என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மூக்கு கண்ணாடி அணிகிறவர்கள் எத்தனை வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கண்ணாடியை மாற்ற வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
    கண்ணாடி அணிகிறவர்கள் வருடத்துக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். நம்முடைய கண்ணின் அளவு சராசரியாக 22.5 மில்லி மீட்டர் சுற்றளவு இருக்கும். இந்த கண்ணின் அளவு மில்லி மீட்டர் அளவு கூடினாலோ அல்லது குறைந்தாலோ அதுதான் பார்வைக் குறைபாடு என்கிறோம்.

    18 வயது வரை நாம் வளர்கிற காலம் என்பதால் கண்ணுடைய பவர் அதிகமாகிக் கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு. 18 வயதுக்குட்பட்டவர்கள் வருடம் ஒருமுறை கண் பரிசோதனை செய்துகொண்டு அதற்கேற்றவாறு கண்ணாடியை மாற்றிக் கொள்ள வேண்டும். 18 வயதுக்கு மேல் 40 வயது வரை உள்ளவர்களுக்கு பவர் பெரும்பாலும் மாறாது.



    இரண்டு வருடம் அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை கண்ணாடியை மாற்றினால் போதும். இடையில் பார்வை மங்கலாவதுபோல் தெரிந்தாலோ வெளிச்சத்தைப் பார்த்துக் கண் கூசினாலோ கண்களிலிருந்து தண்ணீர் வந்தாலோ உடனே கண் பரிசோதனை செய்தாக வேண்டும். கண்ணாடியில் கீறல் போன்ற சேதம் ஏற்பட்டாலும் மாற்றிவிடுவது நல்லது.

    40 வயதுக்கு மேல் வெள்ளெழுத்து பிரச்சனை, கண்ணில் அழுத்தம், கண்புரை என்று கண் சார்ந்த பிரச்சனைகளும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற மற்ற உடல் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும் என்பதால் வருடத்துக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம்.
    கும்பகோணத்தில் மிகவும் பிரபலமான கடப்பாவை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுகொள்ள அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசிப்பருப்பு - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - 2,
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை,
    வெங்காயம் - 1,
    தக்காளி - ஒன்று,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    அரைக்க:

    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    பொட்டுக்கடலை - 5 டேபிள் ஸ்பூன்,
    ஏலக்காய் - ஒன்று,
    பூண்டு - 4 பல்.

    தாளிக்க:

    பட்டை - சிறிய துண்டு,
    கிராம்பு - ஒன்று,
    கறிவேப்பிலை - சிறிதளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள் தூள், உருளைக்கிழங்கு சேர்த்து வேக விட்டு எடுக்கவும். பருப்பு வெந்தவுடன் உருளைக்கிழங்கை தோல் நீக்கி பருப்புடன் சேர்த்து மசித்து கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுது, வேக வைத்த பருப்பு கலவை, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

    கடைசியாக மேலே கொத்தமல்லித்தழை தூவி இட்லியுடன் பரிமாறலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
    செய்முறை : ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிவிரல், சுண்டுவிரல் ஆகியவற்றை மடக்கி, உள்ளங்கைப் பகுதியில் வைத்து, கட்டைவிரலை நடுவிரலின் மேல் வைத்து மிதமாக அழுத்த வேண்டும்.

    15-30 நிமிடங்கள் வரை வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்ய வேண்டும்.

    பலன்கள் : கல்லீரலின் இயக்கம், சீராக மனச்சோர்வு, களைப்பு, கோபம், டென்ஷன், கவரை, மனஉளைச்சல், பயத்தை போக்கும், பித்தப்பபை, கணையம், குடல், செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய இந்த முத்திரையை செய்யலாம்.

    அஜீரணம் சரியாகி பசி எடுக்கும், கோபம் அதிகம் வருபவர்கள் முஷ்டி முத்திரையை 48 நாட்கள் வரை செய்து வர கோப குணம் மாறுவதோடு, படபடப்பு நீங்கும். இதய கோளாறு கட்டுப்படும்.
    நகங்கள் லேசான கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. நகங்களை எப்படி பாதுகாக்கலாம், பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.
    நகங்கள் லேசான கடினத்தன்மையோடு இருந்தாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவை. ஆரோக்கியமான நகங்கள் இளஞ்சிகப்பு நிறத்தில் இருக்கும். நகங்களை வைத்து ஆரோக்கியத்தை மதிப்பிடலாம்.

    அழகான இளஞ்சிவப்பு நகங்களைக் கொண்ட கைகளால் கைகுலுக்கும்போது, உங்கள் மீது நல்ல மதிப்பு உண்டாவதை தவிர்க்க முடியாது. அப்படி நகங்களை எப்படி பாதுகாக்கலாம். கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொண்டால் போதும். நகங்களை எப்படி பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

    நகங்கள் வளர : சிலருக்கு நகங்கள் எளிதில் உடைந்துவிடும் தன்மையோடு காணப்படும். அவர்கள் இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும் . விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றை விட்டு, கைகளை அமிழ்த்துங்கள். வாரம் இருமுறை செய்து பாருங்கள். நகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.

    நகங்களை ஷேப் செய்ய : நகம் வெட்டவேண்டுமென்றால் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால் எளிதாக வெட்டலாம். ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.



    தண்ணீரை மிதமாக சூடுபடுத்தி சிறிது உப்புக் கலந்து அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நகங்கள் அடிக்கடி உடைந்து போகாமல், கோணலாக வளைந்து வளராமல் நேராக வளர கால்சியம் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும்.

    மென்மையான கைகள் கிடைக்க : பப்பாளிப்பழம் எடுத்து அதில் சிறிதளவை மசித்து கூழாக்கி அதனோடு கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவினால் நாளடைவில் தோல் நல்ல மிருதுவாகவும் பளபளப்பாகவும் வரும்.

    நகங்கள் ஆரோக்கியமாக வளரும். தூங்குவதற்கு முன் கை கால்களுக்கு வேஸ்லின், பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய் என்று பூசினால் நகங்கள் பலம்பெறும்.

    செய்யக் கூடாதவை : நகத்தை பல்லால் கடிக்க கூடாது. நகங்களின் இடுக்குகளில் தங்கும் கிருமிகளால் தொற்று ஏற்படும்.

    தினமும் நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நகச் சாயம் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.
    பொன்னாங்கண்ணி கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இன்று பொன்னாங்கண்ணி கீரையை வைத்து சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பொன்னாங்கண்ணி கீரை - 1 கட்டு
    தக்காளி - 2
    பாசிப்பருப்பு - 1 கப்
     
    தாளிக்க :

    எண்ணெய் - தேவையான அளவு
    கடுகு
    உளுந்தம் பருப்பு
    சீரகம்
    வெங்காயம் - 1
     
    பொடி வகைகள் :

    சீரக பொடி - 2 தேக்கரண்டி
    மிளகாய் பொடி - 2தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு


     
    செய்முறை :

    பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாசிப்பருப்பை சீரக தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேக வைத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த பருப்புடன் தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    அடுத்து அதில் நறுக்கிய கீரை, சிறிது தண்ணீர், உப்பு, மிளகாய் தூளையும் சேர்த்து வேக விடவும்.

    கீரை முக்கால் பதம் வெந்தவுடன் இறக்கி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கீரை சாம்பாரில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

    சூப்பரான சத்தான கீரை சாம்பார் ரெடி.
     
    இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு நல்ல உணவு, நல்ல கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாத பாதுகாப்பை வழங்குவதையும் தங்கள் கடமையாக கொண்டிருக்கவேண்டும்.
    இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் வருடத்துக்கு வருடம் அதிகரித்துக்கொண்டே போகிறது. 2014-ம் ஆண்டில் 89 ஆயிரமாகவும், 2015-ல் 94 ஆயிரமாகவும் இருந்த குற்றங்கள், 2016-ல் ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிராக நடந்த பாலியல் வன்முறை வழக்குகள் 2015-ல் 319 ஆக இருந்தது, 2016-ல் 421 ஆக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் காதுகேளாத சிறுமிக்கு பலரால் ஏற்பட்ட விபரீதம்போல் இப்போது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

    எங்கோ யாருக்கோ நடந்தது என்று தாய்மார்கள் இனியும் கருதிக்கொண்டிருக்காமல், இந்த பிரச்சினை தன் வீட்டு குழந்தைகளையும் பாதிக்காமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். அப்படி ஒவ்வொரு தாய்மாரும் தங்கள் வீட்டில் இது போன்ற பாதிப்பு உருவாகாமல் தடுத்தால்தான், ‘இது நம்ம நாடு.. இனி இது நடக்கக்கூடாது..’ என்ற நிலையை உருவாக்கமுடியும்.

    “பள்ளிக்கு செல்லும் உங்கள் குழந்தைகளோடு நீங்கள் இரவு உணவு சாப்பிடும்போது, பெரும்பாலானவர்கள் வீடுகளில் டெலிவிஷனில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது உங்கள் கவனம் முழுவதும் அதில்தான் பதிந்திருக்கும். அதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தையிடம் மனம்விட்டுப்பேச வேண்டிய பொன்னான நேரத்தை இழந்துவிடுகிறீர்கள்.

    அந்த நேரத்தில் சுமுகமான சூழலை உருவாக்கி, அமைதியாக அன்றாட நிகழ்வுகளை பேசும் வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்தால் உங்கள் மகள் பள்ளி வாகனத்திற்கு காத்திருந்தது முதல், அதில் ஏறியது, பயணம் செய்தது, அந்த டிரைவர் தன்னோடு நடந்துகொண்டது, பள்ளியை சென்றடைந்தது.. பள்ளியில் நடந்தது.. என்று ஒவ்வொன்றையும் உங்களிடம் கூறுவாள். அப்போது எங்கேயாவது பிரச்சினைக்குரிய விஷயம் நடந்திருக்கிறதா? பாலியல் தொந்தரவு ஏதேனும் நடந்துள்ளதா? என்பதை தாய்மார்களால் கண்டறிந்துவிட முடியும்.

    அதுபோல் பேசி, சிரித்து, விளையாடி, குழந்தைகளுக்கு சோறூட்டினால், குழந்தை மகிழ்ந்து தாயிடம் எல்லாவற்றையும் பேசும். அப்படி பேச வேண்டிய குழந்தையின் கையில் செல்போனை கொடுத்து அதற்குள் அதனை சிறைபடுத்திவிடுகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பாதிப்புகள் அதிகரித்துவரும் இந்த காலகட்டத்தில், தங்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை புரிந்துகொள்ளும் பக்குவம் குழந்தைகளுக்கு இல்லை என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். அதனால் குழந்தைகளுக்கு பேசுகின்ற வாய்ப்புகளை அதிகம் உருவாக்கிக்கொடுத்தால்தான், தங்களுக்கு ஏற்படும் அதுபோன்ற அவஸ்தைகளை அவர்கள் தாயிடம் சொல்வார்கள்.

    பெரும்பாலான பெற்றோர்களிடம் உங்கள் குழந்தைகளுடன் எப்படி பொழுதுபோக்குகிறீர்கள்? என்று கேட்டால், சினிமாவுக்கு போகிறோம்- மாலுக்கு போகிறோம்- சுற்றுலாவுக்கு போகிறோம் என்று சொல்கிறார்கள். சினிமா தியேட்டருக்கு அழைத்துச் சென்று குழந்தையோடு இருட்டறையில் அமர்ந்து, திரையையே பார்த்துக்கொண்டிருப்பதை, குழந்தையுடன் நேரத்தை செலவிடுதல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது.

    அதுபோல் ஷாப்பிங் செல்வதும், அவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும் குழந்தையுடனான பொழுதுபோக்கு அல்ல. குழந்தையோடு சுற்றுலாவுக்கு சென்று, அங்கே ஓய்வின்றி ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து பார்த்துவிட்டு, அந்த நேரத்தை எல்லாம் குழந்தையோடு செலவிட்டேன் என்று கூறுவதும் சரியல்ல. குழந்தைக்கான நேரத்தை அதனோடு மட்டும் செலவிடவேண்டும். அந்த நேரத்தில் வேறு தொந்தரவோ, அடுத்தவர்களின் தலையீடோ இருக்கக்கூடாது.

     

    அப்போது அது மனம்விட்டுப் பேச வேண்டிய சூழ்நிலையை உருவாக்கவேண்டும். அப்படி உருவாக்கினால், குழந்தையின் மனதில் இருக்கும் எல்லா விஷயங்களும் வெளிவரும். எல்லாவித சந்தேகங்களுக்கும் அது தாயிடம் விடைதேடும். அதை நுட்பமாக கவனித்தால் குழந்தைக்கு பாலியல்ரீதியான துன்புறுத்தல் ஏதாவது நடந்திருந்தால், நடந்துகொண்டிருந்தால், தெரிந்துவிடும். முளையிலே அதனை கிள்ளி எறிந்துவிடலாம்..

    “குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதற்காக நாம் அரசாங்கத்தையோ, சமூகத்தையோ குறை சொல்லிக்கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு தாயும் தனது குழந்தைக்கு நல்ல உணவு, நல்ல கல்வி கொடுப்பது எவ்வளவு முக்கியமோ அதுபோல் பாலியல் தொந்தரவு ஏற்படாத பாதுகாப்பை வழங்குவதையும் தங்கள் கடமையாக கொண்டிருக்கவேண்டும். குழந்தை பள்ளியில் இருந்து வந்த உடன் என்ன படித்தாய்? எவ்வளவு மதி்ப்பெண் வாங்கினாய்? ஆசிரியர் உன்னை பாராட்டினாரா? என்றுதான் பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கிறார்கள். வேனில் என்ன நடந்தது? வேன் டிரைவர் எப்படி நடந்துகொண்டார்? பள்ளியில் என்னவெல்லாம் நடந்தது? என்று கல்விக்கு அப்பாற்பட்டு, பாதுகாப்பு விஷயங்கள் பற்றியும் பேசவேண்டும்.

    பல தாய்மார்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். நான் சொல்வதைகேள், ஒழுங்காக இருந்து படி, தேவையில்லாமல் ஒரு வார்த்தைகூட பேசாதே, சும்மா இருக்காதே எதை யாவது செய்.. என்று கட்டளையிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இப்படி கட்டளையிடும்போது தாய், குழந்தைக்கு இடையேயான சுமூக உறவில் முட்டுக்கட்டை விழுந்து விடும்.

    அந்த குழந்தை தாயிடம் மனந்திறந்து பேசாது. அப்படி பேசாதபோது குழந்தைக்கு பாலியல் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது தாய்க்கு தெரியாமல் போய்விடும். பொதுவாக பெண் குழந்தை வயதுக்கு வந்த பின்பே தாயார் அதன் மீது அதிக கவனம் செலுத்துகிறார். 9,10 வயது சிறுமிகளுக்கு பாலியல் பாதிப்பு எதுவும் நடக்காது என்று அவர்கள் நினைத்து விடுகிறார்கள். பத்து வயது சிறுமி, அவளது பெற்றோருக்கு மட்டும்தான் குழந்தை. அவளை பார்க்கும் அனைவரும் அவளை குழந்தையாக தான் நினைப்பார்கள் என்று தவறாக கருதி விடக்கூடாது.

    ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ‘யாரும் குழந்தைகளை எந்த ‘டச்’சும் செய்யக்கூடாது’ என்று வலியுறுத்துங்கள். ‘பெற்றோரும், டாக்டரும் தவிர வேறு யாரும் உன்னை எக்காரணத்தைக் கொண்டும் தொட அனுமதிக்காதே. எந்த உறுப்பு என்றில்லை. உன் உடல் முழுக்க பொக்கிஷம்தான். எங்கே தொட்டாலும் நீ தைரியமாக ‘நோ’ சொல்லவேண்டும்’ என்று குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். தற்காப்புக் கலையும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    முன்பு கூட்டுக் குடும்பங்கள் நிறைய இருந்தன. பாட்டிகள் தனது பேத்திகளிடம் மனம்விட்டுப்பேசி அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை அறிந்துவிடுவார்கள். நேரத்தை செலவிட்டு குழந்தைகளை பக்குவப்படுத்தி வளர்ப்பார்கள். இப்போது கூட்டுக் குடும்பம் இல்லாததால் எதற்கெடுத்தாலும் உடனே ‘சைக்காலஜிஸ்ட் ஒப்பீனியன்’ கேட்க செல்கிறார்கள். குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கான வாய்ப்புகளை எல்லாம் இழந்துவிட்டு, மனோதத்துவம் பேசி பலனில்லை.

    பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான பாதுகாப்பு உணர்வை ஊட்டுவதுபோல், ஒவ்வொரு தாயும் தனது ஆண் குழந்தைகளுக்கு பெண்களை மதிக்கவும் கற்றுக் கொடுக்கவேண்டும். 
    பிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை.
    நம் ஒவ்வொருவர் ரத்தத்திலும் இன்றைக்கு சுமார் 300 தொழிலக வேதிப்பொருட்கள் கலந்துள்ளன என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

    நமது உடல்கள் வேதி தொழிற்சாலைகளின் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. காற்று, நீர், வீடு, அலுவலகம், நாம் பயன்படுத்தும் நுகர்வுப் பொருட்கள் என நாம் சார்ந்துள்ள அனைத்தும் நமக்குள் வேதிப்பொருட்களை மறைமுகமாகச் செலுத்தி வருகின்றன.

    சந்தை பொருளாதாரமும், நுகர்வு கலாசாரமும் இதைத் தீவிரப்படுத்தி, நம் ஒவ்வொருவரையும் மாசடைந்த மனிதர்களாக்கி வருகின்றன. பிறக்கும் குழந்தைகளையும், ஏன் கருவில் வளரும் குழந்தையையும்கூட இந்த வேதி தாக்குதல் விட்டுவைக்கவில்லை.

    பிறக்கும் குழந்தையின் உடலிலும் பல வேதிப்பொருட்கள் இருப்பது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் செயல்படும் சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் 2005-ம் ஆண்டின் அறிக்கை, செயற்கை வேதி பொருட்களால் தாக்கப்படுவது கருவறையிலேயே தொடங்கிவிடுகிறது, என்கிறது.

    இக்குழுவானது, சில குழந்தைகளின் தொப்புள் கொடி துண்டிக்கப்பட்ட பிறகு அதிலிருந்த ரத்தத்தை எடுத்து ஆய்வு செய்தபோது அதில் அடங்கியிருந்த வேதிப்பொருட்களின் பட்டியல் நம்ப முடியாததாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்ததாக தெரிவித்துள்ளது. அதாவது பல வகையான வேதிப்பொருட்கள் தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்ததாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வேதிப்பொருட்களில் பெரும்பான்மையானவை புற்றுநோயையும், மூளை, நரம்பு மண்டலப் பிரச்சினைகளையும், வளர்ச்சிக் குறைபாடுகளையும் உருவாக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது. குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பதற்கான காரணங்கள் இவற்றுள் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    மாசுபட்ட சுற்றுச்சூழலில் இருந்து தாயின் உடலைச் சென்றடையும் வேதி நச்சுகள் தொப்புள் கொடி வழியாகத் தாயின் கருப்பையில் வளரும் குழந்தையையும் சென்றடையும் என்ற உண்மையை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

    மனித குலம் இன்றைக்கு உருவாக்கி வைத்துள்ள மாசடைந்த சுற்றுச்சூழல், பச்சிளம் குழந்தைகளின் உடலையும் பாதிப்படையச் செய்யும் நிலையை ஏற்படுத்துவது வேதனையிலும் வேதனையே! 
    ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம்.
    வயதானவர்கள் மட்டுமின்றி இளம் பருவத்தினரும் மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். உடலிலுள்ள எலும்பு மண்டல அமைப்பு பலவீனமாக இருப்பதே மூட்டுவலி பாதிப்புக்கு முக்கிய காரணம். ஒருசில உணவுப்பழக்கவழக்கங்களை கடைப்பிடித்துவந்தால் மூட்டுவலிக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ளலாம். ஆரம்பநிலையில் இருக்கும் மூட்டுவலி பிரச்சினைக்கும் நிவாரணம் பெறலாம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    * ஆப்பிளில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் மூட்டுவலியை குறைக்க உதவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மூட்டு பகுதிகளில் தடவி மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இரவு தூங்க செல்வதற்கு முன்பு சிறிதளவு ஆப்பிள் வினிகருடன் தண்ணீர் சேர்த்தும் பருகிவரலாம்.

    * இஞ்சியும் மூட்டு வலியை விரட்டியடிக்கும். இஞ்சியில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்யை தினமும் இரண்டு முறை மூட்டுகளில் தடவி வந்தால் மூட்டுவலி கட்டுப்படும். இஞ்சியை டீயாக தயாரித்தும் பருகிவரலாம். நீரில் இஞ்சியை கொதிக்க வைத்து, அந்த நீரை வடிகட்டி அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம்.

    * இஞ்சியுடன் மஞ்சளை சேர்த்தும் பயன்படுத்தலாம். இரண்டையும் நீரில் கால் மணி நேரம் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு அந்த நீரை வடிகட்டி, அதனுடன் தேன், எலுமிச்சை சாறு கலந்து ருசிக்கலாம். பாலுடன் மஞ்சள் தூள், சர்க்கரை கலந்தும் இரவில் பருகிவரலாம். இவ்வாறு செய்தால் மூட்டுவலி கட்டுப்படும்.

    * எலுமிச்சை சாறை நீரில் கலந்தோ, எலுமிச்சை டீயாகவோ தினமும் பருகிவரலாம். இது உடல் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படு்த்தி வலிகளை குறைக்கும்.
    கொத்து பரோட்டா சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கொத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்து விட்டால் இதை செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 2 கரண்டி
    முட்டை - 2
    வெங்காயம் - ஒன்று
    கொத்தமல்லித்தழை -  சிறிதளவு
    மிளகு - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    வெண்ணெய் அல்லது நெய் - 2 டீஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தைப் பொடித்து வைக்கவும்.

    முட்டையை உடைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்.

    தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்க்கவும் (சற்று தடிமனாக இருந்தால் நல்லது; மெல்லியதாக வார்க்க வேண்டாம்). தோசையின் மேல் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றவும்.

    ஒருபுறம் வெந்தவுடன் திருப்பிப் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

    வெந்த முட்டை தோசையை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    கடாயில் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துச் சூடானதும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் பாதியளவு வதங்கியதும் தோசைத் துண்டுகளைச் சேர்த்து, சிறிதளவு உப்பு போட்டு வதக்கவும்

    கடைசியாக மிளகு - சீரகப் பொடி, கொத்தமல்லி சேர்த்து வதக்கி இறக்கவும்.

    சூப்பரான கொத்து தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சுக்குவில் அதிகளவு மருத்துவ குணநலன்கள் உள்ளன. இன்று சுக்குவை எந்த முறையில் பயன்படுத்தினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

    2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

    3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

    4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

    5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

    6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

    7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

    8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

    9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

    10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.



    11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

    12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

    13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

    14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

    15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

    16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

    17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

    18. சுக்கு (Dry Ginger), மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

    19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

    20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.
    தினமும் வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.
    கோடை காலத்தில் சருமம் வறட்சிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. சில நேரங்களில் வறண்ட சருமத்தால் எரிச்சல் ஏற்படும். சரும அரிப்பு, ஒவ்வாமை பிரச்சினைகளும் தலைதூக்கும். சருமம் மிருதுவாகவும், பொலிவு குறையாமலும் காட்சியளிக்க வெண்ணெயை பயன்படுத்தி வரலாம்.

    சிறிதளவு வெண்ணெயை முகத்தில் தடவி மசாஜ் செய்தால் முகம் வெண்ணெய் போலவே மிருதுவாக மாறும். உங்களுக்கு பிரகாசமான முகம் கிடைப்பதும் உறுதி.

    2 ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குழைத்து முகத்தில் பூசிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

    1 ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பசைபோல் நன்றாக குழைத்து முகத்தில் பூச வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் சரும ஆரோக்கியம் மேம்படும்.
    ஐயங்கார், கோவில் புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆந்திரா ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    உதிராக வடித்த சாதம் - 2 கப்
    புளி, உப்பு - தேவையான அளவு
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
    கடுகு - 1 ஸ்பூன்
    உளுந்து, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயம் - அரை ஸ்பூன்.



    செய்முறை :

    சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற் போல வைத்து நடுவில் குழியாக்குங்கள்.

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

    அதில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள்.

    மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள்.

    சாதத்தில் புளி கலவை, சேர்த்துக் கிளறுங்கள்.

    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×