என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இந்த விநாயகரை வணங்கினால் மனதில் அமைதி உண்டாகும். விட்டுப்போன உறவுகள் தேடி வரும். காரியத்தடைகள் தாமதங்கள் விலகி வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
    புதுச்சேரியில் உள்ள பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் ஆலயம், 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த ஆலயத்துக்கு அருகில் உள்ள திருக்குளத்தில் முன் காலத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாக கூறப்படுகிறது. அதிலிருந்த சுவையான நீரினால்தான் விநாயகரின் திருமஞ்சனம் நடைபெற்றுள்ளது. அக்குளம் மணலால் ஆனது. ஆதலால் அக்குளம் ‘மணல் குளம்’ என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘மணக்குளம்’ என்று வழக்கில் வந்தது. எனவே விநாயகரும் ‘மணக்குள விநாயகர் ஆனார். தற்போது அந்தக் குளத்தில் நீர் இல்லை. எனினும் பெயரினால் அந்தக் குளத்தின் பெருமை அழியாமல் உள்ளது.

    இந்த விநாயகருக்கு ‘வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு. புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்தபோது விநாயகரின் அருமை அறியாமல், ஆங்கிலேயர்கள் அவரை கடலில் கொண்டு போய் போட்டனர். என்ன அதிசயம்.. சில நாட்களில் அந்தச்சிலை போட்ட இடத்திலேயே மிதந்தது கண்டு, அந்தப் பகுதி மக்கள் அந்தக் கடற்கரையில் ஆலயம் அமைத்து விநாயகரை வழிபட்டனர். விநாயகரின் சிறப்பை உணர்ந்த வெள்ளைக்காரர்களும் அவரை வழிபட, அன்றிலிருந்து வெள்ளைக்கார பிள்ளையாராகி விட்டார். இந்த விநாயகரை வணங்கினால் மனதில் அமைதி உண்டாகும். விட்டுப்போன உறவுகள் தேடி வரும். காரியத்தடைகள் தாமதங்கள் விலகி வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
    கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பக்தர்கள் தோல்பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மற்றும் தண்ணீரில் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சக்கூடாது என்று கோவில் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கள்ளழகர் கோவில் துணை ஆணையர் அனிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா  கடந்த 2ந்தேதி (செவ்வாய்க்கிழமை)  தொடங்கி வருகிற 21ந்  தேதி வரை நடைபெறுகிறது. இதில் வருகிற 16-ந்தேதி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் போது , தீர்த்தவாரி நிகழ்ச்சி, திவான் ராமராயர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில், பக் தர்கள் விரதமிருந்து தோல் பையில் தண்ணீர் சுமந்து வந்து சிறிய குழாய் மூலம் சுவாமியின் மீது பீய்ச்சி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

    பக்தர்களின் விரத வலிமைக்கு ஏற்ப அவரவர் தோல்பையில் இருந்து தண்ணீர் வெளி யேறி சுவாமி மீது பட்டு அபிஷேகமாகும் என்பது ஐதீகம். ஆனால் கடந்த சில ஆண் டுகளாக பக்தர்கள் ஐதீகத்தை மீறி தோல் பையில் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகளை பொருத்தி தண்ணீரில் திரவியங்கள் மற்றும் வேதிப்பொருள்களை கலந்து பீய்ச்சுவதால் கள்ளழகர் சுவாமி, குதிரை வாகனம் மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.  

    மேலும் திரவியம் கலந்த தண்ணீரால் பட்டர்கள், பிரசாரகர் பணியாளர்கள் மற்றும் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த ஆண்டு நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் அதிக விசையுள்ள பிரஷர் பம்புகள் மூலம் பீய்ச்சாமல் வழக்கமான தோல்பையில் சிறிய குழாய் மூலம், எவ்வித வேதிப் பொருள்களும் கலக்காத சுத்தமான தண்ணீரை மட்டுமே பீய்ச்ச வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று, சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மூலவர் -பரம சுவாமி

    தாயார் -ஸ்ரீதேவி பூதேவி

    தல விருட்சம்– ஜோதி விருட்சம் ,சந்தனமரம்.

    தீர்த்தம் -நூபுர கங்கை

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 93 வது திவ்ய தேசம் ஆகும்.

    மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். இந்த சோலை மலையில் அமைந்திருக்கும் கோவிலில் தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும் ஒன்று, சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது.

    இந்த கோயில் அமைதியான பரந்த சூழலில் ஒரு மலை மீது அமைந்துள்ளது. இந்த கோவில் அழகர் கோவில் என்றும், இந்த மலை சோலைமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் சில அழகிய சிற்பங்களைக் கொண்டிருக்கிறது. தமிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது.

    அழகர் கோவில் தல வரலாறு

    ஒரு சமயம் எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது. இந்த சாபத்தை போக்க பூலோகத்தில் தற்போது உள்ள அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில் தவம் புரிந்தார். இது ஏழு மலைகளை கொண்டது. தர்மராஜனின் தவத்தை மெச்சி பெருமாள் காட்சி கொடுத்தார்.

    இறைவனின் கருணையைப் போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம் தினமும் உங்களை ஒரு முறையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். பெருமாளும் அவ்வாறே வரம் தர, இன்றும் இக்கோயிலில் தினமும் அர்த்தஜாம பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம்.

    பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஸ்ரீரங்கம் முதல் இடத்தையும் காஞ்சிபுரம் அடுத்த இடத்தையும் 3வது இடத்தை அழகர் கோயிலும் பெற்றுள்ளன. அழகர்கோவில் மூலவர் பரமசாமி ஸ்ரீதேவி ,பூதேவியுடன் அருள்பாலிக்கிறார்.

    அழகர்கோவிலில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் தான் பெயருக்கு ஏற்றார் போல் மிகவும் அழகாக இருப்பார் .தாயார் அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவரின் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் கள்ளழகர் ஆனார். இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமென கருதப்படுகிறது.

    பதினெட்டாம் படியான் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார். அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலை குகைக்குள் வற்றாத ஜீவநதியாக வந்துகொண்டிருக்கிறது.

    மக்களின் காணிக்கையாக வரும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோயில் சார்பாக தோசை இட்டு பிரசாதமாக தரப்படுகிறது. இது இக்கோயிலுக்கான தனிச் சிறப்பும் புகழும் உடையது. அனைத்து தலங்களிலும் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள். இத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு புத்தம், சமணம், முஸ்லிம் என்று எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் வணங்கியதாக தலவரலாறு உள்ளது.

    திருவிழா -சித்திரை திருவிழா பத்து நாட்கள், ஆடிப் பெருந்திருவிழா 13 நாள், ஐப்பசி தலை அருவி உற்சவம் மூன்று நாள், இவை தவிர வைகுண்ட ஏகாதசி, கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, பொங்கல், தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு வாரத்தின் சனி, ஞாயிறு கிழமைகள் மற்றும் மாதந்தோறும் இக்கோயிலில்
    திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

    திறக்கும் நேரம் -காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
    16ந்தேதி (சனிக்கிழமை )காலை 5.50 மணிக்கு மேல் 6 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருமாலிருஞ்சோலை தென் திருப்பதி என்று அழைக்கப்படும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவில் ஆகும். இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த சித்திரை திருவிழா வருகிற 14ந் தேதி தொடங்கி 20ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக சப்பர முகூர்த்த விழா கடந்த பிப்ரவரி மாதம் 7ந்தேதி மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடந்தது.

    சித்திரை பெருந்திருவிழா தொடர் முன்னோட்ட நிகழ்ச்சியாக கடந்த ஏப்ரல் 1ந்தேதி தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை முகூர்த்த விழா நடந்தது. மேலும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக அழகர்கோவிலில் இருந்து தங்கக்குதிரை வாகனம் மற்றும் தசாவதார நிகழ்வின் போது கள்ளழகர் எழுந்தருளும் கருட, சேஷ வாகனங்கள் பாதுகாப்பாக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    வருகிற 14ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறார். முன்னதாக வழியில் உள்ள 456 மண்டகப்படிகளில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளுகிறார். இதைத்தொடர்ந்து 15ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் மூன்று மாவடியில் கள்ளழகரை வரவேற்று உபசரிக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    16ந்தேதி (சனிக்கிழமை )காலை 5.50 மணிக்கு மேல் 6 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 17ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஷேச, கருட வாகனத்தில் எழுந்த ருளி மண்டூக மகரிஷி முனிவ ருக்கு சாப விமோ சனம் அளிக்கும் நிகழ்வும், தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 18ந் தேதி (திங்கட்கிழமை) மோகன வதாரத்தில் கள்ளழகர் எழுந்தருளல், அன்று இரவு பூப்பல்லக்கு அலங்காரம் நடைபெறுகிறது.

    19ந் தேதி (செவ்வாய்க்கிழமை)பூப்பல்லக்கில் எழுந்தருளல், 20ந்தேதி (புதன்கிழமை) அப்பன் திருப்பதியில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் பகல் 1.30க்கு கள்ளர் திருக்கோலத்தில் கள்ளழகர் அழகர்மலை வந்து சேருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
     
    சித்திரை திருவிழாவை 2 ஆண்டுகளுக்குப்பின் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். எனவே பக்தர்களும், பொதுமக்களும் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  திருவிழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரை வைகை ஆற்றில் கூடுவார்கள். எனவே அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  சித்திரை திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் தலைமையில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர், அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான நாளை (வியாழக்கிழமை) சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது.
    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டான சித் திரை மாதம் 1-ந்தேதி சித் திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டான நாளை (வியாழக்கிழமை) சித்திரை விஷூ கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாளைஅதிகாலை4-30 மணிக்கு கோமாதா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது பசு மற்றும் கன்றுகுட்டியை கோவிலின் கொடிமரம் முன்பு உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் நிறுத்திவைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.

    பின்னர் கோவிலின் மூலஸ்தான நடை திறக்கப் பட்டு அம்மன் கோமாதா தரிசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து நிர்மால்ய பூஜையும் விஸ் வரூப தரிசனமும் நடக்கிறது. அதன் பிறகு கனி காணும் நிகழ்ச்சி நடக்கிறது.

    அப்போது கோவிலில் மூலஸ்தான மண்டபத்தில் காய்கனிகளை குவித்து வைத்து சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் வைரகிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடக்கிறது.

    அதன் பிறகு காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11 மணிக்கு அம்மனுக்கு தங்க ஆபர ணங்கள் மற்றும் வைரக் கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங் காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    11-30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு காய்கனிகளுடன் ஒரு ரூபாய் நாணயம் கை நீட்டமாக வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை கோவில் மேல்சாந்தி மணி கண்டன் போற்றி பக்தர்களுக்கு வழங்குகிறார்.

    அதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை6-30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும் இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளி மேள தாளம் முழங்க கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி3முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனை நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன் பொருளாளர் ரமேஷ் கணக்கர் ஸ்ரீராமச்சந்திரன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் முதலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் நேற்று தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 35 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
    கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் தரிசிக்க டோக்கன் வழங்கப்பட்டு வந்தது.

    அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சாமி சத்திரம் மற்றும் ரெயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசம் தங்கும் விடுதி ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வந்தன.

    கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் டோக்கன் வாங்க குவிந்ததால் கடந்த சனிக்கிழமை முதல் நேற்று வரை இலவச தரிசன டிக்கெட்டுகள் வினியோகிக்கப்பட்டது.

    இதையடுத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. இதனால் கடந்த 4 நாட்களாக இலவச தரிசன டிக்கெட் கிடைக்காமல் பக்தர்கள் அவதி அடைந்து வந்தனர்.

    நேற்று கவுண்டர் திறக்கப்பட்டு இலவச தரிசன டோக்கன் விநியோகிக்கப்பட்டது.

    அங்கு நேற்று முன்தினம் இரவு முதலே ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    இதனால் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 3 பக்தர்கள் காயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள், போலீசார் திணறினர்.

    கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே இலவச தரிசன டிக்கெட் கவுண்டர்கள் மூடப்பட்டு அனைவரும் டோக்கன் வாங்காமல் நேரடியாக இலவச தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    இனி மேல் முன்போல் இருந்தது போலவே டோக்கன் வாங்காமலேயே பக்தர்கள் இலவச தரிசனம் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலவச தரிசன பக்தர்கள் திருமலையில் உள்ள வைகுண்ட காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள வைகுண்ட காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் நிரம்பி வெளியே நீண்ட தூரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.

    ஏற்கனவே இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் முதலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் நேற்று தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் 35 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் அனைவருக்கும் 1 லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நேற்று முதல் கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து பொது மேலாளர் செங்கல்வ ரெட்டி தெரிவித்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 72,567 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 40,468 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.32 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம்.
    அனுமன் கலியுக மக்களைக் காப்பவராக கருதப்படுகிறார். இவரை மனதார நம்பிக்கையுடன் வணங்கினால், அனைத்து விதமான பிரச்சினைகளில் இருந்தும் நம்மைக் காப்பார். இவர் பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுவார். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று இந்த செந்தூர நிறம், உயிராற்றலின் நிறம்.

    மற்றொன்று, ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் செந்தூரத்தை தடவினார். அதைக் கண்ட அனுமன் சீதையிடம் ‘ஏன்?’ என்று கேட்டார். அதற்கு சீதை, “இது ராமபிரான் நீண்ட காலம் செழிப்பாக இருக்க அவரை ஆசீர்வதிக்கும் வகையில் செய்யும் ஓர் செயல்” என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த செந்தூரத்தை தடவிக் கொண்டார்.

    * செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.

    * முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு படைத்து வணங்கி, அந்தக் கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்துக்களில் இருந்து விலகி இருக்கலாம். அதுவே வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் பணம் கொழிக்கும்.

    * அனுமனுக்கு ஆரஞ்சு நிற செந்தூரம் வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலம், மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங் களும் அகலும்.

    * மல்லிகை எண்ணெய் மனநிலையை மேம்படுத்த உதவும். செந்தூர பொடியை மல்லிகை எண்ணெய்யுடன் சேர்த்து கலந்து, அனுமனுக்கு திலகமிடுவது, இன்னும் நல்லது.

    * செவ்வாய்க்கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் முழு ஆசீர்வாதமும் கிட்டும்.
    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்ததால் இன்று நடைபெற்ற தேரோட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் எனும் பெருவுடையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும்.

    அதில் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தொடர்ந்து காலை, மாலைகளில் சுவாமிகள் புறப்பாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இதையொட்டி, அதிகாலை 5.15 மணியளவில் கோவில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பாலம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்டு, கோவில் வெளியே வந்து சோழன் சிலை வழியாக மேலவீதியில் உள்ள தேர்மண்டபம் வந்தடைந்தனர்.

    அங்கு விதவித வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 16 அடி உயரம், 13 அடி அகலம் கொண்ட தேரின் சிம்மாசனத்தில் தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருள, காலை 7 மணியளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ என்ற பக்தி முழக்கத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். தேருக்கு முன்னர் விநாயகர், சுப்பிரமணியர் சப்பரங்களும், பின்னால் நீலோத்தம்மன், சண்டிகேசுவரர் சப்பரங்களும் பின் தொடர்ந்து செல்ல தியாகராஜர் கமலாம்பாள் எழுந்தருளிய தேர் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்ற காட்சி பிரமிக்க வைத்தது.

    தேர் செல்லும் வழியில் நாதஸ்வரம், மேளதாளம் முழங்க கலைஞர்கள் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடியே சென்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும் சென்றனர். 4 ராஜ வீதிகள் வழியாக சென்ற தேர் 14 இடங்களில் நிறுத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

    அப்போது பக்தர்கள் தேங்காய், பழம் உள்ளிட்டவைகளை வழங்கி சாமி தரிசனம் செய்தனர். மதியம் தேர் நிலையை வந்தடைந்தது. தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டதால் தேர் சிரமம் இன்றி நிறுத்தப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் தேரோட்டம் நடைபெறவில்லை. தற்போது தொற்று குறைந்ததால் இன்று நடைபெற்ற தேரோட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

    விழாவை காண தஞ்சை மாவட்டம் மட்டுமில்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதேப்போல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தேரோட்டத்தை கண்டு ரசித்தனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் மப்டியில் நின்றும் கண்காணித்தனர்.

    இதையும் படிக்கலாம்...ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
    2 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
    திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என புகழ்ந்து அழைக்கப்படுவது. 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானது மதுரையிலிருந்து 21 கி.மீ தூரத்தில் உள்ளது அழகர்மலை ஆகும். இங்குள்ள அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா நேற்று மாலை சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.

    இதில் மேளதாளம் முழங்க, தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகர் பெருமாள் தோளுக்கினியான் பல்லக்கில் புறப்பாடாகி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தன. பின்னர் அதே பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடாகி சென்று கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேர்ந்தார்.

    இன்று(புதன்கிழமை) மாலையிலும் அதே விழா நடைபெறுகிறது. நாளை மாலையில் 6-15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுகிறார். வழி நெடுக உள்ள பொய்கைகரைபட்டி, கள்ளந்தரி, அப்பன் திருப்பதி உள்ளிட்ட பல மண்டபங்களில் சுவாமி எழுந்தருள்வார். இதற்காக 456 மண்டபங்கள் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 15-ந் தேதி அதிகாலையில் 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும்.

    இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு 16-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5.50 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் நடைபெற உள்ளது.

    கள்ளழகர் கோவிலை விட்டு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநெடுகிலும் வண்டியூர் வரை உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறார். 17, 18, தேதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். 19-ந் தேதி அன்று இரவு அதிகாலையில் 2.30 மணிக்கு பூப்பல்லக்கு விழா நடைபெறும்.

    பக்தர்கள் நேர்த்தி கடனாக அழகர் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சும் போது தோலினால் ஆன தண்ணீர்ப்பை மூலமாகவே மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும். செயற்கை காற்று பம்பு மூலமாகவோ, ரசாயன பொடிகள் கலந்தோ கண்டிப்பாக சுவாமி மீது தண்ணீர் பீய்ச்ச கூடாது. என கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

     2 ஆண்டுகளுக்கு பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக கூடுவதற்கு வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. 20-ந் தேதி பகல் 1.30 மணிக்கு அழகர்மலைக்கு கள்ளழகர் சென்று கோவிலில் இருப்பிடம் சேருகின்றார். 21-ந் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    நாளை மாலை பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.
    சிவபக்தர்களை ஓடிவந்து காக்கும் நந்தி தேவரை பிரதோஷ வேளையில் நினைத்து வழிபட, அவரே குருவாக இருந்து நமக்கு இறையருளைப் பெற்றுத் தருவார். நாளை மாலை பிரதோஷ வேளையில் அனைவரும் வீட்டில் சிவபெருமானை நினைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவபுராணம் படியுங்கள்.

    நந்திகேசி மஹாயாக

    சிவதயா நபராயண கௌரீ

    சங்கரஸேவர்த்தம்

    அனுக்ராம் தாதுமாஹஸ

    என்னும் நந்தி தேவருக்குரிய ஸ்லோகத்தையும் சொல்லி வணங்கலாம். எல்லாவற்றுக்கும் மேலான மந்திரமான நமசிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைத் தொடர்ந்து பிரதோஷ வேளையில் தியானிப்பதன் மூலம் நந்திபகவானின் கருணையையும் சிவபெருமானின் அருளையும் பரிபூரணமாகப் பெறலாம்.

    14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தீவுத்திடலில் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், சென்னை தீவுத்திடலில் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதற்காக உற்சவர் சாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்படுவதுடன், பண்டிதர்கள் திருமலையில் இருந்து வர உள்ளனர்.

    இதனையொட்டி தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து மேடை மற்றும் பக்தர்கள் அமரும் பகுதிகள் அமைக்கும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ள குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ்துறை, சுற்றுலா, அறநிலையத்துறை, வருவாய், தீயணைப்பு, போக்குவரத்து, சுகாதாரம், மாநகராட்சி, உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சி நடக்கும் தீவுத்திடலில் காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை அரசு செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக அறநிலையத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளையும் பிறப்பித்து உள்ளனர். பாதுகாப்பான முறையில் திருக்கல்யாணம் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி கூறி உள்ளார்.
    எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மரித்த ஏசுவின் சிலையை வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொதுமக்கள் பார்க்கலாம்.
    சென்னை எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு மரித்த இயேசுவின் சொரூபம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை பாதிரியார் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    174 ஆண்டு பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தின் அருளை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களும் பெற்று செல்கிறார்கள். இங்கு இயேசுவின் 5 காயங்களை கொண்ட பாடுபட்ட சொரூபம் ஒன்று உள்ளது.

    இந்த சொரூபம் 1932-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு 1935-ம் ஆண்டு முதல் இங்கு சிறப்பு பிரார்த்தனைகளும், ஜெபங்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ஏறெடுக்கப்படுகிறது.

    கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக வழிபாடுகள் முழுமையாக நடத்த முடியவில்லை. புனித வெள்ளிக்கிழமை அன்று இந்த திருத்தலத்தில் மரித்த இயேசு உடலை சந்திப்பதும், வழிபடுவதும், பொருத்தனைகள் செய்து வேண்டிக்கொள்வதும் வழக்கமாக நடைபெறும்.

    2 வருடத்துக்கு பிறகு இந்த ஆண்டு இந்த வழிபாடனது புனித வியாழன் நள்ளிரவு 12 மணி முதல் புனித வெள்ளி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

    ஆலய வளாகத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதில் மரித்த இயேசுவின் சொரூபம் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்காக வைக்கப்படும். சுமார் 1 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    சிகப்பு நிற போர்வையை பொதுமக்கள் சொரூபத்தின் மீது போட்டு வணங்குவதும், மரிக்கொழுந்து, வெட்டி வேர் போன்றவற்றை காணிக்கையாக கொண்டு வந்து படைப்பதும் வழக்கமான நடைமுறையாகும். பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் சென்று வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 400 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு-பகலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களுக்கு உணவு, பழச்சாறு, தண்ணீர், மோர் போன்றவை வழங்கப்படும்.

    எனவே கொரோனாவுக்கு முந்தைய காலம் போல வழிபாட்டுக்கு அனைவரையும் வருமாறு அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாக தந்தை பிரேம், பிலிப் இருதயராஜ் உடன் இருந்தனர்.

    இதையும் படிக்கலாம்...ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
    ×