என் மலர்
நீங்கள் தேடியது "slug 101541"
- ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.
- பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.
பெண்களுக்கு தகுந்த மரியாதை, இடம் மற்றும் வாய்ப்பை அளித்தால், அவர்கள் நிச்சயம் வளர்ச்சிப்பாதையில் செல்வார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. வீடு, தெருவைத் தாண்டி நாட்டையே வளர்ச்சியை நோக்கி இட்டுச்செல்வார்கள் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. வீட்டில் இருந்தபடியே சுயதொழிலில் ஈடுபட்டு வரும் பெண்கள், இப்போது அவர்களது தேவைக்கேற்ப, புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
படைப்பாற்றலுடன் கூடிய புதிய சிந்தனைகளோடு, அவர்களது உழைப்பை பொருளாதாரப் பலன்களாக மாற்றி, குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப, தொடர்ந்து பொருள் ஈட்டும் வகையில் செயல்படுகின்றனர். சமூகத்தின் தேவையோடு, மக்களின் அவசியத்தை உணர்ந்து உத்திகளை வகுத்து வருகின்றனர்.
பெண்கள் அம்மா, அக்கா, தங்கை, மனைவி இப்படி அனைத்து நிலையிலும் சிறந்து விளங்குகிறார்கள்.சில பெண்களின் குடும்ப சூழ்நிலையால் அவர்களால் பணியிடத்திற்கு சென்று வேலை செய்ய முடியவில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தபடியே சுயதொழில் செய்வதற்கான சில டிப்ஸ் இதோ.
ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு விஷயத்தில் ஆர்வம் இருக்கும்.அந்த வகையில் தையல் தொழில், கேக் செய்வது, ஊர்காய் தயாரிப்பது, ரெடிமேட் சப்பாத்தி, மாவு வியாபாரம்,விஜிடபிள்ஸ் பேக்கிங், மசாலா பொடி செய்யும் தொழில் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.இதில் நீங்கள் உங்களுக்கு நன்கு தெரிந்ததை தேர்வு செய்து கொள்ளலாம்.அதில லாபம் ஈட்டக்கூடிய குறிப்பிட்ட ஐந்து தொழில்களுக்கான சில டிப்ஸ்களை இங்கே காண்போம்.
தையல் தொழிலை பொறுத்தவரை நன்கு சம்பாதிக்க கூடிய தொழில் என்று தான் கூற வேண்டும்.ஒரு நாளைக்கு ஒரு பிளவுஸ் தைத்தால் 60 ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.அதிலேயே வி ஷேப், யூ ஷேப், நாட் மாடல், டிசைன்ஸ் வைத்து தைத்தால் 200 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்.பெண்களுக்கான சுடி தைத்தால் 400 ரூபாய் வரை கிடைக்கும். தையல் தொழிலை பொறுத்தவரை டிசைன் சுடி, டிசைன் பிளவுஸ்,திருமணத்திற்கான ஆரி ஒர்க் பிளவுஸ் மூலம் நீங்கள் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.
இன்றைய பரபரப்பான உலகில், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது வீட்டில் காலையில் எழுந்து காய்கறிகள் வெட்டி சமைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும்.எனவே சிலர் வெட்டி வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை வாங்கி சட்டென்று சமைத்து விடுகின்றனர்.அந்த வகையில் பூண்டு, வெங்காயம், பீன்ஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை சமைப்பதற்கு ஏற்றவாறு பாக்கெட்டில் பேக் செய்து விற்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
மாவு வியாபாரம் தொழிலை பொறுத்தவரை ஒரு கிலோ இட்லி அரிசி 34 ரூபாயாகும்.அதனுடன் உளுந்து 200 கிராம் சேர்த்து அறைத்தால் 3 கிலோ மாவு கிடைக்கும்.ஒரு கிலோ மாவு ரூ.40 க்கு விற்றால் ரூ.120 ஒரு நாளைக்கு எளிதாக சம்பாதிக்க முடியும்.நீங்கள் வீட்டிலேயே இட்லி மாவு தயாரித்து வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் தெரிஞ்சவர்களிடம் கூறியும் விற்பனை செய்யலாம்.
வீட்டில் இருக்கும் நிறைய பெண்கள் அவர்களின் பாட்டியிடம் ஆலோசனை கேட்டு விதவிதமான மசாலாக்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் இட்லி பொடி, சாம்பார் பொடி, மல்லி பொடி, கரமசாலா பொடி,பூண்டு பொடி, ரசப்பொடி, கறிவேப்பிலை பொடி இப்படி பொடி வகைகளை செய்து அருகில் இருக்கும் மளிகைக்கடை அல்லது அக்கம் பக்கத்தினரிடமும் கூறி விற்பனை செய்யலாம். இதற்கான விலையை உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.அதே சமயத்தில் வாங்குபவர்களுக்கும் ஏற்ற விலையில் கொடுத்தால் சில நாட்களிலே உங்கள் பிஸ்னஸ் சூடு பிடித்துவிடும். பெண்களால் முடியாதது ஏதும் இல்லை. நம்மை நாமே நம்ப வேண்டும். விடா முயற்சியும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால் எல்லோரும் சாதிக்கலாம்''
- அலுவலகத்திலேயே எல்லா வேலைகளையும் சரியாக செய்துவிட முடியாது.
- இயற்கையான சூழலால் உடலும், மனமும் ரிலாக்ஸாக வேலை செய்யும்.
ஒரே மாதிரியான ஆபீஸ் கேபின் செட்டப், ஏ.சி. காற்று... எத்தனை நாள் இப்படியே வேலை செய்வீர்கள்? அதனால்தான் அவுட்டோர் ஆபீஸ் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அவுட்டோர் ஆபீஸ் என்றால் அங்கேயும் வயர்லெஸ் இன்டர்நெட், லேப்டாப் சார்ஜிங் பாயிண்ட் என எல்லாமே இருக்கும். என்ன ஒன்று...? அலுவலகம் இயற்கை நிறைந்த திறந்தவெளியில் இருக்கும்.
"அலுவலகத்திலேயே எல்லா வேலைகளையும் சரியாக செய்துவிட முடியாது. அதை எதிர்கால சந்ததியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என பேசும் ஜெர்ரி டாடே இதை வெறுமனே பேசவில்லை. கட்டிட வடிவமைப்பாளரான ஜெர்ரி, 2005-ம் ஆண்டே இயற்கையோடு இணைந்த வெளிப்புற அலுவலகத்தை லண்டனின் ஹோக்ஸ்டன் சதுக்கத்தில் கட்டமைத்தவர்.
பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க சோதனை முறையில் உருவாக்கப்பட்டதே எட்டு நபர்கள் மட்டும் பணிபுரியும் இந்த அவுட்டோர் ஆபீஸ். ஹியூமன் ஸ்பேஸ் குளோபல் ரிப்போர்ட் ஆய்வுப்படி, இயற்கையோடு இணைந்த அலுவலகத்தின் மூலம் பணியாளர்களின் திறன் 15 சதவீதம் உயர்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
"இயற்கையான சூழலால் உடலும், மனமும் ரிலாக்ஸாக வேலை செய்யும். பணியாளர்களின் செயல்பாடுகளில் கிரியேட்டிவிட்டி மெல்ல அதிகரிக்கும்" என உறுதியாகப் பேசுகிறார் ஜெர்ரி.
தற்போது அமெரிக்காவின் மேரிலேண்டில் தொடங்கப்பட்டுள்ள அவுட் பாக்ஸ் என்ற வெளிப்புற அலுவலகத்தில் வை-பை, டேபிள்கள், அலங்காரங்கள் என அனைத்தும் உண்டு. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவற்றை இலவசமாக பயன்படுத்தலாம். இது கோடை காலத்திற்கு மட்டும்தான்.
"சலிப்பூட்டும் அலுவலக கேபின்களிலிருந்து மனிதர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் விடுவிக்க நினைத்தே இதனை உருவாக்கினோம்" என்கிறார் அவுட்பாக்ஸை உருவாக்கிய பீட்டர்சன் நிறுவனத்தின் லாரி யான்கோவ்ஸ்கி.
வெளிப்புற அலுவலகம் கோடை காலத்தில் மட்டும் அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், மழை. ஏனெனில் அலுவலக கட்டமைப்பு பெருமளவு சூரிய வெளிச்சத்தை நம்பியே இருப்பதால், மழை வரும்போது அலுவலகத்தை முழுக்க தார்பாயால் மூடுவது போன்ற ஏற்பாடுகள் தேவை. இதற்கடுத்து இரைச்சல். ஒரு பூங்காவில் அலுவலகம் போன்று வேலை செய்தாலும், ஏ.சி. மட்டுமே உறுமும் அலுவலக அமைதி கிடைக்காது.
"வெளிப்புற அலுவலகத்தைச் சுற்றி மெஸ், கடைகள், பஸ்கள் என செல்வதால் தனிமையில் பணியாற்ற விரும்புபவருக்கு இச்சூழல் சிரமம்தான்" என்கிறார் யான்கோவ்ஸ்கி.
கூகுள், ஸ்பாட்டிபை போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக 'அவுட்டோர் ஆபீஸ்' முறையை பயன்படுத்தினாலும் பல்வேறு நிறுவனங்களுக்கு இது புதுசுதான். எதிர்காலத்தில் இந்த அவுட்டோர் ஆபீஸ் சாத்தியமாக அதிக வாய்ப்புண்டு.
- கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.
- காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன.
காலாவதியான கியாஸ் சிலிண்டரை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம். இதில் காலாவதியான சிலிண்டர் என்பது என்னவென்றால் நமது வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் கியாஸ் சிலிண்டருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை மட்டுமே ஆயுட்காலம் உண்டு.
ஆனால் அதை மாற்றாமல் சில கியாஸ் நிறுவனங்கள் காலாவதியான சிலிண்டரில் கியாசை மீண்டும், மீண்டும் நிரப்பி வினியோகம் செய்து வருகின்றன. இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆபத்தை விளைவிக்கும். அதனை கண்டுபிடிப்பது ரொம்ப சுலபமானது. சிலிண்டரில் மேல் பகுதியில் மூன்று கம்பிகள் இருக்கும். அது கழுத்து பகுதியாகும்.
அதில் ஒரு கம்பியின் உள்பகுதியில் காலாவதியாகும் மாதம் ஆங்கிலத்திலும், வருடம் எண்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும். அதாவது ஆங்கிலத்தில் ஏ.பி.சி.டி. என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, 'ஏ' என்றால் மார்ச் மாதம் (முதல் காலாண்டு), 'பி' என்றால் ஜூன் மாதம் (இரண்டாவது காலாண்டு), 'சி' என்றால் செப்டம்பர் மாதம் (மூன்றாவது காலாண்டு), 'டி' என்றால் டிசம்பர் மாதம் (நான்காவது காலாண்டு) ஆகும். உதாரணத்திற்கு ஏ- 16 என்று சிலிண்டரில் பொறிக்கப்பட்டிருந்தால் மார்ச்-2016 என்பதை குறிக்கிறது. இதை வைத்து காலாவதியான சிலிண்டரை கண்டுபிடித்துவிடலாம்.
- சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள்.
- முடிவை மனதில் வைத்துக்கொண்டு, உத்வேகத்துடன் தொழில் தொடங்குங்கள்.
நீங்கள் புதிய தொழில் தொடங்கும் சிந்தனையில் உள்ளீர்களா? அப்படி என்றால் உங்களுக்கான யோசனைகள் தான் இவை. இதை பின்பற்றினால், வெற்றிக்கொடி பறக்க விடலாம். அப்படி என்னதான் தெரிந்து கொள்ள போகிறீர்கள் என்பதை வாருங்கள் பார்க்கலாம்.:-
சந்தையை தேர்வு செய்தல்
சிறிய சந்தையாக இருந்தாலும் போட்டி இல்லாத சந்தையை தேர்ந்தெடுங்கள். அப்போது தான் நீங்கள் அதில் ஏகபோகமாக இருக்க முடியும். கூகுள், பேஸ்புக், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் இன்று மிக பெரிய அளவிற்கு வளர காரணம். அந்தந்த துறையில் அது தான் முதல் நிறுவனமாக இருந்தது.
எடுத்துக்காட்டாக கூகுள் 90-களில் தொடங்கும் பொழுது அதன் சந்தை மிக சிறியது மற்றும் வேறு எந்த நிறுவனமும் அதற்கு போட்டியாக இல்லை. இது அவர்களின் மொத்த சந்தையையும் அவர்களுக்கே சொந்தமாக்கியது. இதே கதை தான் பேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் பேபால் நிறுவனங்களின் இமாலய வளர்ச்சிக்கு காரணம். நீங்கள் தொடங்கும் தொழில் அந்த இடத்தில் முதலாவதாக இருக்கட்டும். ஒரு இடத்தில் இருக்கும் 4-வது உணவகமாகவோ, 10-வது கைபேசி கடையாகவோ இருக்க முயற்சிக்காதீர்கள்.
சிறியதாக தொடங்குங்கள்
சிறிதாக தொடங்கினாலும் அதில் உங்களை விட சிறந்த பொருட்களை அல்லது சேவையை தர முடியாத அளவுக்கு சிறப்பாக இருங்கள். எடுத்துக்காட்டாக, அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் தனது இலக்காக உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் ஆக வேண்டும் என தீர்மானித்தார்.ஆனால் அவர் எடுத்த உடனேயே அனைத்து பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர் ஆகவில்லை. முதலில் புத்தகங்கள் மட்டும் விற்கும் தலமாக தான் அமேசானை தொடங்கினார். பின்னர் உலகிலேயே சிறந்த புத்தக கடையாக அதை மாற்றினார். அதன் பிறகு தான் அனைத்து பொருட்களையும் விற்கும் தலமாக அமேசானை மாற்றினார்.
புதிய சிந்தனை
அடுத்த பில் கேட்ஸ் ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார். அடுத்த ஸுக்கர்பேர்க் ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்க மாட்டார். நாம் அவர்களை பின்பற்றினால் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று தான் அர்த்தம். இது வரை யாரும் செய்திராத ஒரு விஷயத்தை செய்யுங்கள். ஏனென்றால் ஒரே ஆற்றில் இரண்டு முறை அடியெடுத்து வைக்க முடியாது.
கடைசியாக இருங்கள்
ஒரு பொருள் இந்த உலகத்தில் இருந்து அழிய போகிறதென்றால், உங்கள் பொருள் தான் கடைசியாக அழிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மைக்ரோசாப்ட் தான் பல ஆண்டுகளுக்கு கடைசி ஆப்பரேட்டிங் ஸிஸ்டெமாக இருந்தது. கூகுள் தான் கடைசி தேடு தலமாக இருந்தது. எனவே முடிவை மனதில் வைத்துக்கொண்டு, உத்வேகத்துடன் தொழில் தொடங்குங்கள். நிச்சயம் சாதிக்கலாம்.
- வருமான வரி செலுத்துவதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது.
- வருமானவரி செலுத்துவதில் பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு குடிமக்கள் செலுத்தும் வரிப்பணம் முக்கியமானது. இந்திய சுதந்திரப்போரின் போது ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டவும், சமூகத்தை கட்டமைக்கும் திட்டங்களை செயல்படுத்தவும் 1860-ம் ஆண்டு ஜூலை 24-ம் நாள் வருமானவரி செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2010-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் வருமானவரி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வருமான வரி கணக்கீடு
வருமான வரி செலுத்துவதில் ஆண்-பெண் பாகுபாடு கிடையாது. இந்திய மக்கள் தொகை யில் 48 சத வீதம் பெண்கள் உள்ளனர். இருந்தாலும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெண்களின் பங்கு குறைவாகவே இருந்தது. பெண் தொழில் முனைவோர் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததே இதற்குக் காரணம். சமீபகாலமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கு பெண்கள் பொருளாதார ரீதியாக விழிப்புணர்வோடு இருப்பதும், பொருளாதார பலத்தை அதிகரிப்பதும் அவசியமானது.
வருமானவரி செலுத்துவதில் ஆணும், பெண்ணும் சமம் என்றாலும், பெண்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. வருமானவரியானது சம்பளம், சொத்து, தொழில், மூலதன ஆதாயங்கள், நிலையான வைப்புத் தொகை , சேமிப்புக் கணக்குகளில் இருந்து பெறப்படும் வட்டி போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு கணக்கிடப்படுகிறது.
கல்வி கட்டணம்
2.5 லட்சம் வரை வருமானம் உள்ள , 60 வயதுக்கு கீழுள்ள பெண்களுக்கு வரிவிகிதம் இல்லை. பெண்களில் சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 5 லட்சம் வரை வரிவிகிதம் இல்லை. பெண்கள் தங்கள் வருமானத்திற்கு 1.5 லட்சம் வரை வரிவிலக்கு பெற முடியும். தேசிய சேமிப்பு சான்றிதழ், ஓய்வூதிய திட்டம், பணியாளர் வருங்கால வைப்பு நிதி, ஈக்டிவிட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சே மிப்புத் திட்டங்கள், சுகன்ய சம்ரித்தி யோஜனா முதலியன இதில் அடங்கும். பெண்களின் கல்வி கடனுக்கு செலுத்தப்படும் மொத்த வட்டியில் இருந்து விலக்கு அனுமதிக்கப்படுகிறது.
உடல்நல காப்பீடு திட்டங்களுக்கு பிரிவு 80D சில வரம்புகளை முன்வைத்து வருமானவரியில் இருந்து விலக்கு அளிக்கிறது. இதில் மகப்பேறு காப்பீடும் அடங்கும். இதன்மூலம் குறைந்தது ரூ.25,000 முதல் வரிவிலக்கு பெறலாம். காப்பீட்டு வருடாந்திர திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட தொகை க்கு ரூ.1,50,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டு விலக்கு அளிக்கப்படுகிறது. உடல் ஊன முற்றோர் மற்றும் மனநல குறைபாடு உடைய பெண்களுக்கான மருத்துவச் சிகிச்சையில் 40 முதல் 80 சத வீதம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது.
வரிசெலுத்தும் அளவிற்கு வருமானம் இல்லாத பெண்களும் வருமானவரி படிவம் தாக்கல் செய்யலாம். வேலைக்காக வெளிநாடுகளுக்கு குடியேற விரும்பினால், நீங்கள் செலுத்தியுள்ள வருமான வரி தாக்கல் படிவம் உதவும். வீட்டுக் கடன், கார்கடன், மற்றும் இதர கடன்களுக்காக விண்ணப்பிக்கும் போது ஏற்கனவே வருமான வரி படிவம் தாக்கல் செய்ததற்கான விபரங்களை வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்று பல நேரங்களில் வருமானவரி தாக்கல் விவரங்கள் நமக்கு கை கொடுக்கும்.
- அலுவலகத்திற்கு சீக்கிரம் வருவது, உங்கள் மதிப்பை உயர்த்தும்.
- வேலையில் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் தவறு செய்வது தவறல்ல.
சில நேரங்களில் நிர்ணயிக்கப்படாத வேலைகளைச் செய்ய அலுவலக அதிகாரிகள் அல்லது முதலாளிகள் உத்தரவிடலாம். அலுவலக நேரம் கடந்தும் வேலை செய்யும்படி சில நேரங்களில் கூறலாம். விடுமுறை நாள்களிலும் வேலை செய்ய அறிவுறுத்தப்படலாம். வேறொருவரின் வேலையை செய்யவும் கேட்டுக் கொள்ளலாம். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர், அவற்றை மறுக்காமல் ஏற்று செயல்படுத்துவது வேலையில் முன்னேற்றமடைய உதவும்.
எந்த துறை சார்ந்த அலுவலகமாக இருந்தாலும், ஊழியர்களின் நடத்தைகளில் சில பொதுவான எதிர்பார்ப்புகள் நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இருப்பது இயல்பானது. கடைநிலை ஊழியர் முதல் மேல் அதிகாரி வரையில் சீரான நடத்தைகள் காணப்படும்போது, நிறுவனங்கள் தழைக்கும். அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும், ஊழியர்களின் நடவடிக்கைகள் ஒரு நிறுவனத்தை வளர்ச்சி சார்ந்த பாதையில் பயணிக்க வழிவகுக்கும்.
ஊழியர் தாம் செய்யும் வேலையில் அக்கறையோடு ஈடுபடுவதும், உண்மையான உழைப்பை வழங்குவதும் நிறுவனத்தின் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதோடு, நிறுவனம் உயர்நிலையை அடைவதற்கும் படிக்கல்லாக அமையும். ஏற்றுக்கொண்ட பணி அல்லது வேலையில் முன்னேறுவதற்கு சில ஒழுக்கநெறிகள் அல்லது நடத்தை விதிகளை ஊழியர்கள் தவறாமல் கடைப்பிடிப்பது அவசியம்.
ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் பலரும் பொதுவாகக் கூறும் அறிவுரை, 'மேலதிகாரி அல்லது முதலாளி அலுவலகம் வருவதற்கு முன்பு நீங்கள் சீக்கிரமாக அலுவலகம் வந்துவிடுங்கள்; அவர் சென்ற பிறகு அலுவலகத்தில் இருந்து புறப்படுங்கள்' என்பதுதான். இது இக்காலத்துக்கும் பொருந்தும். அலுவலகத்திற்கு சீக்கிரம் வருவது, உங்கள் மதிப்பை உயர்த்தும்.
'தான் உண்டு தன் வேலை உண்டு' என்று வேலையில் மனதை கூர்மையாக செலுத்தி, குறித்த நேரத்தில் வேலையைத் திறம்பட முடிப்பது பாராட்டத்தகுந்தது. அதே நேரத்தில் அலுவலகத்தின் மூத்தவர்கள், அனுபவசாலிகளை அவ்வப்போது சந்தித்து வேலை நுணுக்கங்களை அவர்களிடம் இருந்து அறிந்து கொள்வது சிறப்பானது. அது வேலைத்திறனை மேம்படுத்த உதவும். சக ஊழியர்களுடன் நல்லமுறையில் பழகுவது அலுவலக சூழலை இனிமையாக்குவதோடு வேலை தொடர்பான அறிவைப் பெறவும் உதவியாக இருக்கும்.
தனது பணியை முடிப்பதற்காக சக ஊழியர் உதவி கேட்டால், உடனடியாக இணங்குவது நல்ல பண்பாகும். பிறருக்கு உதவுவது உங்களிடம் இருக்கும் திறமையை வெளிப்படுத்தவும், வளர்த்துக்கொள்ளவும் உங்களுக்கு உதவும். பிறருக்கு நீங்கள் உதவினால் எதிர்காலத்தில் அவர் உங்களுக்கு உதவக் கூடும்.
வேலைநேரம் முடிந்தபிறகு அல்லது வார இறுதி நாட்களில் சக ஊழியர்களோடு தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அலுவலக மின்னஞ்சலை பயன்படுத்தாமல், தனி மின்னஞ்சலை உருவாக்கி, சக ஊழியர்களோடு உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது நல்லது.
நீங்கள் இதுவரை செய்திராத வேலையைச் செய்யுமாறு உங்களது மேலதிகாரி அல்லது சக ஊழியர் உங்களிடம் கேட்டுக்கொள்ளும்போது, பதற்றமடைவது இயல்பானது. வேலையில் இருந்து ஒதுங்கிக்கொள்ள அது காரணமாகிவிடக்கூடாது. புதிய வேலை அல்லது பணியை ஏற்று செயல்படும்போது தான் உங்களுடைய திறன் மேம்படும். உங்கள் மீது நம்பிக்கை இருப்பதால், அந்த பணியை உங்களிடம் மேலதிகாரி ஒப்படைத்திருக்கலாம். அந்த நம்பிக்கை உங்களுடைய எதிர்காலத்துக்கு உதவும்.
வேலை செய்யும் இடத்துக்கு பொருத்தமான ஆடைகளை அணிவது அவசியமானது. பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், பிறர் முகம் சுழிக்காத வகையிலும் ஆடைகளை அணிவது நல்லது.
புதியவேலையில் ஈடுபடும்போது, புதிய உறவுகளைக் கட்டமைக்கும் போது, வேலையில் உயர்படிநிலைகளில் முன்னேறும்போது எல்லோருடைய கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் திறந்த மனநிலையை பேணுவது நல்லது. மாற்றங்களை ஏற்க தயாராக இருங்கள். நேர்மறை சிந்தனைகளை கொண்டிருப்பதும், எப்போதும் முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பதும் அவசியம். வேலையில் சில நேரங்களில் நம்மையும் அறியாமல் தவறு செய்வது தவறல்ல. அந்த தவறுகளை திருத்திக் கொள்வதும், அதே தவறுகள் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வதும் நல்லது. தவறுகள், புதியனவற்றைக் கற்க உதவும்.
- அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது.
- எல்லோரும் தங்களது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.
விளையாட்டாக இருந்தாலும் சரி, வேலையாக இருந்தாலும் சரி, குழுவாகச் சேர்ந்து செயல்படுவது என்பது அவசியம். அதிலும் அலுவலகத்தில் குழு சரியாக அமையாவிட்டால் வேலை ஒழுங்காக நடைபெறாது. அலுவலகத்தில் நீங்கள் ஒரு சிறந்த குழுவை அமைத்துச் செயல்படுவது எப்படி?
* நன்றாகப் பணிபுரியக்கூடியவர்கள் என்று உங்களுக்கு தோன்றக்கூடியவர்களை உங்கள் குழுவில் சேர்ப்பது நல்லது. சாதாரணமாக பிறருடன் நீங்கள் கலந்து பழகி மற்றவர்களை அறிந்திராதவர் என்றால், யார் உங்கள் குழுவில் சேர்வதற்கு ஆர்வமும், விருப்பமுமாக இருக்கிறார்கள் என்று பார்த்துச் சேர்க்கலாம். சும்மா உட்கார்ந்தபடி அதுவாகவே குழு உருவாகட்டும் என்று இருக்காதீர்கள். குறிப்பிட்ட ஒரு குழுவின் அங்கத்தினராக இருப்பதில் அதிக ஆர்வம் காட்டுங்கள்.
* உங்கள் குழுவுக்கான பொறுப்புகள் அளிக்கப்பட்டபின், அதை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுங்கள். குழு அமைக்கப்பட்ட உடனே அவசர அவசரமாக அடுத்தடுத்து 'மீட்டிங்' போடாதீர்கள். குழு உறுப்பினர்கள் அவரவர் சொந்த வேகத்துக்கு ஏற்ப, தங்களால் ஒதுக்க முடிந்த நேரத்துக்கு ஏற்ப வேலை செய்யட்டும். வாய்மொழிப் பரிமாற்றங்கள் போதும். எல்லோரும் தங்களது வேலையை முடித்தபின் 'மீட்டிங்'கை நடத்துங்கள்.
* வேலையை முடித்த அறிக்கையை அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் போக வேண்டாம். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துங்கள். பிற குழுக்கள் எப்படி வேலை அறிக்கை அளிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள். அதன் பிறகு நீங்கள் உங்கள் வேலை அறிக்கையை வித்தியாசமாக அளிக்கலாம்.
* குழுவில் பிரச்சினைகள் வரலாம். சிலரிடம் 'ஈகோ' தலைதூக்கலாம். சிலர் சோம்பேறித்தனமாக இருக்கலாம். எனவே உங்கள் குழுவில் வேலையில் பலவீனமாக இருப்பவரைக் கண்டு பிடித்து, அவருக்கு ஏற்ப எளிதான வேலையைக் கொடுங்கள். உங்கள் குழுவில் ஒழுங்கீனமாக ஒருவர் இருந்தால், அவரது வேலையை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்து குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கப் பாருங்கள். வேலை அறிக்கை அளிப்பதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பே அதைத் தயார் செய்துவிடுங்கள்.
உங்கள் குழு உறுப்பினர்கள் சரியில்லா விட்டால், அது நீங்கள் கையில் எடுத்திருக்கும் பொறுப்பை ஏன் பாதிக்க வேண்டும்? அதில், எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், இறுதி முடிவையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். யாருமே வேலை செய்யாதபோது நீங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும் என்பது வித்தியாசமாகத் தோன்றலாம். ஆனால் குழுவில் ஒன்றுமே செய்யப்படாமல் இருப்பதை விட, ஏதோ உங்களால் அதிகபட்சமாக செய்யக்கூடியதை செய்வது சிறப்பானது. வேலையின் முழுக் கட்டுப்பாட்டையும் உங்களுக்குக் கீழே கொண்டுவந்து வெற்றி பெற்றுக் காட்டுங்கள்.
- இது போன்சாய் போன்ற தொழில்நுட்பம் தான்.
- இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.
நம்மில் பலருக்கு அலங்கார செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அதில் உள்ள வாய்ப்புகள் தெரிவதில்லை. அழகு செடிகள் வளர்ப்பதில் பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அதில் மிக எளிமையாகவும் அழகாகவும் செய்ய கூடிய ஒன்று தான் கொக்கிடமா (kokedama).
அது என்ன கொக்கிடாமா என்று பார்க்கிறீர்களா? இதுவரையில் பெரிய அளவில் கேள்விகள் எழுப்பப்படாவிட்டாலும், இந்த யோசனை முதன்முதலில் தொடங்கியது ஜப்பானில் தான்.
இது போன்சாய் போன்ற தொழில்நுட்பம் தான். ஆனால் போன்சாய் செய்வதற்கு அதிக செலவு ஆகும். கொக்கிடமா செய்வதற்கு மண் மற்றும் பாசி (peat moss) இவை இரண்டும் இருந்தாலே போதும். அதனால் இதை ஏழைகளின் போன்சாய் (poor mans bonsai) என்றே சொல்லலாம்.
கொக்கிடமா என்பது தாவரத்தின் வேர் பாகத்தை மண் பந்தினுள் நிறுத்தி அதற்கு மேல் மென்மையான பசுமையான பாசியை வைத்து அழகுபடுத்துவதுதான். பின்னர் இந்த அமைப்பை குறிப்பிட்ட இடத்தில் அழகுக்கு வைப்பதற்கு ஏற்ப நூலினை வைத்து வடிவமைக்க வேண்டும்.
உகந்த தாவரங்கள்
நிழலில் வளரக்கூடிய, நிழலை அதிகம் விரும்பக்கூடிய தாவரங்கள் இதற்கு பொருத்தமானதாகும். கொக்கிடமா செய்வதற்கு பொருத்தமான சில தாவரங்களின் பெயர்கள்,
*சென்சிவேரியா
*ஜாமியோகல்காஸ் ஜாமிபோலியா (Zamioculcas zamiifolia Zz)
*மணி பிளான்ட் (money plant)
*அந்தூரியம் (anturium)
* பிலோடென்ரான் (philodendron)
*டிராசியேனா (Dracaena)
இவை மட்டுமில்லாமல் வீட்டினுள் வளர்ப்பதற்கு ஏற்ற தாவரங்களும், சதைப்பற்று அதிகம் உள்ள அழங்கார தாவரங்களையும், சிறிய வேர்த்தொகுப்பு உள்ள தாவரங்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
எப்படி செய்வது?
முதலில் மண் மற்றும் பாசி (peat moss) 2-யும் சேர்த்து நாம் எடுக்கும் தாவரத்தை பொறுத்து சிறிய பந்து போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். பின்னர் அதனுள் நாம் தேர்ந்தெடுத்த தாவரத்தின் வேர்பகுதியை அந்த பந்தின் நடுப்பகுதியில் வைத்து நூலினால் கட்டவேண்டும். மேலும் அழகு சேர்க்க பசுமையான பாசியினை அதன் மேல் வைக்கலாம். பின்னர் அதை பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளலாம்.
இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், சதைப்பற்று அதிகம் உள்ள தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் அதிகமாகவும் பாசி (peat moss) குறைவாகவும் இருக்க வேண்டும். அதே தண்ணீர் அதிகம் தேவைப்படும் தாவரங்களுக்கு மண்ணின் விகிதம் குறைவாகவும் பாசி (peat moss) அதிகமாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தால் போதுமானது. நாம் செய்யக்கூடிய பூச்சட்டிக் கலவை நன்கு காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
வியாபார வாய்ப்பு
இன்றயை சூழலில் திருமண நிகழ்வுகளில் தாம்பூலங்கள் வழங்குவது மக்களிடையே பிரபலமாகி வருகிறது. திருமண தாம்பூல பரிசாக இனிப்பு மற்றும் காரங்களை தருவதே வழக்கமாக உள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே விதைகளையும் மரக்கன்றுகளையும் பரிசாக தருகின்றனர். நாம் சற்று வித்தியாசமாக அழகு தாவரங்களையும் பரிசளிக்கலாம். இது நம் உறவினர்களுக்கு நினைவு சின்னமாகவும் மனநிம்மதி தரும் வகையிலும் அமையும்.
மேலும், கார்பொரேட் கம்பெனிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் ஒப்பந்த அடிப்படியில் இதை நாம் அவர்களுக்கு அமைத்துக் கொடுத்து லாபம் பார்க்கலாம். இதன் நுணுக்கங்களை நாம் நன்றாக கற்று கொண்டால் மற்றவர்களுக்கு கற்று கொடுத்தும் லாபம் பார்க்கலாம்.
அதோடு இன்றைய இணைய உலகில், சந்தை வாய்ப்புகளை அங்கிருந்தே தொடங்கி, நமது வலைதளம் மூலமாகவும் விற்பனை செய்து நல்ல வருவாய் பெற முடியும்.
- நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன.
- எந்த ஒரு தொழில் செய்து வந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும்.
வேலைக்கு செல்லும் பலரின் கனவு சொந்தமாக தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக வேண்டும் என்பதாக இருக்கும். அப்படி இருந்தாலும் பலர் அதற்கு நிறைய முதலீடுகள் வேண்டும் அல்லது தங்களுக்கு ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் தேவை என தொழில் தொடங்கும் கனவை ஓரம் வைத்துவிட்டு வேலைக்கு சென்று மாதம் சம்பளம் வாங்குவதையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள். ஆனால் நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன.
டிஜிட்டல் கல்வி
வேகமாக வளர்ந்து வரும் ஐ.டி. உலகில் பலரும் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு மென்பொருளில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அதையே ஒரு படிப்பாக மாற்றி ஆன்லைனில் வீடியோவாக வெளியிடுவது அல்லது ஆன்லைனில் கற்றுக்கொடுப்பதன் மூலம் பெரும் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம்.
கைவினை பொருட்கள்
உங்களுக்கு கைவினை பொருட்கள் செய்யும் திறன் உள்ளது என்றால், அதை உற்பத்தி செய்துவிட்டு ஆன்லைனில் விற்கலாம். இதற்காக பல்வேறு இணையதளங்கள் செயலிகள் உள்ளது. இதற்கும் பெரிய முதலீடுகள் தேவை இருக்காது.
பேக்கரி
உங்களுக்கு சமையல் செய்ய பிடிக்கும் என்றால் பேக்கரி அல்லது சிறிய அளவில் உணவை வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். இதுபோன்றவர்களை ஊக்குவிக்கவும் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்கள் உள்ளது.
டிஜிட்டல் மார்க்கெட்டிங்
எந்த ஒரு தொழில் செய்து வந்தாலும் அதை விளம்பரம் செய்ய வேண்டும். நிறைய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அது உங்களுக்கு தெரியும் என்றால் அதற்கான சேவையை நீங்கள் வழங்கலாம். பல்வேறு சிறு நிறுவனங்கள் தங்களது பொருட்களை சந்தையில் மக்களிடம் கொண்டு செல்ல டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவையை நாடுகின்றனர். இதன் மூலமும் வருமானம் ஈட்டலாம்.
இதுபோன்று குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.
- பெண்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளக் களரியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
- களரி பெண்களுக்கு நம்பிக்கையையும், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலையும் அளிக்கும்.
கேரளத்தைச் சேர்ந்த பெண் ஆரிபா, நான்கு முறை களரி தற்காப்புக்கலையில் மாநில சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, களரி பயிற்சியாளர்களுக்கான போட்டியில், ஆறு வயதிலேயே கலந்துகொண்டு, ஆரிபா அனைவரின் மனதையும் கவர்ந்திருக்கிறார்.
"என் தந்தை ஹனீப் குருக்களுக்கு அவருடைய தந்தையார் ஹம்சத்தாலி குருக்கள், களரி கற்றுக்கொடுத்தார். நான் அவரிடமிருந்து களரி கற்றுக்கொண்டேன். நாங்கள் வசிக்கும் மலபார் பகுதியில் எங்களைப் போன்ற ஒருசில குடும்பங்கள் களரி போன்ற தற்காப்புக்கலையில் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்" என்று மெதுவாக பேச தொடங்கினார், ஆரிபா.
நான்கு முறை மாநில சாம்பியன் பட்டம் வென்ற ஆரிபாவுக்கு வயது 26. இவரது பங்களிப்பால், இன்று களரி போட்டிகளில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் பங்கேற்கத் தொடங்கியுள்ளனர்.
''ஒவ்வொரு பெண்ணும் தங்களைத் தற்காத்துக்கொள்ளக் களரியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நம்பிக்கையையும், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலையும் அளிக்கும். என்னை பின்பற்றி, நிறைய பெண்கள் களரி பயில்கிறார்கள். குறிப்பாக என் தந்தையிடம் ஆண்கள் மட்டும் பயின்று வந்த நிலையில், இப்போது 60 மாணவிகளும் பயிற்சி பெறுகிறார்கள்'' என்று விளக்கமாகப் பேசுகிறார் ஆரிபா.
ஆரிபாவின் தந்தையும் அவரது குருவுமான ஹனீப் குருக்கள், ''என் மகளுக்கு 4 வயதில் களரி தற்காப்புக் கலையைக் கற்றுக்கொடுத்தேன். பெண்கள் உடலுக்குக் களரி ஒத்து வராது என்று சொன்னார்கள். ஆனால், அவளுக்குப் பயிற்சியளித்தபோது அவர்கள் சொன்னது தவறு என்பதை உணர்ந்தேன். பயிற்சிபெற தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் களரி போட்டிகளில் வெல்லத் தொடங்கினாள். அன்று தொடங்கி, இன்று வரை அவளது வெற்றிகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது'' என்கிறார் ஹனீப்.
எல்லோருமே களரியைக் கற்றுக்கொள்ளலாம் என்கிறார் அவர். ''இது உடலை நெகிழ்வாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கான ஒரு வழியாகும். களரியை எல்லோருக்கும் இலவசமாக கற்றுக்கொடுக்க எங்களிடம் 'களரி வந்தனம்' என்ற அமைப்பும் இருக்கிறது'' என்றார்.
அரியானாவில் நடந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் களரியையும் சேர்த்தது மத்திய அரசு. அதனால் களரிக்கு முக்கியத்துவம் கிடைத்தது என்று சொல்லும் ஆரிபா, தேசிய போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.
பாலக்காட்டில் உள்ள செக்கனூரில் தன் கணவருடன் வசித்துவருகிறார் ஆரிபா. அவரது கணவர் சமீருக்கு, களரியில் சாம்பியனாகவும் பயிற்சியாளராகவும் மனைவி இருப்பதில் பெருமை அதிகம்.
"எடப்பால் போகும்போதெல்லாம் களரி வகுப்புகள் எடுப்பது வழக்கம். என் மாணவிகளில் ஒருவர் சமீபத்தில் முதல் பரிசு வாங்கியிருக்கிறார். இது தேசிய அளவிலும் தொடரவேண்டும் என்ற ஆசையில் தீவிரமாக பயிற்சி அளிக்கிறேன்" என்கிறார் ஆரிபா.
- தலைமையேற்கும் பண்பு தற்போதைய பெண்களிடம் குறைவாக உள்ளது.
- சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தனக்கு கீழ் பணியாற்றுபவர்களைத் தேர்வு செய்யும்போது நல்லவர்களையும், நம்பிக்கையானவர்களையும் கண்டறியும் திறமை வேண்டும்.
இன்றைய பெண்கள் பலர் திறமைசாலிகள். குறுகிய காலத்தில் உயர் பதவிகளை தொடுகின்றனர். பல்வேறு வசதிகளை சிறு வயதிலேயே அடைந்து விடுகின்றனர். ஆனால் தலைமையேற்கும் பண்பு தற்போதைய பெண்களிடம் குறைவாக உள்ளது. ஏனெனில் ஒரு நிறுவனத்தையோ அல்லது ஒரு அமைப்பையோ தலைமையேற்று நடத்துவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு சிறந்த தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்வது என்பது ஒரே பொழுதில் நடந்துவிடக் கூடிய விஷயம் அல்ல. இது ஒரு தொடர் நடவடிக்கை. கற்றுக் கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது என்கிறார்கள் தனியார் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள்.
பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தலைமைப் பண்புகள்:
* தகவல்களை தெளிவாகவும் சரியாகவும் பரிமாறிக் கொள்ளத் தெரிந்தவரே தலைவராக முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும். மொழி அறிவும் இருக்க வேண்டும்.
* தலைமை ஏற்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ளவர்கள் மதிக்கும் வகையில் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டும். மேலும் நம்பகத்தன்மை கொண்டவராக இருக்க வேண்டும்.
* மற்றவர்களை சிறப்பாக வழிநடத்திச் செல்வதற்கு முன், உங்களை நீங்களே வழிநடத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களை நீங்களே ஒழுக்கத்துடன் வழி நடத்துவதுதான் மிகவும் கடினமான செயல்.
* தொலைநோக்கு பார்வை கொண்டவரே சிறந்த தலைவராக விளங்க முடியும்.
* ஒரு குழுவுக்கோ அல்லது அமைப்புக்கோ தலைமையேற்பவர் வாய்ச் சொல் வீரராக மட்டும் இருந்தால் போதாது. சிறந்த செயல் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.
* நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைய நமக்கு கீழ் உள்ளவர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்த வேண்டும்.
* நமது செயல்கள் குறித்த விமர்சனங்களை ஏற்று ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் வேண்டும். மற்றவர்கள் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும்.
* வழக்கமான செயல்களில் நிலைத்தன்மை இருக்க வேண்டும். முடிவு எடுப்பதற்கு முன் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.
- உங்களது அந்தரங்க தருணங்களை ஹேக்கர்கள் படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும்.
- ‘பாஸ்வேர்ட்', ‘ ‘கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
பெண்கள், இளைஞர்கள் போன்றோர் அண்மைக் காலமாக சமூக ஊடகங்களில் அளவுக்கு அதிகமாக நேரம் செலவிடுவதால் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள் குறித்து தொடக்கத்திலேயே விளக்கியிருந்தேன். நமது மாணவச் செல்வங்கள் 'ஆன்லைன்' விளையாட்டுக்களில் மூழ்கினால், அது மனச்சிதைவு நோயாக மாறிவிடும் ஆபத்து குறித்து கவலையோடு பகிர்ந்திருந்தேன். புதிது, புதிதாக முளைக்கும் கொரோனா வைரஸ் 'வேரியண்ட்'டுகளைப் போன்று, 'சைபர்' கிரிமினல்கள் புதுப்புது தொழில்நுட்ப அவதாரம் எடுப்பதால், 'சைபர்' மோசடிகள் குறித்து அனைவரும் எப்போதும் விழிப்போடு இருக்கவேண்டும் என்று எச்சரித்திருந்தேன்.
புகைப்படங்களை 'மார்பிங்' செய்வதற்கான செயலிகள் எளிதாக கிடைப்பதால், முன்னாள் நண்பர்கள் கூட 'மார்பிங்' 'பிளாக்மெயிலர்'களாக மாறி சில பெண்களை வதைப்பது, வளைப்பது பற்றி விளக்கியிருந்தேன். உங்களது செல்போன் அல்லது கணினி கேமராக்களையே பயன்படுத்தி, உங்களது அந்தரங்க தருணங்களை 'ஹேக்கர்'கள் படம்பிடித்து உங்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பது குறித்து எச்சரித்திருந்தேன். டி.ஜி.பி.க்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் பல பிரபலங்களின் பெயர்களில், அவர்களது புகைப்படங்களுடன் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி பணம் பறிக்கும் மோசடி கும்பல்கள் பற்றி எச்சரித்திருந்தேன். ரிசர்வ் வங்கியின் அனுமதி இன்றி செயல்படும் பல 'டுபாக்கூர்' கடன் செயலிகள், பயனர்களை 'பிளாக்மெயிலிங்' செய்து அநியாய வட்டி வசூலிப்பது பற்றி விரிவான தகவல்களுடன் பதிவிட்டிருந்தேன்.
ஆரம்பக் கட்டத்தில் உங்களுக்கு சிறு வெற்றிகள் தந்து ஆசைகாட்டும் 'ஆன்லைன்' சூதாட்டங்களில் உங்களுடன் ஆடுவது தனிநபர் அல்ல, ஆயிரம் பேரின் மூளை வலிமைகொண்ட 'கம்ப்யூட்டர் புரோகிராம்' என்பதால், இறுதியில் தோற்பதும் ஓட்டாண்டி ஆகப்போவதும் நீங்கள்தான்- ஏமாறாதீர்கள் என்று விளக்கி இருந்தேன். 'பிட்காயின்' போன்ற 'கிரிப்டோ கரன்சிகளை' எலான் மஸ்க் போன்ற பெரும் கோடீஸ்வரர்கள் ஆதரித்தாலும்கூட, எந்த ஒரு அரசாங்கத்தாலும் கட்டுப்படுத்தமுடியாத 'கிரிப்டோ கரன்சி'களில் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் ஏமாறவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தேன். அழகிய பெண்களின் புகைப்படங்களுடன் சில 'ஆன்லைன்' திருமண தகவல் மையங்கள் விதவிதமாக மோசடி செய்வது குறித்த பல தகவல்களுடன் அம்பலப்படுத்தி இருந்தேன். பிரபல வங்கிகளின் தலைமையகத்திலிருந்து பேசுவதுபோல் பேசி, உங்களது வங்கி விவரங்களை கேட்டுவாங்கி கொள்ளையடிக்கும் 'சைபர்' கிரிமினல்களைப் பற்றி பல சம்பவங்களுடன் விளக்கி இருந்தேன்.
நல்ல சம்பளத்துடன் வேலைவாங்கித் தருவதாக ஆசைகாட்டி, 'அட்வான்ஸ்' தொகை கட்டச்சொல்லி பணம்பறிக்கும் 'ஆன்லைன்' வேலைவாய்ப்பு மோசடிகள் குறித்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருந்தேன். உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, நமது கம்ப்யூட்டர்களின் குறைபாடுகளை சரிசெய்வதற்கான தொலைநிலை அணுகல் செயலிகளை தவறாகப் பயன்படுத்தி, நமது கம்ப்யூட்டரில் உள்ள வங்கி கணக்கு உள்ளிட்ட ரகசிய தகவல்களை திருடும் 'சைபர்' கிரிமினல்கள் பற்றி எச்சரித்திருந்தேன்.
'வாட்ஸ் அப்' போன்ற தளங்கள் மூலமாக, முன்பின் தெரியாத யாராவது ஒருவர் ' கியூ.ஆர்' குறியீடுகளை அனுப்பி அதனை 'ஸ்கேன்' செய்யுமாறு கேட்டால் திட்டவட்டமாக மறுத்துவிடுங்கள் என்று தெரிவித்திருந்தேன். 'டேட்டிங்' செயலிகள் வெளியிடும் கவர்ச்சிகரமான விளம்பரங்களைப்பார்த்து இளைஞர்கள் ஏமாறவேண்டாம் என்று கேட்டுக்கொண்டதுடன், இந்த 'டேட்டிங்' செயலிகளை பின்தொடர்ந்துவரும் 'பிளாக்மெயில்' கும்பல்களிடம் உங்கள் பணத்தையும் மானம், மரியாதையையும் இழக்காதீர்கள் என்று எச்சரித்திருந்தேன்.
ஆபாசப் படங்களை 'ஆன்லைனில்' பார்த்ததால், உங்களது 'பிரவுசர்' முடக்கப்பட்டுள்ளதாக பயனரை எச்சரிக்கும் போலியான 'பாப்-அப்' விளம்பரங்கள் மூலமாக நடைபெறும் 'பிளாக்மெயில்' மோசடிபற்றி விளக்கமாக குறிப்பிட்டிருந்தேன். 'ஜிபே', 'பேடிஎம்' போன்ற 'யூபிஐ' 'பேமெண்ட்' செயலிகளை பயன்படுத்தி 'சைபர்' கிரிமினல்கள் பணம் பறிப்பது பற்றி சம்பவங்களுடன் விளக்கியிருந்தேன். 'பேமெண்ட்' செயலிகளின் 'பாஸ்வேர்ட்', ' 'கியூ.ஆர்' கோடு போன்றவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரித்திருந்தேன். 'சைபர்' கிரிமினல்களிடம் சிக்கிக்கொண்ட ஏராளமானவர்களின் வழக்குகளை காவல்துறைப் பணியின்போது கையாண்ட அனுபவத்தின் அடிப்படையில், இனியாவது மக்கள் ஏமாறாமல் இருக்கவேண்டும் என்ற அக்கறையுடன்தான் இந்த தொடரை எழுத முன்வந்தேன். இந்த தொடர், மிகச்சிறந்த எச்சரிக்கை உணர்வை விதைத்திருப்பதாக பாராட்டிய வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.
முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. முனைவர் மு.ரவி






