என் மலர்
பெண்கள் உலகம்

இயற்கை அலுவலகத்திற்கு போலாமா..?
- அலுவலகத்திலேயே எல்லா வேலைகளையும் சரியாக செய்துவிட முடியாது.
- இயற்கையான சூழலால் உடலும், மனமும் ரிலாக்ஸாக வேலை செய்யும்.
ஒரே மாதிரியான ஆபீஸ் கேபின் செட்டப், ஏ.சி. காற்று... எத்தனை நாள் இப்படியே வேலை செய்வீர்கள்? அதனால்தான் அவுட்டோர் ஆபீஸ் முறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அவுட்டோர் ஆபீஸ் என்றால் அங்கேயும் வயர்லெஸ் இன்டர்நெட், லேப்டாப் சார்ஜிங் பாயிண்ட் என எல்லாமே இருக்கும். என்ன ஒன்று...? அலுவலகம் இயற்கை நிறைந்த திறந்தவெளியில் இருக்கும்.
"அலுவலகத்திலேயே எல்லா வேலைகளையும் சரியாக செய்துவிட முடியாது. அதை எதிர்கால சந்ததியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என பேசும் ஜெர்ரி டாடே இதை வெறுமனே பேசவில்லை. கட்டிட வடிவமைப்பாளரான ஜெர்ரி, 2005-ம் ஆண்டே இயற்கையோடு இணைந்த வெளிப்புற அலுவலகத்தை லண்டனின் ஹோக்ஸ்டன் சதுக்கத்தில் கட்டமைத்தவர்.
பணியாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க சோதனை முறையில் உருவாக்கப்பட்டதே எட்டு நபர்கள் மட்டும் பணிபுரியும் இந்த அவுட்டோர் ஆபீஸ். ஹியூமன் ஸ்பேஸ் குளோபல் ரிப்போர்ட் ஆய்வுப்படி, இயற்கையோடு இணைந்த அலுவலகத்தின் மூலம் பணியாளர்களின் திறன் 15 சதவீதம் உயர்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
"இயற்கையான சூழலால் உடலும், மனமும் ரிலாக்ஸாக வேலை செய்யும். பணியாளர்களின் செயல்பாடுகளில் கிரியேட்டிவிட்டி மெல்ல அதிகரிக்கும்" என உறுதியாகப் பேசுகிறார் ஜெர்ரி.
தற்போது அமெரிக்காவின் மேரிலேண்டில் தொடங்கப்பட்டுள்ள அவுட் பாக்ஸ் என்ற வெளிப்புற அலுவலகத்தில் வை-பை, டேபிள்கள், அலங்காரங்கள் என அனைத்தும் உண்டு. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இவற்றை இலவசமாக பயன்படுத்தலாம். இது கோடை காலத்திற்கு மட்டும்தான்.
"சலிப்பூட்டும் அலுவலக கேபின்களிலிருந்து மனிதர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் விடுவிக்க நினைத்தே இதனை உருவாக்கினோம்" என்கிறார் அவுட்பாக்ஸை உருவாக்கிய பீட்டர்சன் நிறுவனத்தின் லாரி யான்கோவ்ஸ்கி.
வெளிப்புற அலுவலகம் கோடை காலத்தில் மட்டும் அமைக்கப்படுவதற்கு முக்கிய காரணம், மழை. ஏனெனில் அலுவலக கட்டமைப்பு பெருமளவு சூரிய வெளிச்சத்தை நம்பியே இருப்பதால், மழை வரும்போது அலுவலகத்தை முழுக்க தார்பாயால் மூடுவது போன்ற ஏற்பாடுகள் தேவை. இதற்கடுத்து இரைச்சல். ஒரு பூங்காவில் அலுவலகம் போன்று வேலை செய்தாலும், ஏ.சி. மட்டுமே உறுமும் அலுவலக அமைதி கிடைக்காது.
"வெளிப்புற அலுவலகத்தைச் சுற்றி மெஸ், கடைகள், பஸ்கள் என செல்வதால் தனிமையில் பணியாற்ற விரும்புபவருக்கு இச்சூழல் சிரமம்தான்" என்கிறார் யான்கோவ்ஸ்கி.
கூகுள், ஸ்பாட்டிபை போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்காக 'அவுட்டோர் ஆபீஸ்' முறையை பயன்படுத்தினாலும் பல்வேறு நிறுவனங்களுக்கு இது புதுசுதான். எதிர்காலத்தில் இந்த அவுட்டோர் ஆபீஸ் சாத்தியமாக அதிக வாய்ப்புண்டு.