என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமின்றி தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.
    தொழில்நுட்ப முன்னேற்றம் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்தில் அதற்கு இணையாக அதிகரித்து வரும் சமூகக் குற்றங்களை பார்க்கும்போது நம் நெஞ்சம் பதைபதைக்கிறது.

    எதிர்காலம் எப்படி இருக்குமோ? என்ற கேள்வி நம்மை அச்சுறுத்துகிறது. குறிப்பாக, பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் பல பெற்றோர்களை நிம்மதியிழக்க செய்திருக்கிறது.

    எங்கே இருக்கிறது இந்த தவறுகளின் தொடக்கப்புள்ளி? என்று யோசித்துப் பார்த்தால் விடை ஒன்று தான். அது குழந்தை வளர்ப்பு முறை. பிறக்கும் போதே யாரும் குற்றவாளிகளாக பிறப்பதில்லை. சிறு வயது அனுபவங்களே ஒரு மனிதனை செதுக்குகின்றன. நற்பண்புகளுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் சமூகத்தில் உயர்நிலையை அடைவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

    குழந்தை வளர்ப்பு என்றவுடன் உணவு, உடை, இருப்பிடம் போன்ற அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமில்லை. நமது பாசத்தை காட்டுவதற்காக வாங்கிக் குவிக்கப்படும் பொம்மைகளும் பரிசுப்பொருட்களும் இல்லை. அறமும், ஒழுக்கமும் கற்பிக்கும் உயரிய பொறுப்பு அது.

    நமது சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் ஆண் பிள்ளைகளை வளர்ப்பதிலும் காலம் காலமாக ஒரு வேறுபாடு இருந்து வருகிறது. குறிப்பாக பருவ வயதில், அவர்களுக்கு உடல் ரீதியாக மாற்றம் ஏற்படும் போது பெண் பிள்ளைகளை நாம் பேணுவதை போல ஆண் பிள்ளைகளை பேணத் தவறுகிறோம்.

    ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை வயது வந்த பெண் பிள்ளைகளுக்கு தருகிறோம். சமுதாயத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், எப்படி உடையணிய வேண்டும் என்பது போன்ற அறிவுரைகளை அவர்களுக்கு அவ்வப்போது சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் ஆண் பிள்ளைகள் அதே வயதில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு தடுமாறுகிற மனநிலையில் இருக்கும்போது நாம் அவர்களை கண்டுகொள்வதே இல்லை.

    தனிமையில் தள்ளப்படும் இந்த பிள்ளைகள் முறைப்பதும், கோபப்படுவதும் என்று தந்தைக்கு எதிராக திரும்புவதும் இந்த காலக்கட்டத்தில் தான். நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் மற்றும் மது பழக்கங்களை இன்றைய சிறுவர்கள் வெகுவிரைவாகவே கற்றுக் கொள்கின்றனர்.

    பிள்ளைகளிடம் தென்படும் இந்த திடீர் மாற்றத்தை அலட்சியம் செய்தல் கூடாது. ‘அடித்து வளர்க்காத பிள்ளையும் ஒடித்து வளர்க்காத முருங்கையும் எதற்கும் உதவாது’ என்ற பழமொழியெல்லாம் இந்தக் கால பிள்ளைகளிடத்தில் எடுபடாது. அவர்கள் செய்யும் தவறுகளுக்காக அடிக்க ஆரம்பித்தால் இன்னமும் மூர்க்கமாகவும் முரட்டுத்தனமாகவும் மாறுவார்கள்.

    இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு பிள்ளைகளிடத்தில் நட்போடு பழக வேண்டும். முகம் சற்று வாடியிருந்தால் கூட ‘என்னப்பா பிரச்சினை என்கிட்ட சொல்லு’ என்று ஆரம்பம் முதலே பெற்றோர் பிள்ளைகளிடம் அக்கறை காட்ட வேண்டும். சிறுவர்களாய் இருக்கும் போதே நீதிக் கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்.

    ஆன்மீகம், யோகா போன்ற பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை வளர்க்கும் விஷயங்களில் அவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பருவ வயது பிள்ளைகள் அடிக்கடி போனை எடுத்துக்கொண்டு தனியறைக்கு செல்லும்போது, அதன் தீமைகளை புரியும்படி சொல்லித் தடுக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான விளையாட்டு அல்லது தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களின் சிதையும் கவனத்தை நல்வழியில் மடைமாற்றம் செய்ய வேண்டும்.

    பிள்ளைகளுக்காக அதிகமாக பணம் செலவழிப்பதை விட அவர்களுடன் அதிகமான நேரம் செலவிட வேண்டும். கேட்பதை எல்லாம் உடனே வாங்கிக் கொடுப்பதும் சரியான வளர்ப்பு முறை அல்ல. உண்மையிலேயே அந்த பொருள் அவசியம் தானா? நமது பொருளாதார நிலைக்கு அது அவசியமானது தானா? என்பதை பிள்ளைகளுக்குப் புரிய வைக்கவேண்டியது நமது கடமை.

    அடம்பிடிக்கும் போதும் பெரியவர்களை மதிக்காமல் நடக்கும் போதும் கண்டிக்காமல் செல்லம் கொடுப்பதும் பல பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். அதிகமான கண்டிப்பு எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவு அதீதமான செல்லமும் பிள்ளைகளை கெடுத்து விடும்.



    பிரச்சினை என்று வரும்போது, ‘நீ சரியாக பிள்ளையை வளர்க்கவில்லை’ என்று தாய்மார்களை ஆண்கள் சாடுவது நமது சமுதாயத்தில் மாறவேண்டிய விஷயங்களில் ஒன்று. வளர்ப்பு என்பது இருவருக்கும் சமமான பொறுப்பு என்பதை ஆண்களும் உணர வேண்டும்.

    அமெரிக்காவில் பள்ளி சிறுவர்கள் அடிக்கடி துப்பாக்கி சூடுகளில் ஈடுபடுவதற்கு காரணம் அங்கே குடும்ப அமைப்பு சிதைந்து வருவது தான். இங்கேயும் இது போன்ற தவறுகள் நடக்கும் முன்னர் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

    பிள்ளைகளுடன் உட்கார்ந்து அன்றைய நிகழ்வுகளைப் பற்றி பேசுவது, எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடுவது என தோழமையோடு வளர்க்கப்படும் பிள்ளைகள் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. மனதில் உள்ளவற்றை வெளியில் சொல்ல முடியாமல் அழுத்தம் ஏற்பட்டு தான் அவர்கள் தவறு செய்யும் மனநிலைக்கு ஆளாகின்றனர்.

    சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கிக்கொண்டு, குழந்தைக்கு தொலைக்காட்சியை போட்டுவிட்டோ, டேப்லெட்டை கொடுத்துவிட்டோ மணிக்கணக்காக கார்ட்டூன் பார்க்கச்செய்யும் பழக்கம் இன்றைய இளம் தாய்மார்களிடம் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக குழந்தை அழும் சமயங்களில் அவர்களின் கையில் செல்போனை திணித்துவிட்டு, தங்களை நிம்மதி படுத்திக்கொள்கிறார்கள். இதனால் ஏற்படும் விபரீதத்தை அறிந்தும் அறியாதோராய் இருக்கிறார்கள். பாசத்தோடு தாலாட்டு பாடி பிள்ளைகளை தூங்க வைக்கும் தாய்மார்கள் அரிதாகிவிட்டார்கள்.

    நவீன தாய்மார்களின் செயல்பாடுகளால் குழந்தைகளின் ஆரோக்கியமும் குறைந்து அறிவும் மட்டுப்படும். ஆரம்ப காலத்தில் கற்பிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கங்களை அப்போது விட்டுவிட்டு காலம்கடந்து அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்துப் பயனில்லை.

    பள்ளியில் முதல் மார்க் தான் வாங்க வேண்டும். கல்லூரியில் நான் சொல்கிற படிப்பு தான் படிக்கவேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் பிள்ளைகளை மனஅழுத்தத்தில் கொண்டு போய்விடும். அவர்களுடைய ஆர்வத்தையும் விருப்பத்தையும் மனதில் கொண்டே இவ்விஷயத்தில் செயல்பட வேண்டும்.

    காதல் அல்லது தேர்வில் தோல்வி என்று தற்கொலையில் மாணவர்கள் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்று கற்றுக்கொடுக்கப்பட்ட பிள்ளைகள் அவற்றை சுலபமாக கடந்துவிடுகிறார்கள்.பிள்ளை வளர்ப்பு என்பது சிறு வயதோடு முடிந்து விடுவதன்று. கல்லூரி முடித்து திருமணமாகும் வரை அவர்களின் மேல் பெற்றோர் கண்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். ‘எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம், நாங்கள் உனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்போம்’ என்ற நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை பிள்ளைகளிடம் சொல்லி வந்தால் எவ்வளவு பெரிய தடையையும் அவர்கள் அழகாக சமாளித்து வெற்றி பெறுவார்கள்.

    பெண்குழந்தைகளிடம் கட்டுப்பாடுகளை மட்டுமே விதிக்காமல், அவர்களை தைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் வளர்க்க வேண்டும். ஆண் பிள்ளைகளுக்கு பெண்களை தோழியாகவும் சகோதரியாகவும் பாவிக்கும் எண்ணத்தை சிறுவயது முதலே சொல்லி கொடுக்க வேண்டும்.

    எதிர்கால சமுதாயத்துக்கு நம் வீட்டிலிருந்து ஒரு குற்றவாளியை தந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.

    ஆசானாய், தோழனாய் அன்பு காட்டும் பெற்றோர் அமைந்துவிட்டால் அருமையான பிள்ளைகளும் வளமையான எதிர்காலமும் உருவாகும்.

    எழுத்தாளர் விஷ்வசாந்தி சரவணகுமார்
    பெண்கள் தங்கள் குழந்தைகள் அணிய தாங்களே தங்கள் கரங்களில் மெல்லிய ஆடைகளை பின்னி அணிவிப்பர். அந்த கொக்கி பின்னல் என்பது ஆங்கிலத்தில் க்ரோசெட் என்று அழைப்பர்.
    பெண்கள் தங்கள் குழந்தைகள் அணிய தாங்களே தங்கள் கரங்களில் மெல்லிய ஆடைகளை பின்னி அணிவிப்பர். அந்த கொக்கி பின்னல் என்பது ஆங்கிலத்தில் க்ரோசெட் என்று அழைப்பர். இந்த கொக்கி பின்னலாடைகள் பார்க்க அழகாகவும், இடைவெளியுடன் காட்சி தரும் உருவங்களும் மனதை கவரும். அதுபோலவே கொக்கி பின்னல் வடிவமைப்பில் க்ரோசெட் நகை வடிவமைப்பிலும் வந்துள்ளன.

    அதாவது மெல்லிய வடிவில் பலதரப்பட்ட உருவங்கள் பின்னப்பட்ட அமைப்பில் அழகுடன் தங்க நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பழைய வடிவமைப்பில் இருந்து பெரிதும் மாறுபட்டவாறு உள்ளது. அதாவது தங்க தகடுகளில் உருவம் பதியப்பட்டு, எம்போஸ் செய்யப்பட்டவாறும் தான் நகைகள் உருவாயின. சில மெல்லிய தங்க கம்பிகள் மற்றும் தற்போதைய இயந்திர உதவியுடன் நகைகள் வடிவமைக்கப்பட்டு ஆனால், க்ரோசெட் நகைகள் என்பது தங்க தகட்டில் உருவம் அழுத்தப்பட்டு வேண்டாத பகுதி தங்கம் வெளியேற்றப்பட்டு ஒரு ஜன்னல் போன்ற அமைப்பிலும் மற்றும் துளைகள் உள்ளவாறும் உள்ளன.

    இதில் அதிக தங்கம் சேர்க்கப்படாமல் எடை குறைவான நகையாகவே காட்சிப்படுத்தப்படும். பெரிய அளவிலான நகைகள் முதல் சிறிய நகைகள் வரை இந்த க்ரோசெட் எனும் கொக்கி பின்னல் வடிவமைப்பில் அழகுடன் உருவாக்கி தரப்படுகின்றன. வலை பின்னல் ஓவியமாய் காட்சி தரும் இந்நகைகள் இளவயதினரை அதிகமாக கவர்கின்றன.

    க்ரொசெட் காதணிகள்

    மெல்லிய வலலைப்பின்னல் காதணிகள் என்பது சிறு கம்மல் மற்றும் தொங்கும் அமைப்பு என்றவாறு உள்ளது. இதில், தொங்கும் பகுதி என்பதில் அழகுடன் பூக்கள், கொடிகள், இலைகள் போன்றவை வலை பின்னல் அமைப்புடன் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த காதணிகள் அதிக எடையின்றி தினசரி அணிய ஏற்றவாறு உள்ளது. அதாவது கூண்டு அமைப்பில் தொங்கு பகுதி இருபுறமும் இடைவெளியுடன் கூடிய டிசைன் அமைப்பில் காணப்படுகிறது. ஒரு பக்கமுள்ள அதே டிசைன் பின்பகுதியில் இருப்பதால் தூர இருந்து பார்க்கும்போது காதணி ஜொலிப்புடன் அழகிய உருவ அமைப்பில் வெளிப்படுத்தும். சில காதணிகள் மிக இறுக்கமாக பின்னப்பட்டு பூ அமைப்பிலும், உட்புறம் வெற்றிடமாக அதே நேரம் வெற்வேறு உருவ தோற்ற பொலிவை மாற்றி தரும் வகையிலும் காட்சி தருகின்றது. இதில் தொங்கும் அமைப்பில்லாத ஸ்டெட் காதணிகளும் கிடைக்கின்றன.



    அழகிய க்ரோசெட் பென்டன்ட்

    செயின்களில் மாட்டக்கூடிய பெரிய மற்றும் பென்டன்ட் அழகுடன் கொக்கி பின்னல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய பென்டன்ட்களை விட க்ரோசெட் பென்டன்ட் அணிபவருக்கு கூடுதல் பொலிவை தருகின்றது. வித்தியாசமான உருவ அமைப்பு மற்றும் பின்னல்கள் கொண்டவாறு நீள் சதுரம், வட்டம், இதயம், கூம்பு வடிவிலான பென்டன்ட்கள் கிடைக்கின்றன. சில பென்டன்ட்கள் இரட்டை வளையங்கள், இரட்டை முத்துகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

    க்ரோசெட் மோதிரங்கள்

    க்ரோசெட் மோதிரங்கள் முந்தைய மோதிரம் போன்ற வடிவமைப்பில் இல்லாத மாறுபட்டவாறு உள்ளன. வட்டம், சிமிழ், சதுரம், நீள்சதுரம் என்றவாறு கீழ் பகுதி தங்க தகடு என்றவாறு மேல் மூடியப்பகுதி காட்சி தருகிறது. பூ மற்றும் அழகிய பின்னல்கள் இருபுறமும் உள்ளவாறும் மோதிரட் கிடைக்கிறது. இந்த க்ரோசெட் மோதிரங்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. ஏனெனில் நாம் உண்ணும் உணவு துகள்கள் உட்புறம் சேர வாய்ப்பு அதிகம்.

    க்ரொசெட் நெக்லஸ்கள்

    கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இருக்கும் சோக்கர் நெக்லஸ்களாக க்ரோசெட் நெக்லஸ்கள் கிடைக்கின்றன. அழகிய கிறுக்கல் ஓவியங்கள் போல் காட்சி தரும் வகை விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு உள்ளதுடன் அனைவர் பார்வையும் க்ரோசெட் நெக்லஸ் மீது தான் விழும். இதில் மஞ்சள் உலோக பின்னணி மட்டுமல்லாது சில ரேடியம் பூசப்பட்ட மாடல்களும் கிடைக்கின்றன.

    முருங்கை கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பருப்பு, முருங்கை கீரை சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கை கீரை - ஒரு கப்,
    இட்லி அரிசி - ஒரு கப்,
    வெங்காயம் - 1
    கடலைப் பருப்பு, துவரம் பருப்பு - தலா அரை கப்,
    உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு - தலா ஒரு டீஸ்பூன்,
    தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,
    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    காய்ந்த மிளகாய் - 3,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை:

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    பிறகு களைந்து அதனுடன் மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரவென அரைத்து கொள்ளவும்.

    அதனுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, முருங்கை கீரை சேர்த்து கலக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சத்து நிறைந்த பருப்பு முருங்கை கீரை அடைரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் இரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து காண்போம்.
    இந்தியாவில் சுமார் 70 சதவீதம் பேருக்கு ரத்தசோகை குறைபாடு உள்ளது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரத்தசோகை ‘அனீமியா‘ என்று அழைக்கப்படுகிறது. இந்த ரத்தசோகை குறைபாடுகளுக்கு ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணம் மாதவிலக்கு போன்ற காரணங்களால் அவர்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு.

    பொதுவாக ரத்தசோகை பிரசவத்தை சிக்கலாக்கி உயிருக்கே கூட ஆபத்தை விளைவித்து விடுகிறது. இத்தகைய ரத்தசோகை ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் வழிமுறைகள் என்ன? என்பது குறித்து காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை மகப்பேறு சிறப்பு மருத்துவர் திவ்யா கூறியதாவது:-

    ரத்தசோகை

    ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதே ரத்தசோகை எனப்படும். ரத்தத்தின் சிவப்பணுக்குள் இருக்கும் புரதம் தான் ஹீமோகுளோபின் ஆகும். இந்த ஹீமோகுளோபினில் இரும்புச்சத்து இருக்கும். இத்தகைய சிவப்பணுக்கள் தான் ரத்தத்தில் பிராணவாயுவை உடல் முழுவதும் எடுத்து செல்கிறது. பொதுவாக சிவப்பணுக்கள் 110 முதல் 120 நாட்கள் வரை உயிர் வாழும். அதன்பிறகு அது சிதைந்து விடும். ரத்தசோகை என்பது பெண்களை பொறுத்தவரை ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.

    பெண் குழந்தைகளுக்கு, சிறு வயது முதல் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகள் இன்றி அவர்கள் வளர்கின்றனர் என்பதே அதற்கு காரணம் ஆகும். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது தேவையான அளவுக்கு சக்தி இல்லாமல் போகிறது. அதனால் உடல் ஆரோக்கியம் குறைந்து விடுகிறது. அதுமட்டுமின்றி வயதுக்கு வந்தவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர்.

    அறிகுறிகள்

    இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் ரத்தசோகையால், சோர்வு உண்டாகும். மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் உதிரப்போக்கால் எலும்புகள் பலமிழக்கும். அப்போது பித்தம் அதிகரிப்பதால் ரத்தம் சீர்கெடும். இதனால் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், வாந்தி வரும். இதுதவிர கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் உண்டாகும்.

    சிறிது உணவு சாப்பிட்டாலும் வயிறு நிறைந்ததை போன்ற உணர்வு, செரிமானமின்மை, உடல் வெளுத்து போகுதல், கை, கால்களில் நகம் உடைந்து போகுதல், வீக்கம், முடி கொட்டுதல், வாயின் ஓரத்தில் புண் உண்டாகுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். இதுதவிர முகவீக்கம், கண், நாக்கு வெளுத்து காணப்படுதல், மூச்சு விடுவதில் சிரமம், இதயம் வேகமாக அல்லது தாறுமாறாக துடிப்பது, குளிர்ச்சியான சூழலை தாங்க முடியாத நிலை, நாக்கு உலர்ந்து போவதால் சுவையுணர்வு பாதிக்கப்படுவது, அதிகம் வியர்ப்பது போன்ற அறிகுறிகளும் இருக்கும்.

    காரணங்கள்

    பெண்கள் கர்ப்பம் ஆகுவதற்கு முன்பு அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல், பிரசவத்தின் போது இரும்புச்சத்து குறைவாக உள்ள பெண்களுக்கு ரத்தசோகை அதிகமாக ஏற்படும். இளவயதில் திருமணம் ஆவதால் இந்த குறைபாடு வர வாய்ப்புள்ளது. இதுதவிர வலுவற்ற அல்லது பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜையினாலும் ரத்தசோகை உண்டாகும்.

    வயிற்றில் உண்டாகும் புண், கட்டி, வீக்கம், புற்றுநோய் இவற்றால் உள்ளே ஏற்படும் ரத்தகசிவாலும் ரத்தசோகை ஏற்படலாம். இதுதவிர ஒரு சில நோய்கள் காரணமாக சீக்கிரமாக சிவப்பணுக்கள் சிதைவதாலும், அப்போது எலும்பு மஜ்ஜைகள் அதிக ரத்த செல்களை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாலும் உண்டாகலாம். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நோய் தொற்றுகளை போக்கும் சில மருந்துகள், நச்சு பொருட்களாலும் ரத்தசோகை உண்டாகும். இதுதவிர இன்னும் சில காரணங்கள் உள்ளன.



    பிரசவத்தின் போது...

    கர்ப்ப காலத்தில் பெண்களின் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை 10.5 கிராம் என்ற அளவில் இருப்பது நல்லது. அதற்காக 5 அல்லது 6-வது மாதத்தில் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிடுவதும், அதிக ரத்தசோகையாக இருந்தால் ரத்தம் ஏற்றிக்கொள்வதும் நல்லது. அதேபோல் 7 அல்லது 8-வது மாதத்தில் ரத்த ஊசி போட்டுக்கொள்வதும், 8 அல்லது 9-வது மாதத்தில் ரத்தம் ஏற்றிக்கொள்வது பிரசவத்தை சிக்கலின்றி எளிதாக்கும்.

    பொதுவாக பிரசவத்தின்போது ரத்தப்போக்கு 500 மில்லி லிட்டர் வரை இருக்கலாம். அதுவே அறுவை சிகிச்சை என்றால் 1 லிட்டர் வரையிலும் ரத்தப்போக்கு இருக்கலாம். ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தால் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். அதனை அவர்களால் தாங்கி கொள்ள இயலாது. மேலும் 5 அல்லது 6 குழந்தை பெற்றவர்கள் கண்டிப்பாக ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

    இரும்புச்சத்து மாத்திரை

    குடலில் இருக்கும் நாக்கு பூச்சிகள் உணவில் உள்ள சத்துக்களை எடுத்துக்கொள்ளும். அதனால் சத்து குறைபாடு உண்டாகும். இதனை தவிர்ப்பதற்காக பூச்சி மாத்திரை சாப்பிட வேண்டும். பெண்கள் வயதுக்கு வந்தவுடன், அதாவது 11 முதல் 12 வயதில் உள்ளவர்களுக்கும், ஒரு சிலருக்கு 20 வயது வரை கூட ரத்தப்போக்கு அதிகமாக இருக்க வாய்ப்புண்டு. அந்த சமயத்தில் அவர்கள் இரும்புச்சத்து மாத்திரைகளை டாக்டரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

    பொதுவாக ஆண்களுக்கு ரத்தத்தில் 15 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 கிராம் என்ற அளவிலும் சிவப்பணுக்களின் எண்ணிக்கை இருப்பது நல்லது. இது ஆரோக்கியமான வாழ்வை தரும். சாதாரணமாக ரத்த பரிசோதனையிலேயே ரத்தசோகையை கண்டுபிடித்து விடலாம்.

    உணவு முறைகள்


    இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பது எப்போதும் நல்லது. கீரைகள், பீன்ஸ், பருப்பு வகைகள், உலர் திராட்சை, அத்திப்பழம், பலாப்பழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்காய் ஆகியவற்றை தினமும் சாப்பிடுவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தியடைந்து ரத்தசோகை நீங்கும். முளை கட்டிய பயறு, முந்திரி, பாதாம், பிஸ்தா பருப்புகள், உளுந்தங்களி சாப்பிடுவதும் நன்மை தரும்.

    ரத்தசோகை ஏற்பட்டால் வைட்டமின்-12 குறைபாடும் உண்டாகும். அது நரம்புகளின் செயல்பாட்டை பாதிக்கும். பொதுவாக ரத்தசோகையில், சாதாரணமானவை, தீவிரமானவை உள்பட பல வகைகள் உண்டு. ரத்தசோகை என்பது ஒரு நோயல்ல. அது ஒரு குறைபாடு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பநிலையிலேயே ரத்தசோகையை கண்டறிந்து விட்டால் எளிதில் அதிலிருந்து தப்பித்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் மூச்சுத்திணறல் குறையும். நுரையீரல்களில் உள்ள சளி விரைவில் வெளியேறும் சுவாசக் கோளாறுக்கு பயனுள்ளது.
    பெயர் விளக்கம் : அர்த்த என்றால் பாதி என்று பொருள். சீர்ஷா என்றால் தலை என்று பொருள். இந்த ஆசனம் சிரசாசனத்தின் பாதி நிலையில் இருப்பதால் அர்த்த சிரசாசனம் என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை : வஜ்ராசனத்தில் உட்காரவும், கைவிரல்களை கோர்த்து குனிந்து முழங்கையிலிருந்து கைவிரல்கள் வரை தரை விரிப்பின் மேல் படிய வைக்க வேண்டும். தலையின் மேல் பகுதியை தரையில் வைக்கவும். உள்ளங்கைகள் தலையின் பின்புறத்தை தாங்கிக் கொள்ளும்படி இருக்கட்டும். முழங்கைகளை தரையிலிருந்து உயர்த்தி கால் விரல்களை முகத்தை நோக்கி சற்று நகர்த்தி வைக்கவும். முழங்கால்கள் மடங்காமல் இருக்கட்டும்.

    இந்த ஆசன நிலையில் 1 முதல் 2 நிமிடம் வரை சாதாரண மூச்சுடன் நிலைத்திருக்கவும். பிறகு கால்களை மடக்கி முழங்கால்களை தரைவிரிப்பின் மேலே வைத்து உடனே தலையை மேலே தூக்காமல் சில வினாடிகள் இருந்து பிறகு வஜ்ராசன நிலைக்கு வரவும். அதிலிருந்து கால்களை நீட்டி வைத்து ஓய்வு நிலைக்கு செல்லவும். (சுவாசனம்). இந்த ஆசனத்தை 1-3 முறை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : மூச்சு, தலை, கழுத்து மற்றும் சகஸ்ர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு : புதியதாக அர்த்த சிரசாசனம் செய்யும் போது ஒரு நிமிடம் கூட செய்ய இயலாதவர்கள் முடிந்த அளவு நேரம் செய்யவும்.

    தடைக்குறிப்பு : கண், காது, மூக்கு, தொண்டை இவைகளில் நோய் உண்டான போதும், இருதய கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு, கடினமான மலச்சிக்கல், மிக அசுத்தமான ரத்தம், கழுத்துவலி, தலைவலி போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களும், கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இந்த ஆசனத்தை செய்யக் கூடாது.

    பயன்கள் : மூளைக்கு அதிக ரத்தம் செல்வதால், சிரசாசனம் செய்வதால் கிடைக்கும் பயன்களில் ஓரளவு இந்த ஆசனத்திற்கும் உண்டு. குறைந்த ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு நன்மையளிக்கிறது. மூச்சுத்திணறல் குறையும். நுரையீரல்களில் உள்ள சளி விரைவில் வெளியேறும் சுவாசக் கோளாறுக்கு பயனுள்ளது. 
    இன்று நாம் ஆரோக்கியத்தைவிட சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் எந்த உணவகத்தில் சுவையான உணவுகள் கிடைக்கின்றன என்று தேடித்தேடிச் சென்று சுவைக்கின்றோம்.
    நாம் இந்த உலகத்தில் குழந்தையாக பிறக்கும் முன்பே, நமது தாய் மார்பில் நமக்கான (பால்) உணவு பத்திரமாக படைக்கப்பட்டுவிடுகிறது. உலகத்தின் உணவுத் தத்துவமும் இதுதான். உயிர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே உலகத்தில் அவைகளுக்கான உணவுகள் உருவாக்கப்பட்டுவிட்டன. பாலை (முதல்) உணவாகத் தருகிறவரை ‘தாய்’ என்கிறோம். அதைப்போல் காய், கனி, கிழங்கு, கீரை, தானியங்கள் என்று அத்தனையையும் தருகின்ற மண்ணையும் தாயாகப் போற்றுகிறோம். அதனால்தான் ‘தாய் மண்’ என்று சொல்கிறோம்.

    எப்படியோ ஏதாவது ஒருவகையில் தாய்தான் மனுஷியாகவும், மண்ணாகவும் இருந்து உணவளிக்கிறாள். மனுஷியான தாய், தான் பெற்ற குழந்தைக்கு முதலில் தனது பாலைப் புகட்டினாள். பிற்காலத்தில் அவள் தான் சாப்பிட்டுப்பார்த்து, சரியாக ஜீரணமாகிறது, ஆரோக்கியத்திற்கும் ஏற்றது, என்று நம்பிய உணவை தனது வாயால் நன்றாக மென்று அதை குழந்தைக்கான உணவாக ஊட்டியிருக்கிறாள்.

    இயற்கை, இந்த உலகம் முழுக்க பூமி எங்கும் சமதளங்களில் தானியங்களையும், தாவரங்களையும் படைத்திருக்கிறது. காடு களில் காய், பழம், தேன், மூலிகைகளை உருவாக்கியிருக்கிறது. அதோடு பிராணிகளையும், விலங்குகளையும் தோற்றுவித்தி ருக்கிறது. நீர் நிலைகளிலும், கடலிலும் மீன்கள் மற்றும் ஆயிரக்கணக்கான உயிரினங்களையும் படைத்துள்ளது. இவை அனைத்தும் படைக்கப்பட்டு பழங்கால மனிதனைச் சுற்றி பரந்து விரிந்து கிடந்தன.

    ஆதிமனிதனுக்கு பசி உணர்வு ஏற்பட்டது. அவன், தன் பசியை ஆற்ற எதை உண்பது? மண்ணின் மேலே விளைவதையா? கீழே விளைவதையா? மரத்தில் காயாய் தொங்குவதையா? பழமாய் தொங்குவதையா? கடலில் நீந்துவதையா? காட்டில் ஓடுவதையா? எதை உண்பது? எப்படி உண்பது? என்ற ஏகப்பட்ட கேள்விகளோடு, சரியான வழிமுறைகள் தெரியாமல் தவித்தான். கண்டதையும் சாப்பிட முடியுமா? அப்படி சாப்பிட்டு அது உடலுக்கு பொருந்தாத விஷமாகிவிட்டால், உயிர் அல்லவா போய்விடும்.

    உண்மைதான்! இந்த மண்ணுலகில் விளைந்திருக்கும் பொருட்களில் எது சரியான உணவு? எது விஷம்? என்பதை கண்டறிய, விஞ்ஞான அறிவும், தகவல்-தொடர்பும் இல்லாதிருந்த அந்த காலத்தில் (நாம் இன்று சாப்பிடும் முறையான உணவை கண்டுபிடித்து தருவதற்காக) எத்தனை மனிதர்கள் தன் உடலையே ஆராய்ச்சிக் கூடமாக்கி அவஸ்தைபட்டு இறந்திருப்பார்கள்!

    வரலாற்று உண்மைகளை புரிந்துகொள்ள நாம் காலத்தை ‘கிறிஸ்து பிறப்பதற்கு முன்’ ‘கிறிஸ்து பிறப்பதற்கு பின்’ என்று பிரிப் பதுபோல், வரலாற்றுக்கு முந்தைய உணவு காலகட்டத்தை குறிப்பிட ‘தீ.மு’ (தீயை கண்டுபிடிப்பதற்கு முன்பு), `தீ.பி’ (தீயை கண்டுபிடித்த தற்கு பின்பு) என்று குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் தீயை கண்டுபிடித்த பின்புதான் மனிதர்கள் உணவின் சுவையை முழுமையாக உணர்ந்தார்கள்.

    இன்றைய நவீன உணவு உலகம் எத்தனையோ புரட்சிகரமான வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் சந்தித்திருக்கிறது. முன்பெல்லாம் வெளிநாடுகளுக்கு சென்றால்தான் அந்தந்த நாட்டு புகழ்பெற்ற உணவுகளை சாப்பிட முடியும். இன்றைய நிலை அப்படி அல்ல, பல்வேறு நாட்டு புகழ்பெற்ற உணவுகள் அதே சுவையில் இந்தியாவிலும் கிடைக்கிறது. நம் நாட்டு புகழ்பெற்ற உணவுகள் வெளிநாடுகளிலும் கிடைக்கின்றன. இன்று நாம் ஆரோக்கியத்தைவிட சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதனால் எந்த உணவகத்தில் சுவையான உணவுகள் கிடைக்கின்றன என்று தேடித்தேடிச் சென்று சுவைக்கின்றோம்.

    இந்த தேடுதல் வரலாற்று காலத்திலே தொடங்கிவிட்டது. எந்த நாட்டில் ருசி நிறைந்த புதிய வகை உணவுகள் கிடைக்கும் என்று மன்னர்களும் தேடியிருக்கிறார்கள். பிற நாடுகளை கைப்பற்ற வேண்டும், அங்கிருக்கும் பொன், பொருளை அள்ளிக்கொண்டு போகவேண்டும் என்று போருக்கு புறப்பட்ட மன்னர்கள் எதிரிநாடுகளில் பார்த்த வித்தியாசமான உணவுப்பொருட்களை ருசித்து விட்டு, வியந்துபோய் அதற்கு தேவைப்படும் உணவுத் தாவரங்களை தங்கள் நாட்டுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். எதிரி நாடுகளில் உள்ள புதிய உணவுகளையும் தங்கள் நாடுகளில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.



    ஆதிகாலத்து உணவுகளை பற்றி நாம் குறிப்பிடும்போது தேனீக்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டாக வேண்டும். அவை சேகரித்த தேன்தான் பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு ருசிமிக்க உணவாக இருந்திருக்கிறது. தேனை கடவுளுக்கு நிகராக கருதி, பிறந்த குழந்தையின் நாக்கில் ஒரு துளியை தொட்டுவைத்து, அது சிரித்ததும் கடவுள் அனுக்கிரகம் அந்த குழந்தைக்கு கிடைத்துவிட்டது என்று மகிழ்ந்திருக்கிறார்கள். பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் தேனை சாட்சியாக வைத்துதான் திருமணம் செய்திருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட தேனின் சுவையை மட்டுமே அறிந்தவன், மன்னன் டேரியஸ். அப்போது பெர்ஷியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈரான் பகுதியை ஆண்ட அவன், கி.மு. 510-ல் இந்தியா மீது படையெடுத்து வந்தான். அதற்கும் வெகுகாலத்திற்கு முன்பே இந்தியாவில் கரும்பு பயிராகி இருந்தது. அதில் ஜூஸ் தயாரித்து இந்தியர்கள் தித்திப்பாக பருகிக்கொண்டிருந்தார்கள். மன்னன் டேரியஸ் பஞ்சாபில் கரும்புத் தோட்டத்தை பார்த்தான். அதில் சுவையான ஜூஸ் தயாரித்து பருகிவிட்டு, ‘இது என்ன மேஜிக் பயிர்’ என்று திகைத்து நின்றான். பஞ்சாபியர்கள் கரும்பின் பூர்வீக கதையையும் அருமை பெருமையையும் சொல்ல, ‘இதை என் நாட்டுக்கு கொண்டு செல்ல என்ன வழி?’ என்று கேட்டு, பத்திரமாக கரும்பை ஈரானுக்கு கொண்டுபோய் அங்கு அறிமுகப்படுத்தினான்.

    கரும்பின் கதை இதுவென்றால், வாழைப்பழம் கிரீஸ் நாட்டிற்கு போனது இன்னும் வித்தியாசமான கதை. மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 327-ல் பஞ்சாபில் போரிட்டு ரொம்ப சோர்ந்து போயிருந்தார். ‘உடனடி உற்சாகத்திற்கு உடனே ஏதாவது உணவு வேண்டும். ஏதாவது இந்தப்பகுதியில் இருக்கிறதா என்று கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்’ என்று படைவீரர்களிடம் சொல்ல, அவர்கள் வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து வாழைத்தாரில் சில பழங்கள் கனிந்திருப்பதை கண்டிருக்கிறார்கள். அவைகளை சாப்பிட்டு பார்த்து சுவையை அறிந்ததும், அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் எல்லாம் தேடி, கனிந்த பழங்களை கண்டெடுத்து மன்னன் அலெக்சாண்டரிடம் கொண்டுபோய் கொடுத்திருக் கிறார்கள். அதை சுவைத்து மகிழ்ந்த மன்னன், வாழைப்பழத்தின் பெருமையை உணர்ந்து அதனை கிரீஸ் நாட்டிற்கு கொண்டு சென்றான் என்கிறது, வரலாறு.

    இப்போது ஆங்காங்கே ‘ஒயின் ஷாப்’கள் கண்களில்படுகின்றன. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை ஒழித்துவிடுவோம்’ என்று சில கட்சிகளும் தேர்தல் காலங்களில் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இன்று வில்லனாக சித்தரிக்கப்படும் (ஒரிஜினல்) ஒயினை மனிதன், கிறிஸ்து பிறப்பதற்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்துவிட்டான். திராட்சை பழத்தை ஊறவைத்து, புளிக்கவைத்து, மண்ணுக்குள் புதைத்துவைத்து எப்படி எல்லாமோ அதை தயாரித்திருக்கிறார்கள். தாங்கள் தயாரித்த ஒயினோடு, தேனையும் கலந்தும் கிரேக்கர்கள் பருகியிருக்கிறார்கள். இப்படி ‘கலந்து’ சாப்பிட்டால் அறிவுவிருத்திபெறும் என்று ஆதிகாலத்து ஐரோப் பியர்கள் நம்பினார்கள். அதற்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தேனை மூலப்பொருளாகக் கொண்டு ஒருவகை ‘பீர்’ தயாரித்து பருகி மக்கள் குஷியடைந்திருக்கிறார்கள்.

    சரித்திரத்தில் இடம்பிடித்த பேரரசர்களில் ‘ருசித்து மகிழ்ந்தவர்’ என்று பெயரெடுத்தவர், பிரான்ஸ் மன்னர் பதினான்காம் லூயி. புதிது புதிதான உணவு வகைகளை ருசித்துக்கொண்டே இருப்பது இவர் வழக்கம். சுவைமிகுந்த உணவுகள் உலகில் எங்கெல்லாம் கிடைக்கும் என்பதை இவருக்கு சொல்லவே ஒரு குழு இயங்கி வந்திருக்கிறது. புதிய உணவு பற்றிய தகவல் கிடைத்த மறுநாளே அந்த நாட்டிற்கு தனது சமையல்கலை நிபுணர்களை அனுப்பி அதை கற்று வந்து, தனக்கு தயார் செய்து தரும்படி பதினான்காம் லூயி சொல்வார்.

    இவரது நாக்கை சுவையால் கவர்ந்த சமையல்கலை நிபுணர்கள் ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரியா, நெதர்லாந்து, பின்லாந்து, இத்தாலி என்று சுற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். இவர் தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 150 மதுவகைகளை சுவைத்திருக்கிறார். இன்று உலகம் முழுக்க பரவி இருக்கும் கலந்து குடிக்கும் ‘காக்டெயில்’ கலாசாரம் இவர் காலத்தில்தான் உதயமாகியிருக்கிறது. இத்தாலிக்கு ஆள் அனுப்பி, விஸ்கி தயாரிப்பு கலையை கற்றுவரச் செய்து, தன் நாட்டில் சொந்தமாக மது தயாரிப்பு ஆலையையும் இவர் நிறுவியிருக்கிறார்.

    உலகின் தலைசிறந்த மனிதர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை அனைவருக்கும் பசி, தாகம், மோகம் போன்ற உணர்வுகள் இருக்கின்றன. இவற்றில் எப்போதும், எல்லா காலகட்டத்திலும் இருந்து கொண்டிருப்பது பசிதான். மனிதர்கள் தினமும் இரு முறையாவது சாப்பிட்டாக வேண்டும். உடல் இயக்கத்திற்கு உணவே ஆதாரமாக இருக்கிறது. அதே நேரத்தில் பசியைப் போக்க மனிதனுக்கு ருசியும் தேவைப்படுகிறது. அந்த ருசியை மனிதன் தேடத் தொடங்கியதால் உலகில் பல்லாயிரக்கணக்கான உணவு வகைகள் தோன்றி விட்டன. இன்றும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. நல்ல உணவுகளைத் தேடி சுவையுங்கள்! ஆரோக்கியத்தை பேணுங்கள்! ஆரோக்கிய வாழ்க்கையே ஆனந்த வாழ்க்கை!

    கட்டுரை: முனைவர் ஜே.தேவதாஸ்

    (உணவியல் எழுத்தாளர்)

    சென்னை.
    ஃபிங்கர் சிக்கனை ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே ஃபிங்கர் சிக்கனை எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி) - 1/2 கிலோ
    முட்டை - 1
    தயிர்  - 1 கப்
    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    மைதா - 1 கப்
    பிரட் தூள் - 1 கப்
    உப்பு - 1 டீஸ்பூன்
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
    கேசரி கலர் - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும்.

    பின் அதில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

    சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

    ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பௌடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்து, அதில் உள்ள தயிர் கலவையை முற்றிலும் வடித்து விடவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

    வடிகட்டிய சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைபழச்சாற்றை பிளிந்தும் சாப்பிடலாம்.

    இப்போது சுவையான ஃபிங்கர் சிக்கன்  ரெடி!!!

    இந்த ஃபிங்கர் சிக்கனை சாஸோடு தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பாமாயில் எண்ணெயை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது கெட்டது என்றும் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    சமையல் செய்ய பெரும்பாலும் உபயோகிக்கும் எண்ணெய்களில் ஒன்று தான் பாமாயில். ஆனால், அதில் ஆரோக்கியமற்ற பிரச்சனைகளும் இருக்கின்றது. சில ஆராய்ச்சிகள் இதனை உபயோகிப்பது நல்லதென்றும், இன்னும் சில ஆராய்ச்சிகள் இது கெட்டது என்றும் கூறுகின்றன.

    குறிப்பிட்ட அளவில் பாமாயிலை உபயோகிப்பது பெரிய பிரச்சனையை உருவாக்கப்போவதில்லை. ஆனால், யாரெல்லாம் இதனை உபயோகிக்கலாம், யாரெல்லாம் உபயோகிக்கக்கூடாது என்பதை தெரிந்துக் கொள்வது நல்லது.

    பாமாயிலில் அதிகப்படியான கொழுப்பு சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் இதய நோய்க்கான அபாயம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம். உங்களுக்கு இதய நோய் இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் இருந்திருந்தாலோ பாமாயில் உபயோகிப்பதை தவிர்த்துவிடுங்கள்.

    உடல் எடை குறைப்பதற்கு முயற்சிப்பவரா நீங்கள். பாமாயிலின் அதிகப்படியான கொழுப்பு உடல் எடையை அதிகரிக்கக்கூடும். ஆனால், தினமும் பாமாயிலை உட்கொள்ளும் போது அது உடலில் உள்ள கொழுப்பு செல்களை படிபடியாக நீக்கும்.

    பாமாயிலில் உள்ள அதிகமான கொழுப்பு வளர்சிதை நோய்களை உண்டு பண்ணும். பாமாயிலில் உள்ள பால்மிடிக் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடும். எனவே, இது வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, வளர்சிதை நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும்.

    பாமாயிலை சமைக்கும் போது அது ஆரோக்கிய பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஆய்வு முடிவுகள் கூட, சமைத்த பாமாயில் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கூறுகிறது. ஆனால், சமைக்காத பாமாயில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.



    பரம்பரை வியாதிகளான அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் இதய நோய்கள் போன்றவை இருந்தால் பாமாயிலை தவிர்த்துவிடுங்கள். ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால், பாமாயில் உடலில் கொழுப்புச் சத்தை அதிகரித்துவிடும் என்பது தான்.

    பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் உங்கள் கண்களுக்கு அற்புதங்களைச் செய்யலாம். கண்பார்வை மேம்படுத்துவதில் பீட்டா கரோட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ (ரெட்டினோல்) உருவாவதற்கு பீட்டா கரோட்டின் முன்னோடியாகும். வைட்டமின் ஏ நல்ல பார்வைக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.

    பாமாயிலில் உள்ள பீட்டா கரோட்டின் ஹார்மோன்களை சமநிலைபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சமநிலையற்ற பாமாயிலால் ஏற்படக்கூடிய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட பாமாயிலை பயன்படுத்துவது சிறந்தது.

    பாமாயிலில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது உடலுக்கு இளமை தோற்றத்தை தருவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பாமாயிலை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள சுருக்கம் மற்ற தோல் பிரச்சனைகள் எல்லாவற்றையும் போக்கிவிடும். மேலும், இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆன்ஸிடன்டாகும்.

    வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு உங்களுக்கு இருந்தால் பாமாயிலை எந்த தயக்கமும் இல்லாமல் உபயோகிக்கலாம். தினசரி உணவில் பாமாயிலை சேர்த்துக் கொள்ளும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ கிடைத்துவிடும். அது பாமாயிலின் மிகச் சிறந்த குணங்களில் ஒன்று.
    தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம்.
    தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம்.

    plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில் உடலை இயக்க வேண்டும். வலது கை, வலது காலை வலதுபக்கமாக சற்று கீழே இறக்கி, ஏற்ற வேண்டும். அதேபோல் இடது கால், இடது கையை இடதுபக்கமாக கீழே இறக்கி, பின் ஏற்ற வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து கொள்ள வேண்டும்.

    Squats: கால்கள் எந்த அளவிற்கு வலுவாக உள்ளதோ, அந்தளவுக்கு உடலும் வலுவடையும். கைகளை நேரே நீட்டியவாறு, உடலை பாதியளவிற்கு கீழே இறக்கி, பின் மேலே ஏற்ற வேண்டும். சேரில் அமருவதை போல் அமர்ந்து செய்யும் உடற்பயிற்சி இது. இந்த பயிற்சியை செய்யும் போது உங்களின் கால் தொடைகளில் மாற்றம் தெரிவதை உணரலாம்.

    Mountain Climbers: தண்டால் எடுப்பது போன்ற நிலையில் இருக்க வேண்டும். அப்போது மலை ஏறுவது போல் கால்களை ஒவ்வொன்றாக கொண்டு சென்று, பின் பழைய நிலைக்கு வரவேண்டும். தசைகள் எவ்வளவு வேலை செய்கிறதோ, அந்தளவிற்கு உடல் கொழுப்பு கரைக்கப்படும்.

    toe To Bar: தொங்கக்கூடிய கம்பி வீட்டில் இருந்தால் போதும். அதில் தொங்கிக் கொண்டு, கால் விரல்களால் அந்த கம்பியை தொட வேண்டும். தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும், படிப்படியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.
    இட்லி, தோசை, சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும் தேங்காய் சேர்த்த இறால் குழம்பு. இன்று இந்த குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இறால் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    பூண்டு - மூன்று பல்
    தக்காளி - மூன்று
    எண்ணெய் - தேவையான அளவு
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    பட்டை - சிறிதளவு
    கறிவேப்பிலை - மூன்று கொத்து
    மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்
    மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
    மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன்
    மிளகு தூள் - 1 டீஸ்பூன்
    தேங்காய் பால் -  தேவையான அளவு
    சீரகம் - கால் டீ ஸ்பூன்



    செய்முறை :

    இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்க வேண்டும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    தேங்காய், சீரகத்தை நைசாக அரைக்க வேண்டும்.

    சோம்பை நன்றாக தட்டி வைக்க வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வதங்கியதும் இறாலை சேர்க்க வேண்டும்.

    இறால் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி மேலும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

    சூப்பரான தேங்காய் சேர்த்த இறால் குழம்பு ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தக்காளி பேஷியல், கோல்டன் பேஷியல், பப்பாயா பேஷியல் என்று பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன.
    பெண்கள் சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் வைத்துக்கொள்வதற்காக செய்வதுதான் பேஷியல். தக்காளி பேஷியல், கோல்டன் பேஷியல், பப்பாயா பேஷியல் என்று பலவகை பேஷியல்கள் இருந்தாலும் ஒயின் மற்றும் வோட்கா பேஷியல்கள் முகத்திற்கு கூடுதல் அழகு தருகின்றன.

    வோட்கா பேஷியல் செய்வதற்காக அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.வீட்டில் இருந்தவாறே இந்த பேஷியலை செய்யலாம், அதாவது இரவு தூங்குவதற்கு முன்பாக புதினா, தேனீர், எலுமிச்சை பழ சாறுடன் இரண்டு தேக்கரண்டி வோட்கா சேர்த்து குளிர்சாதன உள்பெட்டியில் (பிரீஸர்) பத்திரமாக வையுங்கள்.

    காலையில் பார்த்தால் வோட்கா கலவை அப்படியே ஐஸ் கட்டியாக உறைந்திருக்கும். இதை வெளியே எடுத்து முகத்தில் 10 நிமிடம் தடவி வர வேண்டும்.

    இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும். இதை அடிக்கடி பூசிக்கொள்வதால் நாளடைவில் உங்கள் முகம் மிருதுவாவதை காணலாம்.
    முகத்தில் உள்ள சுருக்கங்கள், பருக்களுக்கு இந்த பேஷியல் ஒரு சிறந்த மருந்து. வெயிலில் செல்லும் முன்பு இதை போட்டுக் கொண்டு சென்றால் சருமம் மாசுபடாமல் இருக்கும்.

    பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வரும் பெண்கள் அவர்களுக்கு சமமான பாதுகாப்பை தரக்கூடிய ஒருவரிடம் தங்கள்வாழ்க்கையை ஒப்படைக்க விரும்புகிறார்கள்.
    பெண்கள் தங்களை விட வயது அதிகமான ஆண்களை விரும்புகிறார்கள். தங்களை வழி நடத்தும் திறமை அவர்களுக்கு இருப்பதாக நம்புகிறார்கள். அதோடு தங்களை முழுமையாக புரிந்து கொண்டு பெருந்தன்மையோடு நடத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

    தங்கள் ‘லைப் பார்ட்னர்’ தங்களை விட அனுபவமும் ஆற்றலும் மிக்கவர்களாக இருந்தால் நல்லது என்ற எண்ணம் இன்றைய இளம் பெண்களிடம் தலைதூக்கிவிட்டது. அதனால் அப்படிப்பட்டவர்களை தேடத் தொடங்கிவிட்டார்கள்.

    பெண் எதிர்பார்க்கும் புத்திசாலித்தனம் ஆணிடம் இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையிலும் அவரோடு இணைந்து வெற்றிகளை தக்க வைத்துக் கொண்டால் என்ன என்று சிந்திக்கத் தொடங்குகிறார்கள். இந்த சிந்தனையின் விளைவு திருமணத்தில் முடிகிறது.

    ஆண்களின் அதிகபட்ச அனுபவமும், பக்குவமும் இங்கே கணக்கில் கொள்ளப்பட்டு இந்த இல்வாழ்க்கை இணைப்பு நடந்து விடுகிறது. எப்போதும் நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே அன்பு வளரும். பெற்றோரின் பாதுகாப்பை விட்டு வெளியே வரும் பெண்கள் அவர்களுக்கு சமமான பாதுகாப்பை தரக்கூடிய ஒருவரிடம் தங்கள்வாழ்க்கையை ஒப்படைக்க விரும்புகிறார்கள்.

    தங்களை விட வயதில் பெரிய ஆண்களை பெண்கள் பெரிதும் மதிக்கிறார்கள். இந்த மதிப்பே நாளடைவில் நம்பிக்கையாக மாறி விடுகிறது. ஆனால் அந்த பாதுகாப்பே பல பெண்களுக்கு எமனாகவும் மாறிவிடுகிறது.
    ×