இலை டீயாக பருகலாம். கொய்யா இலைக்கு மாற்றாக கொத்தமல்லித்தழை அல்லது புதினா இலையைச் சேர்த்து கொதிக்க வைத்தும் பருகலாம்.

    தேயிலையுடன் தனியா விதைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் தேன் சேர்த்து தனியா டீயாக பருகலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.

    தனியா டீ, ரத்த சோகையை தடுப்பதோடு, குடல் இயக்கத்தையும் மேம்படுத்தும். தேயிலையுடன் இஞ்சி, நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்தால் இஞ்சி டீ தயார். இதில் இஞ்சிக்கு மாற்றாக மிளகு சேர்த்தும் தயாரிக்கலாம். இது சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.

     முருங்கை கீரை மற்றும் எலுமிச்சை இலை இரண்டையும் தேயிலையுடன் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்து பருகலாம். இதில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையைத் தடுக்கும்.

    செம்பருத்தி பூக்களை தேயிலையுடன் கொதிக்க வைத்து வெல்லம், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம். செம்பருத்திக்கு பதிலாக ரோஜா இதழ்களை சேர்த்தும் தயாரிக்கலாம். ரோஜாப்பூ டீ இதய நோய் மற்றும் புற்றுநோயைத் தடுக்கும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து தூக்கத்தை சீராக்கும்.

     தேயிலையுடன் கற்பூரவல்லி இலை பொடியை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டவும். இதனுடன் தேன் சேர்த்தால் சுவையான கற்பூரவல்லி டீ தயார். செரிமானக் கோளாறு, சிறுநீரகத் தொற்று போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாகும்.

    • அடி வயிற்றில் வலி அல்லது அழுத்தம் ஏற்படலாம்.
    • திடீரென சளி, இருமல் ஏற்படவும் செய்யலாம்.

    ரத்தத்தில் கலந்திருக்கும் கழிவுப்பொருட்களை வடிகட்டுவது, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, சிறுநீரை உற்பத்தி செய்வது போன்ற முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன. சிறுநீர் பாதை வழியாக பாக்டீரியாக்கள் சிறுநீரகத்திற்குள் நுழையும்போது சிறுநீரக தொற்று ஏற்படுகிறது. உலக அளவில் லட்சக்கணக்கானோர் சிறுநீரக நோய்த்தொற்று பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக நோய்த்தொற்றை கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொண்டால் சிறுநீரகங்கள் கடும் பாதிப்புக்கு ஆளாவதை தடுக்கலாம். ஒருசில அறிகுறிகள் மூலம் சிறுநீரக நோய்த்தொற்றை கண்டறிந்துவிடலாம். இடுப்புக்கு சற்று மேலேயும், அடி முதுகு பகுதியிலும் தொடர்ந்து வலியை உணர்ந்தால் அது சிறுநீரக  ஒன்றாக இருக்கலாம்.

    நிற வேறுபாடு:

    வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தாலோ, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு ஏற்பட்டாலோ, சிறுநீரின் நிறம் மாறுபட்டாலோ, ஏதேனும் வாசனை வெளிப்பட்டாலோ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது. அது சிறுநீரக தொற்றுக்கான அறிகுறிகளாகக்கூட இருக்கலாம்.

    காய்ச்சல்:

    ஒருவேளை சிறுநீரக தொற்று ஏற்பட்டிருந்தால் அதில் இருந்து மீள்வதற்கு சிறுநீரகங்கள் போராடும்போது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் வெளிப்படலாம். திடீரென சளி, இருமல் ஏற்படவும் செய்யலாம். அவை சிறுநீரக தொற்றுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம்.

    சோர்வு:

    இரவில் நன்றாக தூங்கி எழுந்த பிறகும் வழக்கத்திற்கு மாறாக சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் அதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது முக்கியமானது. சிறுநீரகங்கள் நோய்த்தொற்றை தடுக்க அதிக நேரம் போராடுவதன் வெளிப்பாடாகவோ, அறிகுறியாகவோ அந்த சோர்வு அமையலாம்.

    சிறுநீரில் ரத்தம்:

    சிறுநீருடன் கலந்து ரத்தமும் வெளியேறினால் அது சிறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதற்கான சமிக்ஞையாக இருக்கலாம். சிறுநீரக நோய்த்தொற்று மட்டுமின்றி வேறு ஏதேனும் கடுமையான உடல்நல பிரச்சினைக்கான அறிகுறியாக இருக்கலாம். உடனே பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.

    வயிற்று வலி:

    சிறுநீரகத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடாக அடி வயிற்றில் வலி அல்லது அழுத்தம் ஏற்படலாம். ஆனால் அது வயிற்றுவலி போன்று இருக்காது. வயிற்றில் அத்தகைய வலியை உணர்ந்தால் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    வலி:

    சிறுநீரக நோய்த்தொற்றுகள் நெருக்கமான தருணங்களை கூட சங்கடமானதாக மாற்றும். தாம்பத்தியத்தின்போது தொடர்ந்து வலியை அனுபவித்தால் அது சிறுநீரக நோய்த்தொற்றுக்கான அறிகுறியா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

    ×