ஐஸ் குளியல் தரும் நன்மை-தீமைகள்!

தசை வலியில் இருந்து மீள வைக்கும். விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்கு பிறகு ஐஸ் குளியல் எடுப்பது வழக்கம்.
ஐஸ் குளியல் தரும் நன்மை-தீமைகள்!
Published on

ரத்த ஓட்ட சுழற்சி

குளிர் ஆரம்பத்தில் ரத்த நாளங்களை சுருக்கும் என்றாலும், ஒருகட்டத்திற்கு பிறகு உடல் முழுவதும் ரத்த ஓட்ட சுழற்சியை அதிகரிப்பதற்கு உதவும். ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி அதன் சுழற்சியை ஊக்குவிக்கும். தசைகள் மற்றும் திசுக்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் விநியோகத்திற்கு உதவும்.

தசை வலி

ஐஸ் குளியலை மேற்கொள்வதற்கு முதன்மை காரணங்களில் ஒன்று, தசை வலியைக் குறைப்பதுதான். கடுமையான உடல் செயல்பாடுகளுக்கு பிறகு ஏற்படும் தசை வலியில் இருந்து மீள வைக்கும். குளிர்ந்த வெப்பநிலை ரத்த நாளங்களை கட்டுப்படுத்துவதாக நம்பப்படுகிறது. வீக்கம் மற்றும் தசை வலியை குறைக்கவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பலரும் பயிற்சிக்கு பிறகு ஐஸ் குளியல் எடுப்பது வழக்கம்.

மழையில் நனைவது பலருக்கும் பிடிக்கும். மழை நீரில் நடனமாடியபடி குளியல் போடுவதற்கும் விரும்புவார்கள். குளிர் தன்மை கொண்ட அந்த நீரில் குளிப்பது எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு ஜலதோஷம், சளி, இருமல் பிரச்சினையை ஏற்படுத்திவிடும். ஆனால் குளிர்ந்த நீரில் மேற்கொள்ளப்படும் ஐஸ் குளியல் மருத்துவ சிகிச்சைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது.

கிரையோதெரபி என்று அழைக்கப்படும் இந்த ஐஸ் குளியல் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு பரீட்சயமானது. இந்த ஐஸ் குளியல் நன்மைகளையும், தீமைகளையும் கொண்டது. அதனை சரியான முறையில் பின்பற்றுவது பலன் அளிக்கும்.

வளர்சிதை மாற்றம்

ஐஸ் குளியல் தசை வலியையும், வீக்கத்தையும் குறைப்பதன் மூலம் விரைவாக உடலை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதாகவும், உடல் நலனை மேம்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.

அந்த நீரில் கலந்திருக்கும் குளிரின் தன்மை வீக்கத்தை குறைப்பதோடு தசைகளில் இருந்து வளர்சிதை மாற்றக் கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கும் உதவுகிறது.

சோர்வு

உடற்பயிற்சியால் ஏற்படும் சோர்வை குறைப்பதில் ஐஸ் குளியலுக்கு முக்கிய பங்குண்டு. நரம்புத்தசை செயல்பாட்டை மேம்படுத்தவும் வழிவகுக்கும். அடுத் தடுத்து பயிற்சிகளை மேற்கொள்ளும்போது சிறப்பாக செயல்படுவதற்கு உதவும்.

வலி நிவாரணம்

குளிர் தன்மைக்கும், வலி நிவாரணத்துக்கும் இடையே நீண்ட கால தொடர்பு இருக்கிறது. ஐஸ் குளியல் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நரம்புகளை மரத்துப் போகச் செய்து, வலி மற்றும் அசவுகரியத்தில் இருந்து தற்காலிக நிவாரணம் அளிக்கும்.

கடுமையான காயங்கள், வீக்கம் போன்ற நாள்பட்ட நிலைமைகளை கையாளும் நபர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

மனநிலை மேம்பாடு

உடலின் இயற்கையான உணர்வுகளை வெளிப் படுத்தும் ஹார்மோன்களான எண்டோர்பின்களின் வெளியீட்டிற்கும், குளிர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐஸ் குளியல் மன நிலையை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

குளிர்ந்த நீர் மூலம் கிடைக்கப்பெறும் உற்சாகமூட்டும் உணர்வு இயற்கையான மன அழுத்த நிவாரணியாக செயல்படக்கூடியது.

ஐஸ் குளியல் தரும் தீமைகள்

ஐஸ் குளியல் நன்மை பயக்கும் என்றாலும் அதிகமாகவோ, அடிக்கடியோ குளிர் நீரை உபயோகிப்பது தீங்கு விளைவிக்கும். அதிகப்படியான பயன்பாடு உடலின் சீரான செயல்பாட்டில் தலையிடக்கூடும்.

குளிர்ச்சியை நீண்ட நேரம் தக்கவைப்பது உடலில் அழுத்தத்தை தூண்டும். இதய அமைப்பை பாதிக்கும். குளிர் குளியலால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தவிர்க்க அதன் கால அளவையும், வெப்பநிலையையும் கண்காணிப்பது அவசியம். அதிக நேரம் குளிப்பதோ, உடலை உறையவைக்கும் குளிர் வெப்பநிலையை அனுபவிப்பதோ கூடாது.

ஐஸ் குளியல் அவசியமா என்றால் அதன் தேவை தனிநபர்களிடையே மாறுபடும். வயது, உடற்பயிற்சி நிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டும், மருத்துவ ஆலோசனை பெற்றும் அதனை பின்பற்றுவது நல்லது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com