என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் தினமும் உலர்ந்த பழங்களை எடுத்து கொள்வது நல்லது. இன்று உலர்ந்த பழங்களை வைத்து சத்தான உருண்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உலர்ந்த அத்திப்பழம் - 20
    உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை - தலா கால் கப்
    ரூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
    பேரீச்சம்பழம் - 15
    தேன் - சிறிதளவு.



    செய்முறை :

    உலர்ந்த அத்திப்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேரீச்சம்பழத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் பேரீச்சம்பழம, அத்திப்பழத்தை போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கவும். நைசாக அரைக்க கூடாது. ஒரு சுற்று சுற்றினால் போதுமானது.

    அரைத்ததை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் உடைத்த முந்திரி, உடைத்த வால்நட், வெள்ளரி விதை, தேன், ரூட்டி ஃப்ரூட்டி சேர்த்து  நன்கு கலந்து கெட்டியாக உருண்டைகளாக வேண்டிய வடிவில் பிடிக்கவும்.

    அத்திப்பழம் நட்ஸ் உருண்டை ரெடி.

    மிகவும் சத்துமிக்க இந்த உருண்டையை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
    மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.

    செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக்கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக்குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள்.

    ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதேசமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்கமுடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.

    டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத்தினால்தான் என்கின்றனர் நிபுணர்கள். காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல்பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.

    முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லையாம். அதேபோல முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியுமாம்.

    ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத்தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறதாம். ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம். அது காம உணர்வுகளை அதிகரிக்குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட்டாலோ, அதீத காம வயப்பட்டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள். அதற்கு கூச்சப்பட்டால் செக்ஸாலஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.
    ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
    இந்த இடைக்கால பட்ஜெட்டில் பலரது வயிற்றில் பால் வார்த்த விஷயம், வருமான வரி வரம்பு உயர்வு.

    ஆனால் உடனே சிலர் சில கணக்கீடுகளைக் கூறி பலரையும் கிறுகிறுக்க வைத்திருக்கிறார்கள்.

    இந்நிலையில் மத்திய வருவாய்த் துறைச் செயலர் அஜய் பூஷன் பாண்டே ஒரு தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார்.

    அவரது விளக்கத்தின்படி, ஆண்டுக்கு எட்டு லட்சம் முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் நபர்கள் கூட, முறையான முதலீடுகளை மேற்கொண்டால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

    அதாவது, தற்போது ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆக, முதல் விடுதலை, ரூ. 5 லட்சம் வரை வரி கிடையாது.

    சம்பளதாரர்கள் தம்முடைய மற்றும் தம்மைச் சார்ந்தவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவச் செலவுகளை மேற்கொள்கிறார்கள். அதற்கு நிலையான கழிவாக ஆண்டுக்கு ரூ. 40 ஆயிரம் என இருந்ததை தற்போது ரூ. 50 ஆயிரமாக அறிவித்திருக்கிறார்கள். ஆக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    சம்பளம் வாங்குபவர்கள் அனைவருக்குமே வருங்கால வைப்புநிதி எனப்படும் பி.எப். பிடித்தம் செய்யப்படும். ஆனால் அதைத் தாண்டியும் ஆயுள் காப்பீடு, சுகன்யா சம்ரிதி யோஜனா, தேசிய சேமிப்புச் சான்று, அஞ்சலக சேமிப்புத் திட்டம், மியூச்சுவல் பண்டு போன்ற பல்வேறு திட்டங்களில் கொஞ்சம் யோசித்து முதலீடு செய்தால் ரூ. 1.50 லட்சத்துக்கு முழுமையாகக் கழிவு பெறலாம்.

    அப்படி முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பமில்லாவிட்டாலும், வீட்டுக் கடன் பெற்றிருந்தால் அது வருமான வரி விஷயத்தில் உதவும்.

    வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தும் அசல் தொகை இந்த 80 சி பிரிவின் கீழ்தான் கழியும். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் = ரூ. 7 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    வருமான வரி பிரிவு 24-ன் கீழ், வீட்டுக் கடன் தொகைக்குத் திருப்பி செலுத்தும் வட்டித் தொகையாக ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரிக் கழிவு பெறலாம். ஆக, வீட்டுக் கடன் அசல் தொகைக்கு 80 சி என்றால், வீட்டுக் கடன் வட்டிக்கு இந்தப் பிரிவு 24. மொத்தமாக ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் = ரூ. 9 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    80 சிசிடி (1பி) பிரிவின் கீழ் ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் வரை என்பிஎஸ் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து வரிக் கழிவு பெறலாம். இதுவும் ஒரு விதமான நிலையான வருமானம் தரக்கூடிய முதலீட்டுத் திட்டம்தான். அரசின் உத்தரவாதத்துடன் இந்த முதலீடுகள் நன்கு செயல்படுகின்றன.

    இப்போது ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் = ரூ. 9.50 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    சம்பளம் பெறும் ஒருவர் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளார் என்றால் ஓர் ஆண்டில் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு 80 டி பிரிவின் கீழ் குறைந்தபட்சம் ரூ. 25 ஆயிரம் வரை வரிக்கழிவு பெறலாம். ஆக, ரூ. 5 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 1.50 லட்சம் + ரூ. 2 லட்சம் + ரூ. 50 ஆயிரம் + ரூ. 25 ஆயிரம் = ரூ. 9.75 லட்சம் வரை வரி செலுத்த வேண்டாம்.

    பூமிக்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் உணவுப் பழக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    பூமிக்குப் பேரழிவை ஏற்படுத்தாமல், ஆயிரம் கோடி பேருக்கு உணவளிக்கும், உயிர்களைக் காப்பாற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் ஓர் உணவுப் பழக்க முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரும் ஆண்டுகளில், கோடிக்கணக்கான கூடுதல் மக்கள்தொகைக்கு எப்படி உணவிடப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு வல்லுநர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

    அதன்படி, ‘புவிசார்ந்த ஆரோக்கியத்துக்கான உணவுப் பழக்கம்’ என்று அவர்கள் கூறியுள்ள விடை, இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு முற்றிலுமாகத் தடை விதிக்கவில்லை.

    ஆனால், நமது உணவுத் தட்டுகளில் பெருமளவில் குவித்துவைக்கும் உணவுப் பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், குறைவாகச் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பரிந்துரை செய்வதாக இருக்கிறது.

    புதிய உணவுப் பழக்கத்துக்கு நாம் என்னென்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டியிருக்கும்?

    நீங்கள் தினமும் இறைச்சி சாப்பிடுபவராக இருந்தால், இதுதான் முதலாவது எச்சரிக்கை. சிவப்பு இறைச்சி (ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி) என்றால் வாரத்தில் ஒரு பர்கர் அல்லது மாதத்துக்கு ஒரு பெரிய இறைச்சித் துண்டு என்பதுதான் உங்களுக்கான அளவு.

    வாரம் சிறிதளவு மீன் மற்றும் அதே அளவு கோழி இறைச்சி சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கான புரதச்சத்தின் மீதிப் பகுதி, தாவரங்களில் இருந்துதான் வர வேண்டும்.

    அதற்காக பயறு வகைகள் மற்றும் பீன்ஸ், சுண்டல், அவரை போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

    நாம் சாப்பிடும் உணவில் பாதியளவு பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும் என்பது முக்கியத்துவம் பெறும்.

    சரி, புதிய உணவுத் திட்டத்தின்படி உண்ணும் உணவுகள் சுவையில் மோசமாக இருக்குமா?

    அவ்வளவு மோசமாக இருக்காது என்று ஹார்வர்டில் உள்ள ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பேராசிரியர் வால்டர் வில்லெட் கூறுகிறார். தான் சிறு வயதில் பண்ணையில் இருந்தபோது தினமும் முக்கால்வாசி உணவாக சிவப்பு இறைச்சி சாப்பிட்டு வந்த நிலையில், இப்போது புவிசார்ந்த ஆரோக்கிய உணவு முறைக்கு நன்கு பழகிவிட்டதாக அவர் கூறுகிறார்.

    அவர் மேலும், ‘இதில் நிறைய வகைகள் இருக்கின்றன. அந்த உணவுகளை எடுத்து வெவ்வேறான ஆயிரம் வகைகளாக ஆக்கிக்கொள்ள முடியும். உணவை மறுக்கும் பட்டியலை நாம் தரவில்லை. இது ஆரோக்கியத்தை தரும் உணவுப் பட்டியல். மாற்றிக்கொள்ளக் கூடியது, அனுபவித்து சாப்பிடக்கூடியது’ என்கிறார்.

    உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது இந்தத் திட்டம்.

    ஐரோப்பாவும் வடஅமெரிக்காவும் சிவப்பு இறைச்சியின் தேவையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். கிழக்கு ஆசியா மீன் தேவையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஆப்பிரிக்காவில் மாவுச்சத்துள்ள காய்கறிகளை குறைக்க வேண்டும் என்கிறார்கள்.

    ‘இவ்வளவு பெரிய அளவில், இந்த வேகத்தில் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு மனிதகுலம் ஒருபோதும் முயற்சி செய்தது இல்லை. நல்லதோர் உலகை உருவாக்குவதற்கு முயற்சிக்கும் காலம் வந்துவிட்டது’ என்று ஸ்டாக்ஹோம் ரெசிலியன்ஸ் மையத்தின் உதவிப் பேராசிரியர் லைன் கோர்டன் கூறுகிறார்.

    உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு, சிவப்பு இறைச்சியின் மீது வரி விதிப்பது தேவையான ஒரு விஷயமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    உலகெங்கும் இருந்து 37 அறிவியல் நிபுணர்கள் ‘ஈட்- லான்செட்’ என்ற கமிஷனின் அங்கமாக ஒன்று சேர்க்கப்பட்டனர்.

    விவசாயம் முதல் பருவநிலை மாற்றம், சத்துணவு என பல துறைகளைச் சேர்ந்த அவர்கள், புதிய உணவுப் பழக்கம் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு இரண்டு ஆண்டு காலம் ஆனது.

    கடந்த 2011-ல் உலக மக்கள்தொகை 700 கோடியைத் தொட்டுவிட்டது. 2050-ல் இது ஆயிரம் கோடியாக உயர்ந்து, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், பரிந்துரைக்கப்பட்டுள்ள உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் ஆண்டுதோறும் 1.1 கோடிப் பேர் இறப்பதைத் தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் புற்றுநோய்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய் பாதிப்பு இதில் பிரதானமாக உள்ளது.

    வளர்ச்சியடைந்த நாடுகளில் மிகப் பெரிய உயிர்க்கொல்லிகளாக இவை இப்போது இருக்கின்றன.

    உணவு உற்பத்தி மற்றும் காடுகளை உருவாக்கும் செயல்களுக்காக நிலங்களைப் பயன்படுத்துவது, உலக பசுமைக்குடில் வாயுக்கள் உற்பத்தியில் கால் பாகம் அளவை எட்டுகிறது.

    மின்சார உற்பத்தி, சூடுபடுத்துதல் ஆகியவற்றுக்கு இணையான அளவு பாதிப்பு இது. ரெயில்கள், விமானங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களால் ஏற்படும் பாதிப்பைவிட கணிசமான அளவுக்கு அதிகம் இது.

    உணவுத் துறையால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை உற்று நோக்கினால், இறைச்சி மற்றும் பால் பொருட்கள் முக்கியப் பங்காற்றுவதைக் காணலாம். உலகெங்கும் மனிதர்களால் உருவாக்கப்படும் பசுமைக்குடில் பாதிப்பு வாயு உற்பத்தியில், கால்நடைகளால் ஏற்படும் பாதிப்பு 14.5 முதல் 18 சதவீதம் வரை உள்ளது.

    வெப்பமாக்கும் மற்ற வாயுக்களைப் பார்த்தால், மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்கள் உற்பத்தியில் விவசாயம் பெரிய பங்காற்றுகிறது.

    அதேபோல தண்ணீர் பயன்பாட்டைப் பார்த்தால், விவசாயமும் உணவு உற்பத்தியும் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கின்றன. உலக அளவில் 70 சதவீத தண்ணீர், பாசனத்துக்குச் செலவிடப்படுகிறது.

    புவிசார்ந்த உணவுப் பட்டியல் பூமியைக் காப்பாற்றுமா?

    அதிகரிக்கும் மக்கள்தொகைக்கு உணவளிக்க, உணவு வீணாவதை பாதியாகக் குறைப்பதும், இப்போதுள்ள விவசாய நிலங்களில் உற்பத்தியைப் பெருக்குவதும் தேவைப்படுகின்றன.

    ‘பசுமைக்குடில் வாயு உற்பத்தியை குறைந்தபட்ச அளவாக்க வேண்டும் என்பது மட்டும் நோக்கமாக இருந்தால், எல்லோரும் சமைக்காத உணவு முறைக்கு மாறும்படி நாம் கூறலாம்’ என்று பேராசிரியர் வில்ெலட் கூறுகிறார்.

    ஆனால் சமைக்காத உணவுகள் ஆரோக்கியமான உணவாக இருக்குமா என்று தெளிவாகத் தெரியவில்லை என்கிறார் அவர்.

    பூமியையும், பூமிவாழ் மக்களையும் காக்க நாம் நம் உணவுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்பது புரிகிறது.
    எள்ளை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எள்ளை வைத்து இன்று சத்தான சுவையான பர்ஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:
     
    வெள்ளை ( அல்லது ) கருப்பு எள் - 4 கப்
    கருப்பட்டி அல்லது வெல்லம்  - 2 கப்
    ஏலக்காய் - 6
    நெய் - சிறிதளவு



    செய்முறை :

    கருப்பட்டி அல்லது வெல்லத்தை தூள் செய்து கொள்ளவும்.

    எள்ளுவை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஏலக்காயை தூளாக்கி கொள்ளவும்.
     
    வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் எள்ளைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். மிக்ஸியில் வறுத்த எள்ளுவை போட்டு கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
     
    ஒரு வாணலியில் கருப்பட்டி அல்லது வெல்லத்தை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து இடைவிடாது கிளறி பாகு காய்ச்ச வேண்டும்.

    பின்பு இந்த பாகில் வறுத்த பொடித்த எள்ளை சிறிது சிறிதாக தூவி அத்துடன் ஏலக்காய் பொடியும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சிறிது நேரத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பி விடவும்.

    ஆறியதும் துண்டுகளாக போட்டு சுவைக்கவும்.

    சூப்பரான எள்ளு பர்ஃபி ரெடி.

    எள் பர்ஃபியை அதிகம் சாப்பிடுவது உடலின் எலும்புகளை வலிமைப்படுத்தும். எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற குறைபாடுகளையும், எள் பர்ஃபியை தொடர்ந்து சாப்பிடுவதால் போக்க முடியும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    `பெண்கள்தான் ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகள். ஷாப்பிங் செய்வதற்கு பொறுமை தேவை. அது பெண்களிடம் நிறைய இருப்பதால், அவர்கள் ஷாப்பிங்கில் சிறந்து விளங்குகிறார்கள்..’ என்கிறது, சமீபத்திய ஆய்வுகள்.
    ஒரு பொருளை வாங்க பல கடைகளுக்கு ஏறி இறங்குவது பெண்கள்தான். அப்படி ஏறி இறங்க அவர்கள் அலுக்கவேமாட்டார்கள். ஒரு முறைக்கு பல முறை விலை விசாரித்து சரியான பொருளை, சரியான விலைக்கு வாங்குவது பெரும்பாலும் பெண்கள்தானாம். தேவைப்பட்டால், ஏற்கனவே அந்த பொருளை வாங்கியவர்களிடம் அதுபற்றி விசாரித்து, தரத்தை எல்லாம் பரிசோதித்து வாங்குவதில் பெண்கள் தான் கில்லாடிகள்.

    ஆண்களிடம், தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமும், கொஞ்சம் கர்வமும் இருந்து கொண்டே இருப்பதால் தாங்கள் வாங்கப்போகும் பொருள் பற்றி அடுத்தவர்களிடம் விசாரிக்க விரும்பமாட்டார்கள். `என்ன ஆயிடும்! வாங்கிப் பார்த்திடலாமே’ என்ற எண்ணத்தில் அதிகம் ஆராயாமல் அந்த பொருளை வாங்கிவிடுவார்கள். பெண்கள் முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட தயங்காமல், புதிய பொருளைப் பற்றி விசாரி த்து உண்மை நிலையை அறிய முன்வருவார்கள். அதற்காக மெனக்கெடவும் செய்வார்கள். அதுதான் பெண்களிடம் இருக்கும் பிளஸ் பாயிண்ட்.

    பெரும்பாலான ஆண்கள் ஷாப்பிங் போவதை நேரத்தை வீணடிக்கும் செயல் என்று நினைக்கிறார்கள். அதனால் வாங்க வேண்டியது எவ்வளவு முக்கியமான பொருளாக இருந்தாலும் சீக்கிரமாக ஷாப்பிங்கை முடித்துக் கொள்ள வேண்டும் என்றே நினைப்பார்கள் அல்லது தனக்கு தேவையான பொருளை மற்றவர்களிடம் வாங்கிவரும்படி கூறிவிடுவார்கள். இதனால் ஆண்களிடம் ஷாப்பிங் திறமை வளர்வதில்லை.

    பேரம் பேசுவதை ஒரு தன்மானக் குறைவாக ஆண்கள் நினைக்கிறார்கள். ஒரு பொருளை இரு மடங்கு விலை கொடுத்து வாங்கியாவது தன்மானத்தை அந்த இடத்தில் காப்பாற்றிக் கொள்ள விரும்புவார்கள். தன்மானம் என்பது தான் ஏமாறுவது அல்ல என்று அவர்கள் புரிந்துகொள்வதில்லை. பேரம் பேசுவது தன்மானத்திற்கு இழுக்கு அல்ல என்பதை பெண்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள்.

    வீட்டிற்கு என்னென்ன பொருள்கள் தேவை, எந்த அளவுக்கு அவை தேவை என்பதை பெண்களே அதிகம் அறிந்திருக்கிறார்கள். ஒரு பொருளின் உபயோகம் என்ன, அந்த பொருளுக்கு எவ்வளவு செலவழிக்கலாம் என்ற முன்யோசனையும் பெண்களுக்கு உண்டு. அவர்கள் எதிர்பார்க்கும் விலைக்கு மேல் அந்த பொருள் இருந்தால் அதை வாங்காமலேயே வீட்டிற்கு கிளம்பிவிடுவார்கள். இப்படி பின்வாங்கிச் செல்லும் `டெக்னிக்’ ஆண்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

    ஆண்கள் லிஸ்ட் எழுதிவிட்டால், லிஸ்டில் இருக்கும் அத்தனை பொருட்களையும் வாங்கி கையில் இருக்கும் பணம் அனைத்தையும் `ஐஸ்’ போல் கரைத்துவிட்டுத்தான் செல்வார்கள் என்பது பொதுவான மதிப்பீடு.

    பெண்களோ, மூச்சுக்கு மூச்சு `இவ்வளவு செலவழிக்க வேண்டியிருக்கிறதே!’என்று மனதுக்குள்ளாவது புலம்பிக்கொண்டேதான் வாங்குவார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப `லிஸ்டை’ மாற்றிக் கொள்ளும் பக்குவமும் பெண்களிடம் உண்டு. அதனால் கூடுமானவரை தங்கள் பட்ஜெட்டிற்குள் ஷாப்பிங்கை பெண்கள் பூர்த்தி செய்துவிடுவார்கள்.

    எந்தெந்த இடத்தில் எந்தெந்த பொருள் அதிகம் கிடைக்கும் என்பதையும் பெண்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். தேவை என்றதும் சற்றும் யோசிக்காமல் அந்த இடத்துக்கு போய் பொருட்களை வாங்கி வந்துவிடுவார்கள். இதனால் தேவையற்ற அலைச்சல் மிச்சம். பெண்களைப் பொறுத்தவரை ஷாப்பிங் என்பது ஒரு மகிழ்ச்சியான வேலை. அதனை கூடுமானவரை வசதியாக மாற்றிக் கொள்வார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் என்பது பெரிய சுமை, கால விரயம். அதனால் தன்னை வருத்திக்கொண்டு அதை செய்வார்கள்.

    எந்தெந்த கடையில் எப்போது எந்த பொருளுக்கு தள்ளுபடி தருவார்கள் என்பது பெண்களுக்குத் தெரியும். ஷாப்பிங் போவது ஒருநாள் என்றாலும் அதற்கான முன்னேற்பாடுகளை பல நாட்களாக செய்வார்கள். விலையை பற்றிய மதிப்பீடும் அவர்களிடம் உண்டு. அதனால் பெண்கள் ஷாப்பிங் செய்வது சுலபமாகிவிடுகிறது.

    தான் வாங்கிய பொருளைப் பற்றி மற்றவர்களிடம் கூறுவது பெண்களின் வாடிக்கை. எல்லா பெண்களும் இதுபற்றி வெளிப்படையாக பேச விரும்புவதால், பெண்கள் அதிகமாக ஷாப்பிங் பற்றிதான் பேசுகிறார்கள். அதனால் பெண்களில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஷாப்பிங் அனுபவம் நிறைய கிடைக்கிறது. இது அவர்களுடைய ஷாப்பிங் ஆர்வத்தை தூண்டும் விதமாக அமைகிறது. அதனால் பெண்கள் ஷாப்பிங் செய்யும்போது மகிழ்கிறார்கள்.

    பெரும்பாலான பெண்கள் ஆண்களை அழைத்துக் கொண்டு ஷாப்பிங் செல்வதை விரும்புவதில்லை. காரணம் சீக்கிரமாக ஷாப்பிங்கை முடித்துக் கொள்வதிலேயே ஆண்கள் கவனமாக இருப்பார்கள். அதனால் பெண்கள் தங்களுக்கு இணக்கமான பெண்களைத் தான் ஷாப்பிங் செல்ல உடன் அழைத்துச் செல்கிறார்கள். இது பெண்களிடையே ஆழமான நட்பை உருவாக்கவும் செய்கிறது.

    இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். விலை மதிப்புள்ள தங்கம், வெள்ளி ஆபரணங்களை வாங்கும்போது அதில் அதிக கவனம் செலுத்துவது ஆண்கள்தான் என்று ஆய்வு குறிப்பிடுகிறது. விலை, தரத்தை பரிசோதிப்பதில் ஆண்கள்தான் அதிக கவனம் எடுத்துக்கொள்வார்களாம்.

    பெண்கள் ஷாப்பிங் செய்வதில் கில்லாடிகளாக இருக்கலாம். ஆனால் ஆண்களின் அறிவுரைகளையும், மனதில் வைத்துக் கொண்டு ஷாப்பிங் செய்தால் அது மிகவும் லாபகரமான ஷாப்பிங்காக இருக்குமாம்!
    குழந்தைகளிடம் கூட பொறாமை குணம் உண்டு. ஆனால் பெரும்பாலும் அது அர்த்தம் தெரியாத பொறாமையாக இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளையும் குழந்தைகள் அறிந்திருக்கமாட்டார்கள்.
    குழந்தைகளிடம் ஏற்படும் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து பெற்றோர் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் இளம் குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும்.

    பொறாமைக் குணம் கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால் ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள். அதுவே குற்றச்செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள்.

    குழந்தைகளிடம் பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி விடுகிறார்கள். குழந்தைகளின் வேகத்தையும், திறமைகளையும் வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். ஆனால் அந்த போட்டி நாளடைவில் பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

    அதுபோல் வெற்றி பெற்ற குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும்.

    குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர் புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும்.



    எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில் ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். இதில் குறை நிறை என்று எதையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களை தன் போக்கில் வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும். மற்றவர்கள் முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும் அவர்களின் குறைகளைகளைய உதவாது. குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது.

    ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.

    குழந்தைகளின் குறைகளை திருத்தவும், நிறைகளை பாராட்டவும் பெற்றோருக்கு உரிமை இருக்கிறது. இரண்டு குழந்தைகளையும் ஒன்றாக வைத்துக்கொண்டு ஒரு குழந்தையை பாராட்டுவதும், இன்னொரு குழந்தையை குறை சொல்வதும் கூடாது. அதை தனித்தனியாக செய்ய வேண்டும். `உன்னைவிட அவன் ஒசத்தி’ என்ற தொனியில் செயல்படக்கூடாது. இரு குழந்தைகளையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை பெற்றோர் தங்கள் மனதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    எல்லா குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது.

    குடும்பங்களில் எப்போதும் சிறிய குழந்தைக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. பெரிய குழந்தை பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள். தனக்கும் பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக சில குழந்தைகள் தங்களை காயப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டுவிட்டால், பெரிய குழந்தைகளின் கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி குடும்பத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, அவருக்கு பொறாமை குணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    இந்த முத்திரை மூளையின் சக்தியை அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.
    மனித மூளையின் இடது பக்கம் கணக்கு, சீர்தூக்கிப் பார்த்தல், தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்தல், கற்றல் உள்ளிட்ட செயல்பாடுகளையும்,

    வலதுபக்க மூளையானது, உள்ளுணர்வு, கற்பனை, கலைநயம், இசை, காட்சிகள் வாயிலாகச் சிந்தித்தல், மனிதநேயம், அன்பு போன்ற உணர்வுப்பூர்வமான செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும். இந்த, இரண்டு பக்க மூளையும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் மட்டுமே, ஒரு காரியத்தை அறிவுப்பூர்வமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் செய்ய முடியும். இதற்கு, ஆக்கினை முத்திரை உதவுகிறது.

    செய்முறை :

    நாற்காலியிலோ விரிப்பிலோ அமர்ந்த நிலையில், வலது கை விரல்களின் நுனிகளை இடது கை விரல்களின் நுனிகளுடன் தொட்டுக்கொண்டு இருக்கும்படி வைக்க வேண்டும். நடுவில் கூடு போன்ற பகுதி இருக்கும். இதை, ஒருநாளைக்கு மூன்று முறை செய்யலாம். ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் செய்ய வேண்டும். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த ஆசனத்தை செய்து வரலாம்.

    பலன்கள் :

    மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கிறது. ஞாபகமறதியைப் போக்கப் பயன்படும். மறந்துபோன விஷயத்தைத் திரும்பவும் ஞாபகப்படுத்திப் பார்க்கவும் பயன்படுத்தலாம்.

    இரண்டு பக்க மூளைக்கும் உள்ள சக்தி ஓட்டம், பரிமாற்றம் சீராகிறது. அதனால், சிந்தனை வளம் அதிகமாகிறது. குழந்தைகள் படிப்பில் மட்டும் அல்லாது விளையாட்டு உட்பட மற்ற எக்ஸ்ட்ராகரிக்குலர் ஆக்டிவிட்டிஸிலும் வெற்றி பெறுவர்.

    அதிகமாக மூளைக்கு வேலை தருபவர்கள், பன்முகச் செயல்பாடுகள் (Multitasking) செய்பவர்கள் அவசியம் செய்ய வேண்டிய முத்திரை.

    கண் பார்வை, காது கேட்கும் திறன், மூக்கால் நுகரும் திறன், சுவையறிதல், தொடு உணர்வு ஆகிய ஐம்புலன்களின் செயல்பாடுகளும் கூர்மையாகின்றன.
    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி ஓட்ஸை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து ரொட்டி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 250 கிராம்,
    உப்பு - தேவைக்கு,
    ஓட்ஸ் - 100 கிராம்,
    கொத்தமல்லித்தழை - சிறிது,
    துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - 1,
    துருவிய பீட்ரூட் - 1 டேபிள்ஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 3,
    எண்ணெய் - 30 மி.லி.,
    சீரகம் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஓட்ஸை சூடான கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், கோதுமை மாவு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு போட்டு கலந்து, கேரட், பீட்ரூட், தேவையான தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணி நேரத்திற்கு மூடி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறு உருண்டைகளாக பிடித்து லேசாகத் தேய்த்து கல்லில் போட்டு எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்து மொறுமொறுவென்று வந்ததும் எடுத்து பரிமாறவும்.

    சத்தான சுவையான ஓட்ஸ் வெஜிடபிள் ரொட்டி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் மாதவிலக்கையும் அதன் இறுதிக்கட்டமான மெனோபாஸையும் சந்தித்தே தீர வேண்டும். மாதவிலக்கு நிற்க சராசரி வயது 52. இதற்கு மேல் நிற்காவிட்டால் அசாதாரணம். அதே மாதிரி 40 வயதுக்குள்ளேயே மாதவிலக்கு நிற்பது நல்ல அறிகுறியல்ல. இளவயது மெனோபாஸூக்கான காரணங்கள், சிகிச்சைகள், பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.


    ஒரு பெண் அம்மாவோட வயித்துல உருவாகிறப்பவே, அதோட சினைப்பைல இத்தனை மில்லியன் முட்டைகள் இருக்கணுங்கிறது தீர்மானிக்கப்படும். அந்தக்குழந்தை வயதுக்கு வர்றப்ப லட்சக்கணக்குல உள்ள அந்த முட்டைகள், மாதவிலக்கு மூலமா மாசா மாசம் வெளியேறி குறைஞ்சுகிட்டே வரும். பிரசவத்தின் போது இன்னும் குறையும்.

    இப்படி குறைஞ்சிக்கிட்டே வந்து, ஒரு கட்டத்துல முழுக்க முட்டைகளே இல்லாம போகிறப்ப மாதவிலக்கு வராது. அதை தான் மெனோபாஸ்னு சொல்கிறோம். சிலருக்கு சராசரியை விட சீக்கிரமே, அதாவது 40 வயசுக்குள்ளேயே மெனோபாஸ் வரலாம். பரம்பரைத் தன்மை புற்றுநோய்க்காக எடுத்துக்கிற கீமோதெரபியோட விளைவுனு இளவயசு மெனோபாஸூக்கான காரணங்கள் பல இருக்கிறது.

    இவை தவிர ப்ரீ மெச்சூர் ஓவரியன் ஃபெயிலியர் பிரச்சனையாலையும் சீக்கிரமே மெனோபாஸ் வரலாம். அதாவது சினைப்பைல சுரக்கிற ஹாமோனுக்கு மூளையிலேர்ந்து சிக்னல் கிடைக்காவிட்டால், 25 வயசுல கூட மெனோபாஸ் வரலாம். மாதவிலக்கு சுழற்சி சரியா இருக்கிறவங்களுக்கு (20 முதல் 25 நாட்கள்) மெனோபாஸ் சீக்கிரமே வரும் 2, 3 மாதத்துக்கு ஒரு முறை வர்றவங்களுக்கு மாதவிலக்கு மூலமா இழக்கப்படற முட்டைகள் குறையறதால, மெனோபாஸூம் லேட் ஆகும்.

    சீக்கிரமே வயசுக்கு வர்றவங்களுக்கு மெனோபாஸ் சீக்கிரமாகவும், வயசு கடந்து வருபவர்களுக்கு அது தாமதமாகவும் வரும். 50 வயசுல மெனோபாஸ் வர்றவங்களுக்கு சரியான கவனிப்பு அவசியம். அப்படியிருக்கிறப்ப இளவயசு மாதவிலக்கு நிற்கும் போது கூடுதல் அக்கறை அவசியம். ஈஸ்ரோஜென் ஹார்மோன் இல்லாம, எலும்புகள் பாதிக்கப்படும். கால்சியம் சப்ளிமென்ட் எடுத்துக்க வேண்டியிருக்கும்.

    பால், தயிர் உணவு மூலமா கிடைக்கிற கால்சியம் மட்டும் போதாது. வைட்டமின் கூட கால்சியமும் சேர்த்து எடுத்துக்கணும். இல்லாட்டி எலும்புகள் பஞ்சு மாதிரி மாறி ஆஸ்டியோபொரோசிஸ் வரும். மெனோபாஸ்ல இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படுங்கிறதால அதுக்கான பரிசோதனையும் அவசியம். இளவயசு மெனோபாஸை ஏதோ முறை தவறின மாதவிலக்குன்னு தப்பாக நினைத்து அலட்சியப்படுத்தாமல் சரியான நேரத்துல மருத்துவ பரிசோதனையும் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.
    குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில், கீழ்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் நிச்சயம் குதிகால் வெடிப்பைத் தவிர்க்கலாம்.
    எங்கு சென்றாலும் செருப்புக்களை அணிந்து சென்றாலும், பாதங்களில் குதிகால் வெடிப்பானது வந்துவிடும். இதற்கு காரணம் போதிய பராமரிப்பு பாதங்களுக்கு கிடைக்காததே ஆகும். மேலும் வெடிப்புக்கள் அதிகமானால், பாதங்களில் இரத்த வடிதல் ஏற்படுவதோடு, கடுமையான வலியும் ஏற்படும். எனவே குதிகால் வெடிப்பின்றி அழகான மற்றும் மென்மையான பாதங்கள் வேண்டுமெனில், கீழ்கூறிய சில டிப்ஸ்களை பின்பற்றி வந்தால் நிச்சயம் குதிகால் வெடிப்பைத் தவிர்க்கலாம்.

    எலுமிச்சை மற்றும் உப்பு ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் எலுமிச்சை சாறு, உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் தூங்கும் முன் செய்தால், குதிகால் வெடிப்பில் இருந்து விடுபடலாம்.

    குதிகால் வெடிப்புகளை நீக்க, கால்களை நன்கு சுத்தமாக கழுவி, பின் பாதத்தில் வெஜிடேபிள் எண்ணெய் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து, கால்களுக்கு சாக்ஸ் போட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்து கால்களை கழுவ வேண்டும். இதனை தினமும் பின்பற்றி வந்தால், பாதங்கள் மென்மையாவதோடு, குதிகால் வெடிப்புகளும் நீங்கிவிடும்.

    வாழைப்பழத்தை நன்கு மென்மையாக அரைத்து, அதனை பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அன்றாடம் இதனை செய்து வரை குதிகால் வெடிப்புகள் நீங்கும்.



    பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் உலர வைத்து, பாதங்களின் மேல் எலுமிச்சை சாறு மற்றும் வேஸ்லின் கலந்த கலவையை தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் கழுவினால், குதிகால் வெடிப்பு வருவதை அறவே தவிர்க்கலாம்.

    தேனில் அதிகப்படியான ஆன்டி-பாக்டீரியல் பொருள் இருப்பதால், அதனை வெதுவெதுப்பான நீரில் ஊற்றி, அந்த நீரில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை ஸ்கரப் செய்தால், அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மென்மையாக இருக்கும்.

    குதிகால் வெடிப்பை போக்க சிறந்த நிவாரணி என்றால் அது ஆலிவ் ஆயில் தான். அதற்கு ஆலிவ் ஆயிலை காட்டனில் நனைத்து, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, சாக்ஸ் போட்டு 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஓட்ஸ் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸில், சிறிது ஜிஜோபோ ஆயில் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை பாதங்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

    தினமும் இரவில் படுக்கும் போது, நல்லெண்ணெயை குதிகால்களில் தடவி மசாஜ் செய்து படுத்தால், குதிகால் வெடிப்பில் இருந்து தப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல், பாத வறட்சியையும் தவிர்க்கலாம்.

    கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
    கத்தரிக்காய் என்றாலே எனக்கு ‘அலர்ஜி’ என்று சாப்பிட்டு பார்க்காமலே கூறுகிறவர்கள் பலர். அதை எனக்குப் பிடிக்காது, அதில் என்ன இருக்கிறது? என்றும் கூறுவார்கள். ஆனால், அதில் பல சத்துக்கள் இருக்கின்றன. காய்கறி சந்தைகளில் எளிதாக கிடைக்கும் கத்தரிக்காய் பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.

    கத்தரிக்காயில் நீர்ச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் சேரும் கொழுப்பை குறைக்க உதவி செய்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துவதால், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இதனால் இருதயத்தின் பலம் அதிகரிக்கிறது. கத்தரிக்காயில் ஊட்டச்சத்துகள் இருப்பதால் உடலுக்கு மென்மை மற்றும் பலத்தை அளிக்கிறது. மலச்சிக்கல் வராமல் தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

    கால்களில் வீக்கம் இருக்கிறதா? கவலை வேண்டாம். கத்தரிக்காயை அரைத்து, வீக்கம் இருக்கும் இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால் வீக்கம் குணமாகி வரும். வயிற்று பிரச்சினைகள் நீங்க, கத்தரிக்காயை சூப் வைத்து சாப்பிட்டால் சரியாகி விடும். சூப் வைப்பதும் சுலபம்தான். வேகவைத்த கத்தரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும். வயிற்றுக்கு சுகமாகவும் இருக்கும்.

    நெருப்பில் சுட்ட கத்தரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் குறையுமாம். இதயநோய், ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லது.

    கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவை தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமை அதிகரிப்பதோடு ஞாபகத் திறனையும் தூண்டுகிறது. உங்களுக்கு அடிக்கடி மறதி ஏற்படுவதாக உணர்ந்தால் உடனே கத்தரிக்காய் சமைத்து சாப்பிடலாம். கத்தரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும்.
    ×