என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும்.
    உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மிகவும் முக்கியம். உடல் பருமன் உடையவர்கள் முதலில் மருத்துவர்களிடம் சென்று சர்க்கரை பரிசோதனை,ரத்த அழுத்தப் பரிசோதனை மற்றும் இதயப் பரிசோதனை ஆகியவற்றைச் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரின் பி.எம்.ஐ அளவைப் பொறுத்தும் அவர்களது உடல்நிலையைப் பொருத்தும் உடற்பயிற்சிகள் மாறும். அனைவருக்கும் நடைப்பயிற்சி ஏற்றது.

    உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், முதலில் வாக்கிங் செல்ல ஆரம்பிக்கவேண்டும். ஆரம்பத்திலேயே அதிக தூரம் நடக்கக் கூடாது. இரண்டாவது வாரம், நடைப்பயிற்சி செய்யும் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும் படிப்படியாக அதிகரித்து, ஆறு மாதத்திற்குள், ஒரு மணி நேரத்தில் ஐந்து கிலோ மீட்டர் நடக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

    நடைப்பயிற்சி செய்தால் ஆரம்பத்தில் எடை குறையும். ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எடை குறையாது. ஆனால், எடை கட்டுக்குள் இருக்க, நடைப்பயிற்சி செய்யும் வேகத்தை அதிகரிக்க வேண்டும். டிரெட்மில்லில் நடப்பவர்கள், அந்தக் கருவியில்  உள்ள ஒவ்வோர்  இலக்கையும் படிப்படியாக முடிக்க முயற்சிக்க வேண்டும்.

    உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி தூண்டுகோல் மட்டுமே. நடைப்பயிற்சியுடன் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்தால் மட்டுமே, உடல் எடை நன்றாகக் குறையும்.

    கார்டியோ பயிற்சிகள் (நடைப்பயிற்சி, ஜாகிங், சைக்கிளிங் ) 60 சதவிகிதமும் தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் (புஷ் அப், ஸ்குவாட், பளு தூக்கும் பயிற்சிகள்) 40 சதவிகிதமும் செய்தால் உடல் எடை குறையும்.

    அதிக அளவு உடற்பயிற்சி செய்தால், சீக்கிரமே உடல் எடை குறையும். ஆனால், சீக்கிரமாக உடல் எடையைக் குறைக்கும் முறை உடலுக்கு ஏற்றது அல்ல. வாழ்நாள் முழுவதும் அதிக அளவு உடற்பயிற்சி செய்ய முடியாது. எனவே, தினமும் 300 -500 கலோரிகளை எரிக்கும் அளவு உடற்பயிற்சி செய்தால் போதுமானது.

    வெறும் செருப்பு போட்டுக்கொண்டு நடைப்பயிற்சி செய்யக் கூடாது. டிராக் ஸூட் , ஷூ அணிந்துதான் நடைப்பயிற்சி, ஜாகிங் செல்ல வேண்டும்.

    எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். எனினும் காலை வேளையில் உடற்பயிற்சி செய்வது உற்சாகம் தரும். உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்பின் என்னும் அமிலம் சுரக்கும். இது மகிழ்வான உணர்வைத் தரும். எனவே, அன்றைய தினம் வேலைகளைச் சுறுசுறுப்பாக செய்ய முடியும்.

    ஒரு நாளைக்கு 40 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொண்டால் போதுமானது. குடும்பத்தினருடன் ஒன்றாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வது ஊக்கம் அளிக்கும்.

    ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்ளத் திட்டமிடுபவர்கள், ஆர்வக்கோளாறாக எல்லா கருவிகளையும் பயன்படுத்தக் கூடாது. முதல் 10 நாட்கள் வெறும் நடைப்பயிற்சி மட்டுமே செய்ய வேண்டும். உடற்பயிற்சியாளர் அனுமதியுடன் மட்டுமே, பளு தூக்கும் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

    வீட்டில் எடை பார்க்கும் இயந்திரம் ஒன்று வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் காலை வெறும் வயிற்றில் எடை பார்த்துக் குறித்துக்கொள்ளுங்கள். ஒரு கிலோ அல்லது அதற்கு மேல் ஒரே நாளில் அதிகரித்து இருந்தால், அன்றைய தினம் உணவில் சிக்கனத்தையும் உடற்பயிற்சியில் கூடுதல் அக்கறையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    நடைப்பயிற்சி முடிந்த உடனே காபி,டீ குடிக்கக் கூடாது. 20 நிமிடங்கள் கழித்து தேவையான அளவு தண்ணீர் அருந்தலாம். நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்த பின்னர், நன்றாகக் குளித்த பின்னர், உணவு அருந்தலாம்.

    சாப்பிட்ட உடன் உடற்பயிற்சி செய்யக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துத்தான் உடற்பயிற்சி செய்யவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது, திடீர் தாகம் எடுத்தால் 20-30 மி.லி அளவுக்கு மட்டும் தண்ணீர் குடித்தால் போதுமானது. உடற்பயிற்சி செய்யும்போது, அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது.

    டி.வியில் வரும் விளம்பரங்களை நம்பி வயிற்றில் அதிர்வுகளை ஏற்படுத்தும் கருவிகள், இடுப்புத் தசைகளைக் குறைக்கும் கருவிகள் போன்றவற்றை  வீட்டில் வாங்கி வைத்து பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.செயற்கை முறையில் குறுக்கு வழியில் எடை குறைப்பது பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும்.இயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோடு, நீண்ட ஆரோக்கியமான வாழ்வும் வசமாகும்.
    சைனஸ் தற்போது பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. சைனஸ் மற்றும் அது உருவாக்கும் தொடர் பிரச்சினைகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கடந்த காலங்களை விட தற்போது சுற்றுப்புறச் சூழல், பொருந்தாத உணவுகள், உடல் உழைப்பற்ற வாழ்வு போன்றவற்றால் ஏற்படும் வாழ்க்கை முறை சார்ந்த பாதிப்புகளால் வரும் நோய்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதில் சைனஸ் தற்போது பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. சைனஸ் என்பது முக எலும்புகளில் இருக்கும் காற்று குழியறைகளில் உருவாகும் பாதிப்பாகும். சைனஸ் மற்றும் அது உருவாக்கும் தொடர் பிரச்சினைகள் குறித்து மதுரை செல்லூர் பழனியாண்டவர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் கண்ணப்பன் விளக்குகிறார்.

    சைனஸ்

    சைனஸ் என்பது முகத்தின் எலும்பு அமைப்பில் இருக்கும் வெற்றிடமான குழியறைகள் ஆகும். முகத்தில் இரண்டு பக்கங்களிலும் தலா இரண்டு குழியறையாக நான்கு சைனஸ் குழியறைகள் உள்ளன. இந்த குழியறைகளை மூக்குடன் இணையும் வகையில் பாதை அமைப்பு உள்ளது. மூக்கு மற்றும் சைனஸ் குழியறைகளுக்கு காற்றும், மியூகஸ் எனப்படும் சளி, திரவம் போல் காணப்படும். இந்த பாதையில் ஒரு மெல்லிய சவ்வுப்படலம் காணப்படுகிறது.

    மூக்குப்பகுதியை பாதிக்கும் எந்த ஒரு நோய்த் தொற்றும் இந்த சவ்வுப் படலத்தை தாக்கி, சைனஸ் பகுதியை தாக்குகிறது. நோய்க்கிருமிகள் தாக்கும்போது சைனஸ் குழியறைகளில் ஏராளமான சளி உருவாகி அந்த குழியறையை காற்று சென்று வெளியேற வழியின்றி அடைத்துக்கொள்கிறது. இந்த நிலையில், சைனஸ் குழிகளின் சுவற்றில் ஏற்படும் அழுத்தத்தால் வீக்கம் ஏற்படும், அப்போது அது முகம் சார்ந்த பகுதிகளில் கடுமையான வலியை உருவாக்கும். பொதுவாக, இது போல் சைனஸ் குழியறைகளில் ஏற்படும் நோய்த் தொற்று மற்றும் வலியை “சைனஸ் பாதிப்பு“ என்கிறோம்.

    அறிகுறிகள்

    சைனஸ் பகுதியில் ஏற்படும் திடீர் பாதிப்பை “அக்யூட் பாக்டீரியல் ரைனோசைனசைட்டிஸ்“ என்றும் நீண்ட நாட்களாக காணப்படும் பாதிப்பை “க்ரோனிக் ரைனோசைனசைட்டிஸ்“ என்றும் பிரிக்கிறோம். இதில், திடீர் சைனஸ் பாதிப்பு 4 வாரங்கள் வரை நீடிக்கும். நாள்பட்ட பாதிப்பில் முகத்தில் வலி, கண் எரிச்சல், சைனஸ் அறை இருக்கும் முகத்தின் இரண்டு பக்கங்களிலும் அழுத்தம், மூக்கடைப்பு, சளி ஒழுகுதல், காதுவலி, காதுகளில் அழுத்தம் உள்பட சில அறிகுறிகள் காணப்படும். இந்த நிலையானது 12 வாரங்கள் வரை நீடிக்கலாம். சிலருக்கு நாள்பட்ட சைனஸ் பாதிப்பில் நோய் மங்கியது போல் காணப்படும். ஆனால், தலைபாரம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு வாயில் துர்நாற்றம், தொண்டையில் தொடர்ந்து சளி இறங்குதல் போன்றவையும் காணப்படுகின்றன.

    சிகிச்சை முறை

    ஒருவருக்கு சைனஸ் பாதிப்பு அக்யூட் ரைனோசைனசைட்டிஸ் என்ற திடீர் சைனஸ் பாதிப்பில் காணப்படும் தலைவலி, மூக்கடைப்பு, கண்ணைச் சுற்றி வலி போன்ற அறிகுறிகளுக்கு நோயின் தீவிரத்தை பொறுத்து மருந்து மாத்திரைகள் மற்றும் மூக்கடைப்பை நீக்கும் ஸ்பிரே ஆகியவை தரப்பட்டு நோயின் தீவிரம் தணிக்கப்படுகிறது.



    இதுவே, க்ரானிக் ரைனோசைனசைட்டிஸ் என்ற நாள்பட்ட சைனஸ் பிரச்சினைக்கு சைனஸ் அறைகளை அடைத்துள்ள சளியை நீக்கி சுத்தப்படுத்த எளிய அறுவை சிகிச்சை தேவைப்படலாம். சைனஸ் பாதிப்பை பொறுத்தமட்டில் நோய்க்கிருமிகள் எந்த அளவு மூக்கு மற்றும் சைனஸ் பகுதியை பாதித்துள்ளன என்பதை கண்டறிய டயாக்னாஸ்டிக் நாசல் என்டாஸ்கோபி பரிசோதனையும், சி.டி. ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை முடிவுகளைக் கொண்டு சிகிச்சை முறை தீர்மானிக்கப்படுகிறது.

    நோய் தீவிரம்

    பொதுவாக, சைனஸ் பாதிப்பை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மூக்கில் சதை வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனை “நாசல் பாலிப்ஸ்“ என்கிறோம். இந்த சதை வளர்ச்சி தொடர்ந்து மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். மூக்கின் மேல் பகுதியில் ஏற்படும் இந்த சதை வளர்ச்சியால் நாளடைவில் இங்கு காணப்படும் நோய்த்தொற்றுகள் மூளைக்கு பரவி அங்கு சீழ் பிடித்தல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

    இதேபோல், கண்ணுக்கும் மூக்குக்கும் இடையில் ஒரு மெல்லிய திரைப்படலம் மட்டுமே காணப்படுகிறது. இந்த நோய்க்கிருமிகள் தீவிரமடையும் போது இந்த திரையையும் தாண்டி நோய்க்கிருமிகள் கண்ணை பாதிக்கிறது. இதனால் மூக்கும் கண்களும் இணையும் இடத்தை ஒட்டிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு கண்களை ஒட்டிய பகுதிகளில் சீழ் வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், நாள்பட்ட சைனஸ் பாதிப்பால் மூக்கு மற்றும் கண்களுக்கு இடையில் காணப்படும் சிறிய மெல்லிய எலும்பையும் தாக்கி அரிமானத்தை ஏற்படுத்துகிறது.

    தடுப்பு முறை

    இன்றைக்கு குழந்தைகளிடத்தில் கூட சைனஸ் பாதிப்பு அறிகுறிகளை காண முடிகிறது. சைனஸ் பாதிப்பில் கிருமிகள் ஏற்படுத்தும் ஒவ்வாமையால் சளி, காய்ச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கிக் கொள்ள வேண்டும். சத்தான மற்றும் பருவ நிலைக்கு தகுந்த உணவுகள், உடற்பயிற்சி, உணர்ச்சி வசப்படாத மனநிலை, சுத்தமான சுற்றுப்புறம் ஆகியவை உடலை செம்மையாக வைத்திருக்கும் என்பதில் மாற்றமில்லை. காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் சிறிய பாதிப்புகள் தென்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது பல சிக்கலான பிரச்சினைகளை எதிர்காலத்தில் தவிர்க்கும்.

    கண்ணப்பன்
    தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அந்த உணவுகளை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    தலைவலி என்பது சாதாரணமாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். இந்த தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தலைவலிக்கும் போது எந்த காரணத்தையும் கொண்டு காபி குடித்துவிட வேண்டாம்.



    தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் உங்களை விடாது.

    மது அருந்துபவர்களில் கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.

    நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும் காரணியாக இருக்கும்.

    சர்க்கரை உடலுக்குக் கேடு என்பதால் சிலர் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் நம்முடைய ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது. அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். நச்சுக்களை நீக்கும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் ஒற்றைத் தலைவலி உண்டாவதற்கு 11 சதவீதம் சிட்ரஸ் பழங்கள் தான் காரணமாக இருக்கின்றன என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    டார்க் சாக்லேட் உடம்புக்கு நல்லது தான். ஆனாலும் 2 முதல் 22 சதவீதம் வரையிலாக மக்களுக்கு சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் சென்சிடிவால் தலைவலி பிரச்சனை உண்டாகிறதாம்.

    குல்டன் என்னும் சத்துக்கள் அடங்கிய கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அதை சிலருடைய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வெரைட்டி சாதம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மீல்மேக்கர் சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    பாஸ்மதி அரிசி - 1 கப்,
    மீல்மேக்கர் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1
    பச்சை மிளகாய் - 2,
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    இஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,
    பட்டை தூள், கிராம்புத் தூள், சோம்பு தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    பிரிஞ்சி இலை - சிறிது,
    புதினா, கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி,
    நெய் + எண்ணெய் - 2 டேபிஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
     
    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி ஊறவைக்கவும்.

    கொதிக்கும் தண்ணீரில் மீல்மேக்கர், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் வெறும் தண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் + நெய் ஊற்றி சூடானது பட்டை தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உப்பு, மீல்மேக்கர், அரிசியையும் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி 1 விசில் அல்லது 3 நிமிடத்தில் நிறுத்தவும். விசில் அடங்கியதும் குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

    சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி ரெடி.

    வெங்காய தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு முட்டைகோஸில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இது வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறை போக்கி உடலின் நச்சுகளை நீக்குகிறது.
    சிவப்பு முட்டைகோஸில் (Red Cabbage) உள்ள அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. இந்த ஃப்ரீராடிக்கல்கள்தான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கு முக்கியக் காரணம். சிவப்பு முட்டைகோஸ் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

    * சிவப்பு நிற முட்டைகோஸில் இருக்கும் வைட்டமின் கே மூளையை தாக்கும் அல்மைசர் நோயிலிருந்து பாதுக்காப்பு அளிக்கிறது.

    * சிவப்பு நிற முட்டைகோஸ் ஜூஸ் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறை போக்கி உடலின் நச்சுகளை நீக்கும்.

    * சிவப்பு நிற முட்டைகோஸில் வைட்டமின் ஏ உள்ளதால் கண்புரை உருவாவதையும் தடுக்கும்.

    * அல்சரைக் குணப்படுத்தும். வயிற்றுப்புண் மற்றும் சிறுநீர்ப்பாதை தொற்று ஆகியவற்றை தடுக்கும்.

    * சிவப்பு மற்றும் நீல நிறப்பழங்கள், காய்கறிகளில் ரெஸ்வெரட்ரால் என்ற கிருமி நாசினி உள்ளது.

    * அத்தியாவசியச் சத்துக்களான கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும்.
    இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக் கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும்.
    வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால், பெற்றோர் ரெஃப்ரி வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்று நகைச்சுவையாக சொல்வது உண்டு. முதல் குழந்தை பிறந்ததும் அதைக் கொஞ்சும் பெற்றோர், அடுத்த குழந்தை பிறந்ததும் கொஞ்சல், முக்கியத்துவத்தை இரண்டாவது குழந்தைக்குக் கொடுக்கின்றனர். தன்னுடைய முக்கியத்துவம் குறைந்துவிட்டதை உணரும் குழந்தையின் மனதில் ஏக்கம், கோபம் உள்ளிட்ட குணங்கள் அதிகரிக்கின்றன.

    பெற்றோர் ஆரம்பத்தில் இருந்தே இரண்டு குழந்தைகளிடமும், எது சரி, எது தவறு… தவறு செய்தால் என்ன தண்டனை என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும். குழந்தைகள் அதை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு ஏற்கெனவே குறிப்பிட்டவாறு என்ன தண்டனையோ அதைச் சரியாக, உடனே வழங்கவேண்டும். உதாரணமாக, சண்டையின் போது தவறான வார்த்தைகளைப் பிரயோகிக்கும் குழந்தைக்கு, மூன்று நாள்கள் வீட்டில் ரிமோட்டின் மீதான உரிமையைத் தடை செய்யலாம்.

    சண்டை குறித்த பஞ்சாயத்து பெற்றோரிடம் வரும்போது, யார் விட்டுக் கொடுக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம். அதேபோல, நல்ல செயல்பாடுகளில் ஒற்றுமையாக அவர்கள் ஈடுபடும்போதும் இருவருக்கும் பரிசு கொடுக்கலாம், அவர்களைப் பிறர் முன்னிலையில் பாராட்டலாம்.
    ஒவ்வொரு குழந்தையின் தேவையும் வித்தியாசப்படும்.

    கைக்குழந்தைக்கு, பள்ளி செல்லும் குழந்தையைக் காட்டிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைக்கு அதிகளவு பாடத்தில் உதவி செய்ய வேண்டியிருக்கலாம். அதனால், எல்லா நேரங்களிலும் இரு குழந்தைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, பெற்றோர் இதை எண்ணிக் குழப்பமோ, குற்ற உணர்வோ கொள்ள வேண்டாம்.

    இரண்டு குழந்தைகளையும் நிச்சயமாக ஒப்பிடக் கூடாது. முதல் குழந்தையிடம், ‘உன் தங்கையைப் பார்த்துக் கத்துக்கோ’ என்பது, ‘உன் வயசில் அக்கா அழகா ரைம்ஸ் சொல்லுவா’ என்பது… இதுபோன்ற உரையாடல்களைப் பெற்றோரும் மற்றவர்களும் அறவே கைவிட வேண்டும். ஏனெனில், இரண்டு குழந்தைகளிடம் இடைவெளியும் வெறுப்பும் அதிகரிக்க இதுவும் முக்கியக் காரணம்.

    குழந்தைகள் எல்லாப் பொருள்களையும் தங்களுக்கு இடையில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் இருவருமே தங்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பொருள், பொம்மையை வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றோர் கொடுக்க வேண்டும். அதை ஷோ் செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. பதிலாக, ‘அது அவனுடையது, தரமாட்டான். உனக்கு இது இருக்கு’ என்று அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும்.



    இரு குழந்தைகளிடையே சண்டை வரும்போது, உடனுக்குடன் பெற்றோர் அதில் தலையிடக் கூடாது; அவா்களே ஒரு முடிவுக்கு வர நேரம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவா்களுக்கு எப்படிப் பேசுவது, பிரச்னையை எவ்வாறு அணுகி சமாளிப்பது, விட்டுக்கொடுப்பது போன்ற குணங்களும், திறன்களும் வளரும். பெற்றோருக்குக் குழந்தைகளின் பொழுதுகளில் எப்போது தலையிட வேண்டும், எப்போது தள்ளியிருக்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

    இரு குழந்தைகள் இருக்கும்போது, எப்போதும் ஒரு குழந்தையை மட்டுமே முன்னிறுத்திப் பாராட்டுவது நல்லதல்ல. ‘அவன் அம்மா செல்லம், இவ அப்பா செல்லம்’ எனச் சொல்வதும் சரியான அணுகுமுறை அல்ல.

    ஒரு பொருளுக்காக இரண்டு குழந்தைகளும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும்போது, அவா்களுக்கு வார்த்தைகளால் தங்கள் தேவைகளைப் பேசக் கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம். பெற்றோர் அவர்களின் பிரச்னையில் குறுக்கிடும்போது, யார் பக்கமும் சாயாமல், இருவர் மீதும் கோபம் கொள்ளாமல், அவா்களுக்கு என்ன வேண்டும், மற்றும் அது ஏன் வேண்டும் என்பதை, இருவரையும் சரியான வார்த்தைகளால் சொல்லச் சொல்லிக் கேட்க வேண்டும். பின்னர் இருவருக்கும் நஷ்டமில்லாத முடிவை அவா்களையே யோசிக்கச் சொல்லும் முறையால், அவா்களின் சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.

    கோபத்தைக் கையாளும் முறையைக் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் தான் கற்றுக் கொள்கின்றனா். எனவே, கோபமாக இருக்கும்போது பெற்றோர், தவறான வார்த்தைகளைப் பிரயோகிப்பது, கதவை அடித்துச் சாத்துவது, பொருளை வீசுவது, சுவரில் முட்டிக் கொள்வது போன்ற விஷயத்தில் ஈடுபடாமல், தெளிவாகப் பேசித் தீா்த்துக் கொண்டால் குழந்தைகளும் அப்படியே செய்வார்கள்.

    தினமும் குடும்பத்தில் அனைவரும் சோ்ந்து சாப்பிடுவது, சேர்ந்து டி.வி பார்ப்பது, சேர்ந்து அரட்டையடிப்பது போன்றவை குடும்பத்தில் இணக்கத்தை ஏற்படுத்தும்.

    வாரம் ஒருமுறை பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்கு ஏதேனும் மனக்கசப்பு, கோபம், வெறுப்பு இருப்பின் அதைப் பேசச் செய்து, அந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது, அவா்களுக்குப் பெற்றோர் மீதான நம்பிக்கையைப் பலப்படுத்தும்.

    உடன் பிறந்தோர் உறவு என்பது நட்பும் ரத்த பந்தமும் இரண்டறக் கலந்தது. பிற்காலத்தில் இருவரும் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான அடிப்படை, அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. அந்த உறவைப் பலப்படுத்த வேண்டியது, பெற்றோரின் பொறுப்பு!
    பல்வேறு வகையான பிரியாணி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று தக்காளி சேர்த்து பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 2 கப்,
    தக்காளி - 4
    பச்சை மிளகாய் -2,  
    மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),
    பெரிய வெங்காயம் - ஒன்று,
    பிரெட் ஸ்லைஸ் - 2,
    முந்திரித் துண்டுகள் - 6,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    2 தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு முந்திரியை சேர்த்து வறுக்கவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டு வறுத்து கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெந்நீரில் 2 தக்காளிப்பழத்தைப் போட்டு 5 நிமிடம் வைத்திருந்து, தோலை உரித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் போட்டு தாளித்த பின்னர் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளிக்காயையும் சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் இதனுடன் மிளகாய்த்தூளையும் சேர்த்து வதக்கி, 3 கப் நீர் விட்டு, அரிசியைக் களைந்து சேர்த்து தக்காளி விழுது, உப்பு சேர்த்து குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

    குக்கரில் ஆவி வெளியேறியதும், சாதத்துடன் வறுத்த முந்திரி, பிரெட் துண்டுகள் சேர்க்கவும்.

    கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

    இதற்குத் தொட்டுக்கொள்ள வெங்காய தயிர்ப்பச்சடி ஏற்றது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும். கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும்.
    செய்முறை: விரிப்பில் கால்களை 2 அடி அகற்றி நின்றுகொண்டு இரு கைகளையும் பக்கவாட்டில் ஒரு நேர்கோடுபோல் இருக்கும்படி உயர்த்தவும். மூச்சை வெளியே விட்ட நிலையில் இடது பக்கம் படத்தில் காட்டியபடி வளைந்து கை இடதுபாதப் பெருவிரலைத் தொடும்படியாகவும் தலையை மேலே திருப்பி, கண்கள் இடதுகைப் பெருவிரலைப் பார்க்கும்படியும் நிற்கவும், பின் மெதுவாக நேராக நிமிர்ந்து வலது பக்கம் திருப்பி வலது கால் பெருவிரலை வலது கையால் தொடும்படி நின்று மெதுவாக நிமிரவும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யலாம். கால் மூட்டு வளையவிடக் கூடாது.

    பலன்கள்: முதுகெலும்பு வளைந்து கொடுக்கும் தன்மை மேம்படுத்தபடும். தோள்பட்டை சீரமைப்பு சரிசெய்யவும், கழுத்து, முழங்கால்கள் மற்றும் தோள்களில் விறைப்பு குறையும். இரைப்பை அழற்சி, முதுகுவலி, அஜீரணம், வாய்வு மற்றும் அமிலத்தன்மை, முதுகு வலி போன்றவைக்கு நிவாரணம் தரும். இடுப்பு, இடுப்பின் கீழ்ப்பகுதி மெலிதாகின்றது. கெண்டைக்கால் தொடைப்பகுதி வலுவடைகிறது.
    பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக, சிசேரியன் அறுவை சிகிச்சை ஆபத்தில்லாதவை. மிகச் சில சமயங்களில் பிரச்சினைகள் வருவதுண்டு. ஆனால் எல்லா அறுவை சிகிச்சைகளிலும் அந்த ஆபத்து உண்டு. ஏதாவது தொற்றுநோயோ அல்லது இரத்தக்கசிவோ ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    மிக அரிதாக கர்ப்பப்பையை வெட்டிய இடம் மிகப் பலவீனமாக மாற வாய்ப்பிருக்கிறது. இது குடலிறக்கத்துக்கு வழி வகுத்து விடுகிறது. முதல் பிரசவம் சிசேரியன் என்பதால், அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருக்கும் என்ற கவலை வேண்டாம். உங்களது அடுத்த பிரசவம் இயல்பாக பெண்ணுறுப்பின் வழியே நிகழ வாய்ப்பிருக்கிறது.

    ஆனால், உங்களுக்கு சிசேரியன் எந்தக் காரணங்களுக்காகச் செய்யப்பட்டது என்பதைப் பொறுத்து, அடுத்த பிரசவமும் சிசேரியனாக அமையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன

    சிசேரியன் முறை பிரசவம் என்றால் என்ன?

    பெண்ணுறுப்பின் வழியாக குழந்தை வர முடியாமலிருக்கும் போதோ அல்லது அப்படி வருவது அபாயகரமானதாக இருக்கும் போதோ அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்து, குழந்தை வெளிக்கொண்டு வரப்படுகிறது. இதைத்தான் சிசேரியன் முறை பிரசவம் என்கிறார்கள்.

    பிரசவ வலி ஆரம்பிக்கும் போதோ அல்லது பிரசவ வலியின் போதோ சில பிரச்சினைகள் உருவானால், உடனடியாக சிசேரியன் செய்யப்படுகிறது. பொதுவாக பின்வரும் சூழல்களில் தான் சிசேரியன் செய்யப்படுகிறது.

    பிரசவத்தின்போது, குழந்தையின் கீழிருக்கும் பாகம் தலையாக இல்லாமல் குழந்தையின் பின்புறமாகவோ, முகமாகவோ, நெற்றியோ அல்லது தோளாகவோ இருந்தால் சிசேரியன் அவசியப்படும். பல பெண்களுக்கு பிரசவ வலியின் போது, செர்விக்ஸ் (கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி) விரிவடையத் தொடங்கும்.

    ஆனால், முழுவதும் விரிவதற்கு முன்பு விரிவடைவது நின்றுவிடும். இதற்காக ஆக்ஸிடாசின் என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. ஆனால், அந்த மருந்து கொடுத்தும் சில பெண்களால் முழுமையாக செர்விக்ஸை விரிக்க இயலாது. அதனால், அவரால் பெண்ணுறுப்பு வழியே பிரசவிக்க முடியாது.

    வேறு சில பெண்களுக்கு செர்விக்ஸ் முழுமையாக விரிவடையும். ஆனால், முக்கி குழந்தையை பிறப்புக் குழாய் வழியே வெளியில் தள்ள இயலாது. பிறப்புக் குழாயை விட குழந்தை மிகப்பெரிதாக இருந்தால், இந்த நிலை உருவாகும்.

    பிரசவ வலியின்போது எந்த நேரத்திலும், பிரச்சினைகள் உருவாகி குழந்தையின் இதயத்துடிப்புகள் குறையத் தொடங்கலாம். குழந்தையால் நோர்மல் பிரசவத்தை இதற்கு மேல் தாங்க முடியாது என்பதற்கு இது அறிகுறி. அதனால், உடனடியாக சிசேரியன் செய்யப்படும்.

    சிசேரியனில் தாய்க்கு முழுமையான மயக்கத்துக்கு மருந்து கொடுக்கப்படுகிறது அல்லது குறிப்பிட்ட இடம் மட்டும் மரத்துப்போகவும் மருந்து கொடுக்கிறார்கள். குறிப்பிட்ட இடத்துக்கு மட்டும் மயக்க மருந்து தரப்படும்போது, அந்த இடம் மட்டும் மரத்துப்போய் வலி தெரியாது. ஆனால் தாய்க்கு நினைவிருக்கும்.

    பொதுவான மயக்கத்தில் தசைகள் இலகுவாகி தூக்கம் வந்துவிடும். வலி தெரியாது. நினைவும் இருக்காது. கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியே எடுப்பதற்காக, தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றை வெட்டுவார் மருத்துவர். பிறகு குழந்தை, நஞ்சுக்கொடி, பிரசவப்பை எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வெட்டப்பட்ட கர்ப்பப்பையையும் அடிவயிற்றையும் தைத்து விடுவார்.
    சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று குதிரைவாலி அரிசி, காராமணி சேர்த்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குதிரைவாலி அரிசி - 1 கப்,
    காராமணி  - 2 டேபிள் ஸ்பூன்,
    துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்,
    சீரகம் - 1/2 டீஸ்பூன்,
    மிளகு - 1/4 டீஸ்பூன்,
    துருவிய தேங்காய் - 1/2 கப்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    தண்ணீர் - 2 1/4 கப்.

    தாளிக்க…

    எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்,
    கடுகு - 1/4 டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்,
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
    பச்சை மிளகாய் - 1,
    கறிவேப்பிலை - தேவையான அளவு.



    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    காராமணியை 1/2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    மிக்சியில் துவரம் பருப்பு, சீரகம், மிளகை போட்டு கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் குதிரைவாலி அரிசியை சேர்த்து ரவையாகப் பொடிக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, தாளித்த பின்னர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த ரவை, வேக வைத்த காராமணி, துருவிய தேங்காய் போட்டு நன்கு கட்டியில்லாமல் கிளறவும். மிதமான தீயில் கிளறி, சேர்ந்து கெட்டியாக வந்ததும் இறக்கவும்.

    பொறுக்கும் சூடு வந்ததும் உருண்டைகளாகப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைத்து எடுத்து சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குதிரைவாலி காராமணி பிடி கொழுக்கட்டை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது.
    பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் காஜல். அவ்வாறு தினமும் காஜலைப் பயன்படுத்தும் பெண்கள் ஒரு நாள் அதனை பயன்படுத்தவில்லை என்றாலும், பார்க்க ஏதோ ஒன்று குறைந்தது போல் காணப்படுவர். அதிலும் காஜல் நிறைய வகையில் தற்போது கடைகளில் விற்கப்படுகின்றன.

    மேலும் அந்த காஜலை வீட்டிலே கூட தயாரிக்கலாம் அல்லது காஸ்மெடிக்ஸ் கடைகளில் வாங்கலாம். தற்போது அவ்வாறு காஜலைப் பயன்படுத்தும் பெண்களுக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான், கண்களுக்கு போடும் காஜல் கலைந்துவிட்டு, முக அழகை கெடுத்துவிடுகின்றன. அதனாலேயே நிறைய பெண்களுக்கு கருவளையம் வந்துவிட்டது போன்று காணப்படுகிறது.

    சிலசமயங்களில் அந்த காஜலை போட்டவர்கள் சரியாக அதனை நீக்காமல் இருப்பதும் கருவளையத்திற்கு காரணம். ஆகவே அத்தகைய காஜலை சரியாக நீக்குவதற்கு ஒரு சில டிப்ஸ் இருக்கிறது. அவை இதோ……

    * தினமும் முகத்தை கிளின்சிங் மில்க்கை வைத்து கழுவ வேண்டும். இதுவும் மேக்கப்பில் ஒரு வித பகுதி தான். அதிலும் முகத்திற்கு என்னதான் மேக்கப் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ போட்டாலும், கிளின்சிங் மில்க்கால் கழுவ வேண்டும். அதிலும் காஜலை எளிதாக நீக்குவதற்கு, கிளின்சிங் மில்க்கை முகத்திற்கு தடவி, முகம் மற்றும் கண்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் அதனை ஒரு காட்டனை வைத்து, துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் காஜல் வருவதோடு, அழுக்குகளும் வந்துவிடும். இல்லையெனில் மேக்கப் ரிமூவல் க்ரீம் என்று விற்கப்படும் கிரீமையும் பயன்படுத்தி நீக்கலாம்.

    * காஜல் பயன்படுத்தியதால் ஏற்படும் கருவளையத்தை தடுப்பதற்கு, தினமும் படுப்பதற்கு முன், எண்ணெயை வைத்து நன்கு மசாஜ் செய்து, தூங்க வேண்டும். அவ்வாறு மசாஜ் செய்ய பயன்படுத்தும் எண்ணெய் ஆலிவ் அல்லது ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தினால் நல்லது. இவ்வாறு எண்ணெயை பயன்படுத்தினால், கண் இமைகள் நன்கு வளர்வதோடு, காஜலும் எளிதில் நீங்கும். வேண்டுமென்றால், எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்ததும், ஒரு காட்டனை வைத்து துடைத்துவிட்டு, பின் ஃபேஸ் வாஷை பயன்படுத்தலாம்.

    * வாஸ்லினை பயன்படுத்தி கண்களுக்கு அடியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, பின்னர் காட்டனை வைத்து, துடைக்க வேண்டும். இதனால் காஜல் எளிதில் நீங்கிவிடும்.

    ஆகவே மேற்கூறியவாறெல்லாம் செய்தால், காஜல் எளிதில் நீங்குவதோடு, கருவளையம் ஏற்படாமலும் இருக்கும்.

    நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
    நாம் எப்போதும் நம்மைவிட புகழிலும், செல்வத்திலும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களையே நமது முன்னோடியாக ஏற்றுக்கொண்டு அவர்களைப்போல முன்னேற முயல்கிறோம். சில சமயங்களில் நமக்குக் கீழே இருப்பவர்களின் முயற்சியையும், சுறுசுறுப்பையும் கவனிக்கத் தவறிவிடுகிறோம். நம் வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள சாமானிய மக்களிடமிருந்தும், சாதாரண நிகழ்வுகளிலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வது நல்ல முன்னேற்றத்தைத் தரும்.

    புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளரான, ஜிம் ரோன் (Jim Rohn) வாழ்வில் முன்னேற ஊக்கமளிக்கும் `எறும்புகள் தத்துவம்' (Ants philosophy) என்று மூன்று செய்திகளை பாடங்களாக எடுத்துச் சொல் கிறார். அவை..

    1. முயற்சியை விட்டு விடாதே: எறும்பு களைப் பாருங்கள். எப்பொழுதாவது முயற்சியை விட்டு விடுகின்றனவா? அவைகள் செல்லும் வழியில் தடங்கலை ஏற்படுத்திப் பாருங்கள். முட்டி, மோதி தடம் மாறி மேலே செல்ல முயற்சிக்கும். முயற்சியைக் கைவிடுவதில்லை. இதுபோல நம் வாழ்விலும் பல நேரங்களில் நினைத்த காரியங்கள் நினைத்தவுடன் நடக்காமல் தடங்கல் ஏற்படலாம். துவளாமல் அவற்றை சவாலாக எடுத்து, மாற்று வழியை ஆராய்ந்து முயற்சி செய்யுங்கள். வெற்றி நிச்சயம். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலும் இதையே, ‘விடாதே, விடாதே, விட்டு விடாதே' என்று தாரக மந்திரமாகச் சொன்னார்.

    2. துணிந்து செல்: எறும்புகள் எதிர் வரும் குளிர் காலத்தை மனதில் வைத்து, கோடை காலத்தில் சுறு சுறுப்பாக தானியங்களை சேமிக்கின்றன. ஆனால் வெட்டுக் கிளிகள் சோம்பேறியாக துள்ளித் திரிகின்றன. கோடை காலம் வெகு நாட் களுக்கு நீடிக்காது என்று எறும்புகளுக்குத் தெரியும். எறும்புகளைப்போல எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எல்லோரிடமும் அன்பாய் இரு. சில சந்தர்ப்பங்களில் நேரம் சரியில்லாவிட்டாலும், துன்பம் வரும் நேரத்தில் நல்ல நண்பர்கள் கைகொடுப்பார்கள்.

    3. நம்பிக்கை வை: எறும்புகள் தாங்க முடியாத குளிர் காலத்தில், எதிர் வரும் கோடை காலத்தை மனதில் வைத்து பொறுமையாகக் காத்திருக்கும். கோடை காலம் வந்ததும் மீண்டும் சுறுசுறுப்பாக வெளிக் கிளம்பி, தானியங்கள் சேகரிக்க ஆரம்பித்து விடும். அது போல துன்பம் வரும் வேளையில் துவண்டு விடாமல் பொறுத்திரு. காத்திரு. தீராத பிரச்சினை என்று எதுவுமில்லை. அதற்கு பிறருக்கு தீங்கு நினையாத நல்ல மனம் வேண்டும். நல்லது நடக்கும் என்று நம்பி, காத்திருந்து முயற்சித்தால் எதிர் காலம் வளமாக அமையும்.

    ஒன்று தெரியுமா? எறும்புகள் தன் எடையைப் போல 50 மடங்கு கனமான பொருட்களை தூக்கிச் செல்ல முடியும். எனவே அடுத்த முறை நம்மால் முடியாது என்று நினைக்கும் போது, மிரண்டு விடாதே, சிறிய எறும்புகளை நினைத்துப் பார். உன் தோள்களின் சுமை எளிதாகும்.
    ×