search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    அதிக சிந்தனையால் வரும் ஆபத்துக்கள்
    X

    அதிக சிந்தனையால் வரும் ஆபத்துக்கள்

    • மனம் விசித்திரமான குணம் கொண்டது.
    • கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மனம் கஷ்டப்படும்படியான சம்பவம் ஏதாவது நடந்துவிட்டால் அதை பற்றியே சிந்தித்து புலம்பிக்கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பிறர் சாதாரணமாக கருதும் விஷயத்தை கூட இவர்கள் மனதில் போட்டு குழப்பிக்கொண்டே இருப்பார்கள். அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட நேரம் எடுத்துக்கொள்வார்கள்.

    அதுவரை நடந்த சம்பவத்தை பற்றியே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள். `நாம் இப்படி செய்திருக்கலாமோ? அப்படி செய்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காதோ? அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டோமோ?' என்று சிந்தித்து மனதை ரணமாக்கிவிடுவார்கள்.

    மனம் விசித்திரமான குணம் கொண்டது. மனதை உலுக்கும் ஏதாவதொரு சம்பவம் நடந்துவிட்டால் உடனே சிந்திக்க ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் கவலையும், சிந்தனையும் மனதை துவண்டுபோகச் செய்து விடும்.

    மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு கூடுமானவரை மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற சிந்தனைகள்தான் மனச்சோர்வுக்கோ, மன நோய்க்கோ காரணமாக அமைந்துவிடும். மூளையின் செயல்பாடுகளையும் முடங்க செய்து விடும். அதனால்தான் மன நலன் முக்கியமானதாக கருதப்படுகிறது.

    அதிகம் சிந்திப்பது மன நலனுக்கு மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும். மன அழுத்தமும், பதற்றமும் உடல் செயல்பாடுகளில் தாக்கத்தை உண்டாக்கும். மனம் கட்டுக்குள் இல்லாமல் போனால் சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மனம் கட்டுப்பாட்டை இழப்பதாக உணரும் சமயங்களில் சிந் தனைகளுக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக்கூடாது. மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியே விட வேண்டும். அது மனதை சாந்தப்படுத்த உதவும். தியானம் செய்யலாம். அமைதியான சூழல் கொண்ட இடத்தில் அமர்ந்து ஓய்வும் எடுக்கலாம்.

    அந்த சமயத்தில் கூட தேவையற்ற சிந்தனை எழுந்தால் வேறு ஏதாவதொரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம். மற்றவர்களுக்கு ஏதாவதொரு நல்ல விஷயத்தை செய்து கொடுக்கலாம். அதனால் அவர் மகிழ்ச்சி அடைந்தால் அது உங்களுக்கும் மன நிறைவை கொடுக்கும். விசித்திரமான ஆற்றலையும் தரும். எல்லாம் நன்றாக நடக்கிறது என்பதை புரிந்துகொள்வீர்கள். கவலைப்பட ஒன்றுமில்லை என்பதையும் உணருவீர்கள்.

    சாதாரணமாக கடந்து போகக்கூடிய விஷயத்திற்கெல்லாம் சிலர் சட்டென்று பதற்றமடைந்து விடுவார்கள். நடந்ததையே மிகையாக சிந்திப்பதுதான் அதற்கு காரணம். சிந்தனைக்கு இடம் கொடுக்காமல் ஆழமாக மூச்சை உள் இழுத்து வெளியே விட வேண்டும். மனதை ஆழ்ந்த சிந்தனையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்.

    ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால் மனம் வேதனைக்குள்ளாகும். அந்த சமயத்தில் ஏதாவதொரு வேலையில் கவனம் செலுத்தலாம். சைக்கிள் ஓட்டலாம். நடக்கலாம். மனதை திசைதிருப்பக்கூடிய ஏதாவதொரு செயலில் ஈடுபடலாம். அது மூளை தசைகளை தளர்த்த உதவும்.

    மனதில் எதிர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருக்கும் போது சந்தோஷமான தருணங்களை பற்றி நினைத்து பார்ப்பது சாத்தியமில்லாததுதான். ஆனால் குறைந்தபட்சம் முயற்சி செய்தாவது பார்க்கலாம். மன அழுத்தத்திலோ, கவலையிலோ இருக்கும்போது பலவீனங்களை அடையாளம் கண்டு அதனை சரி செய்வதற்கான முயற்சியில் கவனம் செலுத்த முடியும்.

    கடந்த காலத்தில் செய்த தவறுகளை நினைவில் வைத்திருந்தால், ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. அது தொடர்ந்து துயரத்தில் மூழ்க வைத்துவிடும். மன நலனையும் பாதிக்கும்.

    பழைய விஷயங்களை மனதை விட்டு விரட்டி, எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பழக வேண்டும். அந்த சிந்தனையும் கூட அதிக நேரம் நீடிக்க கூடாது. எப்போதும் இயல்பாக இருப்பதுதான் மன ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

    Next Story
    ×