search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம்
    X
    எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயம்

    எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மரித்த ஏசுவின் சிலையை வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு

    எழும்பூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் மரித்த ஏசுவின் சிலையை வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பொதுமக்கள் பார்க்கலாம்.
    சென்னை எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு மரித்த இயேசுவின் சொரூபம் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து திருத்தல அதிபர் மற்றும் பங்குத் தந்தை பாதிரியார் தாமஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    174 ஆண்டு பழமை வாய்ந்த திரு இருதய ஆண்டவர் திருத்தலத்தின் அருளை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தவர்களும் பெற்று செல்கிறார்கள். இங்கு இயேசுவின் 5 காயங்களை கொண்ட பாடுபட்ட சொரூபம் ஒன்று உள்ளது.

    இந்த சொரூபம் 1932-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு 1935-ம் ஆண்டு முதல் இங்கு சிறப்பு பிரார்த்தனைகளும், ஜெபங்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ஏறெடுக்கப்படுகிறது.

    கடந்த 2 வருடமாக கொரோனா தொற்று காரணமாக வழிபாடுகள் முழுமையாக நடத்த முடியவில்லை. புனித வெள்ளிக்கிழமை அன்று இந்த திருத்தலத்தில் மரித்த இயேசு உடலை சந்திப்பதும், வழிபடுவதும், பொருத்தனைகள் செய்து வேண்டிக்கொள்வதும் வழக்கமாக நடைபெறும்.

    2 வருடத்துக்கு பிறகு இந்த ஆண்டு இந்த வழிபாடனது புனித வியாழன் நள்ளிரவு 12 மணி முதல் புனித வெள்ளி இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

    ஆலய வளாகத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதில் மரித்த இயேசுவின் சொரூபம் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்காக வைக்கப்படும். சுமார் 1 லட்சம் மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

    சிகப்பு நிற போர்வையை பொதுமக்கள் சொரூபத்தின் மீது போட்டு வணங்குவதும், மரிக்கொழுந்து, வெட்டி வேர் போன்றவற்றை காணிக்கையாக கொண்டு வந்து படைப்பதும் வழக்கமான நடைமுறையாகும். பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் சென்று வழிபாடு செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 400 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு-பகலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மக்களுக்கு உணவு, பழச்சாறு, தண்ணீர், மோர் போன்றவை வழங்கப்படும்.

    எனவே கொரோனாவுக்கு முந்தைய காலம் போல வழிபாட்டுக்கு அனைவரையும் வருமாறு அழைக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாக தந்தை பிரேம், பிலிப் இருதயராஜ் உடன் இருந்தனர்.

    இதையும் படிக்கலாம்...ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்
    Next Story
    ×